\
நாமே போய் அவனை அடித்துவிட்டு வந்துவிடுவோமா என்றுதான் முதலில் ஆதித்யா நினைத்தான். ஆனால் தந்தைக்குத் தெரிந்தால் கொன்று விடுவார் என்று தெரியும். அதனால் அதை அவன் பெற்றோரிடம் சொல்ல… யுகேந்திரனும் அவன் வேலைகளை ஒதுக்கிவிட்டு உடனே வந்துவிட்டான். “எங்ககிட்ட சொல்றதுக்கு என்ன டா பயம். உங்களுக்கு இல்லாம நாங்க வேற யாருக்கு இருக்கோம்?”

“உங்க ரெண்டு பேருக்குமே சொல்றேன். எங்களைத் தயவு செஞ்சு நம்புங்க. நாங்க உங்களுக்காகத்தான் இருக்கோம். எங்களுக்கும் நீங்கதான் இருக்கீங்க.” என்றவன் மகனைப் பார்த்து, “நீ அவனை எதுவும் பண்ணக் கூடாது. முன்ன மாதிரி இல்லை. இப்போ குடி, போதை மருந்து எல்லாமே ஈஸியா எடுத்துகிறாங்க. அப்படிபட்டவனைப் போட்டு அடிச்சா… அவன் இன்னும் மூர்கமா ஆகிடுவான். அப்புறம் அவன் என்ன பண்ணுவான்னு தெரியாது. சண்டை போட்டா தான் வீரமுன்னு இல்லை. இது போல ஆளுங்ககிட்ட இருந்து விலகி போறதும் தான்.”

“ஆமாம் ஆதி அப்பா சொல்றது சரிதான். நாங்க படிச்ச காலத்துல எதிர்த்து நிற்போம். மனுஷங்களா இருக்கிறவங்ககிட்ட போராடி பார்க்கலாம். ஆனா இது மாதிரி ஆட்களைச் சட்டரீதியா தான் பார்த்துக்கணும்.”

“ஆதிரா நீயும் இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகக் கூடாது. இதெல்லாம் கடந்து போகக் கத்துக்கோ…. அவங்களைக் கண்டுக்காம விட்டாலே போதும், வேலைக்கு ஆகாதுன்னு விலகி போயிடுவாங்க. இனி நீ எதைப் பத்தியும் கவலைப்படாம இரு.” என்ற நக்ஷத்ரா, மறுநாளில் இருந்து பள்ளி வாகனத்தை நிறுத்திவிட்டு, அவளே தங்கள் காரில் டிரைவர் வாகனம் ஓட்ட… மகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்தாள். யுகேந்திரனும் பள்ளி தாளாளரை சந்தித்துப் பேசிவிட்டுதான் சென்றான். அவன் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும், அவன் வேலை மெனக்கெட்டு வந்து சொல்லிவிட்டு சொல்வதே எச்சரிக்கை செய்வது போல இருக்க… பள்ளியிலும் கண்காணிப்பு அதிகமாகியது.

நக்ஷத்ராவை பார்த்ததும் பள்ளியில் தொந்தரவு கொடுத்த பையனும் விலகி செல்ல ஆரம்பித்தான். அதோடு இப்படி ஒரு பையன் தன்னைப் பார்ப்பதே தனக்குத் தெரியாதது போல ஆதிராவும் இருந்து கொண்டாள். சில நேரம் தேவை இல்லாத பேச்சுக்கள், சண்டைகள் எல்லாம் சிக்கலில் தான் கொண்டு விடும்.

அம்மாவை போய் அலைய வைத்து விட்டோமே என ஆதிராவுக்குக் கவலையாக இருக்க…. அதை அவள் தன் அம்மாவிடம் பகிர்ந்தும் கொண்டாள்.
“இருக்கட்டும் ஆதிரா, நான் என்ன நடந்தா வரேன் கார்ல தானே வரேன். அதோட என் வேலையை முடிச்சிட்டு உன்னை வந்து அப்படியே கூட்டிட்டு வீட்டுக்கு போயிட போறேன். இங்கயும் மத்த பொண்ணுங்களோட அம்மா என்கிட்டே பிரண்ட்ஸ் ஆகிட்டாங்க. அவன்கிட்ட எல்லாம் பேசுறதும் நல்லாத்தான் இருக்கு. நமக்கும் பேசுறதுக்கு அதிக நேரம் கிடைக்குதே. எப்படிப் பார்த்தாலும் எல்லாம் நல்லதுக்குத்தான்.

பிறகு வேறு எந்தத் தொந்தரவும் இல்லாமல் போனதால்… ஆதிரா படிப்பில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். நல்ல மதிப்பெண்களுடன் அவள் மருத்துவ நுழைவு தேர்வில் தேர்வாகி இருந்தாலும், அவளுக்கு வெளியூரில் உள்ள அரசு கல்லூரியில் இடம் கிடைத்திருக்க… இங்கே சென்னையில் என்றால்… வருடம் பத்து பன்னிரண்டு லட்சம் அதிகம் ஆகும். இருந்தாலும் பரவாயில்லை என அவளைச் சென்னையில் இருக்கும் கல்லூரியில் சேர்க்க யுகேந்திரன் முயல…

தான் அரசு கல்லூரியிலேயே படிப்பதாக ஆதிரா சொன்னதை யுகேந்திரன் ஏற்கவில்லை.

“உனக்குப் படிக்கவே அதிகம் இருக்கும். இன்னும் ஹாஸ்டல்ல இருந்தா… மத்த வேலைகளைப் பார்த்திட்டுப் படிக்கிறதும் கஷ்ட்டம். நீ எப்பவும் போல வீட்ல இருந்து போயிட்டு வா.” என்றுவிட்டான். அதனால் ஆதிரா சென்னையில் இருந்த மருத்துவக் கல்லூரியிலேயே சேர்ந்தாள்.

ஆதி நான்கு வருட படிப்பை முடித்தவுடன், அவனுக்குக் கல்லூரி காம்பஸில் வேலை கிடைத்திருந்தாலும், அவன் வேலைக்குச் செல்லவில்லை.
“கிடைச்ச வேலைக்கும் போகாம, என்ன டா பண்ணப் போற?” யுகேந்திரன் கேட்க

“மேல படிக்கப் போறேன்.” என்றான்.

“ரொம்பச் சந்தோசம். என்ன படிக்கப் போற?

“நான் லா படிக்கப் போறேன்.” என அவன் சொன்னவுடன் பெற்றோருக்கு மயக்கம் வராத குறை தான்.

“என்னது லா படிக்கப் போறியா?

“ஆமாம்.லா தான் படிக்கப் போறேன்.”

“என்கிட்டே ஆபீஸ் பாய் வேலை காலி இல்லையே….” யுகேந்திரன் நக்கலாகச் சொல்ல….

“ரொம்பத் தான் உங்களுக்கு. நான் உங்க ஆபீஸ்க்கு எல்லாம் வர மாட்டேன். நான் பெரிய கார்பரேட் வக்கீல் ஆகப்போறேன். லட்சம் லட்சமா சம்பாதிப்பேன்.”

“ஆதிரா இனிமே எதுனாலும் நீ என்னையே கேட்கலாம். நான் சம்பாதிச்சதும் முதல்ல உனக்குத் தான் கார் வாங்கிறோம்.” அண்ணன் அளந்து விடுவதைப் பார்த்து ஆதிரா சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றாள்.

“முதல்ல படிச்சு முடி டா…” என்றனர் பெற்றோர்.

கல்லூரிக்கு தேவையான உடைகள் வாங்க ஆதித்யாவும், ஆதிராவும் வெளியே கிளம்பி சென்றனர். செல்லும் வழியில் இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். “அண்ணா நிஜமாவே நீ லா படிக்கப் போறியா?”

“ஆமாம், இந்தப் புதுசா பிஸ்னஸ் தொடங்க எல்லாம் ரொம்ப வருஷம் மட்டும் இல்ல… செலவும் ஆகும். நமக்குத் தான் அப்பாவும் அம்மாவும் ரெடிமேடா வச்சிருக்காங்களே… அதனால அதையே பண்ணலாம்னு நினைச்சேன். அதோட எனக்கும் இப்போ லா படிக்கணும்னு தோணுது.”

“நீயும் அப்பா அம்மா போல வக்கீல் ஆகப்போறது எனக்குச் சந்தோசம் தான்.”

இருவரும் தேவையானதை வாங்கிக் கொண்டு திரும்பி வரும் போது, எதிரில் வந்த வயதான பாட்டி ஒருவர் இருவரையும் நிறுத்தி வைத்து பேசினார்.
“ஆதி என்னை நியாபகம் இருக்கா? இதுக்கு முன்னாடி இருந்த வீட்ல நாங்க கீழ இருந்தோமே. இது யாரு உன் தங்கையா…” என்றதற்கு ஆதி ஆமாம் என,
“அந்த எடுத்திட்டு வந்த பொண்ணு தானே….” என்றதும், ஆதி சட்டென்று சுத்ரித்தவன், ஆமாம் என்னைக் காசி மேட்டுல இருந்து எடுத்திட்டு வந்தாங்க, இவளை பீல மேட்ல இருந்து எடுத்திட்டு வந்தாங்க. சும்மா காமடி பண்ணாம கிளம்புங்க.” எனச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.
ஆதிரா எதோ யோசனையில் இருக்க….

“அவங்க எதோ லூசு மாதிரி உளறிட்டு போறாங்க.” என்றான்.

“அவங்க சொன்னதும் இப்போ தான் எனக்குப் புரியுது என ஆதிரா சொல்ல… என்ன என்றான் ஆதி உள்ளுக்குள் பயத்துடன்.
“என்கிட்டே சில பேர் சில நேரம் எதோ சொல்ல வந்து நிறுத்திடுவாங்க. இல்லைனா என்னைப் பார்த்ததும் எதோ அவங்களுக்குள்ள பேசிப்பாங்க. அது இதுதான் இல்லையாண்ணா.”

“ரொம்ப யோசிக்கிற? அப்படி எல்லாம் எதுவும் இல்லை.”

“நான் இன்னும் சின்னக் குழந்தை இல்ல….”

“சரி நீ இப்போ என்ன செய்யப் போற? இதை அப்பா அம்மாகிட்ட சொல்லி அவங்களை வருத்தப்பட வைக்கப் போறியா?”

“அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன், நீயும் சொல்லாத.”

“எனக்கு ஒவ்வொன்னையும் எப்படிப் பார்த்து பார்த்து செஞ்சிருக்காங்க. அதை நான் என் கண்ணால பார்த்திருக்கேன். நான் அவங்களை ஹர்ட் பண்ண மாட்டேன். ஆனா உனக்கு முன்னாடியே தெரியுமா?”

“இல்ல கொஞ்ச வருஷம் முன்னால தான்.” என்றவன், முழு விவரம் சொல்லிவிட்டு, “உனக்கு உன்னோட பயாலாஜிக்கல் பேரண்ட்ஸ் பத்தி தெரிஞ்சிக்கனுமா…” எனக் கேட்டான்.

“அப்படி யாராவது இருந்திருந்தா… அப்பாவும் அம்மாவும் என்னை எடுத்திட்டு வந்திருக்க மாட்டாங்க, எனக்கு அது தெரியும். நான் அவங்களை முழுசா நம்புறேன்.”

“நம்புற இல்ல… இதை இதோட விட்டுடு. எல்லாமே நம்பிக்கை தான் ஆதிரா. நம்பிக்கையை மட்டும் விட்டுடாத.”

“அப்பா அம்மா என்னை ஹாஸ்பிடல்ல இருந்து மாத்தி எடுத்திட்டு வரலைன்னு நான் நம்புற மாதிரி.” என ஆதி சொல்ல…. மனதில் இருந்த பாரம் சட்டென்று குறைய, ஆதிரா வாய்விட்டு சிரித்தாள்.

குட் இப்படித்தான் இருக்கணும்.

வீட்டிற்கு வந்தும் கூட ஆதிரா பெற்றோர் இடத்தில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. சில வருடங்களுக்கு முன்பு என்றால் எப்படி இருந்திருப்பாளோ… ஆனால் இப்போது எல்லாம் புரிந்து கொள்ளும் வயதும், அறிவும் இருந்தது. ஆனால் ஒன்று இனி யார் பேசுவதும் அவளைப் பாதிக்காது.

அடுத்த ஒரு வருடத்தில் நக்ஷத்ரா நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றிருந்தாள். சில காலமாகவே அவள் முயன்று கொண்டு இருந்தது தான். இப்போது கிடைத்திருக்க வீட்டில் எல்லோருக்குமே மகிழ்ச்சி என்றாலும், யுகேந்திரனுக்கு மனைவியை நினைத்து மிகுந்த பெருமையும் கூட…

“அம்மா நான் உங்ககிட்ட ஜூனியரா சேரணும்னு நினைச்சிருந்தா… நீங்க இப்படி ஜட்ஜ் ஆகிட்டீங்களே….நான் இப்ப என்ன பண்ணுவேன்.” என ஆதி புலம்ப….

“அப்பாகிட்ட ஜூனியரா சேர்ந்துக்கோ அண்ணா.” என்றாள் தங்கை.

“அவர்கிட்ட வேண்டாம், வேற நல்ல வக்கீல்கிட்ட போறேன்.” என்றான்.

“ரொம்பக் கொழுப்பு டா உனக்கு. நான் உங்க அப்பாகிட்ட தான் ஜூனியர் தெரியும்ல உனக்கு.”

“அதுதான் நீங்க ஜட்ஜாக இவ்வளவு நாள் ஆகி இருக்கு.” என அதி அதற்கும் கேலி செய்ய… யுகேந்திரன் மகனை முறைத்தான்.

“அப்பா, அண்ணா சும்மா சொல்லுதுப்பா… கடைசியில உங்ககிட்ட தான் வரும் பாருங்க.” என்றாள் ஆதிரா.

“எத்தனை பேர் உங்கிட்ட ஜூனியரா இருந்து இப்போ பெரிய வக்கீலா ஆகி இருக்காங்க. அண்ணனையும் நீங்க தான் அப்படி ஆக்கணும்.” என்றாள் உரிமையாக.

“நீ சொன்னா சரி டா…. ஆனா இவன் சேட்டை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு ஒழுங்கா வேலையை மட்டும் பார்க்கணும். இதை நீயே உங்க அண்ணன்கிட்ட சொல்லிடு.”

நக்ஷத்ரா நீதிபதியானதை முன்னிட்டு, அன்று மாலை முக்கியமான விருந்தினர் மற்றும் நண்பர்களுக்கு யுகேந்திரன் நக்ஷத்ரா தம்பதியினர் விருந்து கொடுக்க…. வீடே களைகட்டியது. பிள்ளைகள் இருவரும் கலக்கலாக உடை அணிந்து விருந்தினரை உபசரிக்க…. பிள்ளைகள் மட்டும் அல்ல பெற்றோருமே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள், இது போலப் பிள்ளைகள் அமைய என  கிரிஜாவுக்குத் தோன்ற…. அவர் மகிழ்ச்ச்யுடன் தன் மகனின் குடும்பத்தைப் பார்த்து இருந்தார். இனி எல்லாம் சுபமே.