“தந்தையே என்னை பற்றி அறிந்தும் தாங்கள் என்னை இவ்வாறு வற்புறுத்துவதை நான் விருப்ப வில்லை. தாங்கள் தந்தையாக கூறினாலும் சரி, இந்த நாட்டின் மகாராஜாவாக கூறினாலும் சரி வேறு ஒரு பெண்ணை என்னால் மணக்க இயலாது”

“நிலைமையை புரிந்து கொள் நரேந்திரா. உன் மனதுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாட்டை அழிவில் கொண்டு நிறுத்தி விடாதே”, என்று கோபத்துடன் உரைத்தார் இந்திரவர்மர்.

“அல்ல மகாராஜா. நிச்சயம் எதிரிகளை நாம் வீழ்த்தி விடுவோம்”

“எப்படியப்பா? அது தான் அமைச்சர் தெளிவாக கூறி விட்டாரே? மூன்று பேர் ஒன்று சேர்ந்து போர் தொடுத்திருக்கிறார்கள். அவர்களை வெல்வது எளிதல்ல?”

“இல்லை மகாராஜா. நிச்சயம் நம்மால் வெற்றி கொள்ள இயலும். இப்போது நாம் வான்மதியின் தந்தைக்கு ஓலை அனுப்பினால் அவர் நமக்கு உதவ இயலும்?”

“ஓ, உன் மாமனாரை பற்றி கூறுகிறாயா? அவர் படையையும் நம் படையுடன் சேர்த்தால் எதிரி படைகளில் பாதி அளவு தான் வரும் நரேந்திரா. எனக்கு என்னமோ நீ ஆத்திரத்தில் அறிவில்லாமல் பிதற்றுவதாக தோன்றுகிறது”

“அல்ல மகாராஜா. வெற்றி நமக்கே. பெரிய தந்தையே! உடனடியாக என் மாமனாரான வாசுதேவச்சக்கரவர்த்திக்கு ஓலை வரையுங்கள்”, என்றான் நரேந்திரவர்மன்.

“அவருடைய நாட்டை அழிவில் இருந்து காப்பாற்றவே நம் உதவி அவருக்கு தேவை பட்டது? அப்படி இருக்கையில் அவர் நமக்கு உதவ போகிறாரா? உன்னை அந்த தேசத்துக்கு நான் அனுப்பியதே தவறு என்று தோன்றுகிறது நரேந்திரா. அப்படி உன்னை அங்கே அனுப்பாமல் இருந்திருந்தால் நீ இளவரசியை சந்தித்திருக்க முடியாது. இப்போது உன்னுடைய காதலினால் நம் தேசத்தின் மக்களுக்கும் அரியாசனத்திற்குமே  ஆபத்து வந்து விட்டது. இது எங்கே சென்று முடிய போகுதோ?”, என்று கோபத்துடன் கூறி விட்டு சென்று விட்டார் இந்திரவர்மர்.

அவர் போன பின்பு நரேந்திரவர்மனை தட்டி கொடுத்த சித்தர் “கவலை கொள்ளாதே நரேந்திரா, உன் தந்தைக்கு நாட்டை பற்றி பயம் வந்து விட்டது. அதனால் தான் உன் மனதை காய படுத்தி விட்டு செல்கிறார். நான் இப்போதே உதவி கேட்டு வாசுதேவச்சக்கரவர்த்திக்கு ஓலை அனுப்புகிறேன். மற்ற வழியும் நம் சிந்திப்போம். இளவரசியை கூடிய விரைவில் மீட்டு விடலாம்”, என்று கூறி விட்டு சென்று விட்டார்.

ஓலை வாசுதேவச்சக்கரவர்த்தியை நோக்கி பறந்தது. “என் கண்மணி என்னை பிரிந்து எவ்வாறு வாடுகிறாளோ? கூடிய விரைவில் உன்னை மீட்பேன் தேவி”, என்று நினைத்து கொண்டான் நரேந்திரவர்மன்.

அங்கே வான்மதியோ கைதி போல் செங்கல்வராயனின் அரசவைக்கு அழைத்து செல்ல பட்டாள். அவளை கண்டு அனைவரும் அதிர்ந்து போனார்கள். வல்லவரையனின் இந்த செயலை யாருமே விரும்ப வில்லை. செங்கல்வராயன் மனம் மட்டும் குளிர்ந்து போனது.

செங்கல்வராயனின் அருகில் பட்டத்து ராணியாக அமர்ந்திருந்த வசுமதி வான்மதியை கண்டு திகைப்புற்றாள். “வல்லவரையா என்ன இது? எதற்காக இப்படி பட்ட ஈனத்தனமான காரியம் செய்தாய்?”, என்று கேட்டாள் வசுமதி.

“மகாராணி, இப்போது எதற்காக வல்லவரையன் மீது சினம் கொள்கிறாய்?”, என்று கேட்டான் செங்கல்வராயன்.

“தங்களின் சகோதரர் செய்த செயலுக்கு ஆரற்றி சுற்ற வேண்டுமா மகாராஜா? ஒரு மங்கையை சிறை பிடித்து இழுத்து வருவது வீரனுக்கு அழகல்ல”

“அதை பற்றி உனக்கென்ன? என் மனதில் இருக்கும் ஆசைகளை என் இளவல் நிறைவேற்ற துடிக்கிறான். அவனுக்கு ஆரற்றி சுற்றினாலும் சரி தான்”, என்று கூறிய செங்கல்வராயன் “வா வான்மதி வா. இந்த தேசத்துக்கு ராணியாக உன்னை அழைத்து வர தான் ஆவல் கொண்டேன். ஆனால் இப்படி சிறையாக வந்திருக்கிறாயே”, என்று ஏளனமாக சிரித்தான்.

“உன்னுடைய அந்தப்புரத்தில் ராணியாக இருப்பதை காட்டிலும் சிறையில் வாசம் செய்வது தேவலோகத்தில் இருப்பது போல் ஒன்று”, என்று கம்பீரமாக உரைத்தாள் வான்மதி.

அனைவரும் அவளை வியப்பாக நோக்கி கொண்டிருந்தார்கள். அவளின் துணிச்சலையும், கம்பீரத்தையும் வியந்து போற்றினார்கள். அவள் அழகை கண்டு வியந்த வசுமதியே “இத்தனை அழகுள்ள மங்கை மீது எவன் ஆசை கொள்ளாமல் இருப்பான்? போயும் போயும் இந்த பெண் இவனிடமா மாட்ட வேண்டும்?”, என்று எண்ணி கொண்டாள்.

“என்ன திமிர்? என் தமையனையே  எதிர்த்து பேசுகிறாயா?”, என்று அவளின் கழுத்தை நெறிக்க வந்தான் வல்லவரையன்.

“விட்டு விடு வல்லவரையா? சிறு பெண் தானே? இவள் மீது உன் கோபத்தை காட்ட வேண்டாம். பிழைத்து போகட்டும்”, என்றான் செங்கல்வராயன்.

“நீ என்னை பிழைத்து போகட்டும் என்று உரைக்கிறாயா? மரியாதையாக என்னை விட்டுவிட்டு உன் சகோதரனின் ஈன செயலுக்கு என்னவரின் பாதம் பணிந்து மன்னிப்பை வேண்டி உயிர் பிழைத்து கொள். இல்லை என்றால் கூடிய விரைவில் நீ அழிந்து விடுவாய்”, என்றாள் வான்மதி.

“வான்மதி, வார்த்தையை அடக்கி பேசு. நீ நிற்பது என் அரசவை. என்னையும், என் இளவலையும் மரியாதை இன்றி பேசினால் பின் உன் மானம் போய் விடும்”

“என் மானம் போய் விடுமா? என்னருகில் எவன் நெருங்கினாலும் அவன் உயிர்  பிரிந்து  விடும்”

“உன் கணவனின் பெருமையை பறைசாற்றுகிறாயா வான்மதி. அவன் தான் இப்போது இங்கு இல்லையே.  உன்னை என்ன செய்தாலும் அவன் வந்து விடுவானா என்ன?  இப்போதே, உன் திமிரை அடக்குகிறேன் பார். நீ என் தமையனின் காலடியில் சென்று விழ போகிறாய்”, என்று கூறி கொண்டே அவள் அருகில் நெருங்கினான் வல்லவரையன்.

“உன்னை எச்சரிக்கிறேன் வல்லவரையா? என்னை நெருங்கினால் நீ அழிந்து போவாய்”

“அதையும் பார்க்கலாம்”, என்று கூறி கொண்டே அவளை தொட சென்றான். அவன் விரல் அவளுடைய உடலில் படுவதற்கு முன்னர் இடுப்பில் சொருகி இருந்த கத்தியை கண் இமைக்கும் நேரத்திற்குள் சுழற்றியவள் அவன் கழுத்தில் கீறி விட்டாள். போர் பயிற்சி பெற்ற வான்மதிக்கு அது எளிதான செயலாக தான் இருந்தது.

அரசவையே ஸ்தம்பித்தது. அவளை காவல் காத்து கொண்டு நின்ற வீரர்கள் கூட அவளை விட்டு பின்னே நகர்ந்தார்கள். செங்கல்வராயன், வல்லவரையனை நோக்கி ஓடி வந்தான். அவனுடன் வசுமதியும் வந்தாள்.

கழுத்தில் இருந்து குருதி சொட்ட சொட்ட அவளையே அதிர்ச்சியாக பார்த்து கொண்டு கீழே விழுந்தான் வல்லவரையன்.

“வான்மதி என்ன காரியம் செய்து விட்டாய்?”, என்று சினத்துடன் கேட்ட செங்கல்வராயன் வல்லவரையனை மடி தாங்கி கொண்டான்.

“நான் தான் அவனிடம் நெருங்காதே என்று கூறினேன் அல்லவா? அவன் செய்கையை பொறுத்துக்கொண்டிருப்பேன் என்று எண்ணினாயா செங்கல்வராயா? என் கணவர் வரும் வரை நான் தானே என் மானத்தை காத்து கொள்ள வேண்டும். என்னை காத்துக்கொள்ள எனக்கு தெரியும்? அப்படி இருந்தும் என்னை கடத்தும் போது சும்மா இருந்து கொண்டு உன் அரசவை வரை எதற்காக வந்தேன் என்று தோன்றுகிறதா? மேலை தேசத்துக்கு எதிராக தாங்கள் அனைவரும் பின்னிய சூழ்ச்சி வலையை நான் அறிவேன். ஒரு வகையில் நான் தான்  அதற்கு காரணமும் கூட. அதை நான் அடியோடு களைய வேண்டாமா? என் தேசம் நிம்மதியுடன் இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி. செங்கல்வராயன் இந்த உலகை விட்டு செல்ல வேண்டும். அது நடக்க வேண்டும் என்றால் உன்னை எதிர்த்து என்னவர் போரிட வேண்டும். அப்படி செய்தால் தானே நீ அழிவாய்?  நான் வேண்டும் என்றே இங்கே வந்தது தெரியாமல் அநியாயமாய் உன் சகோதரன் மடிந்து போனான். கூடிய விரைவில் உனக்கும் இதே கதி தான்”, என்று புன்னகைத்தாள் வான்மதி.

“நீ செய்த காரியத்துக்கு வருந்துவாய் வான்மதி. என் உயிர் போன்றவனை இந்த கதி ஆளாக்கியதற்கு உன்னை நிச்சயம் அழ வைப்பேன். இவளை சிறையில் அடையுங்கள். வல்லவரையனுக்கு உயிர் இருக்கிறது. அவனை நான் காப்பாற்றியே தீருவேன்”, என்று கூறி கொண்டே வல்லவரையனை கைகளில் தூக்கி கொண்டு சென்று விட்டான் செங்கல்வராயன்.

“மன்னர் கூறியதை கேட்டாய் அல்லவா? உன்னை சிறையில் அடைக்க வேண்டும். வா எங்களுடன்”, என்றான் ஒரு வீரன்.

“வீரனே, அந்த பெண் யார் என்று தெரியுமா? மேலை தேசத்தின் நாளைய மகாராணி. மரியாதை இல்லாமல் அவளிடம் நடந்து கொள்ளாதே”, என்றாள் வசுமதி.

“என்னை மன்னியுங்கள் மகாராணி. இவரை சிறையில் அடைக்க மன்னர் உத்தரவிட்டார்”

“யாமும் கேட்டு கொண்டு தான் இருந்தோம். நானே அவளை சிறையில் அடைத்து கொள்கிறேன். என்னுடன் வா வான்மதி”, என்று அழைத்து சென்றாள் வசுமதி.

பாதி தூரம் சென்றதும் அங்கே இருந்த சுரங்க பாதையை காட்டிய வசுமதி “இந்த பாதை வழியாக தப்பித்து சென்று விடு வான்மதி”, என்றாள்.

“திருட்டு தனமாக தப்பித்து செல்வது அரசகுமாரிக்கு அழகல்ல மகாராணி. என் சுவாமி என்னை கட்டாயம் காப்பாற்ற வருவார். தாங்கள் எனக்கு உதவி செய்ய எண்ணியதற்கு என் வந்தனங்கள்”, என்றாள் வான்மதி.

“இல்லை வான்மதி. எனக்கு என்னவோ வல்லவரையன் பிழைக்க மாட்டான் என்று தோன்றுகிறது. அவன் சாக வேண்டியவன் தான். ஆனால் அவனுக்கு அவ்வாறு நேர்ந்த பின்னால் மகாராஜா சும்மா இருக்க மாட்டார். உன்னை துன்புறுத்துவார். போர் முடியும் வரை இங்கே இருப்பது உனக்கு ஆபத்து அல்லவா?”

அப்படி எதுவும் நேராது மகாராணி. என்னை கடத்தி வந்ததை என்னவர் அறிந்தால் கட்டாயம் போருக்கு ஆயத்தமாவார். அதே நேரம் தங்களின் கணவரும் போர் புரிய போர்க்களம் சென்றாக வேண்டுமே. என்னை செங்கல்வராயன்  காணவே நேராது. அதனால் தாங்கள் கவலை கொள்ளாதீர்கள்”, என்று கூறி கொண்டே சிறையை நோக்கி நடக்க துடங்கி விட்டாள்.