10

தன்னுடய துணிகள் சிலவற்றை இரண்டு பாகில் வைத்தவள், சில பொருட்களை ஒரு சிறிய கட்டைப்பையில் வைத்து எடுத்துக் கொண்டாள்.

அறையிலிருந்து வெளியில் வந்தவளை பார்த்த அருண் ஒரு நிமிடம் தடுமாறினான், போகச் சொல்லிவிட்டான் ஆனால் அவளைத் தனியே விட மனம் இல்லை.

“அம்மாடி எங்க போற” என்று அவள் அருகில் ஓடி வந்து தடுத்தார் ராதா.

“தப்பு தான் அதுக்கு  இப்படியொரு முடிவு வேண்டாம், இனிமே உன் விருப்பம் இல்லாம எதுவும் நடக்காது” என்று கையைப் பிடித்துக் கொள்ள கல்போல நின்றாள்.

அவர் கையை எடுத்துவிட்டு வாசலுக்குச் செல்லப் பைக் வந்து  நின்றது.

வெங்கடேசன் மனைவி ஆராதனாவுடன் வந்து நின்றான்,  நேரே உள்ளே வந்தவன் “உள்ள வாக்கொற்றவை” என்க.

அவள் அங்கேயே தயங்கி நின்றாள் “நீயும் நான் சொல்றத கேக்க மாட்டியா” என்க உடனே உள்ளே நுழைந்தாள்.

“உள்ள வாங்க” என்றான் கோபாலனிடம்.

அனைவரும் ஹாலில் கூட “என்ன நினைச்சுட்டு இதல்லாம் பண்றீங்க, வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளைன்னு எதுக்கு இருக்கேன்னு தெரியல, என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லல, என்ன அவசியத்துக்கு அவங்கள வரச் சொன்னீங்க” என்க.

“இல்ல மாப்பிள ரெண்டு கல்யாணமும் ஒண்ணா நடந்துடும்  அதான், அந்தப் பையனும்  அதிகம்லாம் பொண்டாட்டி கூட வாழல, மூணு மாசத்தில் அந்தப் பொண்ணு போய்டுச்சு” என்றார் கோபாலன்.

“திரும்பத் திரும்ப அதையே சொன்னா என்ன அர்த்தம், அந்தப் பொண்ணு ஏன் போச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்க.

“அதுக்கு வெளிநாட்டு மாப்பிள தான் வேணும்னு சொல்லுச்சாம், அவங்க வீட்ல கட்டாய படுத்தி  கட்டி வெச்ட்டாங்க, இப்போ நீங்க மட்டும் என்ன பண்றீங்க”.

“அவ வாழக்கையை முடிவு பண்ற உரிமையை உங்களுக்கு யாரு குடுத்தது, அப்பாவா என்ன பண்ணிருக்கீங்க, அருணாக்கு என்ன வேணும் வேண்டாம் நீங்கப் பாத்து பண்ணுங்க”.

“ஆனா கொற்றவை விஷயத்துல முடிவு அவதான் எடுக்கணும், இங்க பாரு கொற்றவை வீட்டை விட்டுப் போறது எதுக்கும் தீர்வில்லை”.

“இனிமே இப்படி நடக்காது, மீறி நடந்தா நீ எடுக்குற எந்த முடிவுக்கும் நான் துணை நிக்குறேன்” என்றவன்.

அருணாவை ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு மனைவியிடம் “வெளில வேல இருக்கு கொஞ்ச நேரத்துல வந்து கூட்டிட்டு போறேன்” என்று கிளம்பிவிட்டான்.

அமைதியாக அமர்ந்திருந்த ஆராதனாவிடம் வந்த ராதா “மாப்பிள ரொம்ப கோவமா இருக்காரா?”.

“அப்பறம் வேற எப்படி இருப்பர், இவ்ளோ பெரிய விஷயம் நடந்துருக்கு ஒரு வார்த்தை எங்களுக்குச் சொல்லல, சும்மாவே என் மாமியார் என்ன காரணம் கிடைக்கும்னு கண்ணுல விளக்கெண்ணை விட்டுட்டு ஒக்காத்திருக்காங்க”.

“அருண் அவருக்குப் போன் போட்டுச் சொன்னதால தெரிஞ்சுச்சு, ஏன் பா எல்லா விஷயமும் என்கிட்டே சொல்லுவீங்க இப்போ என்ன ஆச்சு உங்களுக்கு”.

“அவ ஒரு ஆளுன்னு அவ சொன்னதை கேட்டு வரச் சொல்லி இருக்கீங்க”.

“உனக்கு முன்னாடி ஒருத்தி இருக்கா அந்த  நினைப்பு  இருக்கா இல்லையா உனக்கு” என்ற ஆராதனாவை ஆச்சர்யமாகப் பார்த்தனர் அருணும் கொற்றவையும்.

இன்று வரை அவள் கொற்றவைக்கு ஆதரவாகப் பேசியதில்லை “செம டோஸ் போல மாமா” என்றான் அருண் கொற்றவையிடம் ரகசியமாக அவள் ஒன்றும் பேசவில்லை.

“இப்போதான படிச்சு முடிச்ச வேலைக்குப் போலாம்ல, உனக்குன்னு ஒரு வேலை இருந்த அத சொல்லி  நல்ல சம்மந்தம் பாக்கலாம்” என்க.

“உனக்கு என்ன ? இருந்த எல்லாத்தையும் சுருட்டிட்டு போயிட்ட நீ, என்ன கஷ்டப்பட்ட நல்ல வயசுலயே கல்யாணம் பண்ணி புள்ள பெத்துக்கிட்ட, நா இவங்கள மாதிரி கெழவி ஆகுற வரைக்கும் நிக்குனுமா” என்றவளை கொன்றால் என்ன என்றுதான் தோன்றியது.

“நான் கிஷோரை மட்டும் தான் கல்யாணம் பண்ணிப்பேன், நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது, என் கல்யாணம் உடனே நடக்கணும் இப்போ நீங்க இப்படி பேசினத்துக்கே அவங்க வீட்ல என்ன சொல்லுவாங்களோனு பயமா இருக்கு, அவங்க வீட்ல ஒதுக்கலைனா என்ன பண்ணுவேன்னு தெரியாது” என்று அனைவரையும் மிரட்டியவள் அறைக்குள் சென்று விட்டாள்.

கொற்றவையின் பார்வை தந்தையின் மீது படிந்தது.

“தம்பி அவ ஏதும் தப்பான முடிவு எடுத்துடப் போற” என்ற ராதாவை பார்த்தவன்.

“உங்க பொண்ணு முடிவு எடுக்கலைனா சொல்லுங்க நான் நல்ல எலிமருந்தா பாத்து வாங்கிட்டு வரேன்” என்றவுடன் வாயை மூடிக்கொண்டார்.

“என்னவோ செய்து கொள்ளுங்கள்” என்று முடிவு செய்தவள் தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.

கோபாலனுக்கு தலை இடியாக இருந்தது எப்படி இந்தப் பிரச்னையைக் கையாள என்று தெரியவில்லை.

திங்கள் காலை வேலைக்குச் செல்லத் தயாராகி வெளியில் வந்தவள் பார்க்க வீடே மயான அமைதியில் இருந்தது, அவளுக்கான உணவை ராதா தர வாங்கிக்கொண்டாள்.

தினமும் காலையில் அடுப்படியில் ராதாவிற்கு பாதி வேலைகளை முடித்துக் கொடுப்பாள், அதன் பிறகே வேலைக்குச் செல்லுவாள்.

இப்பொழுது தோன்றியது இவர்களுக்கு எதற்கு நான் செய்ய வேண்டும் என்று, அதனாலே ஒன்றும் செய்யவில்லை தனியாகச் சமாளிக்க முடியாத ராதா அரை குறை சமையலோடு நிறுத்தியிருந்தார். காலைக்கு இட்லியோடு டிபன் சாம்பார் இருக்க, மதியம் சாதம் மட்டும் இருந்தது, அவள் காலை உணவை மட்டும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

அன்று சம்பள நாள் ஆர்வமாக ராதா காத்திருக்க, மாலை வந்தவள் வெறும் ஐந்தாயிரம் மட்டும் அவர் கையில் கொடுத்தாள், அவர் கேள்வியாகப் பார்க்க.

சுற்றிலும் பார்வையை ஓட்டினாள் வீட்டில் அனைவரும் இருக்க “எங்கயாவது பேயிங் கெஸ்ட்டா தங்கினா கூட இவ்ளோ ஆகாது, இந்த வீட்ல நான் அப்படித்தானே, அதனால இது போதும்”.

“வேணும்னா கடனா வாங்கிக்கோங்க, ஆனா அடுத்த மாசம் வாடகை தரமாட்டேன்” என்றவள் உள்ளே சென்று விட.

கோபாலன் அதிர்ந்து போனார், ஒரு நிமிடமே அவரின் உண்மை குணம் வெளியில் வர “என்ன நெனச்சுட்டு இருக்கா ஒழுங்கா  சம்பள பணத்தை குடுக்க சொல்லு” என்றவரின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே குளிக்கத் துணியோடு வந்தவள்.

“இங்க பாருங்க நா ஒரு நாள் கூட உங்க காசுல வாழல, இங்க தங்க இவ்ளோ தான் தர  முடியும் ஏத்துக்க முடியாதுன்னா  நான் ஹாஸ்டல் பாத்துக்குறேன்”.

“உங்க குடும்பத்தை நீங்கப் பாருங்க இல்ல உங்க மகளைப் பாக்க சொல்லுங்க எனக்கு அது அவசியம் இல்லாதது, அஹ்… அப்பறம் இன்டெர்வியூ போறதுக்கு மத்த செலவுக்கு எதுக்கும் என்கிட்டே காசு கேக்க கூடாது தரமாட்டேன்” என்றவள்.

“நைட் சாப்பாடு குடுப்பீங்களா ? இல்லனா சொல்லிடுங்க காச கம்மி பண்ணிட்டு நைட் வெளில பாத்துக்குறேன்”  என்றவள் குளிக்கச் சென்றுவிட ராதாவிற்கு தலை சுற்றுவதை போலக் கிரு கிரு என்று வந்தது.