16

அனுதினமும் தன்னவனின் உயிர் தன்னில் வளர்வதை ரசித்து உணர்ந்து நாட்களைக் கடத்தியிருந்தாள் கொடிமலர், வளைகாப்பிற்கு கணவன் வந்துவிடுவான் வண்ண வண்ண கண்ணாடி வளவிகள் கைநிறைய சத்தமிட நிறைமாத வயிற்றை வைத்துக்கொண்டு அவனைக் கட்டிப்பிடிக்க முடியாமல்  சிணுங்குவதாகக் கனவு கண்டிருந்தாள் அனைத்தும் ஒருநொடியில் மறைந்துபோனது.

இனி அழுவதற்கு அவளிடம் கண்ணீர் இல்லை, பிறந்ததிலிருந்து கொடிமலர் பெரிதாக அழுததாக அவளுக்கு நினைவில்லை அடம்பிடிக்கும் குழந்தை அல்ல அவள், அடம்பிடிக்க வேண்டிய கட்டாயமும் அவளுக்கு வந்ததில்லை, தந்தையை பற்றிய நினைவுகளே அவளுக்கு இல்லை அந்த இடத்தில் அவளுக்குச் சுகுமாரும் முத்துவும் நின்றனர்.

முதன்முதலாக அவள் அழுதது தாயின் மரணத்திற்கு… அதன் பிறகு ஒட்டுமொத்த வாழ்வின் கண்ணீரையும் இந்த இரண்டு நாட்களில் அழுது தீர்த்தாள் அவள் உடல்நிலையை கருத்தில் கொண்டு மருந்து செலுத்தி உறங்கவைத்தனர் அவளை.

பத்து  நாட்கள்  தன்னை சுற்றி நடப்பதை பற்றிய எந்தப் புரிதலும் இல்லை கொடிமலருக்கு, மருத்துவமனையிலிருந்து நேரே தங்கள் வீட்டிற்கு அழைத்துவந்துவிட்டனர் அவளின் உடன்பிறப்புகள்.

“அவருக்கு என்ன ஆச்சு ஏன் என்கிட்டே யாருமே எதுவும் சொல்ல மாட்ரீங்க” என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள் கொஞ்சம் தெளிந்த பிறகு, அவளுக்கு இதை எப்படி சொல்லிப் புரியவைக்க முடியும் கேஸ் நடக்கிறதா? என்ன சொல்கிறார்கள்? எதையுமே சரியாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை, அனைத்தும் ஆதவன் வழியே நடக்கிறது இவர்கள் கேட்டாலும் சரியான  விவரங்களை அவர்கள் கூறுவதில்லை.

அங்குச் சென்றபோதும் ராஜவேலு அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார், சிவகாமியே இப்பொழுது பார்வதியை பார்த்துக்கொள்கிறார் “என் மருமகளை கூட்டிடுவா பார்த்திபா” என்று தம்பியிடமும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்,  உடலும் மனமும் காயம்கண்டிருக்கிறது அந்தப் பெண்ணிற்கு கொஞ்சம் தன்னை தேற்றிக்கொள்ளட்டும் என்று பார்த்திபனும் அமைதியாகவே இருந்தார்.

“எனக்கு வீட்டுக்குப் போகணும்ண்ணா” என்று வந்து நிர்ப்பவளிடம் ‘அங்குச் செல்ல முடியாது’ என்று எப்படி சொல்ல.

“பாப்பா இப்போ வேண்டாம் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ உனக்கு இன்னும் உடம்பே சரியாகல, உன்னை அங்க அனுப்பிட்டு எங்களால நிம்மதியா இருக்க முடியாது” என்று பலவாறாகப் பேசிப்பார்த்தும் பிடிவாதமாக நின்றாள் போகவேண்டுமென்று.

“நீ போனும்னு நிக்குற உன் மாமனார் உனக்கும் அந்த வீட்டுக்கும் சம்பந்தம் இல்ல அவ இனிமே இங்க வரக்கூடாதுன்னு வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சுட்டுல்ல இருக்கார்” என்றார் அவளின் சித்தி பூங்கோதை.

“ஏய் சும்மா இரு புள்ளைகிட்ட என்ன பேசுற” என்றார் ராஜப்பன் “ஆம்பளைங்கதான் புரியாம பேசுறீங்க கழுத்துல தாலி ஏறிட்டா பொண்ணுக்கு புகுந்த வீடு முழு உரிமைப்பட்ட வீடு, சும்மா பிடிச்சு தள்ளிவிட்டுட்டோமா இல்லையே ஊரு உறவு கூடிநின்னு முறையா நடந்த கல்யாணம் தான, அந்தப் பையன் கட்டுன தாலி கழுத்துல கிடக்க எப்படி சம்மந்தம் இல்லன்னு சொல்லுவாரு அவரு”.

“இவ்ளோ நாள் வாயத்தொறந்து ஒத்த வார்த்த பேசல இப்போ என்னமோ நான்தான் ராஜ நான்தான் மந்திரின்னு குதிக்குறாரு, இங்கபாரு மலரு உன் மாமியார் முடியாம இருக்காங்க உன் மாமனார் நம்ம வீட்லயிருந்து பேசப்போன எல்லாரையும் வாசலோட திருப்பி அனுப்பிட்டாரு, உன் புருஷனுக்கு என்னாச்சு எப்படி இருக்காருன்னு தெரிஞ்சுக்குற எல்லா உரிமையும் உனக்கு இருக்கு இனிமே நீதான் முடிவு பண்ணனும்”.

“அவங்க பையனைப் பெத்தவங்கன்னா நாம நம்ம வீட்டு பொண்ணை குடுத்துருக்கோம், இந்தா உன் வள்ளி அண்ணி மாசமா இருக்கா ஆனா அது எதைப்பத்தியும் நினைப்பில்லாம எல்லாத்தயும் உள்ளேயே வெச்சு ஓட்டிட்டு இருக்கானுங்க நீ தைரியமா நின்னா மட்டும்தான் உன் வாழ்க்கைக்கு வழி பிறக்கும், உன் தைரியம் தான் மலரு எங்களுக்கும் தைரியம் உன்னை இப்படி பாக்கவா கட்டிக்கொடுத்தோம் எங்க பொண்ணு புருஷன் கூடக் கண்ணுக்கு நிறைவா வாழணும்னு தானே நாங்களும் ஆசைப்படுறோம்”.

“என்னமோ நம்ம தப்பாலதான் இப்படி எல்லாம் ஆச்சுன்ற மாதிரி அவர் பேசிட்டு இருக்கார்,  நீ தனியா இல்ல தாயி நாங்க எல்லாரும் உனக்கு எப்போவும் கூட இருப்போம் உன் உரிமையை விட்டுகுடுக்காத” என்றார் பூங்கோதை, அவர் பேசிய அனைத்தும் சத்தய வார்த்தைகள் மலரின் நிலையை எண்ணி அண்ணன்கள் அமைதியாக இருக்க இந்த அமைதி ராஜவேலுக்கு இன்னும் வசதியாகப் போய்விடும் என்கிறார் அவர்.

கொடிமலர் தடுமாறி நின்றாள் ‘என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இப்படி இருந்துவிட்டேனே’ என்று, அவர்கள் வாழ்வின் முக்கியமான ஒரு நிகழ்வை அவர்களால் கொண்டாடமுடியவில்லை அதற்க்கு தான் காரணம் ஆகிவிட்டோம் என்று வருந்தினாள்.

“மலரு இங்கப்பாரு அப்படிலாம் இல்ல நீ கொஞ்சம் தேறி வந்ததும் சொல்லலாம்னு இருந்தோம் அவ்ளோதான்” என்றாள் செல்வி, வள்ளியின் அருகில் வந்த மலர் அவள் வயிற்றில் கை வைத்து “பாப்பாவை பத்திரமா பாத்துக்கோங்க அண்ணி அம்மாவே வந்து பொறப்பாங்க, அவங்களால இங்கேயிருந்து போக முடியாது” என்றாள் கண்ணீரோடு.

“அண்ணா எனக்கு வீட்டுக்குப் போகணும் கொண்டுபோய் விடு” என்றாள் சுகுமாரிடம்.

“போலாம் பாப்பா ஒரு ஒருவாரம் போகட்டுமே” என்றவனை பார்த்தவள் “எனக்கு அங்க போகணும்” என்றுவிட்டு “அண்ணி எனக்கு அவரோட வாசம் வேணும் அது அங்க… எங்க ரூம்ல தான் கிடைக்கும் சொல்லுங்க அண்ணி” என்றாள் நிறையும் விழிகளோடு, அதற்குமேல் யாரும் பேசவில்லை அவர்களுடைய சொந்தத்தில் சில பெரிய மனிதர்களை அழைத்துக்கொண்டு அதிவீரனின் வீட்டிற்கு சென்றனர், பார்த்திபனுக்கு சுகுமார் அழைத்து இதுபோல் வருகிறோம் என்று கூறியிருக்க அவரும் வந்து காத்திருந்தார்.

“இவளுக்கு இந்த வீட்டில இடமில்லை வரக்கூடாதுன்னு அப்போவே சொல்லிட்டேனே வெக்கமா இல்ல இப்படி திரும்பத் திரும்ப வாசல்ல வந்து நிக்க” என்ற ராஜவேலுவை வாயிலே  மிதிக்கும் ஆத்திரம் வந்தது பிரபுவுக்கு.

“பார்த்துப் பேசுங்க நாங்க ஒன்னும் உங்க வீட்டில பிச்சை கேட்டு வரல, உங்க பையனோட சம்சாரம் எங்க வீட்டு பொண்ணு உரிமை இல்லனு நீங்க எப்படி பேசலாம்” என்றான் பரமு.

“இவளோட ராசிதான் என் பையனுக்கு இப்படி ஆனதுக்கு காரணம்” என்றார் அவர்.

“சும்மா இந்தப் பழைய பஞ்சாங்கமெல்லாம் பேசாதீங்க மலர் இந்த வீட்டில தான் இருப்பா ஆதி வீட்ல இல்லாத நேரத்துல அவன் பொண்டாட்டிய நீங்க வெளில அனுப்புறது சரியில்ல அவன் வந்து கேட்டா என்ன சொல்வீங்க” என்றார் பார்த்திபன்.

“அது அவன் வரும்போது பாத்துக்கலாம்” என்ற ராஜவேலுவை அனைவருமே அதிர்ச்சியாகப் பார்த்தனர் “என்ன ராஜவேலு பையன் வரமாட்டான்னு சொல்றீங்களா வரக் கூடாதுன்னு ஆசைப்படுறீங்களா” என்றார் உடன் வந்த பெரியவர் ஒருவர்.

ராஜவேலுவின் முகத்தில் அப்பட்டமான தடுமாற்றம் அதைக் கடினப்பட்டு மறைத்துக் கொண்டு “என்ன பேசுறீங்க அபசகுனமா” என்றார்.

“நீங்கப் பேசுனதைவிட நாங்க ஒன்னும் அதிகமா பேசல, பொம்பளபிள்ளை வாழகையாச்சேன்னு கொஞ்சம் அமைதியாப்போனா நீங்க மட்டு மரியாதை இல்லாம பேசுறீங்க, எதா இருந்தாலும் அவ புருஷன் வந்து சொல்லட்டும் நாங்களும் பேச வேண்டாம் பேசவேண்டாம்னு பாத்து அமைதியா போனோம்”.

“அன்னைக்கு நீங்கப் பிடிச்சு தள்ளிவிட்டதுலதான் கரு கலைஞ்சு போச்சு எங்க பிள்ளைக்கு ஏதாவது ஆகியிருந்தா, எங்களுக்கு மட்டுமா போச்சு உங்க பிள்ளையோட வாரிசு போச்சு அந்த வருத்தமோ குற்ற உணர்ச்சியோ உங்ககிட்ட இல்ல நீங்கப் பண்ணலன்னு உங்களால சொல்ல முடியுமா எல்லார் முன்னாடியும் நீங்கச் சமாதானமா போக ஒத்துக்குறீங்களா இல்ல நாம ரெண்டுபக்கமும் பெரியவங்கள கூட்டி பஞ்சாயத்து வெச்சுக்கலாமா” என்றார் ராஜகோபால்.

ஆதவன் தந்தையின் காதைக் கடித்தான் “அப்பா அவங்க ஜனக்கட்டு உள்ள ஆளுங்க வீனா பிரச்சனை பெரிசாகும், ஆதியும் இப்போ இங்கயில்ல நீங்க அந்தப் புள்ளைகிட்ட மல்லு கட்டறதை விடுங்க, அவ இந்த வீட்ல வாழவந்த பொண்ணுதானே ஆதி இல்லாத நேரத்துல இப்படி நடந்துச்சுன்னு தெரிஞ்சா மொத்தமா எல்லாரையும் தலை முழுகிடுவான் நீங்க இதை விட்டுட்டு அவனோட கேஸ் பத்தி என்ன பண்ணலாம்னு யோசிங்க” என்றான்.

வெளியில் இத்தனை சத்தம் கேட்கச் சிவகாமியை பிடித்துக்கொண்டு வெளியில் வந்தார் பார்வதி, ஆளே பாதியாக மெலிந்திருந்தார் “மலரு” என்றவர் அழைப்பிலே அவரைத் தாவிக் கட்டிக்கொண்டாள் கொடிமலர் “அத்த…” என்றவள் ஒருபக்கம் கண்ணீர் சிந்த அவரின் விழிகளும் நீரை சிந்தியது.

“என் மறுமவ எங்கேயும் போகமாட்டா இங்கதான் இருப்பா அவளைப் போகச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை, என் பிள்ளையை என்கிட்டே கொண்டுவந்து சேக்குறதுக்கு வழி பாருங்க” என்றவர் மலரின் வீட்டினரை பார்த்து “உள்ள வாங்கய்யா இதுவும் உங்கவீடு தான் வாங்க” என்றவர் கொடிமலரை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

“என் புள்ளயோட வாரிசை இந்தப் பாவி மனுஷன் இப்படி அழிச்சுட்டாரே, இந்த மனுஷனுக்கு என்ன பேய் பிடிச்சு ஆட்டுதுன்னு தெரியல” என்று தன் பாட்டில் புலம்பிக்கொண்டிருந்தார், அவர் மடியில் படுத்திருந்தவள் கரங்கள் தன்னுடைய வயிற்றை இறுக்கமாகப் பற்றியிருக்க பார்வதியின் மடி அவள் கண்ணீரில் நனைந்தது.

நிர்மலா அனைவரையும் மாற்றி மாற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள், கொடிமலரை நெருங்கியவள் “எப்படியிருக்க மலர்” என்க.

மெல்ல எழுந்தவள் “ஹ்ம்ம் இருக்கேன்…” என்றாள்.

“நாங்க வந்து பாக்கணும்னு நினைச்சோம் இங்க யாரு இருக்கா பாத்துக்க அதான் வரல” என்க.

“பரவாயில்ல” என்றவள் விழிகள் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தங்களுடைய திருமண புகைப்படத்தில் பதிந்தது ‘வந்துடுங்க என்கிட்டே’ என்றாள் மானசீகமாக.

சிவகாமி அனைவருக்கும் தேநீர் எடுக்க அடுக்களை செல்லச் சுமதியும் கஸ்தூரியும் உடன் சென்றனர், வள்ளியை அழைத்துவரவில்லை கொடிமலர் வேண்டாம் என்று சொல்லிவிட அவளுக்குத் துணையாகச் செல்வியை வீட்டில் விட்டு வந்தனர்.

“இங்க பாருங்க தம்பி உங்ககூட சண்டைபிடிக்க நாங்க வரல, உங்களுக்கு இருக்குற அதே அளவு வருத்தம் எங்களுக்கும் இருக்கு இந்த நேரத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா நின்னு நம்ம வீட்டு பிள்ளையை எப்படி பத்திரமா திரும்பக் கொண்டுவரதுன்னு யோசிக்கலாம், எங்களால முடிஞ்சதை நாங்க செய்ரோம், அங்க என்ன நிலம என்ன சொல்றாங்க யார்கிட்ட பேசுனீங்க எங்களுக்கும் கொஞ்சம் விவரம் சொல்லுங்க”  என்றான் பரமு ஆதவனிடம் நேரடியாக.

அனைத்திலும் பார்த்திபன் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தார் அவர்களே பேசட்டும் இவரை யாரும் கேள்விகேட்க மாட்டார்கள் என்ற அகம்பாவம்தானே இப்படி எல்லாம் செய்யவைத்தது, இப்பபோழுது கேட்க வேண்டியவர்கள் கேட்கட்டும் என்று பார்த்திருந்தார்.

“என் மனைவியோட சினேகிதி வீட்டுக்காரர் மூலமா ஒரு வக்கீல் கிட்ட பேசினோம் அவர் தான் கேஸ் எடுத்து நடத்த போறார், ஆதிதான் செஞ்சுருக்கான்னு அவங்க ஸ்ட்ராங்கா கேஸ் பைல் செஞ்சுருக்காங்க, கத்தில அவனோட கைரேகை இருக்கறதால காப்பாத்துறது கொஞ்சம் கஷ்டம்னு சொல்றார்” என்றான் மெதுவாக.

பார்வதிக்கு முழுதாக விவரம் சொல்லப்படவில்லை மலருக்கும் முழுதாகத் தெரியாது, இப்பொழுது நின்று கேட்டுக்கொண்டிருந்தாள் ‘தெரிய வேண்டும் கணவனைப் பற்றிய அனைத்து விவரமும் தெரிய வேண்டும், தளர்ந்து போய்விட்டால் அவனை எப்படி காப்பது’ என்பதாலே துவண்டுகொண்டிருந்த  உடலையும் உயிரையும் பிடித்துவைத்து நின்றிருந்தாள்.

“அந்தப் பையனுக்கு இன்னும் உயிர் இருக்கு அதனால கொலை முயற்சியா வழக்கு போட்டிருக்காங்க, கொஞ்சம் சீரியஸ்ன்னு அந்த வக்கீல் சொல்றார், மும்பைல இருக்குற அநத புனித் வீட்ல பேசணும், எம்பஸி மூலமா ஏதாவது செய்யா முடியுமான்னு பாக்கணும், அங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்க தண்டனை கூடக் கடுமையா இருக்கும் இப்போவே உள்ள வெச்சு என்ன பண்றானுங்க தெரியல” என்று ஆதவன் கூறிக்கொண்டிருக்க.

அப்படியே மடிந்து கீழே விழுந்தவள் கால் முட்டியில் முகம் புதைத்துக் கதறினாள் ‘அங்கு என்ன சித்ரவதை அனுபவிக்கிறான்’ என்ற பயம் அனைவர் உள்ளிலும் இருந்தது, கண்ணீரை துடைத்துக்கொண்டே வீட்டிலிருந்து வெளியேறினார் பார்த்திபன்.

வந்தவர்களுக்குக் குடிக்க கொடுத்தனர் பெண்கள், மலர் தங்கள் அறைக்குச் செல்வதற்காகப் படியேறினாள், அவள் செல்வதை பார்த்திருந்த நிர்மலா வேகமாக அவளுக்கு முன்னே படியேறி மேலே சென்றவள் அறையை மறைத்துக்கொண்டு நின்றாள்.

கொடிமலர் மீது மாமனாருக்கு இருக்கும் கோபத்தை பார்த்து அவளை இனிமேல் இந்த வீட்டில் சேர்க்க மாட்டார்கள் என்று முடிவு செய்துகொண்டாள், அதிவீரன் திரும்பி வரவேண்டுமென்றால் ஏதேனும் அதிசயம் நடக்க வேண்டும் என்றார் அந்த வக்கீல் அப்படி ஒன்று நடக்காது என்பது அவளின் திடமான நம்பிக்கை.

“மலரு உங்க பொருள் எல்லாம் அந்த ரூம்ல வெச்சுருக்கோம், கொழந்த வண்டி சத்தத்துல தூங்க மாட்றா எனக்கும் வேலைக்குப் போயிட்டு வந்து ராத்திரி தூங்க முடியலைன்னா தலை வலி வருது” என்றவளை கேள்வியாய் பார்த்தாள் மலர்.

‘குழந்தையைப் பார்த்துக்கொள்வது நிர்மலாவின் தாயார், வீட்டில் அனைத்தையும் பார்ப்பது சிவகாமி அதோடு இவர்களுடைய வீடு அந்தத் தெருவின் இறுதியில் இருக்கிறது அந்தப் பக்கமாக வாகனங்கள் எதுவும் கடந்து செல்லாது அப்படியே என்றாலும் வேறு ஒருவரருடைய அறையில் அவரின் அனுமதி இல்லாமல் எப்படி இருக்கிறாள்’ என்று அவளைப் பார்த்திருந்தாள்.

“அதுக்காக வீடு தொறந்திருக்குனு வீதியில போறவன் உள்ள பாயை போட்டுக்கலாமா, அடுத்தவங்க ரூம்க்கு போறதுக்கே அவங்ககிட்ட அனுமதி கேக்கணும் இந்த அறிவு கூட இல்லாம என்னத்த படிச்ச நீ” என்று அவளை அடித்துவிடும் ஆத்திரத்தோடு வந்தாள் கஸ்த்தூரி.

“பாத்து மரியாதையா பேசுங்க”- நிர்மலா.

“மரியாதைக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?, கீழ நடக்குற பஞ்சாயத்துல இதையும் சேத்துக்க சொல்றோம் நாங்க” என்றாள் கஸ்தூரி.

அக்காவின் கையைப் பற்றிய மலர் “வேண்டாம் வா” என்று அழைத்துக்கொண்டு பக்கத்து அறைக்குள் நுழைந்தாள், அவனுடைய வாசத்தை தேடியது மனது அதற்க்காகத்தானே இங்கே வந்தாள்.

இங்கே அவன் இல்லை அவன் வாசம் இல்லை, அவன் பயன்படுத்திய பொருள் ஒன்றுகூடவில்லை ரூமின் மூலையில் அவர்களுடைய துணிகள் வைக்கப்பட்டிருந்தது அதிலிருந்து கணவனின் சட்டை ஒன்றை எடுத்துக்கொண்டவள் அதன் பக்கத்திலேயே சுருண்டு படுத்துக்கொண்டாள் சட்டையை நெஞ்சோடு இறுக்கி அணைத்துக்கொண்டு.

கஸ்தூரிக்கு மனதே ஆறவில்லை “திமிர் பிடித்தவள் அப்படி என்ன இளக்காரமா போய்ட்டோம் சாமி எல்லாத்தயும் பாத்துட்டே தான இருக்கு உனக்குக் கூலி குடுக்காம விடாது” என்று புலம்பிக்கொண்டே துணிகளை ஒழுங்காக அடுக்கிக்கொண்டிருந்தாள்.

தங்கையைத் திரும்பிப் பார்க்க அவளிடம் சீரான மூச்சு கஸ்தூரி அமைதியாகிவிட்டாள் சத்தம் எழுப்பாமல் வேலையைச் செய்துகொண்டிருந்தாள்.

கீழே அனைவரும் பேசிக்கொண்டிருக்க ஆட்டோவிலிருந்து இறங்கிவந்தாள் ஆதிலட்சுமி மகள்களை அழைத்துக்கொண்டு, அனைவரும் அவளைத் திரும்பிப் பார்க்க “வாங்க” என்று அனைவரையும் பொதுவாக அழைத்தவள் நேரே தாயின் அறைக்குச் சென்றாள், தாயிடம் கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்தவள் அடுக்களை சென்று அத்தையிடமும் சுமதியிடமும் பேசினாள்.

மேலிருந்து கடுகடுவென்று கீழே வந்த நிர்மலா தன்னுடைய நாக்கை இந்தமுறை ஆதிலக்ஷ்மியிடம் சுழற்றினாள் “என்னண்ணி இங்க இவ்ளோ பிரச்சனை நடந்திருக்கு நீங்கப் பொறுமையா பத்து நாள் கழிச்சு வரீங்க, தம்பிங்க மேல பாசமெல்லாம் வெறும் பேச்சுதான் போல” என்றவளை எரித்துவிடுவது போலப் பார்த்த ஆதிலட்சுமி.

“என்னம்மா பண்றது பொண்டாட்டி சொல்றதுக்கெல்லாம் பூம்பூம் மாடுமாதிரி தலையட்டுற புருஷன் வாய்க்கலயே அந்த விதத்துல நீ யோகக்காரிதான்” என்றவள் “நான் மலரப் பாத்துட்டு வரேன்” என்று அவர்கள் இருவரிடமும் கூறிவிட்டு மேலே சென்றாள்.

ஒரு ஓரமாகச் சுருண்டு கிடப்பவளை பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள் ஆதிலட்சுமி, முதலில் அதிவீரன் கொடிமலர் அறைக்கே சென்றாள் அங்கே அனைத்தும் வேறு மாதிரி இருக்க, பக்கத்து அறைக்குள் எட்டிப்பார்த்தாள் உள்ளே நுழைந்தவளை பார்த்த கஸ்தூரி “வா” என்பதாகத் தலை அசைக்க.

“நிர்மலா வேலையா?” என்றாள் அவளிடம் “ஹ்ம்ம்” என்றவள் தங்கையை ஒருமுறை பார்த்துப் பெருமூச்சு விட்டாள்.