நஞ்சினாலான அமுதன்!

23

சஹாவின் திருமணம் இனிதாக முடிந்தது.

தியாகீசன் கிருபாகரி திருமணநாள் இன்று. எல்லோரும் பரபரப்பாக இருந்தனர். 

கிருபாவின் சித்தப்பா.. அத்தை.. மாமா.. என அவர்கள் சடங்குகள் செய்வதில் பிசியாக இருந்தனர். தாத்தா பாட்டி வரவேற்பில் பிசியாக இருந்தனர். சண்முகம் மீனாட்சி இருவரும் ஈசனின் அருகே நின்றனர். சஹாவும் விசாகனும் வந்தவர்களை கவனித்து.. தன் பெரியப்பாவின் அருகே நின்றுக் கொண்டனர். 

எல்லோர் முகத்திலும்.. சந்தோஷம். ஈசன் அன்று போல இன்றும் உணர்வுகளின் பிடியிலிருந்தான். ப்ரோகிதர் சொல்லுவதை செய்துக் கொண்டிருந்தான்.. மனதில் ஒரு பதட்டம்.. தன்னை சுற்றி இத்தனை உறவுகள்.. என்னை, என்னென்ன பெயர் சொல்லி அழைக்கின்றனர். ‘அப்பா.. அம்மா.. தேங்க்ஸ்..’ என மனதுள் நன்றி சொன்னான். ‘அடுத்து ஏற்கும் பொறுப்பினையும் சரியாக செய்ய வேண்டும் அப்பா’ என வேண்டிக் கொண்டான் மனதுள்.

ஈசனின் கையில் மாங்கள்யம். ப்ரோகிதர் சொன்னபடி.. மாங்கள்யத்தை சபையோருக்கு காட்டி ஆசி வாங்கினான். கிருபாகரியின் கழுத்தில் மங்களநாண் அணிவித்தான். நிச்சயம் முடிந்த நாட்களிலிருந்து.. வாழ தொடங்கிவிட்டனர் மனதினுள்.. இது தங்களின்.. பாதையில் ஒரு கொண்டாட்ட தினம்.. ம்.. அந்த பக்குவத்தில் இருந்தனர். சந்தோஷம்தான் புன்னகைதான்.. ஆனந்தம்தான்.. அதனாலோ என்னமோ.. ஒரு நிதானம் வந்துவிட்டது. இருவருமே நிதனாமாக தங்களை தாங்களே பார்த்துக் கொண்டனர். நிறைய பொறுப்புகள் கடமைகள்.. என இருந்தாலும்.. நம்பிக்கை அதிகமாக இருந்தது.. அதற்கான அடையாளமாக கண்கள் தாண்டி வழிந்தது கண்ணீர்.. இருவருக்கும்.

உறவுகள் எல்லோர் முகத்திலும் சந்தோஷம்.. அட்சத்தை தூவி.. தம்பதியினரை ஆசீர்வதித்தனர். யாருக்கும் காட்டாமல் கண்ணீரை.. துடைத்துக் கொண்டு.. புன்னகையோடு, தம்பதியாய் இருவரும்.. இன்னும் எதோ சடங்குகளை செய்தனர்.

ப்ரோகிரதர் “எழுந்து அக்னியை வலம் வாங்கோ” என்றார்.

ஈசன் எழுந்து.. தன்னவளுக்கு கை கொடுத்தான். கிருபாகரி, ஈசனின் கைபற்றி எழுந்துக் கொண்டாள். பெண்ணவளின் மனம் ஈசனின் செய்கையில் நெகிழ்ந்து போனது. அணைப்பு முத்தம் என ப்ரியங்கள்.. வேறு, ஆனால், நீண்ட நேரம் அமர்ந்திருந்தது.. எனக்கு கால்கள் மறுத்து போனதை போல.. என்னவளுக்கும் இருக்கும் என உணர்ந்து கைகொடுக்கும்.. தன்னவனின் அன்பில், பெண்ணவள் நெகிழ்ந்து.. அவனின் பற்றிய விரல்களை விடாது.. மூன்றுமுறை அக்னியை வலம் வந்தனர், தம்பதி.

சம்பூர்ணா, அருகினில் வந்து.. “உங்க கல்யாணம்தான் சூப்பர். அக்காவா இருந்து அண்ணியாக ப்ரமோட் ஆகிட்டீங்க” என்றாள். அப்போதுதான் கிருபா, ஈசனிலிருந்து பார்வையை விளக்கிக் கொண்டாள்.

அதற்குள் மீண்டும் ப்ரோகிதர் “வாங்கோ அருந்ததி நட்சத்திரம் பார்த்து வரணும்” என்றார்.. மணமக்களிடம்.

அடுத்து எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர் மணமக்கள். கோகிலா தன் மகளை ஆற தழுவிக் கொண்டார். கணவரின் பொறுப்பும் தன்னுடைய பொறுப்பும் நிறைவேறிய நிம்மதி அந்த அன்னையிடம். ஈசனிடம் “அவள்தான் எங்களை பார்த்துக் கொண்டால் இத்தனைநாள், இனி நீங்கதான்.. மாப்பிள்ளை.. ஈசா, அவளை பார்த்துக்கணும். எதுவும் வேணும்ன்னு வாய் திறந்து கேட்கமாட்டாள்.” என்றார் கண்கலங்க.

கிருபா “அம்மா.. என்ன இது” என.. அவரின் கண்ணீரை துடைத்தாள்.

அன்னை, தானே கண்களை துடைத்துக் கொண்டு, புன்னகைத்தார் “நாமதான் பார்த்து செய்யணும். க்கும்.. ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்காமல் நல்லா இருக்கணும்” என இருவரையும் ஆசீர்வதித்தார், கோகிலா.

தாத்தா பாட்டியும் அப்படியே “ஈசா, இனி அதிரடியாக ஏதும் செய்ய கூடாது. எல்லாவற்றையும் யோசிக்கணும். இனி நீ செய்வது எல்லாம் கிருபாவையும் பாதிக்கும். பார்த்து பக்குவமாக இருக்கனும். கிருபா, எனக்கு நிம்மதிடா, வருகிற தலைமுறையும் என் பேர் சொல்லும் டா..” என்றார் தாத்தா ஆசீர்வாதமாக.

சண்முகம் மீனாட்சியிடம் ஆசி வாங்க வரும் போதே ஈசன்.. அமைதியாகிவிட்டான். மணமக்கள் பெரிய தம்பதியின் கால்களில் விழுந்தனர். ஷண்முகம் நல்வார்த்தைகள் சொன்னார்.. “நல்லா இருங்க டா..” என கிருபாவின் உச்சியில் கை வைத்து ஆசீர்வதித்தவர்.. ஈசனை பார்த்து “கட்டிகிட்டவள எப்போதும் மதிக்கணும். எந்த சூழ்நிலையிலும் அவளை கண்கலங்காமல் வைச்சிக்கணும்” என்றார்.. வாழ்த்தா கட்டளையா என தெரியாத குரலில்.

மீனாட்சி “என்னங்க” என அதட்டினார்.

கிருபா அதிர்ந்து நின்றாள்.

ஈசன் புன்னகை மாறாமல் நின்றான். இப்போது கிருபாவின் விரல்களை பற்றிக் கொண்டு  “பயமா இருக்கு.. நான் பயந்துடுவேன்னு உங்க மாமாகிட்ட சொல்லமாட்டியா நீ” என நக்கல் செய்துகே கொண்டு புன்னகையோடு.. கிருபாவின் சித்தப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்க கூட்டி போனான்.

இப்படியே அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்தது. எல்லாவற்றிலும் ஒரு நிதானம்.. இருவரும் அடிக்கடி பார்க்காவிட்டாலும் கண்களில் நிறைவை கொண்டு.. எல்லாம் நிறைவாக செய்தனர், மணமக்கள். 

வேலைகளை எல்லா உறவுகளும் பங்கிட்டு செய்தனர்.

சண்முகம் பந்தி கவனிக்க சென்றார். மீனாட்சி, தன் உறவுகளோடு சென்று சிறிது நேரம் அமர்ந்து பேச தொடங்கினார். முந்தைய வருத்தமெல்லாம் இல்லை. காரணம் சஹாவின் திருமணத்தில்.. ஈசனின் குணம் கண்டு மீனாட்சி அமைதியாகிவிட்டார்.

ஈசன், ஷண்முகம் பேச்சை தட்டவில்லை, தங்கையை பொறுத்தவரை. தன் திருமணம் தன்னுடையது என அவரை மீறினாலும். தங்கைக்கு அவர்தான் முன் நிற்கிறார் எனும் போது.. சபையில் அவர் என்ன சொன்னாலும் தனக்கு விருப்பமில்லை என்றாலும் அமைதியாக அங்கே செய்தான். யாரின் கண்களையும் கவராமல்.. எந்த விஷயமாக இருந்தாலும் “பெரியப்பாவை கேட்டிடுங்க” என சஹாவின் வீட்டாரிடம் ஈசனே சொன்னான். எங்கும் விட்டுக் கொடுக்கவில்லை, சண்முகத்தை.

அதே போல சஹாவின் கல்யாண விருந்து,  காரைக்குடியில் நடந்தது. எல்லாம் ஈசன் செலவு என்றாலும்.. “எல்லாம் அவர் ஏற்பாடு” என பெருமையாக சொன்னான் எல்லோரிடமும்.

அவ்வளவுதான் சண்முகம், மரியாதையாக தம்பி மகன், தன் பேர் சொல்லவும்.. தீர்ந்தது அவரின் கோவமெல்லாம். தன்மையாக நடந்துக் கொண்டார். தானும் சஹா விசாகனை அழைத்து சென்னையில் ஒரு விருந்து வைத்து.. பெண்ணுக்கு என.. தங்கத்தில் சீர் செய்தார் அப்போதுதான். சீர் என்பதை விட, இத்தனை நாட்கள்.. சண்முகம், சஹா ஈசன் இருவரையும் வீட்டிற்கு அழைக்கவேயில்லை. சஹாவின் திருமணம் முடிந்தது, விருந்தும் முடிந்துதான்.. அழைத்தார்.

பட்டாசாலையில், அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது.. ஈசனிடம் “சஹா.. மாப்பிள்ளை.. வாங்க விருந்துக்கு நம்ம வீட்டுக்கு” என்றவர் “ஈசா நீயும்தான் வா..” என அழைத்தார் முதல் முறை அவன் பெயர் சொல்லி. 

ஈசனின் குணம் மாறாமல் சட்டென நக்கல் பார்வை வந்துவிட்டது.. அவனிடம். கிருபா அருகிலிருந்து ஒரு இடி இடித்தாள்.. ஈசனின் தோளினை. ஈசன் முயன்று “சரிங்க..” என்றான்.. தங்கையை பார்த்துக் கொண்டே.

தாத்தா நிம்மியாதியானார். குடும்பம் பிணக்கில்லாமல் நடக்கும் என.

இப்படியாகத்தான் சண்முகம் ஈசன் என இருவரும் பேசிக் கொண்டனர்.

இப்போது இந்த திருமணத்திலும்.. சண்முகம் எது சொன்னாலும் செய்தான் ஈசன். பொறுமையாக கேட்டு நடந்தான்.