7

“மாமா” என்ற அழைப்பை உணர்ந்தாலும் திரும்பிப் பாராமல் அமர்ந்திருந்தான் அருண்,  வருவது அவன் அக்கா ஆராதனாவின் சீமந்த புத்ரி சக்தி.

வயது பதினைந்து தான், ஆனால் இருபத்தி ஐந்து வயதின் கணவகளும், விவரமும், அலைபேசி என்னும் தேவை இல்லாத ஆணி நிறைய முட்டாள் தனமான போதனைகளை அவளில் கடத்தி இருந்தது.

அவளைக் கவனிக்க சொல்லிப் பலமுறை கூறியும் அவனுடைய அக்காவிற்கு அதற்க்கு நேரம் போதவில்லை.

கொற்றவை தவறு என்றால் அது யாராக இருப்பினும் கண்டிப்பாள், அவளின் அக்காவுடன் ஒதுக்கம் இருந்தாலும் அவளின் மகளை நன்றாகத் தான் பார்த்துக் கொண்டாள்.

விளையாடுவது, அவளுக்குத் தேவயானவையை வாங்கி  கொடுப்பது, வெளியில் அழைத்துச் செல்வது என்று, ஆனால் தாத்தா மற்றும் அம்மாவின் தவறான போதனை அந்தக் குழந்தை மனதில், குடும்பத்தின் முதல் பேரக் குழந்தை நாம் தான்.

தவறு செய்தாலும் யாரும் நம்மைக் கண்டிக்க முடியாது என்பது போன்று பதிந்து விட்டது.

சில சமயம் மரியாதை குறைவாய் சக்தி பேச அதைக் கொற்றவை கண்டித்தாள், அதிலிருந்து அவளிடம் ஒதுக்கம் காட்டினாள் சக்தி.

கொற்றவையும் வழிய சென்று பேசுவதில்லை, வேண்டாம் என்றால் போ என்று கடந்துவிடுவாள், ஆனால் செய்யவேண்டிய கடைமையை சரியாகச் செய்தாள்.

அவள் இறங்கி போகும் ஒரே நபர் இன்பன் மட்டுமே, அவனும் அவள் பொறுமையை அதிகம் சோதிக்கிறான்.

“மாமா” என்று மீண்டும் கொஞ்சிக்கொண்டே அவனின் அருகில் வந்தவளை நிமிர்ந்து பாராமல் தன்னுடைய போனை பார்த்திருந்தவன் “சொல்லு சக்தி” என்றான்.

“என்ன பாருங்க மாமா, இந்த டிரஸ் நல்லா இருக்கா” என்க “காலைலே பாத்துட்டேன் சக்தி, நல்லா இருக்கு”.

“அது வேற…, இப்போ வேற மாத்திட்டேன் பாருங்க” என்க கண்களை மூடி  ஆழ மூச்செடுத்தவன்,  நிமிர்ந்து பார்த்தான், பேபி பிங்க் நிறத்தில் பாவாடை தாவணி அணிந்திருந்தாள்.

“நல்லா இருக்கு” என்க, அவன் அருகில் அமர்ந்தவள் “நெக்லஸ் சூப்பர் மாமா, டிசைன் அவ்ளோ அழகா இருக்கு, இந்த டிரஸ் கூட நீங்க வாங்கினது தான் இதும் சூப்பர்” என்றவளை நக்கலாகப் பார்த்தவன்.

“இதெல்லாம் நா வாங்கினேன், அப்படினு உன் தாத்தா சொன்னாரா!!” என்றவன்.

“அத நீ நம்பிட்ட !!.. அப்படினு நானும் நம்பனும் அதான, உங்களுக்கெல்லாம் ஏன் இவ்ளோ அற்பமான புத்தி” என்று மீண்டும் அலைபேசியில் கண் பதித்தான்.

முகம் மாறி விட்டது சக்திக்கு, இருந்தாலும் மறைத்துக் கொண்டு “சரி வாங்க சாப்பிட போலாம்” என்க “நாச்சாப்பிட்டேன்” என்று முடித்துக் கொண்டான்.

“இன்னைக்கு எனக்குப் பங்சன், ஆனா நீங்க என்கூட சாப்பிடல” என்க, அவளைப் பார்த்தவன் “ரொம்ப டயர்டா இருக்கு,  ப்ளீஸ் நீ போய்ச் சாப்பிடு” என்றான்.

சிறிது நேரம் நின்றவள் எழுந்து சென்றுவிட்டாள் “முடியலடா சாமி வீட்டுக்குப் போய்டணும்” என்றவன் தமக்கையை தேட, அவள் நாயகனுடன் கனவுலகில் நீச்சலிடத்துக் கொண்டிருந்தாள்.

உணவு டேபிளில் தலை கவிழ்ந்து படுத்திருந்ததாள் கொற்றவை,  உறங்குவதாக அனைவரும் நினைத்துக் கொண்டனர்.

அருண் வந்து அழைக்க(உலுக்க) கனவிலிருந்து நிஜத்திற்கு குதித்த ஹாங்கோவர் மாறச் சிறிது நேரம் பிடித்தது, “வீட்டுக்குப் போலாமாக்கா, தூங்கணும் செம டயர்ட்” என்றான்.

“சரி” என்றவள் தாயிடம் கூற செல்ல,  மீண்டும் நாயகன்.

வேறு யாரிடமோ பேசிக் கொண்டிருந்தவன் பார்வை, ஒரு இடத்தில அழுத்தமாகப் பதிந்து மீண்டது “நம்மள பாத்தா மட்டும் இவருக்குக் கண்ணு சுளுக்கிக்கும், இப்போ யார இவ்ளோ பாசமா பாக்குறாரு” என்று அவளும் விழிகளைச் சுழல விட.

நின்றது அவள் வாழ்வின் நிரந்தர வில்லன், அவள் தந்தை “ஆத்தி இவன் கிட்ட என்ன வம்பு வளத்தாரு தெரியலையே” என்று அவள் சிறு மூளை சூடாக.

அவளை நெருங்கி வந்தான் அவன், அருகில் அவனைப் பார்த்த அதிர்ச்சியில், விரிந்த விழிகள் விரிந்தே இருக்க, அவள் கழுத்தில் பார்வை பதித்து “இப்போ இன்னும் வசதி உறுத்தாது…” என்று நடந்துவிட என்ன சொன்னான் என்பதே அவளுக்குப் புரியவில்லை.

கொற்றவையிடம் இன்பநிலவன் பேசுவதை பார்த்த கோபாலன், உடனே மனைவியை அழைத்து “ஏய் அவன் என்ன பேசினான்னு அவகிட்ட கேளு” என்க.

“யாருங்க பேசினா? யாருகிட்ட பேசினாங்க” என்று அவர் விழித்தார்.

“உன் ரெண்டாவது பொண்ணுக்கிட்ட இப்போ ஒருத்தன் பேசினான், என்ன பேசினான்னு கேளு” என்க கணவனை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டே கொற்றவையின் அருகில் சென்றவர்.

“யாரு அந்தத் தம்பி என்ன சொன்னார்” என்க அவள் விழித்தாள்.

அவள் அருகில் வந்த அருண், “என்னனு தெரியணும்னா அவரையே போய்க் கேக்க சொல்லு” என்றவன் தன் அக்காவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வண்டியின் அருகில் சென்றான்.

வண்டியை எடுத்தான், பாதி தூரம்வரை இருவரும் எதுவும் பேசவில்லை “அக்கா அக்கா” என்றவன் அழைப்பில் அப்படியே இருந்தாள்.

வண்டியை நிறுத்தியவன் “அக்கா” என்று சத்தமாக அழைக்க “என்னடா” என்றாள், “எவ்ளோ நேரமா கூப்பிடுறேன், முதல்ல இறங்கு” என்றான்.

இருவரும் ஒரு மரநிழலில் நின்றனர், “உனக்கு இன்பன் மாமாவைப் பிடிக்கும் தானே” என்க.

“ஆஹ் !! இன்பன் மாமாவா…” என்று மீண்டும் விழி விரித்தாள்.

அவளை நன்றாக உலுக்கியவன்,  “இப்போ சொல்லு” என்க.

“உனக்கு எப்படிடா தெரியும்?”.

“நானும் வசந்தம் ஒரே காலேஜ், ஒரே கிளாஸ்” என்க.

“டேய் கொஞ்சம் கொஞ்சமா ஷாக் குடுங்க டா, ஒரே நேரத்துல எல்லாரும் வெச்சு செய்றீங்க” என்றாள்.

“கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு, அப்புறம் சொல்லு”.

“உனக்கு எப்போ தெரியும் குட்டி”.

“நீ மாமா கிட்ட லவ் சொன்ன அன்னைக்கே தெரியும், வசந்த் சொல்லிட்டான்” என்க.

“ஏன் நீ இவ்ளோ நாள் என்கிட்டே கேக்கல குட்டி”

“நீயா சொல்ற வரைக்கும் கேக்கவேண்டாம்னு இருந்தேன்” என்றவன் “என்ன பிரச்னை தெரில, ஆனா அப்பா தான் ஏதோ சொல்லிருக்கார், மாமாக்கு அப்பா மேல தான் கோவம்” என்க.

“ஐயோ தலையே சுத்துதே” என்று தலையைப் பிடித்துக் கொண்டாள்.

வீட்டில் கட்டிலில் படுத்து விட்டதை பார்த்திருந்த இன்பநிலவன் முகத்தில் அவளிடம் பேசியதில் வந்த மலர்ச்சியை விட அவள் தந்தையை பார்த்த கோவம் அதிகம் இருந்தது.

தாய் தந்தையை இழந்து அடுத்து என்ன என்று பதறி நின்றபொழுது துணை நின்றவர் வெங்கடேசன், கொற்றவையின் அக்கா கணவர்.

அவனுக்குத் துபாய் போக ஏற்பாடு செய்து பணமும் கொடுத்தவர், எத்தனையோ கஷ்டங்கள் அனுபவித்து தங்கையையும் தம்பியையும் காப்பாற்ற அவன் போராட, அவன் தங்கை செய்த ஒரு செயல் அவன் நிம்மதியை குலைத்தது.

விசேஷம் நடந்து கொண்டிருந்த சபையில் வைத்து அவன் குடும்பத்தைக் கேவலமாகப் பேசிய கோபாலனை, வெங்கடேசனின் முகத்திற்காக விட்டு வைத்தான்.

அதன் பிறகு அவரைக் காணும் போதெல்லாம் ஒரு வித எரிச்சல் மண்டும், தன்விருப்பத்தை அவனிடம் அவள் சொல்லுவதற்கு இரண்டு மாதம் முன்பு அது நடந்தது.

கோபாலனின் மேல் இருந்த கோவத்தை அவளிடம் காட்ட வேண்டாம் என்று எண்ணியிருந்த இன்பநிலவன், அவள் வந்து விருப்பம் சொன்னவுடன் தன் சுயத்தை இழந்தான்.