இன்பநிலவனின் குடும்பம் மிகச் சாதாரணமான விவசாய குடும்பம், அவனின் பாட்டி, தாய் தந்தை, சித்தி சித்தப்பா அனைவரும் ஒரே குடும்பமாக ஒரே வீட்டில் வசித்தனர்.
இரண்டு அறைகள் மட்டும் உடைய ஓட்டு வீடு, குடும்ப சொத்தாக இருந்த பத்து ஏக்கரில் விவசாயம் பார்த்து, இருப்பதை கொண்டு நிறைவாய் தான் வாழ்ந்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்க குடும்பத்தில் அனைவருக்கும் துணிமணி, பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு வந்துகொண்டிருந்தனர் அவனின் பெற்றறோரும் சித்தி சித்தப்பாவும்.
வெகுநேரமாக முன்பில் போய்க் கொண்டிருந்த கரும்பு ஏற்றிச் சென்ற ட்ராக்ட்டர் வழிவிடாமல் செல்ல, இவர்கள் வந்த ஆட்டோ டிரைவர் இடப்பக்கமாக அதை முந்தப் பார்த்தார்.
ஆனால் அதிகப்படியான லோடு ஏற்றியதால் ஆடி ஆடிச் சென்றுக் கொண்டிருந்த வண்டி இவர்கள் முந்தப் பார்க்கும் நேரம் சரியாக இவர்கள் பக்கம் கவிழ்ந்தது.
சம்பவ இடத்திலேயே அனைவரும் அதன் கீழே மாட்டி உயிர் இழந்தனர், பொங்கலுக்கு பெற்றோரின் பரிசு பொருட்களுக்குக் காத்திருக்க, அவர்களின் உயிரற்ற உடல்கள் மட்டும் வந்து சேர்ந்தது.
பதினாறு வயது இன்பநிலவனுக்கு, அவன் தங்கை இனியாளுக்கு எட்டு வயது சித்தப்பாவின் மகன் வசந்திற்கு வெறும் ஆறு வயது.
என்ன செய்ய வேண்டும் அந்த நொடிகளை எப்படி கடக்க வேண்டும் ஒன்றும் புரியவில்லை அவனிற்கு, கண்முன்னே நான்கு பேரின் உயிரற்ற உடல் கிடக்க அப்பொழுது விழுந்தவர் தான் அவனின் பாட்டி காந்தியம்மா.
அனைத்தையும் உடன் இருந்து செய்தது வெங்கடேசன் தான், அனைத்தும் முடிந்து வீட்டில் இருந்தவர்களுக்கு அடுத்து என்ன ஒன்றும் புரியவில்லை, வயதான பாட்டி, மற்ற இருவரும் மிகச் சிறிய பிள்ளைகள்.
அங்கேயும் வெங்கடேசன் உதவிக்கு வந்தார், அவனை ஐ. டி. ஐ டிப்ளோமா கோர்ஸ் படிக்க உதவினார், அதன் பிறகு தெரிந்தவர்மூலம் அவனுக்குத் துபாயில் வேலைக்கு ஏற்பாடு செய்தார்.
அங்கு வேலைக்குச் சென்றபிறகு தான் அவன் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையேறியது.
முதல் நான்கு வருடங்கள் நரகம் கூட இப்படி இருக்குமா என்று அவனுக்குத் தெரியவில்லை, அத்தனை துன்பங்கள் முதலில் அந்த வெயில் ஒத்துக்கொள்ளவில்லை.
மலைக் கோட்டையில் ஏறி, மே மாத உச்சி வெயிலில் நின்றால் கூட இப்படி தகிக்காது போல என்று என்னும் அளவிற்கு வெயில் தகித்தது, அந்தக் காய்ந்த ரொட்டிகளையும் வெறும் பிரட் பழங்களையும் சாப்பிட்டு உயிர் வாழ முடியவில்லை.
உடல் உபாதைகள் வேறு, பல நாட்கள் இப்படியே ஊர் திரும்பி விடலாமா என்று எண்ணியதுண்டு.
பல்லைக் கடித்து பொறுத்துக்கொண்டான் விடாமல் போராடி, அந்த இடத்திற்கு தக்க போலத் தன்னை மாற்றிக் கொண்டான்.
கொஞ்சம் நல்ல வருமானமும் இருக்க, நான்கு வருடங்கள் கழித்து ஊருக்கு வந்தான், கையில் கொஞ்சம் சேமிப்பு இருந்தது.
வீட்டு செலவுக்கு அனுப்பிய பணத்தில் பாட்டியும் நன்றாக மிச்சம் பிடித்தார், தங்கைக்கு நகைகள் வாங்கி சேர்த்தான், அடுத்த நான்கு வருடங்கள் சம்பாத்தியத்தில் வாங்கியது தான் இப்பொழுது கடை வைத்திருக்கும் இடம்.
அது அவனின் சொந்த இடம், எட்டு வருடங்கள் அந்தப் பாலைவனத்தில் கஷ்டப்பட்டு வந்தபிறகு “இங்கயே இருந்துடுப்பா போதும்” என்றார் காந்திமதி.
“அதான் யோசிக்கிறேன் பாட்டி” என்க.
“இன்னும் என்ன யோசிக்கிற, வயசு இறுதி ஆறு ஆச்சு கல்யாணம் பண்ணனும்”.
எவ்வளவு நகை இருக்கிறது, என்ன சீர் செய்ய முடியும் அனைத்தையும் பாட்டியும் பேரனும் பேசி முடித்தனர், நாம் நினைப்பது எல்லாம் நடக்கிறதா என்ன.
இன்னும் இரண்டு வருடம் நின்றால் நல்ல ஒரு தொகை கிடைக்கும், இங்கு ஒரு பிசினெஸ் தொடங்க வேண்டும், அனைத்தையும் யோசித்தவன் மீண்டும் சென்றான்.
ஆனால் சென்ற இரண்டே மாதத்தில் அவன் தலையில் இடியாய் இறங்கியது தங்கையின் காதல் திருமணம்.
இரண்டு மாதம் முன்பு கூட அங்கு இருந்தானே, அவளும் வசந்தனும் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து, வெளியில் அழைத்துச் சென்று நல்ல உணவு வாங்கி கொடுத்து, உடைகள் எடுத்து என்று அனைத்தும் செய்தானே.
வசந்தன் கூட “வேண்டாம்னா… நீ அங்க எவ்ளோ கஷ்டப்படுற நெறய செலவு செய்யாத” என்க.
“எனக்குச் செய்யத்தான் யாரும் இல்ல, உங்களுக்கு நா இருக்கேன், நான் கஷ்டப்படுறேன் அது நமக்காகத் தான பரவாயில்ல” என்று சொன்னானே.
அவளிடம் கடுமை கூடக் காட்டியதில்லை, ஒரு முறை தன்னிடம் இதுபோல் விருப்பம் இருக்கிறது என்று கூறி இருக்கலாமே.
அந்த வலியை அவனால் ஏற்கவே முடியவில்லை, ஊரிலிருந்து மாமா அழைக்கக் கொஞ்சம் படப் படப்போடு தான் எடுத்தான்.
“என்ன மாப்ள இது, எல்லாம் உனக்குத் தெரிஞ்சு தான் நடந்துச்சா” என்க.
என்ன பேசுகிறார் இவர் என்று தான் யோசித்தான் “என்ன சொல்றீங்க மாமா”.
“அவ ஓடிப் போனது யாரு கூடத் தெரியுமா டியூஷன் சென்டர்ல வேல பாத்த சார் கூட, அதும் அந்தப் பய வேற மதம்”.
“சொந்தக்காரன் முன்ன தலை காட்ட முடியல, எல்லாம் கேவலமா பேசுறாங்க, காசு காசுன்னு நீ அங்க போய் இருந்ததால தான் இவ்வளவும்” என்று நாக்கில் நரம்பு இல்லாமல் பேசினார்.
ஏதோ இவர் தான் இத்தனை காலம் அந்தக் குடும்பத்தைத் தாங்கிய போல, “இனி உனக்கே என் பொண்ண எப்படி தருவேன், என் கூட என் சாதி சனம் எப்படி உறவாடும்” என்று கண்டமேனிக்கு பேசிக்கொண்டிருக்க
“நிறுத்துங்க, உங்க பொண்ண கட்டிக்கிறேன்னு நா எப்போ சொன்னேன், உங்க சாதி சனம் முக்கியம்னா அவங்க கூடவே இருங்க, இத்தனை நாள் நாங்க தனியா தான் இருக்கோம்”.
“இவ்ளோ நாள் தாங்க வராத சொந்தம் இனிமேலும் தேவையில்லை” என்றவன் வைத்துவிட்டான்.
அவன் வரவில்லை இரண்டு வருடம்.
காந்திமதி மிகவும் உடைந்து போனார் “என்ன குறை வைத்தேன் இவளுக்கு, நல்ல படிப்பு கொடுத்தோம் அண்ணனாக எல்லாம் செய்தானே, இப்படியொரு காரியம் செய்ய எப்படி மனம் வந்தது, ஊர்க்காரர்கள் சொந்தம் அனைவர் முன்பும் தலை குனிய வைத்து விட்டாளே” என்று.
இரண்டு வருடம் கழித்து வந்தவன் வசந்தனை அழைத்துக் கொண்டு அவளைக் காண சென்றான்.
ஊருக்குள் நுழைந்து அந்தத் தெருவை அடைந்துவிட்டார்கள், வசந்தன் அந்த வீட்டின் அருகில் கூடப் போகவில்லை.
அவனால் இதை ஏற்க முடியவில்லை, எத்தனை பெரிய நம்பிக்கை துரோகம் இதனால் எத்தனை பிரச்சனைகள், அவமானங்கள் அண்ணனைக் கண் கொண்டு காண இயலவில்லை.
மிகவும் மெலிந்து ஏதோ மன அழுத்தத்தில் இருப்பவன் போல, அந்தக் கோவம் எல்லாம் அவள்மேல் திரும்பியது.
வீட்டின் வாயிலில் இவன் நிற்க ரியாசின் தாய் இவனைப் பார்த்து “யார் வேணும்” என்க.
“இனியாள் இருக்காளா” என்றான்.
“நீங்க யாரு” என்றவர் சந்தேகமாகப் பார்க்க.
“அவளைக் கூப்பிடுங்க” என்றான்
“அப்படி யாரும் இல்ல, மறுமவ பேகம் தான் இருக்கா” என்க
“அண்ணா” என்று உள்ளே இருந்து ஓடி வந்தாள் இனியாள்.
அருகில் நெருங்கியவள் இரண்டடி தள்ளி நின்றாள் அவன் பார்வை தள்ளி நிறுத்தியது, “அண்ணே” என்றவள் விழிகள் கண்ணீர் சிந்த.
“உன் அண்ணனா வாபா உள்ள வா” என்றார் அவர்.
“பரவாயில்லங்க” என்றவன் அந்த வராண்டாவில் அமர்ந்துவிட்டான்.
உள்ளே செல்லக் கூடாது என்றில்லை, கிறிஸ்டின் முஸ்லீம் நண்பர்கள் அவனுக்கும் உண்டு எல்லோரிடமும் சமமாகத் தான் பழகுவான்.
ஆனால் இதை ஏற்க முடியவில்லை, அவளின் குழந்தையின் அழுகுரல் கேட்டது, அவள் சென்று குழந்தையை எடுத்து வந்தாள் பார்த்துக் கொண்டான், வாங்கவில்லை.
அவளிடம் பேசவும் இல்லை “உங்க மகன் இல்லையா” என்று அவரிடம் கேட்க “குளிக்கிறான் வந்துடுவான்” என்றார்.
“டீச்சாப்பிடுன்னா” என்று அவள் டீயோடு வந்து நீட்ட “வேண்டாம்” என்றான், வசந்தன் இந்தப் பக்கமே பார்க்கவில்லை.
“ஏன் தம்பி நாங்க வேற ஆளுனு வேண்டாம் சொல்றீங்களா” என்றவர் கேட்க “அப்படி நினைச்சிருந்தா இங்க வந்தே இருக்க மாட்டேன், குடிக்க கொஞ்சம் தண்ணி மட்டும் குடுங்க, நீங்கக் குடுங்க” என்றான் அவளின் மாமியாரிடம்.
தன கையால் தண்ணீர் கூட அண்ணன் குடிக்க மாட்டான் என்ற உண்மை வலித்தது.
ரியாஸ் வந்தவன் “வாங்க” என்றான் தயக்கமாக, தலை மட்டும் ஆட்டியவன் “வசந்தா” என்க அவன் ஒரு பையைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நிமிர்ந்தும் பார்க்காமல் சென்று விட்டான்.
அதிலிருந்து ஒரு பையை எடுத்தவன் “இதுல நாப்பது பவன் நகை இருக்கு கல்யாணத்துக்கு சேர்த்து வெச்சது” என்று நீட்ட.
“இல்ல வேண்டாம்” என்றான் அவன்.
“புடிங்க யாரா இருந்தாலும் நாங்க செய்ய வேண்டியது” என்றவன் ஒரு ஐந்து லச்சம் கொடுத்துவிட்டு “சொத்துல பொண்ணுக்கும் பங்கிருக்கே, பத்து ஏக்கருல அஞ்சு வசந்தனோடது, மீதி அஞ்சு எங்க ரெண்டு பேருக்கு, அதுல இனியாளுக்கு சேரவேண்டிய இடத்தோட காசு”.