அத்தியாயம் 14

இதமான மெல்லிசையிலும்

மிதமான இன்னிசையாக

உந்தன் நினைவு!!!

 

“அப்படியே செய்கிறேன் அண்ணா”, என்று கூறி விட்டு சென்று விட்டான் வல்லவரையன்.

“தாங்கள் செய்வது தவறு என்று எப்போது உணர போகிறீர்கள் மகாராஜா?”, என்று கேட்டாள் வசுமதி.

“இந்த விசயத்தில் நீ தேவை இல்லாமல் கருத்து கூற அவசியம் இல்லை வசுமதி. புரிந்ததா உனக்கு?”

“புரிகிறது”, என்று முறைப்புடன் அவளும் கூறி விட்டு சென்று விட்டாள்.

வான்மதியை காண அனைத்து மக்களும் கிளம்பி விட்டார்கள். மகாராணி மற்றும் மகாராஜா ரதத்தில் ஏறி கொண்டார்கள்.

நரேந்திரவர்மனை யானை மீது அமர சொன்ன வராக சித்தரிடம் “அதில் அமர்ந்தால் என் வான்மதியை தங்கள் வயதில் தான் காண முடியும் தந்தையே”, என்று புன்னகையுடன் கூறி மறுத்து விட்டான் நரேந்திரவர்மன்.

அதன் பின் அவனுடைய வர்மனின் மீது அமர்ந்து கொண்டான். மாப்பிள்ளை தோழனாக மற்றொரு புரவியில் வந்தான் சுதமன். அவன் கண்கள் அடிக்கடி பின்னால் திரும்பி எங்கோ பார்த்தது.

அங்கே பல பெண்கள் பட்டாடை அணிந்து கையில் தாம்பூல தட்டுக்களோடு மற்றொரு ரதத்தில் அமர்ந்திருந்தார்கள்.

அதில் ஒரு தட்டை வைத்து கொண்டு விசாலத்துடன் அமர்ந்திருந்தாள் சாந்தா.  சாந்தாவின் முகத்தில் இருந்த வருத்தத்தை கண்ட சுதமனுக்கு அவளை நெஞ்சில் சாய்த்து ஆறுதல் சொல்ல தோன்றியது. அது நடக்க முடியாதது என்று தெரியுமாதலால் ஒரு பெருமூச்சு வந்தது அவனிடத்தில்.

அனைவரும் வாசுதேவச்சக்கரவர்த்தியின் அரண்மனைக்குள் பிரவேசித்தார்கள். அவர்களை இன்முகத்துடன் வரவேற்றார்கள் வாசுதேவரும், அருந்ததியும்.

அங்குள்ள மக்களும் தங்கள் இளவரசியை காண குவிந்து விட்டார்கள்.

மனம் முழுக்க பூரிப்புடன் அமர்ந்திருந்தாள்  வான்மதி. அவளுடைய மணாளனை இன்று காண போகிறாள் அல்லவா?

அனைவரும் மரியாதையுடன் ஆசனத்தில் அமர வைக்க பட்டார்கள். நொடிக்கொருதரம் தலையை ஆங்காங்கே திருப்பி திருப்பி வான்மதியை தேடினான் நரேந்திரவர்மன்.

“கவலையை விடு நண்பா. இன்னும் சில நாட்களில் இளவரசியை உனக்கே கொடுத்து விடுவார்கள். இப்படி பார்வையை அலைய விட்டாயானால் மாப்பிள்ளைக்கு தலையில் ஏதோ கோளாறு என்று முடிவு எடுத்து விடுவார்கள்”, என்று கேலி செய்தான் சுதமன்.

“என் அவஸ்தை உனக்கு எங்கே புரிய போகிறது சுதமன்? உன் காதலியை காண முடியாமல் இருந்தால் என் தவிப்பு புரியும்”, என்றான் நரேந்திரவர்மன்.

“என் காதலியை கண் முன்னால் வைத்து கொண்டும் நான் துடித்து கொண்டு தானே இருக்கிறேன்?”, என்று நினைத்து கொண்டு சாந்தாவை பார்த்தான் சுதமன்.

அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளுடைய மனக்கவலை புரிந்தது. ஆனால் விதி…

சாந்தாவின் கவலையை விசாலமும் கவனித்து கொண்டு தான் இருந்தாள். அது அவளுக்கு பெரும் கவலையை அளித்தது. “தன்னுடைய தோழி வான்மதி சந்தோசமாக வாழ வேண்டும். ஆனால் இந்த சாந்தாவின் பொறாமை இளவரசியை நன்றாக வாழ விடுமா?”, என்று மனதுக்குள் யோசித்து கொண்டே இளவரசியிடம் தனியே பேசுவதற்காக காத்திருந்தாள்.

“எங்கள் நாட்டுக்கு வரவிருக்கும் இளவரசியை நாங்கள் எப்போது காண்பது?”, என்று பேச்சை ஆரம்பித்தார் இந்திரவர்மர்.

“வான்மதிக்கு அலங்காரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன மகாராஜா. இப்போது வந்து விடுவாள். ஆனால் அதற்கு முன்பு தங்களிடம் நான் ஒரு உண்மை உரைக்க வேண்டும்”, என்றார் வாசுதேவச்சக்கரவர்த்தி.

புருவம் உயர்த்திய இந்திரவர்மர் “கூறுங்கள் வாசுதேவரே. என்ன உண்மை?”, என்று கேட்டார்.

“என் மகளுடன் இளவரசர் சிறிது நேரம் தனித்து பேசுவது நல்லது என்று என் மனதுக்கு படுகிறது”

“எதனால் இவ்வாறு கூறுகிறீர்கள் வாசுதேவரே?”

“இல்லை, அது என்னவென்றால் வான்மதி மற்ற பெண்களை போல அல்ல. அவள் வித்தியாசமான குணங்களை கொண்டவள். இருவர் மனமும் ஒத்து போக வேண்டும். இளவரசரே அவளிடம் பேசி விட்டால் என் மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்”

அவர் கூறியதை கேட்டு நரேந்திரவர்மன் மனம் துள்ளியது. உடலிலும் மனதிலும் ஒரு பரபரப்பு தொற்றி கொண்டது. அதை பார்த்த இந்திரவர்மர் “நீங்கள் என்ன காரணத்துக்காக இவ்வாறு உரைக்கிறீர்கள் என்று என்னால் கணிக்க முடியவில்லை வாசுதேவரே. ஆனால் ஏதோ காரணம் இருக்கிறது என்று மட்டும் புரிகிறது. என் மகன் முகத்திலும் இளவரசியை காண ஆர்வம் பொங்குகிறது. அதனால் நான் நரேந்திரவர்மன் இளவரசியுடன் உரையாட சம்மதிக்கிறேன். போய் வா நரேந்திரா”, என்றார்.

முகத்தில் புன்முறுவலோடு எழுந்து நின்றான் நரேந்திரவர்மன்.

“வாருங்கள் இளவரசே. நானே அழைத்து செல்கிறேன்”, என்று எழுந்தார் வாசுதேவர்.

“அவர் தன்னிடம் எதையோ கூற விழைகிறார்”, என்று நினைத்த நரேந்திரவர்மனும் அவர் பின்னே சென்றான்.

சிறிது தூரம் சென்றதும் “தாங்கள் என்னிடம் என்ன கூற விழைகிறீர்கள் மகாராஜா?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.

அவனுடைய புத்தி கூர்மையை நினைத்து வியந்தவர்  “இளவரசே, தாங்கள் என் மகளை மணமுடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விசயம் தான். ஆனால் தாங்கள் இங்கே முதல் நாள் வந்த போது என் மகள் உரைத்ததை கேட்டீர்கள்  தானே? கழுத்தில் வாளை வைத்து உயிர் விட துணிந்தவள். இன்று என்னுடைய மகிழ்ச்சிக்காக திருமணத்துக்கு சம்மதம் கூறி இருக்கிறாள். ஆனால் அதன் பின் களை இழந்து இருக்கிறாள். அதை பற்றி தான் தாங்கள் அவளிடம் கூற வேண்டும். மன்னர்கள் பல மணம் புரிவது சாதாரண விசயம் என்று அவளுக்கு புரிய வையுங்கள். இதோ இந்த பக்கம் சென்றால் அவளை காணலாம். தாங்கள் செல்லுங்கள். நான் போகிறேன்”, என்று சென்று விட்டார்.

“தங்களுடைய மகிழ்ச்சிக்காக திருமணத்துக்கு சம்மதிக்க வான்மதி ஒன்றும் சாதாரண பெண் இல்லை மகாராஜா. அவள் தன்னுடைய காதலுக்காக மட்டுமே திருமணத்துக்கு சம்மதித்திருக்கிறாள். அவளுடைய வெட்கத்தை தான் தாங்கள் சோகம் என்று தவறாக நினைத்து விட்டீர்கள்”, என்று எண்ணி கொண்டவன் அவர் சொன்ன திசையில் நடந்தான்.

ஒரு அறையின் முன் மூன்று பணி பெண்கள் நின்றிருந்தார்கள். அது தான் வான்மதியின் அறை என்று யூகித்தவன் அதன் முன்பு போய் நின்றான்.

இவனை பார்த்ததும் “வணங்குகிறோம் இளவரசே”, என்றார்கள் அவர்கள்.

“நான் இளவரசியை காண வேண்டும். மகாராஜா தான் என்னை இங்கு அழைத்து வந்தார். வான்மதி எங்கே?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.

“நீராடி முடித்த பின்னர், நானே உடை மாற்றி கொள்கிறேன் என்று கூறி உள்ளே சென்ற இளவரசி இன்னும் வெளியே வர வில்லை. அவர்கள் வரவுக்காக தான் காத்திருக்கிறோம் இளவரசே”, என்றாள் ஒருத்தி.

“அப்படியா? சரி. நான் அவளிடம் சிறிது பேசி விட்டு பின் சபைக்கு அழைத்து செல்கிறேன். நீங்கள் உங்கள் வேலையை கவனிக்கலாம்”, என்று சொல்லி விட்டு அவளுடைய அறை கதவை தள்ளினான்.

அது திறந்ததும் உள்ளே கால் எடுத்து வைத்தவன் பின் கதவை மூடி விட்டான். பணி பெண்களும் ஒருவர் முகத்தை பார்த்து ஒருவர் சிரித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள்.

உள்ளே சென்றவன் அந்த அறையை பார்வை இட்டான். அவளை மட்டும் காண வில்லை. மேலும் இரண்டடி நடந்து உள்ளே சென்றவன் கண்ட காட்சியில் அப்படியே பிரமித்து விட்டான்.

அங்கே தலையை விரித்து போட்டு, இடையில் ஒரு வெண்மை நிற துணியையும், மார்பில் அதே துணியையும் அமர்ந்து கொண்டு கந்தர்வ கன்னி போல் அமர்ந்திருந்தாள்.

மேலாடை கூட அணியாமல் உள்ளாடையோடு அவள் அமர்ந்திருந்த தோற்றத்தில் மொத்தமாய் கவிழ்ந்து போனான் நரேந்திரவர்மன். அவன் கால்கள் அவளை நெருங்கியது.

அவன் வந்ததை கூட அறியாமல் கனவில் சஞ்சரித்திருந்தாள் அவள்.

அவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான் நரேந்திரவர்மன். அவள் தலையில் இருந்து ஈரம் வடிந்து அவளுடைய பஞ்சணையை நனைத்தது. முகத்தில் ஆங்காங்கே நீர் முத்துக்கள் நின்றன.

அதை தன்னுடைய உதட்டால் பருக துடித்தான். மெதுவாக அவனுடைய பார்வை அவனுடைய சிவந்த உதட்டை அணுகியது. ஏற்கனவே அதனுடைய மென்மையை பரிசோதித்த பொழுதுகள் இப்போது நினைவில் வந்தது. அந்த மென்மை வேண்டும் என்று மனது ஏங்கியது.

கழுத்தில் ஒரு ஆபரணம் கூட இடையூறாக இல்லாமல் அவளுடைய சங்கு கழுத்து வழு வழுவென்று காட்சி அளித்தது.

இன்னும் பார்வையை கீழே இறங்கியவன் அவள் மார்பையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.

அந்த சிறிய வெண்ணிற துணி அவளுடைய அழகை எப்படி மறைத்தது என்று சந்தேகம்  தோன்றியது அவனுக்கு. அதுவும் கொஞ்சம் கீழேயிறங்கி இருந்தது. “இன்னும் கொஞ்சம் இறங்கி எனக்கு தரிசனம் கொடுக்க கூடாதா?”, என்று அவனை எண்ண வைத்தது.

“எனக்கு இவளை பார்த்தாலே பித்தம் தலைக்கேறி கிறுக்கு பிடித்து விடுகிறது. அங்கு அனைவரும் எங்களுக்காக காத்து கொண்டிருக்கிறார்கள். நான் இங்கே என்ன வேலை செய்து கொண்டிருக்கிறேன்?”, என்று நினைத்து கொண்டு “எவ்வளவு நேரம் தான் என்னை பற்றிய கனவிலே நீ இருப்பாய் தேவி?”, என்று அவளிடம் கேட்டான்.

அவன் குரலில் நிகழ்காலத்துக்கு வந்தவள் எதிரே இருந்தவனை பார்த்து அதிர்ந்தாள்.

“தாங்கள் எப்போது, எப்படி இங்கே வந்தீர்கள்? இது கனவா நினைவா என்று தெரிய வில்லையே?”, என்று கூறி கொண்டே ஆனந்தமாக அவனையே பார்த்தாள்.

“இப்படி ஒரு தோற்றத்தில் கண் முன் இருக்கும் உன்னை காண கனவில் வந்து என்ன பயன்? உண்மையாக வந்தால் தானே உன்னுடைய அழகை இப்படி பருக முடிந்தது”, என்று புன்னகைத்தான் அவன்.