2

பைக் சத்தத்தில் எட்டி பார்த்த வசந்தன் வந்தவர்களைப் பார்த்து முகம் சுருக்கினான், அவர்கள் வண்டியிலிருந்து இறங்கி அருகில் வர “வாங்க” என்ற வாக்கியதோடு முடித்துக்கொண்டு கடையின் உள் சென்றான்.

“மாப்ள எங்க டா” என்றவரின் கேள்விக்குக் கடு, கடு என்று அவரைப் பார்த்தவன் மனதிற்குள் “ஆமா அப்படியே இவர் பொண்ண என் அண்ணனுக்குக் கட்டி குடுத்துட்டாரு, மாப்பிள்ளையாம் மாப்பிள” என்று பொருமினான்.

 “ஏலே நாக்கேட்டுட்டே இருக்கேன் என்ன யோசனை உனக்கு”.

“அண்ணா இன்னும் வரல, ஒரு வேலையா வெளில போயிருக்கு” என்க.

“ஆமா பெரிய சீமராஜா இவருக்கு வேல தேர்ல தொங்கிட்டு வருது” என்று நொடித்தார் மாமாவின் மனைவி கமலம்.

“ஏய் புள்ள  சும்மா இருக்க மாட்ட” என்றார் கந்தவேல்.

கலந்துகொண்டு இருந்த காப்பியில்  உப்பை அள்ளிக் கொட்டலாமா என்று யோசனை ஓடியது வசந்தனுக்கு, அவன் யோசனையைத் தடை செய்தது “படப் பட” என்று வந்த புல்லட் சத்தம்.

இருவருக்கும் காப்பியை கொண்டு வந்து வைத்த வசந்தன்  அங்கேயே நின்று கொண்டான், வரும்போதே இவர்களைப் பார்த்துவிட்டவன் நெருங்கி வர, எப்பொழுதும் போல அவன் கம்பீரம் கமலத்தை ஈர்த்தது.

“கொஞ்சம் நல்ல வேலையும், சொத்தும் இருந்திருக்கலாம் தன்  மகளுக்கு மிகப் பொருத்தமானவன், என்ன செய்ய வெறும் கம்பீரம் சோறு போடுமா” என்று நினைத்தவர் மெதுவாகக் காபியை குடிக்க தொடங்கினார்.

“வாங்க மாமா” என்றவன் கவனமாக அத்தையை தவிர்த்து “வாங்க” என்றான், அருகில் இருந்த சேரில் அமர்ந்தவன் “என்ன மாமா காலைலே வந்துருக்கீங்க ? என்ன விஷயம்” என்க.

கமலம் பையிலிருந்து பத்திரிக்கையை மட்டும் எடுத்துக் கணவனிடம் நீட்ட, அவர் “ஏய் தட்ட எடுடி, முறையா குடுக்கணும்ல”என்றார்.

“தட்டெல்லாம் கணக்கு பாத்து எடுத்து வெச்ருக்கேன், எல்லார்க்கும் குடுக்க இல்ல” என்று சொல்வது தெளிவாக அவர்கள் இருவரின் செவிகளை அடைந்தது.

“சரண்யாவுக்கு கல்யாணாம் முடிவாச்சுல்ல அதான் பத்திரிக்கை வெக்க வந்தோம் மாப்பிள” என்க.

 மூத்தவன் முகத்தில் எந்த வித்தியாசமும் இல்லை, அதே துளைக்கும் பார்வை, அந்தப் பார்வையில் தானாகவே பையில் இருந்த தட்டைக் கமலம் எடுக்க.

இவர் மனைவி ஒரு தட்டுக்கே கணக்கு பார்க்கிறார், தாய் மாமாவான இவருக்குத் தங்கை மகனை அவன் வீட்டிற்கு சென்று அவன் பாட்டியின்(அப்பாவின் அம்மா) கையில் பத்திரிக்கை கொடுத்து அழைக்க வேண்டும் என்ற அடிப்படை மரியாதை கூடத் தெரியவில்லை.

தெரியவில்லை என்று அல்ல, அதைச் செய்ய மனம் இல்லை, தவிர்க்கிறார்கள் அதன் காரணமும் அவன் அறிவான், இதில் இவர்களுக்கு முறைபற்றிய பேச்சு வேறு என்று மனதில் எண்ணியவன்.

“என்னைக்கு கல்யாணம் மாமா” என்று பத்திரிக்கையைக் கையில் வாங்கிக் கொண்டான், உன் தட்டு எனக்குத் தேவையில்லை என்ற  உறுதியோடு.

தேதியைப் பார்த்துக் கொண்டவன்,  தன் போனில் ஏதோ பார்த்து அன்று தனக்கு வெளியூர் செல்லத் தேவையில்லை என்பதை உறுதி படுத்திக்கொண்டான்.

“டேய் இன்னும் காலேஜ் கிளம்பாம என்ன பண்ற” என்ற அதட்டலில் “ரெடினா தோப்போறேன்” என்ற வசந்தன் வெளியேற, வேக நடையில் அந்தத் தோட்டத்தில் நுழைந்தாள் மகா லட்சுமி.

“எக்கோ நீ என்ன பண்ற, உடம்பு சரியில்லைன்னு தானே லீவு கொடுத்தோம், உன்ன யாரு வரச் சொன்னா” என்க “டேய் இப்போ ஒன்னும் இல்லை சரி ஆயிடுச்சு, வீட்லே உக்காந்து விட்டத்தை பாக்குறதுக்கு, இங்க வந்தா நாளு போகும்” என்றவள் “நீ போ நேரம் ஆச்சு” என்று விரைந்து மூத்தவனிடம் வந்து “நாக்கடைய பாத்துக்குறேன்” என்றாள் “ம்ம்” என்றவன் பார்வை மீண்டும் மாமனில் பதிய, அவள் கடையின் உள்ளே சென்றாள்.

“இங்க வேல பாக்குறாளா” என்ற கமலத்தின் கேள்விக்கு “ஹ்ம்ம்” என்றான் அவன், கமலத்தின் மூளை வேகமாகக் கணக்கிட்டது “பார்க்க வசதி இல்லாதவள் போல் இருக்கிறாள், இவனுக்குச் சரியாக இருப்பாள் ஒருவேளை அதனால் தான் வேலைக்குச் சேர்த்திருப்பானோ” என்று எப்பொழுதும் போலக் கேவலமாக யோசித்தது.

“கல்யாணத்துக்கு பாட்டியையும் கூட்டிட்டு வந்திடு” என்ற கமலத்திடம் “அவங்க எங்கயும் வெளில போறதில்ல” என்று முடித்துவிட்டான்.

அதே நேரம் மஞ்சள் நிற ஸ்கூட்டி வந்து நின்றது, அதிலிருந்து இறங்கியவளை பார்த்தவர்கள் “யாரு” என்று பார்த்திருக்க அவள் நேராகச் சென்று வலப்பக்க மூலையில்  நெல்லி மரத்தின் கீழே அமைக்கப்பட்ட அந்தச் சிறிய குடில் போன்ற அமைப்பிற்குள் நுழைந்தாள்.

நான்கு பக்கமும் மூங்கில் கழி வைத்து, மேலே மட்டும் கூரை வேயப்பட்டிருக்கும் அதுபோல அங்கே பத்து குடில் இருந்தது, அனைத்திலும் பெஞ்ச் மற்றும் டேபிள் இடப்பட்டிருக்கும்.

சுற்றிலும் மரங்கள்  சூழ குளுமையான இடம், அந்தப் பக்கம் இருக்கும் கல்லூரி மற்றும் பள்ளியில் வேலை செய்பவர்கள் இந்த நெடுஞ்சாலையில் தொலை தூர பயணம் போவோர்  அனைவரும் பிரெஷ் ஜூஸ், காப்பி,  டீ மற்றும் சிறிய அளவிலான ஸ்னாக்ஸ் அனைத்திற்க்கும் இங்குத் தான் வருவார்கள்.

புதுமைகள் நிறைந்தது கேரட் லெமன் மற்றும் இஞ்சி சேர்த்தது, அத்திப்பழம் மற்றும் தேன் சேர்ந்தது, ஆப்பிள் மற்றும் பீட்ரூட் சேர்ந்தது என்று கேட்கும் விதத்தில் அடித்துத் தரப்படும், இவர்களுடைய லஸ்ஸி மிகவும் சிறப்பு வாய்ந்தது, நிறைய ரசிகர் பட்டாளம் உண்டு இவர்களுடைய லஸீக்கு.

அதோடு நர்ஸரியும் வைத்திருக்கிறான், சிறிய அளவில் அல்ல, கார்ப்பரேட் கம்பெனிகள், பங்களாக்கள், மருத்துவமனை அனைத்திலும் கார்டன் அமைத்துத் தரும் ஒரு சிறிய கம்பெனியே வைத்திருக்கிறான்.

இது எதுவும் அவனின் மாமாவிற்கோ அவரின் மனைவிக்கோ தெரியாது, சாதாரண ஜூஸ் கடை வைத்திருப்பவன்… அது தான் அவர்களின் எண்ணம், மகளுக்குத் தாங்கள் பார்த்த ஐ. டி மாப்பிள்ளையின் இரண்டு மாத சம்பளம் இவனுக்கு ஒரு மாதத்தில் கிடைப்பதை அறிந்தால் தலை சுற்றி போவார்கள்.

அந்த மரத்தில் சாய்ந்து பெஞ்சில் கால் நீட்டி அமர்ந்துவிட்டாள் கொற்றவை, அவள் வந்ததை பார்த்ததுமே அவளுக்கான ஸ்ட்ரோங் காபியுடன் வந்துவிட்டாள் லெட்சுமி, முகம் நிறைய புன்னகையுடன்.

“ஏய் லெச்சு சரி ஆயிடுச்சா” என்றவளிடம் “ஹ்ம்ம் அதான் ஓடி வந்துட்டேன்”.

“நல்லதா போச்சு, பத்து நாள் நீ இல்லாம ஒரே போர்” என்றாள் கொற்றவை.

“நம்பிட்டேன் நீ எதுக்கு வரேன்னு இங்க இருக்க இந்த நெல்லி மரத்துக்குக் கூடத் தெரியும்” என்றவளிடம் “தெரியும் தெரியும்” என்றவள் விழிகள் அவனை மொத்தமாக விழுங்கிக் கொண்டிருந்தது.

 பாவையின் ஆளை விழுங்கும் பார்வையில் அவனிடம் சிறு தடுமாற்றம் அதை உடனே மறைத்து, மாமனை வழி அனுப்பிவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டான் இன்பநிலவன்.

“பாரு போய்ட்டான்… கொஞ்ச நேரம் இருந்தா என்ன, பாத்து எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா” என்றவள் குரலில் ஏக்கம் நிறைந்து வழிந்தது.

“என்ன பண்ண போற” என்ற லெச்சுவிடம் “தெரில அதான் புடிக்கல சொல்லிட்டானே, ஆனா இந்த வெக்கம் கெட்ட மனசு அங்க தான போகுது” என்றாள் பெருமூச்சோடு.

“பெத்தவங்க பிடிக்கலன்னு சொல்லல, ஆனா காட்டினாங்க இவர் பிடிக்கலைனு சொல்லி அத காமிச்சுட்டும் இருக்கார், அவங்க பண்ணினது அவ்ளவா வலிக்கல, ஆனா இது வலிக்குது” என்றாள் அவன் அறையின் வாயிலில் பார்வை பதித்து.

“சரி நாக்கிளம்புறேன், ஸ்கூல் போகணும்” என்றவள் எழுந்துகொள்ள லெட்சுமி கஸ்டமர்ஸை கவனிக்க சென்றுவிட்டாள், அவளோடு இன்னும் இருவர் அங்கு வேலை பார்க்கிறார்கள் ஆனால் முழு பொறுப்பு லட்சுமியிடம், நம்பிக்கையானவள், அணைத்து வகையான ஜூஸின் செயல்முறைகளையும் அவளுக்குக் கற்று தந்திருந்தான் இன்பநிலவன்.

 தன் ஸ்கூட்டி நோக்கி நடந்தவள்,  மர நிழலில் நின்ற அவனின் புல்லெட்டை பார்த்துவிட்டு அவன் அறை நோக்கி பார்வையை செலுத்தினாள், அவன் பின்னால் நர்சரியில் இருந்தான், அந்த தைரியத்தில் அதன் அருகில் சென்று வருடி பார்த்தாள்.

அவனுடன் அதில் போகவேண்டும் என்பது நெடு நாள் ஆசை, நடக்கும் என்பதில் அவளுக்கு ஒரு சதவீதம் கூட நம்பிக்கை இல்லை.

எப்பொழுதும்  வண்டியில் அமர்ந்தவுடன் அந்த மிரர் பார்த்து  மீசையை   முறுக்குவான், அந்த ஞாபகத்தில் அதற்கு அழுத்தமாக முத்தம் பதித்தவள் வேகமாக தன் ஷால் வைத்து மிரரில் பதிந்த லிப் கிளாஸை துடைத்தாள், பிறகு  தன்  வண்டியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.

சிறிது நேரம் கழித்து வந்தவன் “நா வெளில போறேன் வர சாயந்திரம் ஆகும், எதும்னா போன் பண்ணு”  என்று லட்சுமியிடம் கூறிவிட்டு , அவள் தலை ஆட்டுவதை கூட கவனியாமல் வண்டியில் ஏறி அமர்ந்தவனின் கை மீசையை முறிக்கிக்கொன்டே கண்ணாடியை பார்க்க,  துடைத்த பிறகும் தெரிந்த அவள் இதழின் தடத்தை பார்த்தவன் முகத்தில்  கீற்றாக புன்னகை.