அத்தியாயம் 19

உன்னில் தொலைந்த தருணங்கள்

அழகான கிறுக்கல்

ஆகிறது கவிதையாக!!!

 

விசாகதத்தன் வேறு படையெடுக்க தக்க தருணத்துக்காக காத்திருந்தான். திருமணம் முடிந்து ஒரு பதினைந்து நாள் கழிந்திருந்தது. அப்போது ஒரு நாள் விசாலத்தை காண  வான்மதி சென்றிருந்தாள். சாந்தாவும் விசாலத்தை காண சென்றிருந்தாள்.

இருவரையும் கண்டு மகிழ்ச்சியுடன் இருந்தாள் விசாலம். அப்போது மூவருமாக ஆலயம் செல்லலாம் என்று முடிவு எடுத்தார்கள்.

தான் வந்த ரதத்தை அங்கேயே இருத்தி விட்டு துணையாக வந்த வீரர்களையும் தடுத்து விட்டு தோழிகளுடன் சென்றாள் வான்மதி. அங்கே கடவுளுக்கு பூஜை செய்தது விசாலத்தின் கணவன் தான். ஆலய தரிசனம் முடிந்து வெளியே வந்த போது அவர்களை சுற்றி வளைத்து விட்டார்கள் ஏழு பேர்.

பெண்கள் மூவரும் குழம்பினார்கள். துணையாக வந்த வீரர்களை தடுத்த மடத்தனத்தை நொந்து கொண்டு அவர்களை முறைத்த வான்மதி “நான் யார்  என்று தெரிந்துமா வழி மறைக்கிறீர்கள்?”, என்று கேட்டாள்.

“ஆம் தாங்கள் தான் மேலை நாட்டின் இளவரசி என்று தெரியும். தங்களை கடத்த தான் இளவரசர் எங்களுக்கு ஆணை இட்டார்”, என்றான் ஒருவன்.

“போரில் வெற்றி கொடி நாட்டாமல் பேடி போல் பெண்களை கடத்த சொன்ன அந்த உங்கள் வீர இளவரசன் எவனோ?”, என்று ஏளனமாக கேட்டாள் வான்மதி.

விசாலம் பயத்துடன் சாந்தாவின் கரங்களை பற்றி கொண்டாள். சாந்தாவுமே பயத்துடன் தான் நடுங்கி கொண்டிருந்தாள்.

“உன்னை கடந்த சொன்ன அந்த இளவரசன் நான் தான்”, என்ற படியே ஒரு புதரின் மறைவில் இருந்து வந்தான் வல்லவரையன்.

“யார் நீ? எதற்காக என்னை கடத்த திட்டமிட்டிருக்கிறாய்?”, என்று கேட்டாள் வான்மதி.

“என் தமையனை வேண்டாம் என்று கூறி விட்டு இந்த தேசத்தின் மகாராணியாக கனவு கண்டாயா வான்மதி? உன் வாழ்வை கெடுக்காமல் நானும் என் தமையனும் ஓய மாட்டோம்”

“ஓ, செங்கல்வராயனின் சகோதரனான நீ? போரில் என் தந்தை மற்றும் கணவரிடம் தோற்று புறமுதுகு காட்டி ஓடிய கோழைகள் தானே நீங்கள்?”

“வான்மதி வார்த்தையை அளந்து பேசு”

“முதலில் என் பெயரை கூறுவதை நீ நிறுத்து வல்லவரையா.  ஆண் பிள்ளை போல் இல்லாமல் அறிவிழந்து எங்களை கடத்த திட்டமிட்டிருக்கிறாயே? இது தான் உன் ஆண்மையா?”

“நீ திமிர் பிடித்தவள் என்று நான் அறிவேன் வான்மதி. ஆனால் இன்று தான் நேரில் காண்கிறேன். என் தமையன் எதனால் உன் மீது இவ்வளவு பைத்தியமாக இருக்கிறார் என்று இப்போது புரிகிறது”, என்று கூறி அவளை தலை முதல் கால் வரை பார்வை இட்டான் வல்லவரையன்.

“யார் தேசத்தில் நின்று கொண்டு கேவலமான வார்த்தைகளை விடுவாய் என்று அறிகிறாயா? மகாராஜா இந்திரவர்மருக்கு தெரிந்தால் உன் உயிர் உன் உடலில் இருக்காது. அது மட்டும் அல்லாமல் இளவரசர் உன் பேடி தனமான காரியத்தை அறிந்தால் அடுத்த நிமிடம் உன் தலையை கொய்து விடுவார்”

“அதையும் பார்க்கலாம். அந்த நரேந்திரவர்மன் உன்னை எப்படி எங்களிடம் இருந்து மீட்டு செல்கிறான்”, என்று கொக்கரித்த வல்லவரையன் “மூவரையும் ரதத்தில் ஏற்றுங்கள்”, என்று கூறினான்.

“உனக்கும், உன் தமையனுக்கும் அழிவுகாலம் ஆரம்பித்து விட்டது வல்லவரையா?”, என்றாள் வான்மதி.

“அதையும் பார்க்கலாம். மூவரையும் ஏற்றுங்கள்”, என்றான் வல்லவரையன்.

“என்னை சிறை எடுக்க வந்தவன் இந்த பெண்களையும் சிறை எடுக்க நினைப்பது முட்டாள் தனம்”, என்றாள் வான்மதி.

“அதுவும் சரியே. எங்கள் சினம் உன் மீது மட்டும் தான். அவர்களை விட்டு விட்டு அவளை மட்டும் ஏற்றுங்கள்”

அவளை கரம் பிடித்து இழுக்க வந்தவர்களை நோக்கி “அப்படியே நில்லுங்கள்”, என்று கூறிய வான்மதி “எவருடைய கரமும் என் மீது பட கூடாது. நானே வருகிறேன். சாந்தா, நீ இளவரசரிடம் கூறி விரைவில் என்னை சிறை மீட்க சொல். அது மட்டும் அல்லாமல் அந்த செங்கல்வராயனின் தலையை இளவரசரின் வாள் கொய்து விட வேண்டும்”, என்றாள்.

“வேண்டாம் இளவரசி, அவனுடன் செல்லாதீர்கள். என் உயிரை கொடுத்து வேணும் தங்களை காப்பேன் நான்”, என்றாள் சாந்தா.

“அப்படி அல்ல சாந்தா. போன போரிலே இவர்களை என்னவர் கொன்றிருக்க வேண்டும். அதை செய்யாமல் விட்டது தவறு. அதனால் தான் இந்த அளவுக்கு போய் விட்டார்கள். இனி இவர்கள், வாழ தகுதி அற்றவர்கள். அது மட்டும் இல்லாமல் இதற்கு முழுக்க முழுக்க காரணம் நானாக இருக்கும் போது, இதில் உங்கள் உயிரை என்னால் எப்படி விட்டு கொடுக்க முடியும்? இளவரசர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கட்டாயம் அவர் என்னை மீட்டு செல்வார். இளவரசரிடம் போய் என்னை மீட்டு செல்ல சொல்”

“அப்படியே ஆகட்டும் இளவரசி”, என்று கவலையுடன் உரைத்தாள் சாந்தா.

வான்மதி ரதத்தில் ஏறி அமர்ந்ததும் ரதத்துக்கு முன்னே மூன்று புரவி, பின்னே மூன்று புரவி சென்றது. கடைசியாக வல்லவரையன் சென்றான்.

சாந்தா மூலம் செய்தி அறிந்த நரேந்திரவர்மன் அதிர்ச்சியானான். அவன் முகத்தில் சினம் கொப்பளித்தது.

உடனே மகாராஜாவை காண சென்றான். அவனுடைய  கலங்கிய முகத்தை கண்ட வராகசித்தரும்  இந்திரவர்மரும் உண்மை நிலை அறிந்து தவித்து போனார்கள்.

அனைவருமே கலங்கி நின்றார்கள். மகாராஜாவோ கொதித்து போனார். “கவலை கொள்ள வேண்டாம் நரேந்திரவர்மா. அந்த செங்கல்வராயனை வெற்றி கொண்டு இளவரசியை மீட்டு விடலாம். நீ கலக்கம் கொள்ளாமல் இரு”, என்றார் இந்திரவர்மர்.

அவர்கள் என்ன செய்ய என்று சிந்தித்து கொண்டிருக்கும் போதே விசாகதத்தன் படை எடுத்து வருவதாக அறிவிப்பு வந்தது.

“என்ன? அவனும் படை எடுத்து வருகிறானா? அப்படி என்றால் எதிரிகள் எதுவோ சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். நாம் உடனடியாக படையை ஆயத்த படுத்த வேண்டும்”, என்றார் இந்திரவர்மர்.

“நாம் படையை ஆயத்த படுத்தி எதிரிகளுடன் போரிட்டாலும் நம்மால் வெற்றி கொள்ள இயலாது மகாராஜா”, என்றார் அமைச்சர்.

“என்ன கூறுகிறீர் அமைச்சரே? ஏன் நம்மால் வெற்றி கொள்ள இயலாது? நம் வீட்டு பெண்ணை சிறை எடுத்து சென்றிருக்கிறான் அந்த வல்லவரையன். அவனுடன் சேர்ந்து கொண்டு விசாகதத்தனும் படை எடுத்து விட்டான். இனி மாமனாவது மச்சானாவது? எப்போது என் வீட்டு பெண்ணுக்கு பாதகம் செய்ய நினைத்தோனோ அவன் இனி எனக்கு உறவினன் அல்ல அமைச்சரே”

“நான் அதை பற்றி கூற வில்லை மகாராஜா. நாம் இப்போதிருக்கும் நிலைமையில் அவர்களை எதிர்த்து போரிட்டாலும் வெல்ல முடியாது”, என்றார் அமைச்சர்.

“கொஞ்சம் நிலைமையை தெளிவாக கூறுங்கள் அமைச்சரே”, என்றான் நரேந்திரவர்மன்.

“விசாகதத்தன் படை பிரிவு பெரியது. ஆனால் நம்முடையதை விட சிறியது தான். விசாகதத்தன் செங்கல்வராயனுடன் இணைந்து வந்து நம் நாட்டை தாக்கினாலும் நம்மால் எளிதாக முறியடித்து விடலாம். இதை அறிந்து அவர்கள் வேறொரு மகாராஜா உதவியை நாடி அவர்கள் படையும் நம்மை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது இளவரசே”

“என்ன மற்றொரு அரசரா? தாங்கள் யாரை பற்றி கூறுகிறீர் அமைச்சரே?”, என்றான் நரேந்திரவர்மன்.

“விசாகதத்தன் முகலாய மன்னர் அலிசிங் உதவியை நாடி இருக்கிறான். அவனும் படையை நமக்கெதிராக கிளம்பிவிட்டான். இந்த மூவரையும் வெற்றி கொள்ள நம்மால் இயலாது இளவரசே”

“ஐயோ, இதை நான் எதிர்பார்க்கவில்லையே. இப்போது என்ன செய்வது?”, என்று கலங்கினார் இந்திரவர்மர்.

“எதிரிகளிடம் இருந்து நம் நாட்டை காப்பதற்கும், இளவரசியை சிறை மீட்பதற்கும் ஒரு வழி தான் இருக்கிறது மகாராஜா”, என்றார் அமைச்சர்.

“என்ன வழி அமைச்சரே?”

“சமாதானமாக செல்வது தான்”

“அது எப்படி சாத்தியம்? எந்த காரணம் கொண்டு சமாதானம் செய்வேன் நான்?”

“அது நம் இளவரசர் கையில் தான் இருக்கிறது மகாராஜா”

“என் கையிலா? நான் என்ன செய்யவேண்டும் அமைச்சரே?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.

அமைச்சர் அது என்னவென்று கூறும் முன்னரே, “என் மகன் அத்தகைய பாதகத்தை ஒருநாளும் செய்ய மாட்டான். இந்த யோசனையை மனதில் இருந்து அகற்றி விடுங்கள் அமைச்சரே”, என்றார் வராகசித்தர்.

அமைச்சரும் அமைதியாகி விட்டார்.

“அவர் ஏதோ கூற வந்தார் தமையனாரே? அது என்னவென்றும் அறிந்தால் நம் நாட்டை காக்க இயலுமே”, என்றார் இந்திரவர்மர்.

“இல்லை இந்திரவர்மா, ஒரு போதும் நரேந்திரவர்மன் அந்த காரியத்தை செய்ய மாட்டான். அமைச்சர் கூற வந்தது என்ன தெரியுமா? நரேந்திரவர்மன் விசாகதத்தன் மகளை மணக்க வேண்டும். அரசியல் ரீதியாக இந்த திருமணம் நடந்தால் விசாகதத்தன் அடங்கி விடுவான். தன் மகளை திருமணம் செய்து கொடுத்த இளவரசனுக்கு எதிராக படையை அனுப்ப மாட்டான். அதனால் செங்கல்வராயனை எளிதாக வீழ்த்தி இளவரசியை எளிதாக மீட்டு விடலாம். இதை தான் அமைச்சர் கூற வந்தார்”, என்றார் வராகசித்தர்.

அமைச்சரை தீ பார்வை பார்த்தான் நரேந்திரவர்மன். “அவரை ஏன் முறைப்புடன் பார்க்கிறாய் நரேந்திரா? அவர் கூறிய யோசனை எனக்கும் சரியாக தான் படுகிறது”, என்றார் மகாராஜா.

“புரியாமல் பேசாதீர்கள் தந்தையே. என்னால் அவ்வாறு ஓரு காலும் செய்ய இயலாது”, என்றான் நரேந்திரவர்மன்.

“வான்மதிக்கு அளித்த வாக்கை நினைத்து இவ்வாறு கூறுகிறாயா நரேந்திரா? ஒரு அரச குடும்பத்தில் பிறந்தவனுக்கு காதல் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. அவன் மக்களின் பிரச்சனைக்கு தான் தீர்வு காண வேண்டும். என் சகோதரி கோசலையின் மகளை நீ மணந்து கொண்டால் நிச்சம் போர் நின்று விடும்”, என்றார் இந்திரவர்மர்.