ஆனால் அவள் அப்படி பேசியது வான்மதிக்கு தான் எரிச்சலாக வந்தது.
“நீ எண்ணுவது தவறு. இது வரை எப்படியோ? இனி அவர் வேறு பெண்ணுக்கு சொந்தமான பின்னால் உன் நினைப்பு தவறு சாந்தா. நீ அவரை மறந்து வேறு ஒருவரை மணக்க வேண்டும்”, என்று கடுமையாகவே உரைத்தாள் வான்மதி.
“அது ஒரு காலும் என்னால் இயலாது இளவரசி. கடைசி வரை அவரையே என் காதலனாக எண்ணுவேன். தாங்கள் இந்த தேசத்தின் இளவரசியாக இருக்கலாம். ஏன் நாளைய மகாராணியாக கூட இருக்கலாம். அதற்காக என் திருமண வாழ்வில் தாங்கள் முடிவு எடுக்க முடியாது. அப்படி எதாவது என்னை கட்டாய படுத்தினீர்கள் என்றால் என் உயிரை ஆனந்தமாகவே மாய்த்து கொள்வேன்”, என்று முடிவுடன் உரைத்தாள் சாந்தா.
“உன் மனதில் இருப்பது காதலே இல்லை என்கிறேன். நீ மறுபடியும் பிதற்றுகிறாய்”, என்று கோபமாக கண்டித்தாள் வான்மதி. அவள் முகம் கோபத்தில் சிவந்து போனது. என்ன வாதாடினாலும் திருப்பி திருப்பி அதையே சொல்லும் சாந்தாவை பார்க்க கோபம் அதிகமாக வந்தது வான்மதிக்கு. அதுவும் உயிரை விடுவேன் என்று சொன்னது வான்மதியை மேலும் எரிச்சல் படுத்தியது.
சுதமனும், விசாலமும் நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்று எண்ணி கொண்டார்கள்.
நரேந்திரவர்மனோ வான்மதியை வியப்பாக பார்த்தான். “இவள் எதுக்கு இந்த பெண்ணிடம் இப்படி வாதாடுகிறாள்?”, என்று யோசனை வந்தது அவனுக்கு.
“என் உயிரை காப்பாற்றியதால் அந்த பெண்ணுக்கு நல்லது நினைப்பது சரியான காரியம் தான். ஆனால் இப்படி கட்டாய படுத்த வேண்டுமா? அதுவும் அல்லாமல் அந்த பெண், வான்மதியையே எதிர்த்து பேசுகிறாள். வான்மதி ஏன் தேவை இல்லாத வேலை செய்கிறாள்?”, என்று சிந்தித்தான்.
“தேவி, அவள் தான் நீ இவ்வளவு கூறிய பின்னும் உன் கருத்தை கேட்க மறுக்கிறாளே? பின் ஏன் நீ உன்னையே வருத்தி கொண்டு அவளிடம் தர்க்கம் செய்கிறாய்? இந்த பெண் உதவி செய்திருக்கிறாள் தான். அதற்கு நிகராக எதையும் செய்ய இயலாது தான். ஆனாலும் நம்மால் இயன்ற அனைத்தையும் அந்த பெண்ணுக்கு செய்வோம். அதை விட்டுவிட்டு அவளுடைய சொந்த விசயத்தில் நாம் கருத்து சொல்ல கூடாது. அவள் யாரையோ நினைத்து விட்டு போகட்டும்”, என்றான் நரேந்திரவர்மன்.
“என்னால் அவ்வாறு என்ன இயலாது இளவரசே”, என்று கலங்கிய கண்களுடன் கூறினாள் வான்மதி.
அதை பார்த்து அதிர்ச்சியானான் நரேந்திரவர்மன். அவன் ரசிக்கும் அந்த அழகு திருமுகத்தில் கண்ணீர் முத்துக்களா? எதனால் இவ்வாறு துன்ப படுகிறாள் இவள்?
“தேவி உனக்கு என்னவாயிற்று? நீ எதனால் இவ்வாறு கலக்கம் கொள்கிறாய்?”
“ஏனென்றால்? ஏனென்றால்? எனக்கு தெரிந்த உண்மை தங்களுக்கு தெரியாது”, என்று திக்கி பேசினாள். அவளுக்கு நிலைமையை சரி செய்ய தெரிய வில்லை.
“அந்த பெண்ணும் தன் கணவனை பற்றி எண்ண கூடாது. அதே நேரம் அவளும் ஒரு நல்ல வாழ்க்கையை அடைய வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும்”, என்று நினைத்து வான்மதிக்கு குழப்பமாக இருந்தது.
“பேசியே சாந்தாவை மாற்றி விட வேண்டும்”, என்று நினைத்து தான் இந்த பேச்சை இப்போது ஆரம்பித்தாள். ஆனால் அவள் செத்தாலும் சாவேன். ஆனால் மறக்க மாட்டேன் என்று கூறுவாள் என்று கனவா கண்டாள்.
தன்னுடைய இயலாமையை நினைத்து கண்ணீர் வந்தது வான்மதிக்கு.
“உண்மையா? என்ன உண்மை? இந்த பெண் யார்? என் உயிரை காப்பாற்றியவள் என்பது மட்டும் என் எண்ணம். ஆனால் உன் உரையாடல் அனைத்தும் எனக்கு புதிராக இருக்கிறது தேவி”, என்று கேள்வி எழுப்பினான் நரேந்திரவர்மன்.
“ஆம் புதிர் தான் இளவரசே. வாழ்க்கையே புதிர் தான். விதி நம் இருவருக்கும் இடையில் இந்த பெண்ணை சிக்கலாக கட்டி போட்டிருக்கிறது”, என்று துயரத்துடன் கூறினாள் வான்மதி. யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள் சாந்தா.
“உண்மை அறிந்தால் இளவரசர் என்னை பற்றி என்ன நினைப்பார்?”, என்று அவளுக்கே கவலை வந்தது. “நான் தப்பான காரியம் செய்கிறேனா?”, என்ற சிந்தனையும் வந்தது. “என் காதலை பற்றி அறிந்தால் இளவரசர் மனம் நிம்மதியை இழந்து விடுமே”, என்று கவலை வந்தது.
“நம் இருவருக்கும் இடையில் இந்த பெண்ணா? என்ன கூறுகிறாய் தேவி? நீ என் மனைவி. அதுமட்டும் அல்லாமல் என் மனதில் புதைந்த காதலி. உனக்கும் எனக்கும் இடையில் நம்மை பெற்றவர்களே வர முடியாது என்னும் போது நீ ஏன் இந்த பெண்ணை பற்றி கூறுகிறாய்? ஒரு வேளை அவள் என்னை காப்பாற்றியதால் தான் நீ அந்த பெண் மீது அக்கறை கொள்கிறாயா?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.
“அக்கறை தான். ஆனால் என் மனதில் கொஞ்சம் சுயநலமும் கலந்து விட்டது. அது என்னை வாள் கொண்டு அறுக்கிறது. இந்த பெண்ணுக்கு ஒரு நல்ல மண வாழ்க்கையை அமைத்து தராமல் நம்முடைய வாழ்க்கை மலர்ச்சி அடையாது இளவரசே”
“வான்மதி…. நீ என்ன கூறுகிறாய்? நீ பேசுவது உனக்கே என்னவென்று தெரிகிறதா? நம் வாழ்க்கைக்கும் இந்த பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்?”, என்று சிறு கோபத்துடன் கேட்டான் நரேந்திரவர்மன்.
“சம்பந்தம் இருக்கிறது இளவரசே. இந்த பெண்ணை பற்றி தெரிந்தால் உங்களுக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கும். நான் நினைத்ததை தான் தாங்களும் எண்ணுவீர்கள். ஒரு உண்மை தெரியுமா உங்களுக்கு? கத்தி உங்கள் மீது வீச படமால் வேறு எவரை நோக்கி வீச பட்டாலும் இந்த பெண் அவள் உயிரை தர முன் வந்திருக்க மாட்டாள்”, என்று உண்மையை உடைத்து கூறி விட்டாள் வான்மதி.
கிட்ட தட்ட ஆறு வருடமாக மனதில் நினைத்ததை நண்பனிடம் சொல்ல முடியாமல் தவித்த சுதமன் இப்போது இளவரசி உண்மையை கூறியதும் நிம்மதியாகவும், அதே நேரம் வான்மதியை பெருமிதமாகவும் பார்த்தான்.
“என்ன?”, என்று அதிர்ச்சியாக கேட்டான் நரேந்திரவர்மன்.
“அவ்வாறு கூறாதீர்கள் இளவரசி. நான் அப்படி பட்டவள் அல்ல. இளவரசர் மீது கத்தி வீசியதால் தான் நான் குறுக்கே வந்தேன் என்றும் மற்றவர் வந்தால் அவ்விதம் வந்திருக்க மாட்டேன் என்றும் தாங்கள் உரைப்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. அனைத்து உயிர்களும் எனக்கு ஒன்று தான். தங்களை நோக்கி அந்த கத்தி வந்திருந்தால் கூட நான் இடையில் புகுந்திருப்பேன். தாங்கள் மட்டும் அல்ல. இந்த தேசத்தில் யார் மீது வீசி இருந்தாலும் நான் கண்டால் நிச்சயமாக காப்பாற்ற தான் எண்ணி இருப்பேன்”, என்று தலை குனிந்து கூறினாள் சாந்தா.
அவளை பார்த்து இகழ்ச்சியாக சிரித்த வான்மதி “அப்படியா? சரி எதனால் என் மீது கத்தி வீச பட்டால் நீ குறுக்கே புகுந்திருப்பாய்?”, என்று கேட்டாள்.
“ஏன் என்றால் தாங்கள் இளவரசரின் தேவி. அவருடைய மனைவி. தங்களை காப்பது என்னுடைய கடமை”
“ஹ்ம்ம் அற்புதம், சரி அடுத்த கேள்விக்கும் பதில் கூறு சாந்தா. இளவரசர் மற்றும் என் மீது இல்லாமல் எங்களுடைய பெற்றவர்களை நோக்கி அந்த கத்தி வீச பட்டிருந்தாலும் நீ இடையில் புகுந்திருப்பாய். நானும் இந்த உண்மையை அறிவேன். எங்களை காப்பது சரி. அவர்களை எதனால் காத்திருப்பாய்?”
“ஏனென்றால் அவர்கள் இளவரசருக்கு வேண்டியவர்கள்”
குழப்பமாக அவர்கள் உரையாடலை கேட்டான் நரேந்திரவர்மன். அவனுக்கு கண்ணை கட்டி வனத்தில் விட்டது போல இருந்தது.
“வான்மதி அந்த பெண்ணை புகழவும் செய்கிறாள், காய படுத்தவும் செய்கிறாள். அந்த பெண்ணோ குற்றம் செய்தது போல தலையும் குனிகிறாள். ஆனால் நல்லது செய்தது போல நிமிர்ந்தும் அவள் கருத்தை கூறுகிறாள்? எதனால் இவ்வாறு பேசி கொள்கிறார்கள். இதில் வான்மதிக்கு என்ன வந்தது? என் தேசத்தில் இருக்கும் ஒரு பிரஜை, என்னை மதித்து எனக்காக உயிர் விட துணிவது பாராட்ட தகும் காரியம் தானே? இதில் ஏன் விசாரணை நடத்துகிறாள்?”, என்று சிந்தித்தான்.
“நினைத்தேன் இந்த பதில் தான் கூறுவாய் என்று. சரி கடைசி கேள்விக்கு பதில் கூறு. இந்த தேசத்தின் மக்களில் எவரோ ஒருவர் மீது கத்தி வீச பட்டிருந்தாலும் நீ காத்திருப்பாய் அல்லவா? அது எதனால்?”, என்று கேட்டாள் வான்மதி.
“நம் இளவரசரின் கீழ் இருக்கும் நாட்டு மக்களை நான் காப்பாற்றாமல் எவ்வாறு இருப்பேன் இளவரசி?”, என்று கேட்டாள் சாந்தா.
இந்த பதிலில் புத்தி கூர்மை அதிகம் கொண்ட நரேந்திரவர்மன் விழித்து கொண்டான். வான்மதி அழகிலும் அறிவிலும் சிறந்தவள். அவள் ஒரு காரியம் செய்தாளானால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்பது அவன் எண்ணம்.
இப்போது அவள் கேட்ட கேள்விகளையும், அந்த பெண் கூறிய பதில்களையும் பார்த்தவனுக்கு பொறி தட்டியது.
“என்ன இவள் யாரை காப்பாற்றினாலும் என்னை சம்பந்த படுத்தி பதில் கூறுகிறாள்? எங்கள் நாட்டு இளவரசியை காப்பது என் கடமை என்று கூறாமல் என்னுடைய தேவி அதனால் காப்பாற்றுவாளாமே. எனக்கு சொந்தமானவர்கள் என்று தான் என் பெற்றோர்களை காப்பாளாமே. அதை விட ஒரு மனிதனை காப்பாற்றினால் கூட என்னுடைய நாடு என்கிறாளே? அப்படி என்றால்…..”, என்று சிந்தித்தவனுக்கு வான்மதியின் கலக்கம் நினைவு வந்தது.