அன்றிலிருந்து போராட்டமே மூன்று வருடங்கள் ஆறு மாதங்கள் ஆகிறது அவனைப் பார்த்தோ அவன் குரலைக் கேட்டோ, ஆதவனிடம் அவள் எந்தப் பேச்சுவார்த்தையம் வைத்துக்கொள்வதில்லை அனைத்தும் பார்த்திபன் வழியே.
அரசாங்கம் முயன்றால் ஒருவேளை விடுதலை கிட்டலாம் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவே, பாதிக்கப்பட்ட நபரின் வீட்டினர் மன்னிப்பை வழங்கத் தயாரானால் தூக்கு தண்டனை மாற்றப்படலாம், இப்படி யார் என்ன கூறினாலும் அனைத்தையம் முயன்று பார்த்தனர்.
ஊருக்குள் இருக்கும் பல மனிதர்களின் உண்மை முகங்கள் இப்பொழுதுதான் நன்றாகத் தெரிய தொடங்கியது, பல வருடமாக அவனை நன்றாக அறிந்த பலரும் அவனைக் கொலைகாரன் என்று தூற்றினார், சிலர் ‘அவன் அப்படி செய்திருக்கமாட்டான்’ என்று நம்பினர்.
முன்பானால் அனைத்திற்கும் கொடிமலரிடம் அழகை மட்டுமே இருக்கும், இப்பொழுது தெளிந்துவிட்டாள் தன்னை மீட்டுக்கொண்டாள் மற்றவர்கள் முன்பு நிமிர்ந்து நிற்கத் தைரியம் வந்துவிட்டது, அதற்காக வலிக்க வலிக்க அடி வாங்கியிருக்கிறாள்… ஊரில் உள்ளவர்களின் நரம்பில்லா நாக்கிலிருந்து வரும் வார்த்தைகளால்.
இடையில் கயல்விழியின் திருமணம் நடந்து முடிந்தது, கயல்விழியின் கணவன் சரவணனே துபாயிலிருந்து வக்கீல் சொல்லும் செய்திகளைச் சட்ட நடவடிக்கைகளை இவர்களுக்கு விளக்குகிறான்.
மன்னிப்பு வேண்டி இருமுறை புனித்தின் வீட்டினரிடம் பேசிப்பார்த்தனர், அவர்கள் பிடிகொடுக்கவில்லை.
“காசு தண்ணியா செலவழியுது கடைல இருந்து கிடைக்கிறது வீட்டு செலவுக்கே சரியா இருக்கு எங்க கைக்காசை போட்டுச் சரிகட்டுற மாதிரி இருக்கு, எங்களுக்குச் செலவாகுற பணத்தை யார் தருவா” என்ற நிர்மலாவின் பேச்சில் தன்னுடைய நகைகள் அனைத்தையும் கொண்டு வந்து பார்த்திபனிடம் கொடுத்துவிட்டாள் கொடிமலர்.
“வித்துடுங்கப்பா அவங்க செலவு பண்ணின பணத்தை குடுத்துட்டு மிச்சத்தை வைங்க, நீங்களே பாத்து எங்க குடுக்கணுமோ குடுங்க” என்றுவிட்டாள்.
“நகையை எதுக்கு வைக்கணும் கொண்டுபோய் வை என் வீட்டை அடமானம் வெச்சு காசு தரேன்” என்றார் அவர்.
“வேண்டாம்ப்பா இன்னும் நிறைய செலவு இருக்கு அவசரப்பட வேண்டாம் இப்போ இதை வைங்க அப்பறம் பாக்கலாம்” என்றுவிட்டாள்.
“ஏன் எங்களிடம் கேட்டகவில்லை” என்று கோபம் கொண்டான் சுகுமார், கையில் பணத்தோடு வந்திருந்தான் அவனிடமும் அதையே கூறினாள் “உங்க எல்லார்கிட்டையும்தான் வந்து நிப்பேன் அப்போ குடுங்க” என்று.
வள்ளிக்கு பெண்குழந்தையும் அதற்க்கு அடுத்த வருடம் செல்விக்கு ஆண் குழந்தையும் பிறந்திருந்தது.
பார்வதியை மருத்துவமனைக்கு அழைத்துசென்றுவிட்டு திரும்பி வந்த மாமியாரையும் மருமகளையும் எதிர்ப்பார்த்து வாயிலிலே நின்றிருந்தான் சரவணன் “அண்ணி புனித் வீட்ல ஒத்துக்கிட்டாங்க நாம நேர்ல போய்ப் பேசலாம்” என்றான்.
அவனை நோக்கி இருகைகளையும் கூப்பினாள் கண்ணீரோடு அவன்தான் பல மாதங்களாக விடாமல் முயன்றுகொண்டிருக்கிறான் புனித்தின் வீட்டினரை சமாதானப்படுத்த.
“என்னண்ணி நீங்க” என்று அவள் கைகளைக் கீழே இறக்கிவிட்டவன் “இப்படிலாம் பண்ணாதீங்க போறதுக்கான ஏற்பாட்டைப் பாருங்க நான் டிக்கெட் போடுறேன்” என்றுவிட்டு சென்றான்.
“கடையை நான் தான் பார்த்துக்கொள்வேன் அதற்க்கு சம்மத்தித்தால் நீ உன்னோட வீட்டுக்காரன் கேஸ் விஷயத்தைப் பாத்துக்கலாம் இல்லனா என் புள்ளையோடத நானே பாக்குறேன்” என்று மகனின் உயிரை வைத்து டீல் பேசிப் பிரச்சனை கொடுத்தார் ராஜவேலு.
‘எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள் கணவனை வெளியில் கொண்டுவருவதற்கு இந்தப் பிரச்சனைகளிலிருந்து வெளியில் வருவதற்கு கொஞ்சம் நிம்மதி கிடைத்தால் போதும்’ என்று தோன்றியது அவளுக்கு.
கொடிமலர் சுகுமார் சரவணன் மற்றும் பார்த்திபன் சென்றிருந்தனர் மும்பையில் இருக்கும் புனித்தின் வீட்டிற்கு “மூன்று கோடி வேண்டும் தந்தால் மன்னிப்பு தருகிறோம்” என்றனர்.
“மூன்றுகோடியா… எப்படி!” என்ற தடுமாற்றம் ஒருநொடியே “சரி” என்றுவிட்டாள் கொடிமலர், அனைத்தையும் விற்று விடலாம் கடன் வாங்கலாம் எது வேண்டுமானாலும் செய்யலாம் அவன் வந்துவிட்டால் போதும் என்பது மட்டுமே அவளுக்கு.
நிர்மலா கொடிமலரை அவளுடைய அறையிலிருந்து வெளியேற்றி அந்த அறையை எடுத்துக்கொண்டது பார்வதிக்கு தெரியாது, மூட்டு வலி இருப்பதால் அவர் மேலே செல்வதில்லை அதோடு அதிவீரனின் கவலையில் மிகவும் உடைந்துபோய்விட்டார், எப்பொழுதும் கண்ணீரும் வேண்டுதலும் என்று அவருக்குத் தன்னை சுற்றி நடப்பது பலதும் புரிவதேயில்லை.
கொடிமலரும் இதை எதையும் அவரிடம் கூறவில்லை இவர்கள் மும்பை சென்றிருக்க வெகுகாலத்திற்கு பிறகு மாடிக்குச் சென்றார் மகனின் அறையில் கொஞ்சம் நேரம் இருக்கவேண்டி.
வாசலில் கால் வைத்ததுமே தெரிந்துவிட்டது, அந்த அறையின் நிலை அப்படி… ஆதிக்கு அனைத்தும் நேர்த்தியாக இருக்க வேண்டும் ரசித்து ரசித்து அனைத்தையும் வாங்கி அழகுப்படுத்தியிருப்பான் கொடிமலரும் அப்படியே அறையை அத்தனை சுத்தமாக வைத்திருப்பாள்.
இங்கானால் குழந்தை விளையாடிய பொருட்கள் அப்படியே கிடக்க, சாப்பிட்ட தட்டுகள் குழந்தை கீழே சிதறிய உணவுகள் துவைக்காத துணிகள் என்று பார்த்ததுமே அவருக்குத் தலை சுற்றிவிட்டது, கீழே வந்தவர் மகனும் மருமகளும் வேளையிலிருந்து திரும்பி வரக் காத்திருந்தார்.
“நில்லு” என்ற மாமியாரை ஆச்சர்யமாகப் பார்த்தாள் நிர்மலா வெகுகாலமாக அவரின் சத்தமே அந்த வீட்டில் கேட்டகவில்லையே.
“என்னத்த”.
“என்ன என்னத்த? என்ன தைரியத்துல ஆதியோட ரூம்ல நீங்க இருக்கீங்க, ஏண்டா அவளுக்குத்தான் புத்தி இல்லனா உனக்கு மானம் ரோஷம் இல்ல ஆதி இங்க இல்லாத நேரத்துல அவனோட ரூமை எப்படிடா எடுத்துக்கிட்டீங்க”.
“என்னதான்டா நடக்குது இந்த வீட்டில, உன்னை நான் தான் பெத்தேனா எனக்கு அதுவே இப்போ சந்தேகமா இருக்கு” என்றார்.
“என்ன சொல்ல” என்று தெரியாமல் மனைவியைப் பார்த்து நின்றான் அவன்
“எங்களுக்கும் உரிமை பட்ட வீடுதானே இது, எங்களுக்குப் பிடிச்ச ரூம்ல நாங்க இருக்கக்கூடாதா” என்றாள் நிர்மலா.
“உரிமைப்பட்ட வீடா… வீட்டை நீ உன் சம்பாத்தியத்துல கட்டினியா இல்ல பொறந்தவீட்ல இருந்து கொண்டுவந்தியா, என் புள்ள உழைப்பு முழுக்க முழுக்க அவனோட காசு” என்றவர் உரிமை போராட்டம் நடத்த.
“நில்லுங்க… முன்னாடி அப்படித்தானா நின்னீங்க அங்கேயிருந்து எல்லாரையும் காப்பாத்தினது என் புள்ளதான இப்போ அவனுக்காக நின்னா என்ன தப்பு” என்றவரை அடிக்கக் கை ஓங்கினார் ராஜவேலு.
“அண்ணா…” என்று இடையில் புகுந்த சிவகாமி “என்ன பழக்கமிது போங்க எல்லாரும்” என்று அனுப்பிவிட்டு “நீங்க வாங்கண்ணி உள்ள வாங்க, எல்லாம் மாறும் பாத்துக்கலாம் இப்போ எதுவும் பேச வேண்டாம்” என்று அழைத்துசென்றுவிட்டார்.
கடை அதிவீரன் பெயரில் இருக்கும் ஐந்து ஏக்கர் நிலம் இரண்டையும் விற்றுவிட முடிவு செய்தாள் கொடிமலர்.
“வேண்டாம் கடை இருக்கட்டும் நான் பணம் ஏற்படு செய்கிறேன்” என்றார் பார்த்திபன் “மீதியை நாங்கள் தருகிறோம்” என்றார்கள் தமயன்கள்.
“இல்லை இது இரண்டும் போக எவ்வளவு தேவை படுகிறதோ அப்பொழுது பார்க்கலாம்” என்று பிடிவாதமாக நின்றுவிட்டாள்.
இவர்கள் மன்னிப்பை கேட்டதாலோ அவர்கள் கொடுத்ததாலோ அனைத்தும் முடிந்துவிடுமா, மன்னிப்பு கோரும் கடிதத்தில் கையெழுத்திட வேண்டியவன் அவன்தானே… அவன் மன்னிப்பை கோர மறுத்துவிட்டான் என்ற தகவல்தான் இவர்களை வந்து சேர்ந்தது.
அதன் தொடர்ச்சியாக அவனுடைய வாய்ஸ் மெசேஜ் ஒன்றும் அவனுடைய வழக்கறிஞர் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது, குடும்பத்தாருக்கு இறுதியாகச் சில விஷயங்களைச் சொல்ல விரும்புவதாகக் கேட்டு அனுமதி வாங்கியிருந்தனர்.
“கொடி…” என்ற அழைப்போடுதான் அது ஒலிக்கத்தொடங்கியது, அந்த ஒரு அழைப்பிலே உடைந்துவிட்டாள் கொடிமலர், அதன் பிறகு வெகுநேரம் அமைதிமட்டுமே வார்த்தைகள் வெளிவர மறுக்கத் தன்னை சமன்செய்கிறான் என்று புரிந்தது.
“இந்தத் தடவ உனக்குக் குடுத்த வாக்கை என்னால காப்பாத்த முடியல… நீ என்னை மன்னிக்காத கொடி அதோட இந்த மன்னிப்பும் எனக்கு வேண்டாம், கொலைகாரன் அப்படிங்கிற அடையாளத்தோடு நான் அங்க வாழ விரும்பல காசு குடுத்து மன்னிப்பை வாங்கிட்டேன்னு காலத்துக்கும் என்னை உலகம் பழிக்கும், நிம்மதியில்லாம அணுஅணுவா என்னைக் கொல்லும் எனக்கு அது வேண்டாம்”.
“இந்தத் தண்டனையை ஏத்துக்க நான் தயாராயிட்டேன், என்னை… என்னை… போகவிட்டுடு கொடி” என்றபோது அவன் குரல் கரகரத்தது, கொடிமலரிடம் எந்த அசைவுமில்லை விழியில் நீர் மட்டும் வழிந்துகொண்டிருக்க அவளைத் தன்னோடு இறுக்கமாக அணைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் சுமதி.
சில நொடிகள் அமைதிக்கு பிறகு “மாமா” என்ற அழைப்பில் பார்த்திபனுக்கு ஒரு நொடி உடல் விறைத்தது இறுக்கமாக மனைவியின் கைகளைப் பற்றிக்கொண்டார்.
“அமுத்திடு அத அமுத்திடு அவன் சொல்ற எதையும் நான் கேட்கமாட்டேன்” என்று வெறிவந்தவர் போல அலறினார் அவரைச் சுகுமார் இறுக்கமாகக் கட்டிக்கொண்டான்.