“ஆம் அன்னையே. குழப்பம் தான். நான் இந்த தேசத்துக்கு தூதுவனாக வந்த போது தான் இளவரசியை முதலில் கண்டேன். அப்போது இளவரசி கழுத்தில் வாளை வைத்து கொண்டு மணந்தால் ராமனை போல ஒருவனை தான் மணப்பேன் என்று வீரமாக உரையாற்றி கொண்டிருந்தார்கள். எவன் ஒருவன் இளவரசியை மட்டுமே மணந்து கொண்டு வேற பெண்களை திரும்பி பார்க்காமல் இருக்கிறானோ அவனை மட்டுமே மணாளனாக அடைவேன் என்று கூறினார்கள். அப்போதே அவருடைய அழகில் தலை குப்புற விழுந்து விட்டேன்”

…..

“இளவரசியின் மதி முகம் என் மனதில் ஆழமாக பதிந்து போனது. முதல் பார்வையிலே காதல் கொண்டேன். தன்னுடைய கொள்கையை கூறும் போது நான் பார்த்த கம்பீரமும், தன் உயிரையே துச்சம் என நினைத்த வீரத்தையும் நான் இதுவரை எவரிடமும் கண்டதில்லை. அனைத்து மகாராணிகளுக்கும் பரிந்து பேசிய இளவரசியின் வீரத்துக்கு நான் அடிமையாகி போனேன். அறிவும், அழகும் கொண்ட கம்பீரமான இளவரசி மீது தீராத மையல் கொண்டேன்.”, என்று நிறுத்தினான்.

“ஐயோ இவன் எதற்காக இப்போது இதை எல்லாம் கூறுகிறான். அனைவரும் என்னை பற்றி என்ன நினைப்பார்கள்?”, என்று நடுங்கினாள் வான்மதி.

“ஒரு பெண்ணாக இளவரசி வான்மதி தேவியின் கொள்கையை நான் மதிக்கிறேன் நரேந்திரா. ஆனால் அரச வம்சத்தில் அது சாத்தியம் இல்லை. ஏன் உன் தந்தையையே எடுத்து கொள். பல ராணிகள் அந்த புரத்தில் இருக்கிறார்களே”, என்று அவரை தீ பார்வை பார்த்தாள் பாண்டிமா தேவி.

தன்னுடைய மானம் போவதை உணர்ந்த இந்திரவர்மருக்கு சினம் வந்தது. “இப்போது நீ என்ன கூற வருகிறாய் நரேந்திரா?”, என்று கோபமாக கேட்டார்.

“பொறுங்கள் தந்தையே, உரைக்கிறேன். அன்னையே தாங்கள் கூறிய படி அரச வாழ்க்கையில் அது சாத்தியம் இல்லை தான். ஆனால் இளவரசியின் கொள்கை இதுவே”

“ஆனால் உன்னால் அவ்வாறு இருக்க இயலாது மகனே. பின் எவ்வாறு வான்மதியின் கொள்கை நிறைவேறும்? உன்னை மட்டும் மணக்க அவள் எவ்வாறு சம்மதம் கூறினாள்?”, என்று கேட்டாள் பாண்டிமாதேவி.

“இதை தான் நான் கூற வந்தேன் அன்னையே. இங்கு இருக்கும் மக்கள் அனைவர் மனதில் இருக்கும் குழப்பம் இதுவே. அப்படி கம்பீரமாக கொள்கையை கூறிய இளவரசி என்னை மணக்க இருக்கும் காரணத்தை அனைவரும் அறிய வேண்டாமா?”

“ஆம் ஆம்”, என்ற கோஷங்கள் மக்களிடையே கேட்டது. வாசுதேவரும் ஆர்வமாக கவனித்தார்.

வான்மதியின் முகத்தில் நிம்மதி வந்திருந்தது. “என்னுடைய மரியாதையை காப்பாற்றி கொண்டிருக்கிறான் என் மணாளன்”, என்று கர்வத்துடன் நினைத்து கொண்டாள்.

“எனக்கும் அந்த ஐயம் இருந்தது இளவரசே. அவள் எனக்காக அல்லவா இந்த திருமணத்துக்கு சம்மதம் கூறினாள் என்று நினைத்தேனே?”, என்றார்  வாசுதேவர்.

“அவள் மனதில் காதலை வைத்து கொண்டு தான் சம்மதம் கூறினாள் என்று இந்த தந்தைக்கு கண்டறிய தெரிய வில்லையே. நான் கூறினால் என்னை சிறுவன் என்பார்கள். கள்ளி, நினைத்ததை சாதித்து விட்டாள்”, என்று நினைத்து கொண்டான் மேகவேந்தன்.

“இல்லை மகாராஜா. தங்களுடைய மகள் தங்கள் மீது வைத்திருக்கும் அன்புக்காக அவருடைய இன்னுயிரையே தருவார். ஆனால் திருமண விசயத்தில் அவருடைய கொள்கையை ஒருபோதும் விட்டு கொடுக்க மாட்டார்”, என்றான் நரேந்திரவர்மன்.

“பின் என்ன தான் நடந்தது. விரைவாக கூறு நரேந்திரா”, என்றார் இந்திரவர்மர்.

“நான் தூதுவனாக வந்த போது  நந்தவனத்தை சுற்றி பார்க்க சென்றேன். ஆனால் என்னை இளவரசன் என்று அறியாமல் நந்தவனத்துக்கு வேலியிட வந்தவன் என்று எண்ணி இளவரசி எனக்கு  நந்தவனத்தை சுற்றி காட்டினார்கள். அப்போது தான் அவர்களிடம் நான் வினவினேன். அரசர்கள் வாழ்வில் ஒரு மணம் என்பது சாத்தியமில்லையே என்று. அப்போது அவர்கள் மனதில் உள்ளதை எல்லாம் என்னிடம் உரைத்தார்கள். இளவரசிக்கு வரும் மணமகன் அவர்களை மட்டுமே காதலிக்க வேண்டும் என்றும் அவர்களை மட்டுமே ராணியாக எண்ண வேண்டும் என்றும் கூறினார்கள். அது மட்டும் அல்ல அப்படி பட்ட மணாளன் அரச குமாரனாக இல்லாமல் இருந்தாலும் சரி என்றார்கள். அதுவும் அல்லாமல், அப்படி அல்லாமல் அவர்களை மணந்த பின் வேறு பெண்ணை அவன் மணந்து கொண்டால் அன்று தான் அவர்களின் கடைசி நாள் என்றும் உரைத்தார்கள். அப்படி ஒருவன் கிடைக்க வில்லை என்றால் காலம் முழுவதும் கன்னியாக இருப்பேன் என்றும் உரைத்தார்கள்”

….

“அப்போது நான் அவர்களிடம் கூறினேன். உங்கள் கொள்கை எனக்கும் பிடித்திருக்கிறது இளவரசி. நானும் இனி அவ்வாறே இருப்பேன். நானும் ஒருத்தியை மட்டுமே மணந்து கொள்வேன் என்று கூறினேன். நான் அவ்வாறு கூறியதை நம்பி தான் மகாராஜா வாசுதேவச்சக்கரவர்த்தி திருமணத்தை பற்றி கூறியதும் நான் கூறியதை நிறைவேத்துவேன் என்று நம்பி திருமணத்துக்கு சம்மதம் கூறினார். இளவரசி எதனால் திருமணத்துக்கு சம்மதித்தார் என்ற காரணம் அனைவருக்கும் புரிந்ததா?”

“புரிந்தது மகனே. ஆனால் நீ ஏன் இளவரசியிடம் பொய் உரைத்தாய்? உன்னால் அவ்வாறு இருக்க முடியாது என்னும் போது இப்படி செய்யலாமா?”, என்று கேட்டாள் பாண்டிமாதேவி.

“இல்லை அன்னையே. என்னால் இயலும். நான் பொய் உரைக்கவில்லை. உண்மையாக தான் கூறினேன். எப்போது இளவரசியை முதல் முறை பார்த்தேனோ அவரே என்னுடைய ராணி என்று முடிவு செய்து விட்டேன். அதன் பின் அவர் கொள்கையை ஆதரிக்காமல் போவேனா?”

“காதல் மயக்கத்தில் பிதற்றுவது இயல்பு நரேந்திரா. ஆனால் வாழ்வது கடினம். இப்போதே அந்நிய தேசத்திடம் நமக்கு பகை ஏற்பட்டால் அதை திருமண உறவு மூலம் சரி செய்ய வாய்ப்பு வரும். கந்த தேசத்தின் இளவரசி வான்மதி தேவி உன்னுடைய காதல் சாம்ராஜ்யத்தின் ராணியாக இருக்கலாம். ஏன் நம் மேலை தேசத்தின் மகாராணியாக கூட இருக்கலாம். ஆனால் உன் அந்த புரத்தில் அவள் மட்டுமே ராணியாக இருக்க இயலாது. நானாகட்டும் வாசுதேவராகரட்டும் முதல் முறை திருமணம் புரியும் போது ஒரு மனைவி மட்டுமே என்று தான் எண்ணி இருந்தோம். ஆனால் அதன் பின் நடைமுறை வாழ்க்கை எங்களை மாற்றி விட்டது. இளவரசியின் கொள்கையை உன்னால்  ஒருக்காலும் நிறைவேற்ற முடியாது. அந்த கொள்கையை கடை பிடிக்கும் இளவரசி அந்த கொள்கையை விட்டு கொடுக்கவில்லை என்றால் ஒரு போதும் உன்னை மணம் முடிக்க இயலாது”, என்றார் மகாராஜா இந்திரவர்மர். அதில் வான்மதியின் முகம் கூம்பி போனது.

“இல்லை தந்தையே. என்னால் இயலும். என் காதல் சாம்ராஜ்யத்திலும் சரி, என்னுடைய அரியணையிலும் சரி, என் அந்த புரத்திலும் சரி, என் வான்மதி மட்டுமே ராணியாக இருப்பாள். இது அந்த இறைவன் மீது ஆணை. இங்கு கூடி இருக்கும் மக்கள், எங்கள் பெற்றோர், உறவினர்கள் இருக்கும் இந்த அவையில் இளவரசிக்கு நான் வாக்களிக்கிறேன். எந்த சூழ்நிலையிலும் என்னால் வேறு ஒரு பெண்ணை நினைக்க இயலாது. அரசியல் காரணங்களுக்காக கூட வேறொரு பெண்ணை மணக்க மாட்டேன். இந்த ஜென்மத்தில் இளவரசி வான்மதி மட்டுமே என் மனைவி. அப்படி வேறு பெண்ணை மணந்தால் தான் எனக்கு அரியணை கிடைக்கும் என்றால் அந்த அரியணையும் வேண்டாம். அவளை வஞ்சித்து வேறொரு பெண்ணுடன் வாழும் இந்த வாழ்க்கையும் வேண்டாம். என் உயிரையே துறந்து விடுவேன். வான்மதிக்கு அவள் விரும்பிய ராமனாகவே நான் இருப்பேன். அவளே என் சீதை. அந்த ராமனை விட பல மடங்கு நான் என் வான்மதியை நேசிப்பேன். இது அனைவர் முன்னிலையிலும் அவளுக்கு இந்த நரேந்திரவர்மன் அளிக்கும் வாக்கு”

….

“இளவரசி வான்மதி ஒரு பொக்கிஷம். அவள் காதலை அடைய நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அனைவருக்கும் இறங்கும் காருண்யம் கொண்டவள். அழகே வடிவானவள். அவளுக்காக நான் சிம்மாசனத்தை கூட இழப்பேன் தந்தையே. இது நான் காதல் மயக்கத்தில் உரைக்க வில்லை. தோல் சுருங்கி வயோதிகம் வந்தாலும் அவளை மட்டுமே நேசிப்பேன். அனைத்து ராஜாக்களிடம் இருந்து நான் மட்டுமே வேறு பட்டு தெரிய நினைக்கிறேன். அந்த ராமன் சீதையை  போற்றும் இந்த உலகம் இனி இந்த நரேந்திரவர்மனையும், வான்மதியையும் போற்றட்டும். இதுவே என் முடிவு. இனி தட்டை மாற்றி கொள்ளலாம்”, என்று முடித்தான்.

ஒரு நிமிடம் அங்கே அமைதி நிலவியது. வான்மதியின் கண்களில் இருந்து ஆனந்தத்தில் கண்ணீர் வழிந்தது.

வாசுதேவச்சக்கரவர்த்திக்கும், இந்திரவர்மருக்கும் இது எப்படி சாத்தியம் என்று நினைத்து வியப்பாக இருந்தது. தன்னுடைய மகனை நினைத்து பூரித்து போனாள் பாண்டிமாதேவி.

பெண்ணாக பிறந்து அந்த நாட்டின் மகாராணியாக வாழ்ந்தாலும் தனக்கு கிடைக்காத வாழ்க்கை தன்  மகளுக்கு கிடைக்க போகிறது என்று மகிழ்ச்சியாக வான்மதியின் தலையை வருடி விட்டாள் அருந்ததி தேவி.

தமக்கையின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி மேகவேந்தனுக்கு வியப்பை கொடுத்தது. காதல் எவ்வளவு பெரியது என்று நினைத்து கொண்டு “நானும் இளவரசர் நரேந்திரவர்மன் போலவே என் வாழ்க்கையை அமைத்து கொள்வேன்”, என்று உள்ளுக்குள்ளே எண்ணி கொண்டான்.

“ஒரு அரச குமாரனாக இருந்து கொண்டு ஒரு பெண்ணை இந்த அளவுக்கு நேசிக்க முடியுமா?”, என்று நினைத்து வியந்து பார்த்தாள் சாந்தா. “இந்த காதல் தனக்கு இல்லையே”, என்று வருத்தமாக இருந்தது அவளுக்கு.