“ஆம் பெரிய தந்தையே. தந்தை கூறுவது சரி தான். போரில் அவர்களை பார்க்கலாம். அந்த செங்கல்வராயன் அன்று எங்களை தோற்கடிக்க முடியவில்லை என்ற காரணத்தால் என் மாமனுடன் கை கோர்த்து கொண்டானா? யார் வெற்றி கொள்கிறார்கள் என்று பார்க்கலாம். கவலையை விடுங்கள்”, என்று கூறி விட்டு சென்று விட்டான்.
“பாருங்கள் தமையனே, நரேந்திரவர்மனை. எப்படி வீரமாக இருக்கிறான்? அவன் பார்த்து கொள்வான் தமையனே. ஒரு விசாகதத்தன் என்ன? அவனை போல் எத்தனை பேர் வந்தாலும் எதிர்த்து நிற்பான் நம் மகன். ஆனால் என்னால் தான் என் சகோதரியின் கணவனை எதிர்த்து போரிட முடியாது”, என்று சோர்வுடன் கூறினார் இந்திரவர்மர்.
“எனக்கும் இதே கவலை தான் இந்திரவர்மா. ஆனால் நாம் அதை செய்து தானே ஆக வேண்டும்?”, என்றார் வராக சித்தர்.
“இல்லை தமையனாரே. அது நம்மால் இயலாது. வர போகும் போரில் அந்த விசாகதத்தனை நாம் வெல்ல வேண்டும் என்றால் திருமணம் முடிந்து ஓரிரு மாதம் கழித்து நரேந்திரவர்மனுக்கு மணிமுடி சூட்ட வேண்டும்”
“இந்திரவர்மா. உனக்கு ஒன்றும் வயதாகி விட வில்லை”
“ஆம், ஆனால் என் சகோதரிக்கு எதிராக செயல் பட முடியாது. அவள் உறவை தூக்கி எறிந்திருக்கலாம். ஆனால் நம்மால் முடியாதே தமையனே”
“ஆம், நீ கூறுவதும் சரியான யோசனை தான். நரேந்திரவர்மனுக்கு மணம் முடித்த பின்னர் பட்டாபிஷேகம் செய்வதில் என்ன குறைவு வந்து விட்டது. மக்கள் அவனை கொண்டாடுவார்கள். சரி கல்யாண வேலையை கொண்டாடுவோம். நாளைய மகாராஜாவுக்கு திருமணம் ஆயிற்றே”, என்று வெளியில் மகிழ்ச்சியாக கூறிய வராக சித்தருக்கும் உள்ளே கவலையாக இருந்தது.
அதே நேரம் செங்கல்வராயன் அனுப்பிய வீரனும் மக்களோடு மக்களாக கலந்து விட்டான் நரேந்திரவர்மனை மணமேடையில் வைத்து கொலை செய்வதற்காக.
அடுத்த நாள் பொழுது அழகாக விடிந்தது. சூரியன் தன்னுடைய ஒளியால் உலகையே மகிழ்ச்சி அடைய செய்தான். நரேந்திரவர்மன் நீராடி முடித்ததும், புத்தாடை புனைந்து மாப்பிள்ளையாக யானை மீது அமர்த்த பட்டு ஊர்வலமாக சிவன் கோவிலுக்கு அழைத்து செல்ல பட்டான்.
வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் நின்று அவன் மீது பூமாரி பொழிந்தார்கள். சிவன் கோவில் வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தார்கள். கோவில் அருகே சாந்தாவும், விசாலமும் நின்றிருந்தார்கள்.
அவனை கண்டதும் சாந்தா முகத்தில் ஒரு ஒளிர்வு வந்தது. எப்போதும் போல் ஆசையாக அவனையே பார்த்தாள். அவளை கண்டித்தாள் விசாலம். ஆனால் எவரையும் காணாமல் ஆலயம் உள்ளே பிரவேசித்தான் நரேந்திரவர்மன்.
அதே நேரம் உடல் முழுவதும் நலங்கு மாவை பணிப்பெண்கள் பூசி கொண்டிருக்க ஒரு வித பூரிப்போடு நீராடி கொண்டிருந்தாள் வான்மதி.
சிறியதாக அரச குமாரிக்காக அமைக்க பட்டிருந்த அந்த தெப்பத்தில் மூழ்கி எழுந்து வெளியே வர பார்த்தாள் வான்மதி. ஆனால் அவள் அணிந்திருந்த மேலாடை நீரில் நனைந்து எவ்வளவு கவர்ச்சியாக தன்னை காட்டும் என்று எண்ணி பார்த்தாள்.
சுற்றி இருந்த பெண்களை கண்டவளுக்கு “அரச குமாரியாக இருந்தாலும் இப்படி அனைவரின் பார்வையில் படும் படி தான் குளிக்க வேண்டி இருக்கிறது”, என்று நினைத்து கொண்டு மறுபடியும் நீரிலே மூழ்கியவள் அனைவரையும் வெளியே போக சொல்லி கட்டளை இட்டாள்.
அவள் கட்டளைக்கு பணிந்து அனைவரும் வெளியேறினார்கள். அதன் பின் படிகளில் மேலேறி வந்தவள் ஈரம் சொட்ட சொட்ட நின்றாள்.
பின் அங்கு வைக்க பட்டிருந்த புத்தாடை அருகில் சென்றவள் ஏற்கனவே போட்டிருந்த உள்ளாடையை மாற்றி விட்டு வேறு மாற்றினாள்.
மென்மையான வெண்மையான துணியை எடுத்து தன் மார்பில் இறுக்கமாக கட்டினாள். இடுப்பிலும் அதே போன்றதொரு துணியை தான் உடுத்தினாள்.
அப்படியே தலையை திருப்பி அங்கு வைக்க பட்டிருந்த ரத்தினங்கள் பொறிக்க பட்டிருந்த கண்ணாடியில் தன் முழு உருவத்தை பார்த்தாள். அவள் முகம் சிவந்தது. “அன்று இப்படி தானே அவன் முன்பு நின்றேன். கள்ளன், எவ்வளவு நேரம் என்னையே கண்டு கொண்டு நின்றானோ? இப்போது என் கழுத்தில் மங்கள நாணை அணிவிப்பதுக்கு காத்திருப்பான்”, என்று நினைத்து கொண்டு அங்கு இருந்த பட்டாடையை எடுத்தாள்.
நன்கு உடை உடுத்தி முடித்ததும் வெளியே இருந்த பணி பெண்களை வர சொன்னாள். அதன் பின் அவள் கூந்தலுக்கு சாம்பிராணி புகை போட பட்டு அவளுக்கு தலை அலங்காரம் செய்ய பட்டது. சிறிது நேரத்துக்குள்ளாக வைரத்தால் அவளை மூடியது போல ஜொலிக்க வைத்தார்கள்.
அனைத்தும் முடித்ததும் கண்ணாடியில் முகத்தையும், அலங்காரத்தையும் பார்த்தவளுக்கு திருப்தியாக இருந்தது. “இளவரசருடன் இருந்தால் இத்தனை ஆபரணங்களும் இடையூறாக தான் இருக்கும்”, என்று நினைத்து ஒரு வெட்க புன்முறுவல் சிந்தியவள் நெற்றியில் திலகத்தை இட்டாள்.
அலங்காரம் முடிந்து அழகு பதுமை என பல்லக்கில் அமர்ந்தாள் வான்மதி.
அவள் பின்னே அநேக பெண்கள் அணிவகுத்து சென்றார்கள். சிவன் கோவில் முன்பு பல்லக்கு நின்றது. வெளியே ஏராளமான ஜனங்கள் குவிந்திருந்தார்கள்.
“வெளியே வா மகளே”, என்று அழைத்தார் வாசுதேவச்சக்கரவர்த்தி. ஒரு வித தயக்கத்துடன் கீழே இறங்கியவள் யாரையும் காண முடியாமல் வெட்கம் கொண்டு தலை குனிந்து கொண்டாள்.
அவள் அழகையே அனைவரும் பிரமிப்பாக பார்த்து கொண்டிருந்தார்கள்.
அவளை இளவரசியாக அறிந்தவர்கள் அவளுடைய கல்யாண அலங்காரத்தை வியந்தார்கள் என்றால் நரேந்திரவர்மன் தேசத்து மக்கள், வர போகும் இளவரசியின் அழகில் மெய் மறந்தார்கள்.
விசாலம் அருகில் நின்ற சாந்தா மனதிலோ வான்மதியை கண்டு பலவிதமான எண்ணங்கள் வந்தன. பொறாமை, ஆசை, எதிர்பார்ப்பு, அழுகை என அனைத்தும் அவள் மனதில் சூழ்ந்திருந்தது.
அருந்ததி கை பிடித்து தன் மகளை அழைத்து சென்றாள். சிவன் கோவில் வாயிலுக்கு வந்ததும் காலணியை அங்கு கழட்டி வைத்தவள் அங்கு நின்றிருந்த விசாலத்தையும், சாந்தாவையும் பார்த்தாள்.
“இந்த சாந்தாவை எப்படி மறந்தேன்?”, என்று நினைக்கும் போது இது வரை இருந்த உற்சாகம் குறைந்தது போல உணர்ந்தாள் வான்மதி. அப்படியே சாந்தா முகத்தில் இருக்கும் பொறாமையை கண்டவளுக்கு ஒரு பக்கம் கோபமும் ஒரு பக்கம் எரிச்சலும் வந்தது.
“ஆனாலும் காதல் யார் மீது எவருக்கு வரும் என்று யாரால் கணிக்க முடியும்?”, என்று நினைத்தவள் சாந்தாவை பாவம் என்றும் நினைத்து கொண்டாள்.
கோயிலின் உள்ளே நடந்தவள் விசாலம் அருகே நின்று “உள்ளே வா விசாலம்”, என்றாள்.
இந்த தேசத்துக்கு வாக்க பட்டு வந்த விசாலத்துக்கு, வர போகும் இளவரசியே தன் அருகில் வந்து திருமணத்தை காண அழைத்தது பெருமையாக இருந்தது. ஆனாலும் “இல்லை இளவரசி. நான் மற்ற மக்களோடு இருக்கிறேன்”, என்றாள்.
“நீ என் தோழி விசாலம். நீ என் திருமணத்தை காண வேண்டாமா? உன்னுடைய புதிய தோழியையும் அழைத்து கொண்டு ஆலயத்துக்குள்ளே வா”, என்றாள் வான்மதி.
“இவர்கள் திருமணத்தை பார்க்க எல்லாம் எனக்கு மனதில்லை”, என்று நினைத்து கொண்டு வேறெங்கோ பார்த்தாள் சாந்தா.
“இளவரசி வற்புறுத்துகிறார்கள். நீயும் என்னுடன் வா சாந்தா”, என்று அழைத்தாள் விசாலம்.
“நீ போய் வா விசாலம். நான் இங்கேயே நின்று கொள்கிறேன்”, என்று கூறி விட்டாள் சாந்தா.
அதன் பின் இளவரசி கூடவே உள்ளே சென்று விட்டாள் விசாலம்.
புரோகிதர் மந்திரம் உச்சரித்து கொண்டிருக்க தலையில் கிரீடம், பட்டாடை அணிந்து, இளவரசனுக்கான கம்பீரத்துடன் அக்னி முன்பு அமர்ந்திருந்தான் நரேந்திரவர்மன்.
வான்மதி வருகிறாள் என்றவுடன் தலையை நிமிர்த்து பார்த்தவன் பிரமித்து போனான். “இத்தனை அழகும் எனக்கே எனக்கு சொந்தமாக போகிறது”, என்று நினைத்து பெருமையாக இருந்தது.
அவளும் அந்நேரம் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அதுவரை இருந்த சாந்தா பற்றிய யோசனை அனைத்தையும் அவனுடைய ஒற்றை பார்வையில் மறந்தே போனது. அவனுடைய கம்பீரத்தை அவள் கண்கள் நன்கு ரசித்தன.
அதுவும் அவன் கண்களில் தெரிந்த மயக்கத்தில் இவளுடைய இதய துடிப்பே எகிறியது. “இந்த காதலை அடைய நான் தவம் செய்திருக்க வேண்டும் இறைவனே”, என்று நினைத்து கொண்டாள்.
அருந்ததியின் கை பற்றி நடந்து வந்த வான்மதியை, பாண்டிமாதேவி அழைத்து சென்று நரேந்திரவர்மன் அருகில் அமர வைத்தாள்.
ஆலயத்தினுள் சொந்தங்களும் முக்கியமான மனிதர்களும் மட்டும் தான் இருந்தார்கள். அதன் பின் திருமண சடங்குகள் ஒவ்வொன்றாய் செய்யும் படி சொன்னார் புரோகிதர்.
அவர் கூறிய அனைத்து சடங்குகளையும் செய்தவர்கள் அந்த ஈசனின் முன்பு மனமுருக வேண்டி கொண்டார்கள்.
பின் புரோகிதர் தந்த மங்கள நாணை கையில் வாங்கிய நரேந்திரவர்மன் அவள் சங்கு கழுத்தில் கட்டினான். தலை குனிந்து அதை வாங்கி கொண்டவளுக்கு மனம் நிறைவாக இருந்தது. கூடவே பெருமிதமாகவும் இருந்தது.
பின் எழுந்து ஈசனுக்கு மணமக்கள் ஒன்றாக பூஜை செய்தார்கள். பின் சபையினரை வணங்கி விட்டு வராகசித்தர், பெற்றவர்கள், பெரியவர்கள் என அனைவரின் பாதங்களையும் வணங்கி எழுந்தார்கள். சுதமன் ஆனந்த மிகுதியால் நண்பனை அணைத்து கொண்டான்.