அத்தியாயம் 15

விழிகளும் வீணை மீட்டும்

என்று உணர்ந்தேன் உந்தன்

விழிகளைக் கண்ட போது!!!

 

தன்னுடைய யோசனையை நினைத்து தன்னையே வெறுத்தாள் வான்மதி. “இந்த குழப்பத்தில் என்னவனையே சந்தேகம் கொள்கிறேனே? இளவரசர் என்னை தவிர எந்த பெண்ணையும் நினைக்க மாட்டார். அது தெரிந்தும் நான் ஏன் அவ்வாறு நினைத்தேன்? நான் இப்படி நினைத்தேன் என்று தெரிந்தாலும் துடித்து போவார். எனக்கு பைத்தியம் தான் பிடித்து விட்டது. என்னை பிரிந்தால் என்னவர் இறந்து தான் போவார். இந்த சாந்தா விசயத்தை எவ்வளவு விரைவாக முடிக்க வேண்டுமோ அவ்வளவு விரைவில் முடிக்க வேண்டும்”

“அந்த சாந்தா மீது எனக்கு கோபமாக வருகிறது. இதே போல தானே அவளும் என்னை நினைப்பாள். கடவுளே எனக்கு இந்த விபரீதத்தை சரி செய்ய துணையாய் நீ தான் இருக்க வேண்டும்”, என்று மனதில்  நினைத்து கொண்டிருந்தாள்.

அடுத்த நாள் மணமகளை அழைத்து செல்ல சீர் வரிசை அனைத்தும் குமிக்க பட்டிருந்தன. ஆங்காங்கே வானவேடிக்கைகள் விட பட்டன.

கலை நிகழ்ச்சிகளும் நடனங்களும் நடந்து கொண்டிருந்தன. இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் பார்ப்பதற்காகவே ஆடல் மகளிர் நடனம் ஆடி கொண்டிருந்தார்கள்.

ஒரு புறம் நரேந்திரவர்மன் குடும்பம் அமர்ந்திருந்தது. அவர்களுக்கு எதிராக வாசுதேவச்சக்கரவர்த்தி அருந்ததி, மேகவேந்தன் மற்றும் அவர்களை சேர்ந்தவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

வான்மதியை நரேந்திரவர்மன் கண்கள் தேடின. அதே நேரம் இரு தோழிகளால் அழைத்து வர பட்ட வான்மதி வாசுதேவரின் அருகில் அமர்ந்தாள்.

அவளை ஆசையாக பார்த்த நரேந்திரவர்மனுக்கு குழப்பமாக இருந்தது. ஏனென்றால் வான்மதி முகம் குழப்பத்தில் இருந்தது.

“தாம்பூலம் மாற்றும் போது இருந்த கலகலப்பு இப்போது எங்கே சென்றது?”, என்று குழம்பி போனான். அவளோ அந்த சாந்தாவை பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்தாள்.

எதையோ கேட்க அருந்ததி அவளை அழைக்கும் போது தான் நினைவில் இருந்து வெளியே வந்தாள். அப்போது தலையை தூக்கி பார்க்கும் போது தான் நரேந்திரவர்மனை கண்டாள். அவள் முகம் பூவாக மலர்ந்தது.

அதை ரசித்தவன் “என்னவாயிற்று?”, என்று கண்களால் வினவினான்.

“ஒன்றும் இல்லை”, என்னும் விதமாய் சைகை செய்தாள் வான்மதி.

இந்த காதல் நாடகத்தை பார்த்து சிரித்து கொண்டான் சுதமன்.

அடுத்த நாள் அனைவரும் மேலை தேசம் நோக்கி கிளம்பினார்கள். அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒருவரை ஒருவர் கேலி செய்த படி தங்கள் இளவரசியின் திருமணத்தை காண ஆவலாக சென்றார்கள்.

மக்கள் பயணிக்க கழுதைகளும், குதிரைகளும், ரதங்களும், மாடுகள்  பூட்ட பட்ட வண்டிகளும் அணிவகுத்திருந்தன.

வான்மதி தேவி அலங்கரிக்க பட்டு பல்லக்கில் அமர வைக்க பட்டாள். அவளுடைய பல்லக்கை நான்கு பேர் தூக்கி சென்றார்கள். அவள் பல்லக்குக்கு முன்னாக இந்திரவர்மர் மற்றும் பாண்டிமாதேவியின் ரதம் சென்றது. அவள் பல்லக்குக்கு  பின் வாசுதேவர் மற்றும் அருந்ததியின் ரதம் சென்றது. அவர்களுடன் மேகவேந்தனும் அமர்ந்து கொண்டான்.

பல்லக்குக்கு இரு புறமும் நரேந்திரவர்மனும், சுதமனும் சென்றார்கள்.

பல்லக்கில் அமர்ந்திருந்த வான்மதி திரை சீலை வழியாக நரேந்திரவர்மனையே கண்டு கொண்டு வந்தாள். அவளுக்கு நிகரான பதில் பார்வையை கொடுத்து கொண்டு வந்தான் அவன்.

ரதத்தில் அமர்ந்திருந்த இந்திரவர்மர் முகம் மட்டும் களை இழந்து இருந்தது. அதை பார்த்த பாண்டிமாதேவி “என்னவாயிற்று மகாராஜா? எதையோ தீவிரமாக சிந்தித்து கொண்டு வருகிறீர்கள்?”, என்று கேட்டாள்.

“இல்லை தமையன் மட்டும் ஏன் நம்முடன் வர மறுத்து விட்டார் என்று சிந்தித்து கொண்டிருந்தேன் தேவி”

“அவர் தங்களுடைய சகோதரி கோசலையை காண தான சென்றிருக்கிறார்? பிறகு என்ன சிந்தனை?”

“இல்லை தேவி. நாம் என் சகோதரியையும் விசாகதத்தனையும் திருமணத்துக்கு அழைப்பதுக்காக அன்று சென்றிருந்தோமே? அப்போது அவன் நம்மிடம் சரியாக நடந்து கொள்ள வில்லை. இப்போது மணப்பெண்ணை பார்க்க கூட அவர்கள் யாரும் வரவில்லை. இப்போது தமையன் வேறு அங்கு செல்வது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது”

“இதில் குழப்பம் என்ன இருக்கிறது மகாராஜா? தங்களுடைய சகோதரிக்கும் விசாகதத்தனுக்கும் அவர்கள் மகளை நரேந்திரவர்மனுக்கு மணம் முடிக்க அதிக ஆவல் இருந்தது. ஆனால் நாமோ நம் மகனின் விருப்பத்துக்கு செவி சாய்த்து விட்டோம். அதனால் அவர்களுக்கு வருத்தம். அதை சரி செய்யவே தங்களுடைய தமையன் அங்கு சென்றிருப்பார்”

“ஆம் அவ்வாறு தான் இருக்கும். இந்த திருமணம் நல்ல படியாக நடக்கும் அல்லவா? அங்கே பார் நரேந்திரவர்மன் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை. இது எப்போதும் அவனிடம் இருக்க வேண்டும் தேவி”

“நிச்சயமாக நல்ல படியாக  திருமணம் நடக்கும். தாங்கள் கவலை கொள்ளாமல் இருங்கள் மகாராஜா. தங்களுடைய தமையன் விசாகதத்தனை சரி செய்து தங்களுடைய சகோதரியையும் திருமணத்துக்கு அழைத்து கொண்டு வருவார்”, என்றாள் பாண்டிமாதேவி.

அதே நேரம் அங்கே விசாகதத்தன் காதில் பகை என்னும் தீயை மூட்டி கொண்டிருந்தான் வல்லவரையன்.

செங்கல்வராயானோ தம் நாட்டில் இருந்த ஈட்டி எரியும் சிறந்த வீரனின் கையில் அந்த விசம் தடவிய கத்தியை கொடுத்து கொண்டிருந்தான்.

மக்களும், ரதங்களும், பல்லக்கும் நரேந்திரவர்மனுடைய நாட்டில் அடி எடுத்து வைத்தார்கள். அங்கே இருக்கும் செல்வ செழிப்பை விழி விரிய பார்த்து கொண்டு வந்தார்கள் அனைவரும். பொட்டல் காடுகளை எல்லாம் சீர்படுத்தி விவசாயங்களை செய்ய வழி வகை செய்திருந்தான் நரேந்திரவர்மன். “அதே போல் தங்கள் தேசத்திலும் செய்ய வேண்டும்”, என்று எண்ணி கொண்டார் வாசுதேவச்சக்கரவர்த்தி.

“என்னவனுடைய தேசம். அவன் பிறந்து வளர்ந்த நாடு. இனி எனக்கும் இந்த தேசமே சொந்தம்”, என்று எண்ணி  பூரித்து போனாள் வான்மதி. அதே எண்ணத்தோடு அவனை கண்டால் அவனோ அவளை விழுங்கி விடுவதை போல பார்த்து கொண்டிருந்தான். “கள்ளன், முன்னே பின்னே பெற்றோர்கள் இருக்கும் போது என்ன பார்வை பார்க்கிறான்?”, என்று நினைத்து முகம் சிவந்து போனாள் வான்மதி.

அதன் பின் ஆரற்றி சுற்றி மேள தாளத்தோடு வரவேற்க பட்டாள் இளவரசி. பின் அவர்களுக்கு அளிக்க பட்டிருக்கும் மாளிகையில் ஓய்வெடுக்க சென்று விட்டாள். கொண்டு வந்த சீர்கள் எல்லாம் அந்த மாளிகையில் அடுக்க பட்டது. திருமணத்துக்கு வருகை புரிந்திருக்கும் அனைத்து மக்களுக்கும் தங்க இடமும் விருந்தும் அளிக்க பட்டது.

அதே நேரம் வராக சித்தர் அந்த விசாகதத்தன் முன்பு அமர்ந்திருந்தார். அவனோ அவரை முறைத்து கொண்டு சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். அவனை விட அதிக முறைப்போடு வராகசித்தரை  முறைத்து கொண்டு அமர்ந்திருந்தாள் கோசலை.

“இந்த நரேந்திரவர்மனால், துறவியான என்னை கூட அனைவரும் முறைக்கிறார்களே”, என்று எண்ணி கொண்டு ஒரு சமாதான சிரிப்பை உதிர்த்தார் வாசுதேவர்.

அதை எல்லாம் அந்த விசாகதத்தன் கண்டு கொள்ளவே இல்லை. அவரை எரித்து விடுவது போல பார்த்தான்.

அப்போது நன்கு விருந்தை முடித்து கொண்டு அரண்மனைக்கு வந்தான் வல்லவரையன். அதை பார்த்து அதிர்ந்து போனார் வராக சித்தர். அவருக்கு கவலை சூழ்ந்தது. “தான் காலம் தாழ்த்தி சமாதானம் செய்ய வந்துவிட்டோம்”, என்று எண்ணி கொண்டார். வல்லவரையன் தீயை நன்கு மூட்டி விட்டான் என்று புரிந்து போனது.

அவர் எண்ணிய படி தான் நடந்தது. கடைசி வரை அவருடைய சமாதான பேச்சை அந்த விசாகதத்தன் கேட்பதாய் இல்லை. நரேந்திரவர்மனை வசை பாடி விட்டான். அதை கண்டு கோபம் வந்தாலும் இனிய புன்முறுவலோடு கோசலையை சமாதானம் செய்தார்.

அவளோ “நான் உங்கள்  சகோதரி என்று மறந்துவிடுங்கள் இருவரும். சித்தரான உமக்கு உறவு தேவை இல்லை. மகன் மூலம் புது உறவை தேடி கொண்ட இந்திரவர்மனுக்கும் என் உறவு தேவை இல்லை. அதனால் தானே என் மகளை தவிர்த்து எங்கிருந்தோ ஒருத்தியை மணப்பெண்ணாக கொண்டு வந்திருக்கிறான். இனி என்னை காண வராதீர்கள்”, என்று கூறி விட்டாள்.

“விரைவில் என்னை அவமான படுத்திய அந்த இந்திரவர்மனையும், நரேந்திரவர்மனையும் எதிர்த்து போர் புரிவேன். திருமணத்தை முடித்த கையோடு யுத்தத்துக்கு ஆயத்தமாக சொல்லுங்கள். தற்போது தாங்கள் செல்லலாம்”, என்று கூறி விட்டான் விசாகதத்தன். கடைசியில் கவலையோடு அங்கிருந்து சென்றார் வராக சித்தர்.

அவர் இங்கே தேசத்துக்கு வரும் போது நாடே விழாக்கோலம் கொண்டிருந்தது. ஏன் என்றால் அவர்களுடைய இளவரசன் நரேந்திரவர்மனுக்கு அடுத்த நாள் காலை திருமணம் நடக்கவிருக்கிறதே?

அதை பார்த்த வராக சித்தருக்கு “இன்னும் சில நாளில் இந்த மகிழ்ச்சி காணாமல் போக வாய்ப்பிருக்கிறதே”, என்று எண்ணி கவலையாக இருந்தது.

கனத்த மனதுடன் அரண்மனைக்கு சென்றார். அவருடைய முகத்தை வைத்தே நிலைமை சரி இல்லை என்று யூகித்து கொண்டார்கள் இந்திரவர்மரும், நரேந்திரவர்மனும்.

அவர்கள் யூகம் போல தான் வராக சித்தரும் அனைத்தையும் கூறினார். அவர் கூறியதை கேட்டு தந்தைக்கும், மகனுக்கும் கவலையாக இருந்தது.

“கவலை கொள்ளாதீர்கள் தமையனாரே. உறவு என்று வந்தார்கள் என்றால் கரம் நீட்டி வரவேற்கலாம். அதுவே பகை என்று வந்து விட்டால் நாமும் போரிடத்தான் செய்ய வேண்டும்”, என்றார் இந்திரவர்மர்.