நக்ஷத்ராவின் அம்மாவை வரும் வழியில் அவர் வீட்டில் விட்டுவிட்டு இவர்கள் வீடு வந்தபோது மாலையாகி இருந்தது. நக்ஷத்ரா பிள்ளைகள் இருவருக்கும் குடிக்கக் கொடுக்க… அப்போது ஆதிராவின் தோழி வந்து அவளை விளையாட அழைக்க…. அவளும் விளையாட கிளம்பினாள்.
இப்போது இருப்பதும் அடுக்குமாடி குடியிருப்பு தான். ஆனால் நக்ஷத்ராவின் வசதிக்காகக் கீழ் தளத்தில் இருந்த நான்கு படுக்கை அறைகள் மற்றும் ஒரு சின்ன அலுவலக அறை கொண்ட வீட்டை வாங்கி இருந்தனர். புது வீட்டை கட்டும் போதே வாங்கி இருந்ததால்…அவர்கள் வசதிக்கு வீட்டை வடிவமைத்து இருந்தனர். அலுவலகத்தையும் வீட்டின் அருகே மாற்றி இருந்ததால்…நக்ஷத்ராவுக்கும் அதிக வசதி தான். வீட்டில் இருந்து பத்து நிமிடங்கள் தான் என்பதால் எளிதாகச் சென்றுவிட்டு வந்துவிடுவாள்.
“இவ பார்க்குக்குப் போறேன்னு சொல்லிட்டு அங்க போய் உட்கார்ந்து இவ பிரண்ட்ஸ் கூடக் கதை பேசிட்டு இருக்கா… விளையாடுறதே இல்லை.”
“நான் இங்க போனேனே… அங்க போனேனே… இது வாங்கினேன், அது வாங்கினேன்னு தான் பேசிட்டு இருக்கா.” ஆதி ஆதிராவை வம்பிழுக்க….
“உனக்கு ரொம்பத் தெரியுமா? நீ என் பக்கத்துக்ள உட்கார்ந்து கேட்டியா?” என்றாள் ஆதிரா.
“சரி அப்படியே பேசினாலும், நாங்க என்ன வேணா பேசுவோம். உனக்கு என்ன வந்தது? உன் வேலையைப் பாரு.” என ஆதிராவும் திருப்பிக் கொடுத்தாள்.
“இவ விளையாடுறதே கிடையாது. வீட்லயும் படம் வரையுறேன், கலர் பண்றேன்னு இடத்தை விட்டு நகர மாட்டேங்கிறா… அப்புறம் எப்படி ஸ்லிம் ஆவ.”
“நீ குச்சி மாதிரி இருந்தா, நானும் அப்படி இருக்கனுமா… நம்ம வீட்டுக்கு ஒட்டடக் குச்சியே வேண்டாம். இவன் முடியே பிரஷ் மாதிரி தான் இருக்கு. இவனைத் தூக்கி ஒட்டடை அடிக்கலாம்.”
வீட்டில் இதெல்லாம் எப்போதும் நடக்கும் சண்டை என்பதால்… பெற்றோர் இருவரும் அவர்களே நிறுத்தட்டும் என்று பார்த்து இருந்தனர்.அவர்கள் தலையிட்டால்… நீங்க அவனுக்குத்தான்/அவளுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவீங்க என இருவரும் சண்டைக்கு வருவார்கள் ஆதிராவின் தோழி அவளை மீண்டும் அழைக்க…அண்ணன் சொல்லி காட்டி விட்டான் என்ற கோபத்தில் விளையாட ஷட்டில் பேட் எடுத்துக் கொண்டு ஆதிரா சென்றாள்.
ஆதியும் விளையாடக் கிளம்ப… “இரு உன்னோட பேசணும்.” என்ற யுகேந்திரன் சென்று மகள் சென்றுவிடடாளா என்று பார்த்துவிட்டு, கதவை சாற்றிக்கொண்டு வந்தான்.
“இன்னைக்கு ஏன் விசேஷ வீட்ல அப்படிச் சொன்ன?”
“என்ன சொன்னேன்?” என ஆத்தியா தெரியாதது போலக் கேட்க….
“தங்கச்சியைத் தனியா விடாதீங்கன்னு சொன்னியே… அது தான் ஏன்னு அப்பா கேட்கிறார்.” என்றாள் நக்ஷத்ரா விளக்கமாக.
நிஜமாகவே இவனுக்கு எதுவும் தெரியாதா…. நாம் தான் தவறாகப் புரிந்து கொண்டோமோ என நக்ஷத்ரா நினைக்க…
“உனக்கு எதாவது எங்ககிட்ட கேட்கணுமா…. இல்ல சொல்லனுமா ஆதி.” என யுகேந்திரன் மறுபடியும் கேட்க….
இல்லை என்றவன் விளையாட சென்றுவிட்டான்.
நாமதான் தப்பா புஞ்சிகிட்டோமா என்றாள் நக்ஷத்ரா. யுகேந்திரன் ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கே ஒன்றும் புரியவில்லை.
மறுநாள் காலையே கிரிஜா வந்துவிட்டார். பிள்ளைகள் இருவரும் பள்ளி சென்றிருக்க…. யுகேந்திரன் காலை உணவு உண்டு கொண்டிருந்தான்.
“இந்தத் தியாகுவுக்கு வாய் சும்மா இருக்கா பாரு. விசேஷத்துக்கு வந்த இடத்தில வாயை வச்சிட்டு சும்மா இருந்தா என்ன?”
“நீங்க ஏன் மா டென்ஷன் ஆகுறீங்க? அவர் எதையும் பேசிட்டு போறார். நமக்கு என்ன?”
“அவர் நம்மைப் பத்தி தானே பேசி இருக்கார்,. ஆதிராவை நீங்க எடுத்து வளர்கிறீங்கன்னு ஜகன்கிட்ட சொல்லி இருப்பார் போல… அவன் என்கிட்டே வந்து போட்டுக் கொடுத்திட்டு போயிட்டான்.”
“நான் நேத்ராகிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். உங்க அப்பாவுக்கு இது தேவை இல்லாத வேலைன்னு. நம்ம வீட்டு விஷயத்தை இவர் யார் சொல்றதுக்கு?”
ஒருவேளை இவர் பேசியதை தான் ஆதி கேட்டிருப்பனோ என்று நினைத்த யுகேந்திரன் நக்ஷத்ராவை பார்க்க…
“நான் உங்க தம்பிக்காகவும், நேத்ராவுக்காகவும் ரொம்பப் பொருத்துப் போயிட்டேன். அவர் எப்பவுமே நம்மை ஏனோ குறைவா தான் பார்க்கிறார். ஆனா இப்போ ஆதிராவை பத்தி அவர் பேசினது அதிகப்படி, நான் அவரை நாக்கை பிடுங்கிற மாதிரி கேட்கத்தான் போறேன்.” என்றாள் கொதிப்பாக.
“நீ இப்படி எத்தனை பேர்கிட்ட சண்டைக்கு நிற்ப… இல்லை ஊர் வாயைத்தான் அடைக்க முடியுமா… இவர் இல்லைனா வேற ஒருத்தர் பேசத்தான் போறாங்க.”
“ஆதிராகிட்ட நாம ஏன் இந்த விஷயத்தைச் சொல்லாம வச்சிருக்கோம் அவ குழந்தைன்னு தான… அதோட நாம சொல்ற விஷயம் அவளைக் காயபடுத்துமுன்னு தானே…. இந்த அறிவு ஜீவிகளுக்கு அதெல்லாம் புரியாது இல்லையா….”
“இப்போ யாரை பத்தியும் என்னவும் பேசலாம்னு ஆகிடுச்சு. அவங்கவங்க வீட்லயே ஆயிரம் விஷயம் இருக்கும், ஆனா அப்பவும் தான் மத்தவங்களைப் பத்தி பேசி பொழுதை போக்கிட்டு இருக்காங்க.”
“இதெல்லாமா டைம் பாஸ்க்குப் பண்றது. ரொம்பக் கேவலமா இருக்கு.”
“அதெல்லாம் நாம யாரையும் சொல்லி திருத்த முடியாது நக்ஷத்ரா. அது நம்மோட வேலையும் இல்லை. நாம நம்ம குழந்தைகளுக்குப் புரிய வைப்போம். அது போதும் நமக்கு.”
“அப்போ நீங்க ஆதிராகிட்ட சொல்லப் போறீங்களா?”
“யாரோ சொல்லி தெரியறதுக்கு நாமன்னா பக்குவமா சொல்லுவோம்.”
“என்னால இது முடியாது யுகி. நாமதான் உலகம்னு நினைச்சிட்டு இருக்கவகிட்ட… நீ எங்களுக்குப் பிறக்கலைன்னு என்னால சொல்ல முடியாது.”
“எனக்கும் நக்ஷத்ரா சொல்றது தான் சரின்னு படுது. எதுக்கு டா இப்பவே குழந்தைகிட்ட சொல்லி அவளைக் கஷ்ட்டபடுத்தனும். அவ எப்படி எடுதுக்குவாளோ தெரியலையே.” என்றார் கிரிஜா கவலையாக…
யுகேந்திரனுக்கு இன்று கோர்ட் செல்லும் வேலை இல்லாததால்… அவன் வீட்டில் இருந்து தான், வழக்கிற்குத் தேவையான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தான்.
பிரசன்னாவுக்கு அழைத்து, தான் இன்று அலுவலகம் வரவில்லை என்று நக்ஷத்ரா சொல்லிவிட்டாள். அவள் மன நிலையை உணர்ந்து கிரிஜாவே மதிய சமளையலை பார்த்துக் கொண்டார்.,
மதிய உணவு அருந்த கூட அவள் எழுந்து வரவில்லை. அவளது அறைக்குச் சென்ற யுகேந்திரன், “நீ ஏன் இப்படி இருக்க? நான் இன்னைக்கே ஆதிராகிட்ட பேச போறது இல்ல… எனக்கே கொஞ்சம் டைம் வேணும். நீ இப்பவே உன்னை வருத்திக்காத.” என மனைவியைச் சமாதானம் செய்து உணவு உண்ண அழைத்து வந்தான். இப்போதைக்கு ஆதிராவிடம் சொல்லப்போவது இல்லை என்பது நக்ஷத்ராவுக்குப் பெரிய ஆறுதலாகவே இருந்தது. ஆனாலும் அவள் என்ன வேலை செய்தாலும் மனம் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தது.
அடுத்த வாரத்தில் தேர்வு இருந்ததால்…. ஆதி மதியமே பரிட்சை முடிந்து வந்துவிடுவான். ஆதிராவுக்கு முழு நேரம் வகுப்பு இருந்தது. மகனுக்குப் பரிட்சை என்பதால்…. நக்ஷத்ராவும் மதியத்திற்கு மேல் வீட்டில் தான் இருந்தாள். தேர்வு முடிந்த அன்று மதியம் ஆதி வந்து உணவு உண்டதும், நக்ஷத்ரா அலுவலகத்திற்குக் கிளம்ப… “அம்மா ப்ப்ளீஸ்… என்னோட பேசிட்டு இருங்க மா.” என்றான் ஆதி.
மகன் சொன்னதால் நக்ஷத்ராவும் அறையில் மகனோடு கட்டிலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்.
“அம்மா இப்போ எல்லாம் ஏன் நீங்க ரொம்ப டல்லா இருக்கீங்க. நீங்க ஏற்கனவே ஒல்லி, இதுல இப்போ இன்னும் இன்னும் ரொம்ப ஒல்லி ஆகிட்டீங்க” என்றான். ஆண் பிள்ளை என்பதாலோ என்னவோ ஆதிக்கு அப்பாவைவிட அம்மாவுடன் தான் ஒட்டுதல் அதிகம். நக்ஷத்ராவிடம் தான் அதிகம் பேசவும் செய்வான்.
”அதெல்லாம் ஒன்னும் இல்லை… நான் எப்போடா குண்டா இருந்தேன்.” என்றவள், “ஆதி நான் ஒன்னு கேட்பேன், நீ உண்மையைச் சொல்லணும். அன்னைக்கு விஷேஷத்துல நீ என்ன கேட்ட? உனக்கு என்னவோ தெரியும் அப்படித்தானே….”
“அந்தத் தியாகு தாத்தா எதோ உளறிட்டு இருந்தார். அப்பவே அவர் வாயில ஒரு குத்து விடனும் போலத்தான் இருந்தது. நல்லவேளை ஆதிரா அவர் பேசினது கேட்கலை.”
“குழந்தை எடுத்து வளக்கிறது எல்லாம் தனிப்பட்ட விஷயம் தான…. எதுக்கு மா நீங்க மத்தவங்களுக்குத் தெரியவிட்டீங்க. அதனால தான அவங்க எல்லாம் பேசுறாங்க.”
“ஆதி நீ நினைக்கிற மாதிரி இது மறைக்கிற விஷயம் இல்லை. அதோட குழந்தைகிறது குறிப்பா நம்ம நாட்டில் தம்பதிகளோட தனிப்பட்ட விஷயம் இல்லை. ஒரு குழந்தை இல்லைனா… வீட்ல இருக்கிறவங்க மட்டும் இல்லை… யாரோ போற வர்றவங்க எல்லாம் கேள்வி கேட்கிறதும், அட்வைஸ் பண்றதும் ஆரம்பிச்சுடுவாங்க. இதுல ஆண்களை விடப் பெண்களைத் தான் அதிகம் பாதிக்கபடுவாங்க அதுவும் அதிகம் பெண்களால தான். பெண்கள் எவ்வளவு படிச்சு இருந்தாலும், பெரிய வேலையில இருந்தாலும், குழந்தை இல்லைனா அவங்களையும் இந்தச் சமுகம் சும்மா விடாது. அதெல்லாம் ரொம்பக் கொடுமை.”
“என்னோட உடல்நிலைக்கு என்னைக் குழந்தை பெத்துக்க வேண்டாம்னு தான் முதல்ல டாக்டர் சொன்னாங்க. ஆனா நான் பிடிவாதமா உன்னைப் பெத்து எடுத்தேன். எனக்கு அடுத்துப் பெண் குழந்தை வேணும்னு ஆசையா இருந்துச்சு…. அப்போ என்னோட உடல்நிலையை நினைச்சு அதோட நாம பெத்துகிறது விடத் தத்து எடுக்கிறது, இது போலக் குழந்தை இல்லாதவங்களுக்கும் நம்மைப் பார்த்து குழந்தை தத்து எடுத்து வளர்க்கும் ஆசையைக் கொடுக்கும்னு நினைச்சு தான், நாங்க தத்து எடுத்ததை மறைக்கவும் இல்லை. ஆனா சில பேர் அதைப் பத்தியே பேசுறதும், அதையே விசாரிக்கிறதும் எங்களுக்குப் பிடிக்கலை. அதனால அப்படிபட்டவங்ககிட்ட இருந்து ஒதுங்க ஆரம்பிச்சோம். வீடு மாறினதும் கூட அதுக்காகத் தான்.”
“அதோட ஆதிராவோட மனநிலையை நினைச்சு நாங்க அதைப் பத்தி வெளிப்படையா பேசுறதும் இல்லை.”
“தத்து எடுத்த குழந்தைனாலும், ஆதிராவை நாங்க சொந்தக் குழந்தையா வளர்க்கிறதை பார்த்த பிறகும் ஏன் மத்தவங்க அதையே பத்தி பேசுறாங்கன்னு எனக்குப் புரியலை. குழந்தை எப்படி வேணா வந்திருக்கலாம், எப்படிக் குழந்தை வந்த போதிலும் அது எங்க குழந்தை தான்.”
“இன்னொன்னு எனக்காகத் தான், என்னோட ஆசைக்காக, என்னோட உடல்நிலைக்காகத் தத்து எடுத்திட்டு, இப்போ அதை வச்சு ஆதிராவை மத்தவங்க காயப்படுத்தினா என்னால அதைத் தாங்க முடியாது ஆதி. இது ஆதிராவுக்குத் தெரிஞ்சா அவ எப்படி எடுத்துப்பா? இந்த விஷயம் தெரிஞ்சு அவ மனசு ஒடிஞ்சு போனா… அதை என்னால தாங்க முடியாது.”
அதிகம் உடலிலும், மனதிலும் அடிபட்ட போதில் கூட நக்ஷத்ரா அழுதது இல்லை. யார் முன்பும் அழுவதும் அவளுக்குப் பிடிக்காது. ஆனால் இன்று மகனிடம் தன் நிலையைச் சொல்லி அழுகவும் செய்தாள்.
யுகேந்திரன் கோர்ட்டுக்கு சென்றிருந்தவன் அப்போது தான் வீட்டிற்கு வந்தான்.
அழுது சிவந்திருந்த மனைவியின் முகம் பார்த்தவன், “என்ன ஆச்சு?” என்றதும், “அவன் தியாகு பேசினதை கேட்டு தான் இருக்கான். அதுதான் பேசிட்டு இருந்தேன்.” என்றவள் மகனை அழைத்து, “உன்கிட்ட ஒன்னு கேட்கிறேன், நீ எங்களுக்காக இல்லாம உண்மையைச் சொல்லணும். நீ ஆதிரா இடத்துல இருந்தா எப்படிப் பீல் பண்ணுவ ஆதி.” எனக் கேட்டாள்.