தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு யாரேனும் கஸ்டமராக இருப்பார்கள் என்று எண்ணி அதை எடுத்தவன் “ஹலோ” என்க “மிஸ்டர் இன்பநிலவன்” என்றது ஒரு பெண் குரல்.
கொஞ்சம் பழகிய குரல்போல ஆனால் தெரியவில்லை “எஸ்” என்க.
“நான் **** ஸ்கூல் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி சார் பி.எ கொற்றவை பேசுறேன்” என்க ஒரு நிமிடம் அவனிற்கு ஒன்றுமே புரியவில்லை.
நிச்சயம் அவள் அழைப்பை எதிர் பார்க்கவில்லை அதுவும் இப்படி, யாரோ போல… “நீ அவளுக்கு யாரோ தானே அப்படித்தானே அவளிடம் இத்தனை நாட்கள் நடந்து கொண்டாய் இப்போது மட்டும் என்ன” என்றது மனச்சாட்சி.
“ஸ்கூல்ல கார்டனிங் ஒர்க் இருக்கு, உங்களால வந்து பாக்க முடியுமா” என்றாள்.
சிறிது நேரம் யோசித்தவன் “சரி எப்போ வரணும்” என்றான்.
“சார்… இன்னைக்கு ஈவினிங் நாலு மணிக்குத் திரும்ப வருவார், முடிஞ்சா அப்போ வாங்க இல்லனா உங்களுக்கு எப்போ முடியும் சொல்லுங்க நான் சார்கிட்ட பேசுறேன்” என்றாள்.
மூன்று தினங்கள் ஆகிறது அவளைப் பார்த்து இந்தப் பக்கம் அவள் வருவதில்லை, அவனும் காலை மாலை எதிர்பார்த்தான்.
நேற்று மாலை கண்டுபிடித்தான் அவள் சுற்றிக் கொண்டு செல்வதை தன்னை தவிர்க்கிறாள் என்று புரிந்தது, அந்த யோசனையில் இருக்க இன்று அவளின் அழைப்பு.
“இல்ல நான் இன்னைக்கே வரேன்” என்றான்.
“தேங்க்யூ” என்றவள் அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
அவள் அலைப்பேசி எண்ணை எந்தப் பெயரில் சேமித்து வைக்க என்ற யோசனையில் நின்றவன், அதை அப்படியே கிடப்பில் போட்டு அவன் வேலையைப் பார்க்கச் சென்றான்.
மாலை கண்ணாடி முன்பு நின்று தன்னை பார்த்துக்கொண்டிருந்தான் அவளிற்கு பிடித்த கருநீல ஷர்ட் கருப்பு ஜீன்.
“ஏன் வேறு வழியில் செல்கிறாள்” என்ற சிந்தனை தான் நேற்று மாலையிலிருந்து.
நேராக ஸ்கூல் சென்று நின்றான் கேட் கீப்பர் அவனிடம் விவரங்களைக் கேட்டுவிட்டு ஆபீஸ் ரூமிற்க்கு அழைக்க, முன்பே கொற்றவை சொல்லி வைத்திருந்ததால் அவனை அனுப்ப சொன்னார்கள்.
உள்ளே வந்து பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியவன் ஆபீஸ் ரூம் செல்ல அவனை அங்கே அமர வைத்தவர்கள் அவளுக்குத் தகவல் சொல்லச் சிறிது நேரத்திலே அங்கு வந்தாள்.
உடன் வேறொரு நபரும் “வாங்க” என்றவள் அவனைப் பார்க்காமல் தன்னுடன் நின்றவரைப் பார்த்து “ரமேஷ், இவர் மிஸ்டர் இன்பநிலவன் நம்ம கார்டன் ஒர்க் சம்பந்தமா வந்திருக்காங்க, நீங்கக் கூட்டிட்டு போய்க் காட்டுங்க முடிஞ்சதும் சார் ரூமுக்கு கூட்டிட்டு வாங்க” என்றவள்.
“இவர் உங்க கூட வருவார் பாத்து முடிச்சுட்டு வாங்க” எண்று விடைபெற.
அவர்கள் இருவரும் கைக்குலுக்கி அறிமுகம் ஆனார்கள், ரமேஷுடன் நடந்தவன் தலை தானாகவே திரும்பி அவளைப் பார்க்க ஏதோ தீவிரமாக ரிஸ்ப்ஷன் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
சென்றவன் பார்த்து முடித்துத் திரும்ப வந்தவுடன் சேர்மேன் அறையிலிருந்து வெளியில் வந்தவள் “வாங்க” என்று உள்ளே அழைத்துச் சென்று சேர்மேனுக்கு அறிமுகப்படுத்தி வைக்க.
அவருடன் கைகுலுக்கி அமர்ந்தவன், அவர்கள் என்ன எதிர் பார்க்கிறார்கள் எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று தன்னுடைய ஐடியா அனைத்தையும் சொன்னான்.
அவருக்குத் திருப்தி “கொற்றவை சொன்ன கரெக்ட்டா இருக்கும், எனக்கு ஒகே” என்றவர்.
“எஸ்டிமேஷன் எவ்வளவு” என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டு ஒப்புதல் அளித்தார்.
“இன்னும் இரு தினங்களில் வேலை தொடங்கிவிடுவேன்” என்று அவன் கூற “நல்லது எதுவா இருந்தாலும் கொற்றவையை கேளுங்க, இங்க எல்லாம் அவங்களுக்கு தெரியும்” என்றவர்.
வெளியில் சென்றவனுக்கு அவளுடன் பேச வேண்டும் என்ற எண்ணம் இப்பொழுது இன்னும் ஆழமாக, ஆனால் அவள் வரவில்லை. வண்டியின் அருகில் கொஞ்ச நேரம் நின்றவன் வெளியேற, அவன் நிற்பதை கேமிராவில் பார்த்திருந்தவள் அவன் வெளியேறியப் பிறகு தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு வேறு வழியில் சென்றாள்.
அனைவர் மீதும் ஒரு கோவம் ஆற்றாமை, தன்னுடைய உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்ற ஏமாற்றம்.
தனக்கு அவன்மீது விருப்பம் இருப்பதை போல அவனுக்கு வேறு யாரையேனும் பிடித்திருக்கலாம், இல்லையேல் அவனிற்கு தான் பொருத்தம் இல்லை என்று நினைக்கலாம்.
அதற்க்கு மதிப்பு கொடுக்க வேண்டும் யாசகமாகப் பெற விரும்பவில்லை அன்பை, யாரும் வேண்டாம் இப்படியே இருந்து கொள்கிறேன் என்று முடிவு செய்து கொண்டாள்.
இரு தினங்களில் அவனின் அசிஸ்டன்ட் மற்றும் வேலை ஆட்க்களுடன் வந்துவிட்டான், அவளைத் தேடிய விழிகளை அடக்க முடியவில்லை.
இவர்கள் வந்த சிறிது நேரத்தில் ரமேஷ் வந்து சேர்ந்து கொண்டான், முதலில் அங்கு இருந்த அனைத்தையும் எடுத்துவிட்டு சுத்தம் செய்யும் பணி தொடங்கியது.
அவர்களுக்கு உத்தரவுகளைக் கொடுத்தவன் மாலை வருவதாகச் சொல்லிச் சென்றுவிட, அவன் சென்ற பிறகே அவள் வந்தாள்.
வேலை நடப்பதை பார்த்தவள் அவனின் அசிஸ்டென்டிடம் பேசிவிட்டு அவர்களின் உணவு மற்றும் தண்ணீர் தேவைகளைக் கவனிக்க ரமேஷிடம் சொல்லிச் சென்றாள்.
மாலை வந்தவரிடம் பேச்சுவாக்கில் ரமேஷ் கொற்றவை வந்து பார்த்துவிட்டுத் தங்களின் தேவைகளைக் கேட்டறிந்து சென்றதை கூற, ஏன் என்றே அறியாமல் ஒரு சிறு கோபம் முளை விடத் தொடங்கியது இன்பனுக்கு.
நான் இருக்கும்போது வேண்டும் என்றே வராமல் இருக்கிறாள், உரிமையுணர்வும் பொறாமையும் தலை தூக்க தொடங்கியது.
இதை அறியாதவள் அவனைத் தவிர்த்து மற்றவரிடம் பேசிக்கொண்டிருந்தாள் நான்கு நாட்களாக.
நான்கு நாட்களாக அவனும் பார்க்கிறான் அனைவரிடமும் பேசுகிறாள், அவன் பார்வையில் விழுவதும் இல்லை அவனிடம் பேசுவதுமில்லை.
அன்று வந்தவன் வேலைகளைப் பார்த்து விட்டு, திருத்தங்களைப் பற்றிச் சொல்லியவன் அவளுடைய எண்ணிற்கு அழைத்தான்.
“சரி உங்க சேர்மேன்க்கு போன் போட்டு நான் சொல்றத கேக்க வர முடியாதுன்னு உங்க பி. எ சொல்லிட்டாங்க, என்ன பண்றதுனு கேக்குறேன்” என்று வைத்துவிட்டான்.
மண்டை காய்ந்தது அவளுக்கு, சேர்மேனிடம் அவள் பேசிவிடலாம்.
ஆனால் தான் போக விரும்பவில்லை என்றாள் அவனைப் பற்றி அவர் தவறாக என்னைக்கூடும், அதை அவளால் அனுமதிக்க முடியாது.
சிறிது நேரம் கண் மூடி அமர்ந்துவிட்டாள் “இறைவா எனக்குப் பொறுமையை குடு, அவன் கிட்ட இருந்து ஒதுங்கி இருக்கணும்னு என்ன நானே கட்டுப் படுத்தி வெச்சிருக்கேன், மறுபடியும் மறுபடியும் ஏன் இப்படி என்ன சோதிக்கிற”.
“என் மன வலிமையை இழக்க வைக்காத”, என்று வேண்டியவள் எழுந்து அவன் இருக்கும் இடம் நோக்கி நடந்தாள்.
அவள் வரும் வரை அவளைத் திரும்பி அவன் பார்க்கவில்லை, அவள் அருகில் வந்து நிற்க, தன் கையில் இருந்த லேப்டாப் திறந்து ஒரு மாடல் காண்பித்தான்.
“குழந்தைங்க இருக்குற இடம் நிறைய மனமுள்ள பூக்கள் வேண்டாம், பூச்சி வரும், சில குழந்தைகளுக்கு அல்ர்ஜி ஆகவாய்ப்பு இருக்கு” என்றவன்.
சில நல்ல மூலிகை மற்றும் சூழலுக்கு ஏற்றச் செடிகளைக் காட்டினான், அதோடு “சிறிய அளவிலான மர வகைகள் பத்து வைக்கலாம், பிள்ளைகளுக்கு வெயில் நேரங்களில் விளையாடும் நேரங்களில் ஓய்வெடுக்க உதவும், சூழலுக்கும் நல்லது” என்று விளக்கினான்.
“ஒரு நிமிஷம் நான் சாருக்கு கால் பண்றேன், அப்படியே காமிச்சிடலாம்” என்றவள்.
அவருக்கு அழைக்க அவருடைய வேறு கம்பெனியில் இருந்தவர் உடனே எடுத்து “சொல்லுமா” என்க, “சார் இந்தமாதிரி சில விஷயங்கள் சொல்றாங்க, நீங்க எப்போ வருவீங்க ஒரு தடவ மாடல் பாத்துட்டிங்கன்னா வேல ஆரம்பிச்சுடலாம்” என்க.
சிறிது நேரம் யோசித்தவர் “கொற்றவை நானே கால் பண்ணனும் நெனச்சேன், கொஞ்சம் வேல இருக்கு கம்பெனி விஷயமா சென்னை போறேன்”.
“வர மூணு நாள் ஆகும் அதுவரைக்கும் எல்லா அப்டேட்ஸும் எனக்கு வாட்சப் பண்ணிடு டைம் கிடைக்கும்போது பாத்துக்கிறேன்” என்றவர்.
“கார்டன் ஒர்க் நடக்கட்டும், நீ இப்போ இருக்கற வேலை எல்லாத்தையும் அப்படியே வெச்சுட்டு மிஸ்டர் இன்பாவ கூட்டிட்டு நம்ம கம்பெனி வா, நா அப்படியே முடிச்சுட்டு கிளம்புறேன்” என்று வைத்துவிட்டார்.
“என்ன இவருடன் வர வேண்டுமா!!” என்று அவனைப் பார்க்க, “என்ன” என்றான் புருவம் உயர்த்தி.
“ஒன்றும் இல்லை” என்று தலை ஆட்டியவள், “சார் அவர் கம்பனிக்கு வரச் சொல்றார்”.
“எங்க இருக்கு” என்றான், “துறையூர்” என்க.
“ஒகே” என்று அட்ரஸ் கேட்க, “என்னையும் வரச் சொன்னாங்க” என்றாள்.
சட்டென்று ஒரு ஒளி அவன் கண்களில், வந்த சிரிப்பை இதழ்களுக்குள் ஒலித்தவன் வேறு புறம் திரும்பிக்கொண்டான்.
“நான் என் வண்டில வரேன், நீங்கப் பாலோவ் பண்ணுங்க” என்று அவள் நடக்க.
“என்னால வண்டிய உருட்ட முடியாது” என்றான்.
நின்றுவிட்டாள் தன்னை கிண்டல் செய்கிறான் என்று புரிந்தது, “ஆட்டோல போலாம்” என்று அவள் சொல்ல, “உன்ன கடத்திட்டு போற ஐடியா இப்போ இல்ல, தைரியமா வா” என்க.
“என்ன சொல்கிறான் இவன்” என்று செயலற்று நின்று விட்டாள்.
அவன் தன்னிடம் பேசுவதையே அவளால் நம்ப முடியவில்லை, இதில் அவன் பேச்சும் பார்வையும் புதிதாய், அதுவும் வா போ என்கிறான்.
அவன் வண்டியின் அருகில் சென்று அதை இயக்கி அவள் அருகில் நிறுத்தினான், அவள் பார்வை முழுதும் பின் பக்க சீட்டில் இருந்தது இப்பொழுது.
இதில் அமரவேண்டுமா ?? உரிமையாக அமர நினைத்த இடத்தில் யாரோ போல விழிகள் நிறையும் என்று தோன்ற வேறு புறம் திரும்பிக்கொண்டாள்
கண்ணாடி வழியே அவன் பார்வை மொத்தம் அவளிடம் “போகவேண்டாமா” என்க.
“இவனுக்கு ஒன்றுமே தோன்றாதா” என்று எண்ணியவள் ஆழ்ந்த மூச்செடுத்து ஏறி அமர்ந்தாள், பின்னால் கம்பியைப் பிடித்துக் கொண்டு.
பின் பக்கமே பார்த்திருக்க “துறையூர் அந்தப் பக்கமா போகணும் !! நான் முன்னாடி போகணும்னு நினச்சேன்” என்றவனின் கூற்றில் அவளுக்கு மெலிதாகச் சிரிப்பு வந்தது, முன்னே திரும்பியவள் முகத்தில் தெரிந்த புன்னகையில் அவன் இதழ்கள் கூட விரிந்தது.
அவள் வழி சொல்ல அங்குச் சென்று சேர்ந்தார்கள், அவனுக்கு அவரின் கம்பெனி இருக்கும் இடம் தெரியும் ஆனாலும் அவளைப் பேசவைத்தான்.
அங்குச் சென்று அவரைச் சந்தித்து மாடல் காண்பித்தான், அவனிடம் தன் சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டார், பிறகு ஒரு மாடல் அவர் தேர்வு செய்ய அதைக் குறித்துக்கொண்டு அவன் வெளியில் வந்து காத்திருந்தான்.
கொற்றவையிடம் சில அலுவல் சம்பந்தமான விஷயங்களைத் தெரிவித்து அவளையும் அனுப்பி வைத்தார்.
அங்கிருந்து மீண்டும் பள்ளிக்குத் திரும்பிக் கொண்டிருக்க, பாதி வழியிலே வேறு பக்கம் திரும்பினான்.