ஈசன் “அஹ.. வழிதான் தவறு.. சேர்ந்த இடம் சரிதான். அதில் எந்த தவறும் இல்லை.” என தன் இடது கையை உதறியவன் “ம்.. இது என் வீடும் தான். உங்களுக்கு இருக்கிற அதே உரிமை எனக்கும் இருக்கு.” என கண்களால் அவரிடம் சண்டையிட்டவன். உடனே சமாதனமான குரலில்
“அதைவிடுங்க, என்னையும் கிருபாவையும் பற்றிய முடிவு உங்களுடையதுதான். அவள்.. என்கிட்டே அதைதான் கேட்டாள். இன்னும் யோசிங்க.. பார்த்து, நல்ல முடிவாக சொல்லுங்க.. நீங்க இல்லைன்னா.. எதுவுமே நடக்காது.” என தலையை கோதிக் கொண்டவன் தன் வாட்ச் பார்த்து “லேட் ஆகிடுச்சு.. நான் கிளம்பறேங்க” என அவரின் கண்களை பார்த்து சொன்னவன்.. “நீங்க டைம் எடுத்துக்கோங்க.. ஒன் இயர் இருக்கு. பொறுமையாக யோசிச்சி சொல்லிடுங்க.. சரின்னு. இல்லைன்னா, முடிவு நானே.. ஆரம்பத்தில் எடுத்தது போல எடுத்திடுவேன். எனக்கு நல்ல முடிவாக நீங்களே சொல்லிடுங்க.. என்னை மீண்டும் கெட்டவன் ஆக்கிடாதீங்க.. அஹ.. பை..” என்றான் அவரை பார்த்து கை அசைத்தான்..  உதடுகளில் நக்கல் சிரிப்பும்.. கண்களில் அழுத்தமுமாக விடைபெற்றான் அவரிடம் ஈசன். 

சண்முகம் அவனின் பேச்சில் மீண்டும் கடுப்பானார். முன்னுக்கு பின் முரணாகவேதான் இருப்பானா இவன்.. என முதல்முறை யோசனை அவருள். அவரின் நெற்றி மீண்டும் சுருங்கியது.

ஆனால், அதை கண்டுகொள்ள ஈசன் இல்லை அங்கே.

கிருபாவிற்கும் சஹாவிற்கும் புன்னகை முகத்தில். கிருபா ‘இர்ரீட்டெட்டீங் பெல்லோ டா நீ..’ மனதுள் சொல்லிக் கொண்டாள் பெண்.

ஈசன் தாத்தாவின் அருகே வந்திருந்தான் “தாத்தா பாட்டி கிளம்பறேன், டைம் எக்கச்செக்கமா ஆச்சு..” என்றவன், கோகிலாவிடம் “அத்தை.. போனில் நிறைய பேசறேன்.. ஏதாவது தவறாக நடந்திருந்தால் சாரி” என சொல்லி.. அவரின் காலில் விழுந்தான்.

கோகிலா அவனின் உச்சி வருடி “அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல ஈசா. நல்லா இருப்பா.. உன் அப்பாவும் அம்மாவும் நல்லதையே செய்வாங்க” என்றார் வாழ்தாக.

கிருபாவிடம் எப்படி பேசுவது என தெரியாமல் “வரேன் கிருபா.. எல்லோரையும் நல்லா பார்த்துக்கோ எப்போதும் போல.. நீயும் உன்னை பார்த்துக்க” என சொல்லி.. “பை..” என விடைபெற்றான்.

கிருபா ஆனந்தமாகவே தலையசைத்து.. விடைகொடுத்தாள் கண்களால்.

சஹாவும் ஈசனும் காரில் பெங்களூரு கிளம்பினர்.

சண்முகம் தன் அறைக்கு சென்றுவிட்டார் போல.. பட்டாசாலையில் அவரை காணோம்.

சற்று நேரம் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். மதியம் உண்பதற்கு, சண்முகத்தை கிருபா அழைக்க சென்றாள்.. ஷண்முகம் எதோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் லேப்டாப்பில். கிருபாவின் சத்தம் கேட்டதும்.. நிமிர்ந்து பார்த்தார்.. கிருபா “மாமா சாப்பிடலாம் வாங்க மாமா” என்றாள்.

சண்முகம் ஏதும் சொல்லாமல் மீண்டும் தன் வேலையை தொடர்ந்தார்.

கிருபா “மாமா..” என அழைக்க..

ஷண்முகம் “நீ போ, நான் வரேன்” என்றார். நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

கிருபா “மாமா.. அது.. மாமா” என தொடங்க..

சண்முகம் “எனக்கு முக்கியமான வேலை இருக்கு, நீ போ” என்றுவிட்டார் கோவமான குரலில்.

கிருபாவும் ஏதும் பேச முடியாமல் வந்துவிட்டாள்.

தாத்தா பாட்டி என எல்லோரும் சண்முகத்தின் வரவிற்காக காத்திருந்தனர். சண்முகமும் வந்தார்.. கோகிலா பரிமாற.. அமைதியாக எல்லோரும் உண்டனர்.

சண்முகத்தின் முகத்தில் ஒரு இறுக்கம்.. யாரும் அவரிடம் பேச முற்படவில்லை.

கிருபாவும், ஏதும் பேசாமல் உண்டு.. கடைக்கு கிளம்பிவிட்டாள்.

இரவு ஷண்முகம் சென்னை கிளம்பிவிட்டார். யாரிடமும் பேசவில்லை.. பொதுவாக சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டார்.

கிருபாவிற்கு சங்கடம்.

வீட்டில் எல்லோருக்கும் சங்கடமாகி போனது. ஈசன் கிருபாவை பற்றி பேச தோன்றவில்லை யாருக்கும். சந்தோஷமான நிகழ்வாக அமைய வேண்டியது.. சங்கடத்தில் நின்றது.

கிருபாவின் முகம்தான் வாடியே இருந்தது.. அவளுக்கு ஈசன் தூரத்தில் இருக்கிறான் என்ற கவலையே இல்லை இப்போது. மாமா பேசவில்லை என்ற கவலைதான் அதிகமாகியது. 

ஈசனிடம் சண்டையிட்டாள் “நீங்கதான் அவரை முறைச்சிட்டே இருந்தீங்களே, அதான் என்கூடவும் பேசமாட்டேன்கிறார்” என

ஈசனோ “பார்த்துக்கோம்மா.. நான் பொறுப்பல்ல.. மன்னிபெல்லாம் கேட்டிருக்கேன். தாத்தாகிட்ட கூட கேட்டதில்லை.. நீ பார்த்த பார்வைக்கே மன்னிப்பு கேட்டிருக்கேன். என்மேல எந்த தப்பும் சொல்ல கூடாது” என அவனும் நல்லவானாகவே சொன்னான்.

பாவம் கிருபாதான்.

நான்கு நாட்களுக்கு ஒருமுறை ஷண்முகத்திற்கு அழைத்தாள் பெண், அவரோ அவளின் அழைப்பை ஏற்கவில்லை.

மீனாட்சி கூட கிருபாவின் அழைப்பை ஏற்கவில்லை.

மீனாட்சி கோகிலாவிடம் தன் அத்தையிடம் பேசுகிறார், ஆனால், கிருபாவிடம் பேசவில்லை. பட்டென பேசிவிட்டால் தீர்ந்திடுமோ என்னமோ.. கோவங்கள் வருத்தங்கள் எல்லாம்.. இப்படி அமைதியாக இருக்க இருக்க.. வளருகிறது கசப்புகள். 

நாட்கள் நத்தையென கடந்தது.

மூன்று மாதங்கள் கடந்திருந்தது.. 

சம்பூர்ணாவிற்கு பனிரெண்டாம் வகுப்பு பரிட்சை. அதைத்தொட்டு.. கிருபா சம்முவிற்கு அழைத்து பேசியிருந்தாள். கிருபாவிடம் நல்லவிதமாக் பேசி வைத்தாள்.

ஈசனும் முன்போல தினமும் பேசுவதில்லை. வேலை நிறைய இருந்தால்.. அவ்வபோது பேசினான். கிருபாவிற்கு, நாட்களை கடத்துவது சிரமமாக இருந்தது.

சஹா ஊர் வந்திருந்தாள், இந்த வார இறுதியில். கொஞ்சம் வீட்டில் பேச்சு சத்தம் கேட்டது. சஹாவும் கிருபாவும் வெளியே சென்று  வந்தனர். கிருபா சற்று புன்னகைத்தாள். இரண்டு நாட்கள் நன்றாகவே  பொழுது சென்றது கிருபாவிற்கு.

சஹா, கிருபா என அழைத்து பழகியிருந்தாள் இந்த நாட்களில். அண்ணி என்தான் அழைத்தாள். கிருபாதான் ‘வேண்டாம் சஹா.. மாமா கேட்டால்.. கோவப்படுவார். அவர் கொஞ்சம் சாந்தம் ஆகுவரை.. இதெல்லாம் வேண்டாம் சஹா’ என்றிருந்தாள்.

சஹா அதனால் கிருபா என அழைத்து பேச பழகியிருந்தாள்.. “கிருபா, பெங்களுர் வாங்க. நம்ம வீட்டில் இருந்து.. கொஞ்சநாள் சுற்றி பார்க்கலாம். வாங்க கிருபா” என அழைப்பு விடுத்தாள்.

தாத்தா பாட்டி இருவரும் “போயிட்டுத்தான் வா கிருபா.. அம்மா இங்கதானே இருக்கா என்னை பார்த்ததுக்கு வா” என்றனர்.

கிருபா “ம்.. போலாம் பாட்டி” என சொல்லி முடித்துக் கொண்டாள்.

சஹா “கண்டிப்பா வரணும்.. ம்.. அடுத்த மாசம் நான் வருவேன் இங்கே.. நீங்களும் என் கூட வரணும் கிருபா” என்றாள் அதட்டலாக.

சஹா இரவு சென்னை கிளம்ப இருப்பதால்.. மாலையில் கோகிலா பொடி வகைகளை கொடுத்துக் கொண்டிருந்தார்.

கிருபா அங்கேய அமர்ந்து.. அவளின் பேக்கிங்க்கு உதவிக் கொண்டிருந்தாள்.

தாத்தா “சஹானா.. நான் உனக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்ன்னு இருக்கேன். நீ என்ன சொல்ற” என்றார்.

சஹா, தடுமாறினாள் ஆனந்தமாக.. “நான் என்ன சொல்றது தாத்தா. எனக்கு தெரியலை. அண்ணனை கேட்கனும்” என்றாள்.

தாத்தா “உன் அண்ணன்தான் சொன்னான். சீக்கிரம் உனக்கு கல்யாணம் செய்திடனுமாம். அவன் வரும் போது.. கல்யாண தேதி தெரியணும்ன்னு நினைக்கிறான். சொல்லு.. உனக்கு எப்படி மாப்பிள்ளை பார்க்க.” என்றார்.

கிருபா “தாத்தா, அவளுக்கு அவளை மாதிரியே வேளையில் இருக்கிறவங்கதான் வேணும். மோஸ்ட்லி ஃபாரின் மாப்பிள்ளையை எதிர்பார்க்குறா” என்றாள்.

சஹா “அக்கா..” என்றாள்.. பழக்க தோஷத்தில்.

சஹா “தாத்தா.. இவங்க கல்யாணத்திற்கு அப்புறம்தான் எனக்கு” என்றாள்.

தாத்தா “இல்ல டா.. உன் கல்யாணம் மூலமாகத்தான் இவர்களுக்கு நடக்கும். ம்.. எல்லாம் காரணமாகத்தான் சொல்றேன். உன் பெரியப்பனை வழிக்கு கொண்டு வரணுமே..” என்றார் சந்தோஷமாக.

சஹா “பெரியப்பா வழிக்கு வந்திடுவார்ன்னா.. எனக்கு ஓகேதான் தாத்தா.” என்றாள்.

பாட்டி “அடி ராஜாத்தி, கல்யாண கலை இப்போவே தெரியுது. கிருபா கல்யாணம் எப்போன்னு பார்த்திருந்தேன்.. உன்மூலமாக அவளுக்கு நல்லது நடந்தால் சரிதான். சீக்கிரமாக உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம்” என்றார் சந்தோஷமாக.

பேச்சுகள் தொடர்ந்தது.

இரவு சஹா ஊருக்கு கிளம்பினாள்.