உடனே காரை நிறுத்திய அஷ்வின் பின்னால் ஸ்ரீ அருகில் அமர்ந்தான். நண்பனை பார்த்து அவள் சிரிக்க, அவனோ “ஹம்…..” என்று முகத்தை திருப்பி கொண்டான்.
ஸ்ரீ உடனே முகம் வாடியவள் “ஓவரா பண்ணாதடா. அப்புறம் சாப்பாட்டுல விஷம் கலந்து குடுத்துடுவேன். பாவம் சின்ன பையன்னு விடறேன்” என்று அவன் காதருகில் சொல்ல,
அதை கண்ணாடியில் பார்த்த தீரனுக்கு கோபமாக வந்தது. இருந்தாலும் ‘அவ யார்கிட்ட பேசுனா நமக்கென்ன’ என்ற எண்ணத்தோடு முன் நோக்கி காரை செலுத்த துவங்கினான்.
சற்று நேரம் அமைதியாக இருந்த ஸ்ரீ பின் தன் வேலையை காட்ட துவங்கினாள்.
“பிரக்யா கொஞ்சம் பசிக்கிற மாதிரி இருக்குது இல்ல” என்க,
தூக்க கலக்கத்தில் இருந்தவளோ “இப்பதானே அண்ணி வீட்ல சாப்பிட்டோம். எனக்கு பசி இல்ல”.
“உனக்கு பசிக்கலையா எனக்கெல்லாம் வெளிய கார்ல கிளம்புனம்னாலே ஏதாவது வெளிய சாப்பிடணும் போல இருக்கும். ஹம்ம்….. அப்பாவா இருந்தா நான் சொல்லாமலேயே செய்வாரு” என்று பெரு மூச்சு விட,
உடனே சீனி “தீரா அங்க ஒரு பேக்கரி இருக்கு பாரு வண்டிய நிப்பாட்டு. மருமக பொண்ணு பசிக்குதுனு சொல்லுது”.
“ப்பா…. இப்போதான் வீட்ல சாப்பிட்டு கிளம்புனோம். அதுக்குள்ள என்ன?. அங்கங்க நிப்பாட்டி போனோம்னா கோவிலுக்கு போக நேரம் ஆகிடும்ப்பா”.
“அதுக்காக மருமக பொண்ண பட்டினியோட விட சொல்றியா? என்ன பேசற நீ?”.
தீரனும் வேறு வழி இல்லாமல் வண்டியை நிறுத்தினான். அனைவரும் பேக்கரி உள்ளே சென்று காபி, பப்ஸ், பிஸ்கட் என்று வேண்டுமானதை சாப்பிட்டு விட்டு வண்டியை எடுக்க அரை மணி நேரம் ஆனது.
அடுத்த கொஞ்ச நேரத்தில் இளநீர் கடையை பார்த்தவர் “இளநீர் குடிக்கணும் போல இருக்கு” என்க,
சீனி மகனை பார்க்க உடனே வண்டியை நிறுத்தினான்.இளநீர் குடித்து வண்டியில் ஏறிய அரை மணி நேரத்தில் தர்பூசணி கடையை பார்க்க, அவள் வாயை திறக்கும் முன் தானே வண்டியை நிறுத்திய தீரன் சென்று பழத்தை வாங்கி வந்து கொடுத்துவிட்டு சிடு சிடுவென்ற முகத்துடன் முன்னால் சென்று வண்டியை எடுக்க, ஸ்ரீயோ தனக்குள்ளே சிரித்து கொண்டான்.
கொஞ்ச தூரம் சென்ற பின்தான் ஸ்ரீ கவனித்தாள் மீனா முகம் ஒரு மாதிரி ஆவதை. உடனே “மீனும்மா என்ன ஆச்சு?” என்று கேட்க,
அவளோ “எனக்கு…. என்…” என்றவள் வாயில் கை வைத்து ஒரு மாதிரி விழிக்க, ஸ்ரீ வேகமாக “காரை நிறுத்துங்க…. காரை நிறுத்துங்க” என்று கத்த,
ஏற்கனவே கடுப்பில் இருந்த தீரன் “இப்போ என்ன புல் வேணுமா, ஆப் வேணுமா…இல்ல…குவாட்டர் வேணுமா” என்று கேட்க, அவளோ புரியாமல் விழிக்க, அதற்குள் வேகமாக காரை விட்டு இறங்கிய மீனா ஓரமாக சென்று வாந்தி எடுக்க துவங்கினாள்.
ஸ்ரீயும் அவள் பின்னோடு நீரை எடுத்து சென்றவள், அவள் முகம் கழுவ வைத்து மீண்டும் காருக்கு அழைத்து வரும்போதுதான் கவனித்தாள் கார் நிற்கும் இடம் அருகில் ஒயின்ஷாப் இருப்பதை.
“ஊமை குசும்பு. எரும என்ன கேட்குது பாரு”என்று முணு முணுத்து கொண்டே வண்டியில் ஏற,
மீனாவை பார்த்த தீரன் “என்ன ஆச்சு? ஏதாவது சாப்பிடறியா? வாங்கிட்டு வரட்டுமா?, என்று கேட்க,
ஸ்ரீயோ கடுப்பாக “ம்ம்…ஜில்லுன்னு டின் பீர் வாங்கி குடுங்க. தொண்டைக்கு இதமா இருக்கும்” என்று சொல்ல,
தீரன் அவளை முறைக்க, மீனாவோ ஸ்ரீ கையை இறுக்கி பிடித்து “இல்ல அண்ணா. எதுவும் வேண்டாம். தண்ணி குடிச்சுட்டேன் போதும்”.
சீனி, “ஏன் குமாரி அந்த பொண்ணுக்கு முடியலையே வீட்லயே விட்டுட்டு வந்திருக்கலாம்ல. இப்போ பாரு புள்ள ஒரு மாதிரி ஆகிடுச்சு”.
குமாரி, “ம்கூம்…. எனக்கு மட்டும் தெரியாதா. நம்ம கோவில் ரொம்ப சக்தி வாய்ந்த கோவில். மாசமான புள்ளைங்க அங்க வந்து ஏழு தீபம் ஏத்தி அங்க குடுக்கற எண்ணெய தடவினா சுகபிரசவம் ஆகும். அதான் கூட்டிட்டு போறேன். என்னை குறை சொல்றதை விட்டுட்டு இவ்ளோ நேரம் வேடிக்கை பார்த்துட்டுதானே வந்தீங்க. இனியும் அதையே பண்ணுங்க” என்று சொல்லி,
தன் பையில் இருந்த லெமன் ஜூசை எடுத்தவர் “இந்தா மீனாட்சி. இதை குடி. தொண்டைக்கு நல்லா இருக்கும்” என்று கொடுக்க, அதை வாங்கி குடித்தவள் அமைதியாக இருக்க,
ஸ்ரீயோ, “ நீ என் மடில படுத்து ரெஸ்ட் எடு” என்று மீனுவிடம் சொல்லி, அஷ்வின் அருகில் நன்றாக தள்ளி அமர, உடனே காரைவிட்டு இறங்கிய தீரன்.
அஷ்வினிடம் “நீ கார் ஓட்டு. எனக்கு தலை வலிக்குது” என்க, அவனை ஒரு மாதிரி மேல் இருந்து கீழ் நக்கலாக பார்த்தவன் “இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்” என்றுவிட்டு சென்று காரை எடுக்க, ஒருவழியாக குலதெய்வம் கோவிலை சென்றடைந்தனர்.
கோவிலுக்கு சென்று பூஜையெல்லாம் முடித்த பின் மீனாவிற்கு எண்ணெயை வாங்கி கொடுத்த குமாரி “நைட் படுக்கும்போது வயித்துல தடவிக்கோ இந்த அம்மன் சக்தி வாய்ந்தவ சுக பிரசவம் ஆகும். வேண்டுதல் வச்சாலும் நிறை வேத்துவா. நல்லா வேண்டிக்கோ” என்றுவிட்டு செல்ல,
நிர்மலமான முகத்துடன் அங்கிருந்த அம்மனை பார்த்தவள் “இன்னும் நான் என்னென்ன பார்க்கணும்னு எழுதி வச்சிருக்க. இன்னைக்கு உன்னை நான் பார்க்கணும்னுதான் இதெல்லம் பண்ணுனியா. இந்த குங்குமம் எனக்கு உரிமையானதா.
நான் வைக்கலாமான்னு கூட தெரியாம இருக்கறது எவ்ளோ கொடுமை. எனக்கு ஏன் இந்த தண்டனை. நான் அப்படி என்ன தப்பு பண்ணினேன் எனக்கு சுத்தமா புரியல.
படிக்கறேன்னு சொன்னேன். கல்யாணம் பண்ணுன்னு அவங்களே ஒரு பையனை காட்டுனாங்க. சரினு கல்யாணம் செய்துட்டு போனா அங்கேயும் வந்து இனி இவன் உனக்கு வேண்டாம்னு கூட்டிட்டு வந்துட்டாங்க.
நான் உடனே வரணும்னு எதிர் பார்க்குறாங்க. நானும் மனுஷிதான். எனக்கு விருப்பு, வெறுப்பு இருக்கும்னு அவங்க யோசிக்கவே இல்லை. வெள்ளை பேப்பரா இருந்த மனசுல அவரை பதிய வச்சுட்டு. இப்போ வேண்டாம்னு சொன்னா. என்னால எப்படி மாற முடியும். இதுக்கு முடிவுதான் என்ன.
என் வாழ்க்கை இப்படியே என் குழந்தையோட முடிஞ்சுருமா. நான், என் புருஷன், புள்ளைன்னு ஒரு குடும்பமா எங்களால வாழவே முடியாதா?
என்னோட ஒரே ஒரு வேண்டுதல். என் குழந்தைய முதல் முதல்ல கைல வாங்குறது. என் புருஷனாதான் இருக்கணும். என் வாழ்க்கை தனியாதான்னு எழுதிட்ட. இது ஒரு சந்தோஷத்தையாவது எனக்கு குடு” என்று மனமார வேண்டியவள் செவிகளில் கோவில் மணி அடிக்கும் சத்தம் கேட்க,
திரும்பி பார்த்தவள் ஸ்ரீதான் மணி அடித்து கொண்டு இருந்தாள்.
கண்கள் கலங்க மீண்டும் அம்மனை பார்த்தவள் “ஏதோ சொல்ற. நடந்தா சரி. ஆனா…. எனக்கு நம்பிக்கை இல்லை” என்றவள் மற்றவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டாள்.
அஷ்வின் போன் வரவும் எழுந்து தனியாக சென்றவன் பேச,ஸ்ரீயும் அவன் பின்னோடு சென்றாள்.
அஷ்வின் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள் போனை வைத்த மறு நொடி அவன் அருகில் சென்றாள். அவனோ முகத்தை திருப்பி கொண்டு செல்ல,
அவன் அருகில் வந்தவள் “இன்னும் எவ்வளவு நாள் என் மேல கோவமாவே இருக்க போற” என்று கேட்க,
அஸ்வின் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.
உடனே கண்கள் கலங்கியவள் “அஷு ப்ளீஸ் நீயும் என்கிட்ட இருந்து விலகி போகாத. கஷ்டமா இருக்கு” என்று சொல்ல,
தோழியின் கலங்கிய கண்களை பார்த்தவன் “என்ன தான்டி உன் பிரச்சனை?”என்க
தொடர்ந்து அவள் அமைதியாக இருக்க கடுப்பானவன். ஏன்டி இப்படி என்னை படுத்தர. நான்தான் விலகி போறேன்ல. விட வேண்டியதுதானே. விலகவும் விட மாட்டிக்கற. சரி என்ன பிரச்சனை சொல்லு சரி பண்ணலாம்னா அதையும் பண்ண மாட்டிக்கற” என்று திட்ட,
“ஆமாம். எனக்கு பைத்தியம் பிடிக்கற மாதிரி. மூச்சு முட்ட வச்சவன் உன் அண்ணன்தான் “என்றவள் தங்களுக்குள் நடந்த அனைத்தையும் சொல்ல, அஸ்வினோ வாயடைத்து போய் நின்றிருந்தான்.
“ம்ம்…சொல்லு இப்ப சொல்லு.நான் என்ன பண்றது. ஒரு வருஷத்துல பிரிஞ்சிடலாம்னு சொல்ற புருஷன். அவனை தெரியாத்தனமா காதலிச்சு தொலைச்ச நான். என் நிலைமைய பாத்தியா. பேசாம காலேஜ் டேஸ்லயே எவனயாவது லவ் பண்ணியிருக்கலாம் போல.
பொண்டாட்டியா நான் வீட்ல இருக்கும்போது. ஒரு பொண்ணை வெளிய ஹோட்டல்ல பார்த்துட்டு வராரு. யாருன்னு கேட்டா லவ்வர்னு சொல்றாரு. இந்த நிலைமையில் என்னால எப்படி அங்க இருக்க முடியும்?
எப்படி தெளிவா யோசிச்சு ஒரு முடிவெடுக்க முடியும் அதனாலதான் அப்பா வீட்டுக்கு போனேன்.
“இப்போ என்ன ஆச்சு? அதே காரணங்கள் இன்னும் மாறலையே?”.
“இல்ல மாறியிருக்கு. அந்த பொண்ணு உன் அண்ணன்னோட லவ்வர் இல்ல”.
“வ்வாட்……”
“எஸ்….” என்றவள் பிரியா மூலம் தான் தெரிந்து கொண்ட அனைத்தையும் சொல்லி,
“என்னையவே அலற வச்சுட்டாரு உன் நொண்ணன். அவரை வச்சு செய்யதான். இப்போ வந்துருக்கேன்”
“சாரிடி. நானும் உன்ன சரியா புரிஞ்சுக்காம….”,
“பரவால்ல விடு அஷு. உனக்கு வந்தது உரிமை கோபம்தானே, நம்ம நட்ப நினைச்சு கண்ணு வேர்குது நண்பா. சரி நீ என்கிட்ட பேசினியே அதுவே போதும்” என்று சொல்லி சிரிக்க,
அஸ்வினோ “ம்ம்., அவ்ளோ சீக்கிரம் என் கோபம் சரியாகாது. அதுக்கு நீ சில விஷயம் பண்ணனும் “.
“என்ன பிரியாணிதானே உனக்கு இல்லாததா, கண்டிப்பா வாங்கி தரேன்”
“அது மட்டும் பத்தாது”
“வேற என்ன கூட தந்துரியும் வாங்கி தரேன்”
“அதுமட்டும் பத்தாது…”
“டேய்…. இன்னும் என்னடா வேணும். அடப்பாவி…. சரக்கடிக்க ஆரம்பிச்சுட்டியா…. இரு உன்னை மாமாட்ட சொல்லி வைக்கறேன்” என்று ஓட போனவள் நீள கூந்தலை பிடித்து இழுத்தவன்,
“அடியே நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு போ”.
“ஆஆ….. பாவி விடுடா வலிக்குது”
“முதல்ல நான் சொல்றதை கேட்கறேன்னு சொல்லு. அப்போதான் விடுவேன்”.
“கேட்டு தொலைக்கறேன் விடுடா”.
“ம்ம்…. அது. வேற ஒன்னும் இல்லடி” என்று தரையை கால் விரலால் நோண்டி கொண்டிருந்தவனை கண்டு தலையில் அடித்து கொண்டவள்,
“டேய் என்னடா பண்ற…”
“வெட்கப்படறேன்டி….”
“நாசமா போச்சு. இந்த கண்றாவிய வேற பார்க்கணுமா. சரி…சரி…அந்த கருமத்தை அப்புறம் பண்ணிக்கோ. இப்போ என்ன விஷயம்னு சொல்லு”.
“எதே….” என்று அதிர்ந்து போய் நின்றவள் முன் கைகளை ஆட்டியவன்,
“என்ன இவ்ளோ ஷாக் ஆகிட்ட. உன் பேர வச்சுதான் அவகிட்ட பேசவே தொடங்க போறேன். இன்னும் எவ்ளோ இருக்கு. நீ இதுக்கே ஷாக் ஆகிட்ட”.
“அடேய்…. அந்த புள்ள நல்ல புள்ளடா. உங்க குடும்பத்துல கொண்டு வந்து சேர்த்து அவ வாழ்க்கைய கெடுத்துறாதடா. அதுவும் உன்னை மாதிரி ஒரு வானரத்தை கட்டிக்கிட்டு…”
“நான் உனக்கு வானரமாடி. உன்னை…” என்று துரத்தி கொண்டு ஓடியவன் முன் வந்து நின்றான் தீரன்.
“என்னடா இது சின்ன புள்ளைங்க மாதிரி வந்த இடத்துல எல்லாரும் என்ன நினைப்பாங்க”.
“இல்லண்ணா. அது அவதான்….” என்று மேலும் பேச வருவதற்குள், கை நீட்டி அவன் பேச்சை நிறுத்தியவன் “அவ உனக்கு அண்ணி. நியாபகம் இருக்கா”.
“சாரிண்ணா. அண்ணிதான்”.
“அவளுக்குதான் அறிவில்ல. உனக்கும்மா இல்ல. இனி எங்க எப்படி அண்ணிக்கிட்ட நடந்துக்கணும்னு யோசிச்சு நடந்துக்கோ” என்றவன் சொல்லி கொண்டு இருக்கும்போதே “ஆமாம் ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு வருஷ அண்ணி”என்றவாறு அங்கு வந்தாள் ஸ்ரீ.
தம்பியின் முன் தங்களது விஷயத்தை போட்டுடைத்து, மனைவியாக தன் அருகில் நிற்காமல், தோழியாக தம்பியின் அருகில் போய் நிற்பவளை கண்டு பல்லை கடித்தவன் அவளை உருத்து விழிக்க,
“ஹலோ…என்ன பாக்குறீங்க. கணவன், மனைவி வேணா தங்களுக்குள்ள எதை வேணா மறைச்சு வைப்பாங்க. ஆனா…. ஒரு மனுஷன் உண்மையா முகமூடி இல்லாம பேசறதும், பழக்கறதும் நண்பர்கள்கிட்ட மட்டும்தான். இவன் என் நண்பன்.
அவன் விருப்பட்ட போலதான் என்னை கூப்பிடுவான். ஒரு வருஷத்துக்காக, நாங்க பழகுன மூணு வருஷத்த மறக்க முடியாது” என்று தில்லாக நின்று பேச,
அஸ்வினுக்கு பேண்டின் உள் எலி போன உணர்வு.’ஹையோ…. அண்ணாகிட்ட சும்மா நின்னு பேசுனாலே எனக்கு பேச்சு வராது. இவ என் மூலமா அண்ணன வச்சி செய்யறாளே. ஒரே ஒரு பிரண்ட அண்ணியா மாத்திட்டு நான் படற பாடு இருக்கே. முடியல….’ என்று தனக்குள் புலம்பி, நெளிந்து இதுக்கு மேல முடியாதுடா என்று நினைத்தவன் வராத போனை எடுத்து காதில் வைத்து கொண்டு சென்றுவிட்டான்.
தம்பி சென்றவுடன் தீரன் மனைவியை அழுத்தமாக பார்க்க, அவளோ “நானே உங்ககிட்ட பேசணும்னு நினைச்சுட்டு இருந்தேன். இதைவிட வேற டைம் கிடைக்காது. அதனால இப்போ சொல்றேன்.
காலேஜ் படிக்கும்போது ஒரு பையன் என்னை லவ் பண்ணுனான். அவனை போன மாசம் மெடிக்கல் காண்ப்ரன்ஸ்ல பார்த்தேன். இன்னமும் எனக்காக வெயிட் பண்றதா சொன்னான்.
சரி, இன்னொரு பொண்ணை விரும்பற உங்களை விட, என்னையே இன்னமும் நினைச்சுட்டு இருக்கற அவர மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.
உங்களுக்கும் ஒன்னும் பிரச்சனை இருக்காதுனு எனக்கு தெரியும். ஒரு வருஷம் முடிய இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கு. சோ நாம சந்தோஷமா பிரியலாம்.
பிரிய போற என்னை அஷு அண்ணின்னு கூப்பிடணும்னு அவசியம் இல்ல. ஒரு வருஷதானே….” என்று பேச போனவளின் பேச்சை கை நீட்டி தடுத்தவன் அவளை ஆராய்ச்சியாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். ஆனால் மனதில் ஏதோ வலி வருவதை உணர்ந்தவனுக்கு அது எதனால் என்று புரியவில்லை.
அப்போதிலிருந்து தீரன் பார்வை ஸ்ரீயையே சுத்தி வர துவங்கியது.
நண்பன் தன்னிடம் பேசிவிட்டான் என்ற சந்தோஷத்தில் இருந்த ஸ்ரீயின் முகம் பிரகாசமாக அனைவரிடமும் சிரித்து பேசி கொண்டு இருந்தாள்.
ஒரு பொருளோ…நபரோ…. நம்மிடம் இருக்கும்போது கண்டு கொள்ள மாட்டோம். நம்மிடம் இருந்து செல்ல போகிறது என்று தெரிந்தபின் எங்கு சென்றாலும் நம் கவனம் அதனிடம் இருக்கும் அது போல் தீரனின் கவனம் முழுவதையும் திட்டம் போட்டு தன் புறம் திருப்பினாள் ஸ்ரீ.
தீரன் ஸ்ரீ வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும். பொருத்திருந்து பார்ப்போம்.