அத்தியாயம் 3

“சிம்மா சிம்மா” என அழைத்துக் கொண்டே பூசாரி நட்சத்திரா இருக்கும் அறைக்குள் வந்தார். எல்லாரும் அவரை பார்க்க, அவள் எழுந்து அமர்ந்தாள்.

சிம்மா அவள் செயினை பார்க்க, பூசாரி அவளிடம் வந்து மந்திரம் ஒன்றை ஜெபித்துக் கொண்டு அதை தொட்டார். அவர் கண்கள் விரிந்தது. அவரது முகப்பாவனையில் அனைவரும் பயத்துடன் பார்த்தனர்.

“என்னாச்சு பூசாரி அய்யா?” பரிதி கேட்டார்.

பூசாரி எல்லாரையும் பார்த்து விட்டு நட்சத்திராவை பார்த்து, அம்மா ஏதோ பெரிய பிரச்சனைன்னு நினைக்கிறேன் என்று அவளை பார்த்து விட்டு, இது சாதாரண இலை அன்று. என் அப்பன் ஈசன் உடலில் அணிந்திருந்த வில்வஇலை.

“பார்த்து இரும்மா” என்று சிம்மா கழுத்தில் இருக்கும் ருத்ராட்சத்தை பார்த்து, மந்திரம் ஓதிக் கொண்டே அவன் ருத்ராட்சத்தை தொட்டார். சட்டென கையை எடுத்து சிம்மாவை பார்த்தாள்.

“என்னாச்சி அய்யா?” அன்னம் கேட்க, உன்னோட மகனுடைய இந்த ருத்ராட்சமும் என் அய்யனுடையதே!

“எப்படி அய்யா?” பரிதி கேட்க, எனக்கும் புரியவில்லை. ஆனால் வேறு யாரிடமும் இது போல் இல்லை. குறிப்பிட்டு ஈசன் இவர்கள் இருவரையும் எதற்காகவோ தேர்ந்தெடுத்தது போல் இருக்கே? என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க, “மிரு எங்க இருக்க? என்ன செஞ்சுட்டு இருக்க?” என்று சத்தமிட்டுக் கொண்டு சுபிதன் வந்தான்.

“ஷ்..எதுக்குடா சத்தம் போடுற?” என்று அவன் கை கோர்த்து, சாமி எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க என்று அவர் காலில் விழுந்தாள் மிருளாலினி. சுபி என்று அவனை இழுத்தாள். அவனை பார்த்த பூசாரியோ இருவரையும் பார்த்துக் கொண்டே அவர் கையை மிருளாலினி தலையில் வைத்தார். இருவரும் எழுந்தனர். பரிதியும் சிம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

“ஏங்க வாங்க..” என்று அன்னமும் பரிதியும் அவர் காலில் விழ, புன்னகையுடன் இருவருக்கும் ஆசி வழங்கினார்.

“ஏன் இவர் சுபிக்கு ஆசி வழங்கவில்லை?” என்று சிம்மா மனதினுள் எண்ணினான்.

சிம்மா, “எதற்கும் கவனமா இரு” அவர் சொல்ல, ம்ம் என்று அவனும் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றான்.

அம்மா, “நீ வருத்தப்படாத. எல்லாம் நல்லதாகவே நடக்கும். இருவரும் கழுத்தில் இருப்பதை அவிழ்க்க முயல வேண்டாம்” என்று அவர் சுபிதனை பார்த்துக் கொண்டே சென்றார்.

மிரு, வா போகலாம். எனக்கு தூக்கம் வருது என மிருளாலினியை அழைத்தான் சுபிதன்.

சரி, எல்லாரும் தூங்க போங்க. “நான் வாரேன்” என்று அன்னம் நட்சத்திராவிடம் அமர்ந்தார். அவளோ சிம்மாவை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் பூசாரி சொன்னது, சுபியை அவர் பார்த்த விதம் அனைத்தையும் யோசித்துக் கொண்டிருந்தான்.

நட்சத்திரா சிம்மாவை பார்ப்பதை கவனித்த அன்னம், தன் மகனை பார்த்தார். அவன் யோசனையுடன் நின்றான்.

சிம்மா, வீட்டுக்கு போன்னு சொன்னேன் என்றார் அன்னம்.

“சரிம்மா” என்று அவன் சுபிதனை பார்த்தான். “குட் நைட் சிம்மா” சுபிதன் சொல்ல, ம்ம் “குட் நைட்” என்றான் அவன்.

“தூக்கம் வருதுன்னு இப்படியே நின்று கொண்டிருந்தால் எப்படி?” மிருளாலினி கேட்க, அவளை பார்த்து புன்னகைத்த சுபிதன், நட்சு, சீக்கிரம் தூங்கு. காலையில் எழுந்து வாமிட் வர்ற மாதிரி இருக்குன்னு சொல்லாத என்றான். மிருளாலினி சுபிதனை முறைத்தாள்.

டேய், “முதல்ல மிருவை கவனி” நட்சத்திரா சொல்ல, “வா மிரு நாம போகலாம். நான் வேண்டுமானால் உன்னை தூக்கிக் கொள்ளவா?” சுபிதன் கேட்க, “ஒன்றும் வேண்டாம்” என்று அவள் அவர்கள் அறைக்கு செல்ல, பின்னாலே ஓடி வந்து சுபிதன் அவளை தூக்கினான்.

டேய், எல்லாரும் இருக்காங்க. என்ன பண்ற? என்று முகச்சிவப்புடன் மிருளாலினி முகத்தை மூடினாள்.

சிம்மாவும் பரிதியும் புன்னகையுடன் அவனை பார்த்துக் கொண்டு நின்றனர்.

“இருவரும் என்ன பண்றீங்க?” கிளம்புங்க என்றார் அன்னம். சிம்மா நட்சத்திராவை பார்த்து விட்டு கிளம்பினான். சற்று நேரத்தில் அன்னமும் கிளம்பினார்.

மறுநாள் காலையிலே அனைவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள். சிம்மாவும் அவன் நண்பர்களும் முதலிலே வந்திருந்தனர். வழிபாட்டை முடித்து விட்டு நட்சத்திரா ஓரிடத்தில் அமர்ந்திருக்க, மிருளாலினியும் சுபிதனும் கடைவீதியில் சுற்றினர். இருவரும் சிம்மாவிடம் வந்தனர்.

சிம்மா, இனிப்பு தேன் குழல்ன்னா என்னது? சுபிதன் கேட்டான்.

எதுக்கு? கார்த்திக் கேட்டான்.

“நட்சு சாப்பிடணும் போல இருக்குன்னு கேட்டா?” ஆனால் எங்கள் இருவருக்குமே என்னவென்று தெரியலை என்றான். அனைவரும் அவளை பார்த்தனர். அவள் தன் குடும்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தாள்.

“நீங்க போங்க. நான் வாங்கி கொடுக்கிறேன்” என்றான் சிம்மா.

“தேங்க்யூ சிம்மா” என்று சுபிதன் சொல்லி மிருளாலினியுடன் சென்றான்.

சிம்மா, “நீ என்ன செய்யுறன்னு புரிந்து தான் செய்கிறாயா? நேற்று ஜூஸ் இன்று தேங்குழலா?” நாளை நீ வாங்கி தர முடியாது. அவளுடையவன் தான் வாங்கித் தருவான் என்று கார்த்திக் கோபமாக சொன்னான்.

கையை முறுக்கிய சிம்மா கண்கலங்க தன் நண்பர்களை பார்த்து, அவளுக்கு என் மீது காதல் இருந்ததே தெரியாமல் இருந்தேன். அவள் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளட்டும். ஆனால் இப்பொழுது அவன் தான் இல்லையே? நான் பார்த்துக்கிறேன். இதற்கு மேல் இதில் யாரும் தலையிட வேண்டாம்.

இல்லடா..கார்த்திக் ஆரம்பிக்க, “அவனை விடு” என்று மாறன் கார்த்திக்கை தடுத்தான். சிம்மா இனிப்பு தேன்குழல் மிட்டாயை வாங்கிக் கொண்டு நட்சத்திரா அருகே அமர்ந்து, அவளுக்கு கொடுத்தான்.

“நீ எதுக்கு வாங்கிட்டு வந்த?” நட்சத்திரா கேட்க, உனக்கு வேணும்ன்னா வாங்கிக்கோ என்று அவன் நீட்ட, அவள் யோசனையுடன் அவனை பார்த்தாள்.

“வேண்டாமா?” என்று பிரித்து அவன் உண்ண கையில் எடுத்தான். நட்சத்திரா அவன் கையில் இருந்ததை பிடுங்கி சாப்பிட ஆரம்பித்தாள். சிம்மா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மாமா, “வாங்கிக் கொடுத்துட்டு இப்படி பார்த்தேன்னா நான் எப்படி சாப்பிடுறது?” என்று வாயில் வைத்துக் கொண்டு சிம்மாவிடம் நட்சத்திரா கேட்டாள். அவன் புன்னகைத்தான்.

சிரிக்காம திரும்பி உட்காரு. நான் சாப்பிடணும் இல்ல பாப்பாவுக்கும் வயிறு வலிக்கும் என்றாள். அவன் முகம் மாறியது. அவனை பார்த்துக் கொண்டே தன் நண்பர்களை பார்த்து, கையிலிருந்த மிட்டாயை அப்படியே வைத்துக் கொண்டே கண்ணீர் வடித்தாள்.

என்னவென்று சிம்மா பார்க்க, மிருளாலினி கையில் சுபிதன் கண்ணாடி வளையல்களை போட்டு விட்டுக் கொண்டிருந்தான்.

“இதுக்கு எதுக்கு அழுற?” சிம்மா கேட்க, கண்ணை துடைத்து விட்டு அமைதியாக அமர்ந்தாள் நட்சத்திரா.

வீட்டிற்கு வந்த பூசாரியை சிம்மா பார்த்து, ஸ்டார் நீ இங்கேயே இரு. நான் வாரேன் என்று அவரிடம் ஓடினான். அவனை பார்த்து கண்ணீருடன் அவளிருக்க, பூசாரியிடம் வந்த சிம்மா, அவன் மனதில் உள்ளதை கேட்டு விட்டான்.

பூசாரி ஏதும் கூறாமல் செல்ல, அய்யா சொல்லீட்டு போங்க என்றான் சிம்மா. அவர் மிருளாலினி சுபிதனை பார்த்தார்.

மிருளாலினி மகிழ்ச்சியுடன் அவனை அணைக்க, அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான். இருவரும் புன்னகைத்துக் கொண்டிருந்தனர்.

அய்யா..சிம்மா அழைக்க, “இவர்களின் சிரிப்பு விரைவிலே காணாமல் போகப் போகுது” என்று அவர் சென்றார். சிம்மா இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான். கை நிறைய போட்டிருந்த வளையலை மிருளாலினி தன் கணவனிடம் மகிழ்வுடன் காட்டிக் கொண்டிருந்தாள். சிம்மாவிற்கு நட்சத்திராவின் கவலைக்கான காரணம் இப்பொழுது தான் புரிந்தது.

அவன் அம்மாவிடம் எதையோ கூறி விட்டு, அவனும் ஒரு ஜோடி கண்ணாடி வளையலை வாங்கி நட்சத்திராவிடம் வந்து கொடுத்தான்.

“என்னது மாமா?” அவள் கேட்க, “பிரித்து பார்” என்றான் சிம்மா.

அவள் வளையலை பார்த்து, அதை அவனிடம் நீட்டினாள்.

“வேண்டாமா?” சிம்மா வருத்தமுடன் கேட்டான். “பிடி மாமா” என்று அவன் வாங்கிய பின், அவனிடம் கையை நீட்டினாள்.

“என்ன?”

“போட்டு விடு” என்றாள்.

“நானா?” சிம்மா கேட்க, “அதனால என்ன மாமா?” போட்டு விடு.

“உன்னோட மாமா கோவிச்சுக்க மாட்டாரா?” சிம்மா கேட்க, அவர் கோபப்பட மாட்டார். சந்தோசப்படுவார்.

“நான் போட்டு விட்டால் உன் மாமா எதுக்கு சந்தோசப்படப் போறாரு?”

என்னோட முதல் காதல் நீ தான். அதனால் நீ போட்டு விடு. அவருக்கு நான் சந்தோசமாக இருக்கணும். அதற்காக ஏத்துப்பார்.

“நீ உண்மையிலே இப்பொழுது அவரை தான் காதலிக்கிறாயா?”

ஆமா மாமா, அவர் தான் எனக்கு எல்லாமே.

“அப்புறம் எதுக்கு என்னை போட்டு விடச் சொல்ற?” அவரையே போட சொல்லு என்று அவள் கையில் வளையல்களை வைத்தான்.

“நீ தான வாங்கிட்டு வந்த?” போட்டு விடுவன்னு நினைச்சேன். பரவாயில்லை என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

அதை வாங்கிய சிம்மா அவள் கையை இழுத்து ஒவ்வொன்றாக போட்டு விட, அனைவரும் இருவரையும் பார்த்தனர். மீண்டும் நட்சத்திராவை பற்றி தவறாக பேசினார்கள். சிம்மாவும் எதையும் கண்டுகொள்ளவில்லை.

இவளின் செயலில் அவள் அப்பா புகழேந்தி கோபப்பட்டார். ஆனால் அம்சவள்ளியும் உதிரனும் சந்தேகமாக இருவரையும் பார்த்தனர். அன்னமும் பரிதியும் பதறி ஓடி வந்தனர்.

“சிம்மா” பரிதி கோபமாக அழைத்தார்.

சிம்மாவிற்கு பதில் நட்சத்திரா பேசினாள். மாமா, “எதுக்கு மாமாவிடம் சத்தம் போடுறீங்க?” எனக்கு தான் இப்ப யாருமில்லை. சீமந்தம் எப்படியும் யாரும் செய்யப் போவதில்லை. அதான் மாமா வாங்கித் தந்த வளையல்களை நான் அவரை போட சொன்னேன். தப்பா மாமா…தப்புன்னா மன்னிச்சிருங்க என்று எழுந்தாள்.

ஸ்டார் உட்காரு, இன்னும் இருக்கு. முழுதாக போட்ட பின் எல்லாருக்கும் பதில் சொல்லு என்றான் சிம்மா. யாராலும் எதுவும் பேச முடியவில்லை. சிம்மா போட்டு விட எல்லாரும் அவனை முறைத்துக் கொண்டிருந்தனர்.

“எதுக்கு முறைக்கிறீங்க? உங்களுக்கு வேற வேலையில்லையா?” சிம்மா கேட்க, “சிம்மா பழைய பார்ம்முக்கு வந்துட்ட போல?” முகேஷ் கேட்டான்.

“வேலைய பார்த்துட்டு போடா” என்றான் சிம்மா. நட்சத்திரா புன்னகையுடன் நின்றாள்.

மிருளாலினியும் சுபிதனும் புன்னகையுடன் இருவரிடமும் வந்தனர். வாவ், எங்களுக்கு இது தோணாமல் போச்சே என்றாள் மிருளாலினி.

எல்லாரும் கேட்டுக்கோங்க என்ற அன்னம், நட்சத்திராவுக்கு இன்று இப்பொழுது சீமந்தம். அவள் இருக்கும் வீட்டில் நடக்கப் போகுது. கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அவளையும் குழந்தையையும் வாழ்த்த வாருங்கள் என்று சிம்மாவை பார்க்க, அவன் நட்சத்திராவை பார்த்தான். அவளுக்கு மகிழ்ச்சியில் கண்கள் கலங்கியது.

“தேங்க்ஸ் ஆன்ட்டி” என்று மிருளாலினி அன்னத்தை அணைத்தாள்.

அம்மாடி, அவ என்னோட சொந்த மருமகள். அவள் வீட்டில் தான் யாரும் ஏதும் செய்யலைன்னா நாங்களும் அப்படியே விட முடியாது என்று நட்சத்திராவை பார்த்தார். அவள் அழுது கொண்டே அன்னத்திடம் வந்து அவர் தோளில் சாய்ந்து அழுதாள்.

அம்மாடி நேரமில்லை, உன்னோட நண்பர்கள் செல்லும் முன் முடிக்கணும்ல்ல. கிளம்புங்க என்றார் அன்னம். அவள் குடும்பத்தை பார்த்துக் கொண்டே காரில் ஏறினாள்.

வீட்டிற்கு வந்த நட்சத்திராவை வரவேற்றாள் ரித்திகா. பரிதியின் தம்பி பொண்ணு ரித்திகா. கல்லூரி இறுதியாண்டு படிக்கிறாள். பையன் மகிழன். பள்ளி இறுதியாண்டு படிக்கிறான்.

ரித்திகாவை பார்த்ததும் நட்சத்திரா மகிழ்வுடன் “ரித்தி” என அவளிடம் சென்றாள். “அண்ணி” என்று ரித்திகா அணைக்க வந்தாள்.

“நில்லுடி” என்று அவள் அம்மா தடுக்க, அண்ணி பையன் என்ன செய்கிறான்? எனக் கேட்டாள்.

பையனா? உனக்கு தெரிந்தது போல் கேட்கிறாய்? மிருளாலினி கேட்க, ஆமா “பையன் தான் என் அண்ணிக்கு” என நட்சத்திரா கன்னத்தில் முத்தமிட்டாள் ரித்திகா.

“அவளை விடுடி” என்று அவள் அம்மா தள்ள, அம்மா “சும்மா இரு” இல்லை கடித்து வைத்து விடுவேன்.

“கடிக்க நீ என்ன நாயாடி?” படிப்பு முடிய போகுது. இன்னும் சின்னபிள்ளைத்தனம் என்று அவள் அம்மா திட்டினார்.

அத்தை, “மகிழ் எங்க?” ஆர்வமாக நட்சத்திரா கேட்க, அண்ணி “இதோ இருக்கேன்” என்று உள்ளிருந்து மேல் மேலே அடுக்கியவாறு தாம்பூலத்தட்டுகளை அடுக்கி வந்தான்.

பார்த்துடா..நட்சத்திரா சொல்ல, அண்ணி இதெல்லாம் அசால்ட்டா பிடிப்போம்ல்ல என்று அவன் கெத்தாக காலரை தூக்கி விட்டான். ரித்திகா காலை இடையிலே விட, அனைத்தையும் கீழே போட்டு நேராக நட்சத்திராவை நோக்கி விழ வந்தான். இடைபுகுந்த மகிழின் அப்பா, அடேய்..என்று தன் மகனை பிடித்தார். பின்னே வந்த சிம்மா மேல் இடித்து விட அவன் கையிலிருந்த ரோஜா இதழ்கள் தட்டுடன் பறந்து கீழே விழுந்து சிம்மா, நட்சத்திரா, மகிழன், அவன் அப்பா மீது விழுந்தது.

வாவ், பூமழை என்பார்களே! அது இது தான் போலவே? மகிழன் ஆரவாரமாக சொல்ல, “எல்லாத்தையும் கொட்டி விட்டுட்டு பேச்சை பாரு” சிம்மா கொந்தளித்தான்.

அண்ணா, என்னை ஏதும் செய்து விடாதே! எல்லாம் ரித்துவின் வேலை தான்.

ரித்து, இங்க வா..சிம்மா அழைக்க, அண்ணா எனக்கு தெரியாது. நான் இவனை கவனிக்கவில்லை என்று பச்சையாக பொய் கூறினாள்.

சரி விடுங்க, நேரமாகுது. சிம்மா..போ, வேற வாங்கிட்டு வா என்றார் அன்னம்.

ஆன்ட்டி, சிம்மா இருக்கட்டும். நாங்க வாங்கிட்டு வாரோம் என்ற சுபிதன், வா மிரு என்று அவள் கையை பிடித்து அழைத்து சென்றான்.

அடியேய், சும்மா நிற்காமல் “நட்சத்திராவை தயார் செய்” என்றார் ரித்திகாவின் அம்மா.

“நில்லும்மா” என்று நட்சத்திராவை நிறுத்திய அன்னம், தாம்பூலத்தில் புடவை, பூ, மஞ்சள், குங்குமம் வைத்து, இந்தா சிம்மா இதை பாப்பாவிடம் கொடு என்றார்.

நானா?

தாய்மாமா செய்ய வேண்டியதை நீ செய். அம்மாடி அவசரத்தில் வைத்ததால் எங்களால் முறைப்படி நிறைய செய்ய முடியலை என்றார் அன்னம்.

இதெல்லாம் நடக்கும்ன்னு நான் நினைத்துக் கூட பார்க்கலை. நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் என்று சிம்மாவை பார்த்தாள். அவன் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு ரித்திகாவுடன் உள்ளே சென்று ஒரிஜினல் சில்க் புடவையில் அலங்காரத்துடன் வந்தாள். எல்லாரும் புன்னகையுடன் அவளை பார்க்க, சிம்மாவிற்கு நட்சத்திரா மிக அழகாக தெரிந்தாள். அவன் கண்ணிமைக்காது நட்சத்திராவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அண்ணா பார்த்து, “அண்ணியோட மாமா வந்தால் நீ காலி தான்” என்று சிம்மாவிற்கு ரித்திகா நரசிம்மனை நினைவு படுத்த, அம்மா..நான் மாலை வந்திருச்சான்னு பார்த்துட்டு வாரேன் என்று வெளியேறினான். நட்சத்திரா அவன் கலங்கிய மனதை கண்டு கொண்டாள். அவள் மட்டும்மா கண்டால் அனைவரும் சிம்மாவை பாவமாக பார்த்தனர். பரிதி தன் மகனுடன் சென்றார்.

சற்றுநேரத்தில் வீட்டில் அவ்வூர் பெண்கள் வந்தனர். மிருளாலினி, சுபிதன், பரிதி, சிம்மா சேர்ந்து வந்தனர்.

ரித்திகா வெளியே வந்தாள்.

ரித்து, “என்ன பண்ணப் போற?” சிம்மா கேட்க, அண்ணா “உள்ள போ”. அம்மா தேடிட்டு இருந்தாங்க என்று அவள் வெளியே வேப்பமரத்திடம் வந்தாள்.

தயங்கியவாறு உதிரன் நட்சத்திரா அறையின் சன்னலருகே நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்து அவனிடம் சென்று, மாமா..”என்ன பண்ற?” என்று ரித்திகா உதிரனை பின்னிருந்து அணைத்தாள்

ஏய், “என்ன பண்ற?” விடு என்று கடுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு அவளை தள்ளி விட்டு அவன் தங்கையை பார்க்க முயன்றான்.

“என்ன மாமா? இப்படி தள்ளி விட்ட?”

போறீயா? இல்லை சத்தம் போடவா? உதிரன் கேட்டான்.

தோடா..இவர் சத்தம் போடுறாராம். பிரபசர் சார், அதுக்கு நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க என்றாள். உதிரன் அவளை முறைத்தான்.

ரித்திகா படிக்கும் கல்லூரியின் பிரபசர் தான் உதிரன். அவன் வகுப்பில் தான் ரித்திகா படிக்கிறாள். அவளுக்கு சிறுவயதிலிருந்தே உதிரன், நட்சத்திராவை மிகவும் பிடிக்கும்.

மாமா, எனக்கு இந்த வேப்பிலையை பிடுங்கி தாவேன்.

“அதுக்கு வேற ஆளை பாரு” என்று அவளிடம் பேசினாலும் கண்கள் என்னவோ நட்சத்திராவை பார்க்கவே காத்திருந்தன.

மாமா, அண்ணிக்காக தான். ப்ளீஸ் மாமா, எட்டவே மாட்டேங்குது.

முடியாது.

முடியாதா? மாமா நீ எனக்கு உதவினால் அண்ணியை பார்க்க நான் உதவுகிறேன் என்றாள்.

“நிஜமா தான் சொல்றீயா?” நான் செல்லம்மாவை பார்க்கணும்.

மாமா, “எனக்கு நிக் நேம்ன்னா என்ன வைப்ப?”

முதல்ல அவளை நான் பார்க்கணும்.

“நீ சொல்லு மாமா?”

“கழுத்தருப்பு” என்றான்.

மாமா, அழகா சொல்லுவன்னு பார்த்தா..”மோசமான மாமா, போடா” என்றாள்.

போடாவா?

ஆமாடா, டால்டா.

அய்யோ, இதுக்கு தான் உன்னிடம் பேசுறதில்லை.

“அப்ப நல்லா பேசினா என்னை காதலிப்பாயா மாமா?”

“காதலா?” பைத்தியம் என்றான்.

“பைத்தியமா?”

ஆமா என்று வேப்பிலையை பறித்து கொடுத்து விட்டு, “அவள பார்க்கணும்” என்றான்.

சாரி மாமா, “நீ வீட்டுக்குள்ள வந்து தான் பார்க்கணும்” என்று ஓடினாள்.

“செட்” என்று காலை தரையில் உதைத்தான் உதிரன்.

மாமா, வா என்று உதிரனிடம் மீண்டும் வந்து அவனை ரித்திகா இழுத்தாள்.

ரித்தி, விளையாடாதே! பிரச்சனையாகும்.

பிரச்சனையா? மாமா..அண்ணி, “நீங்க யாருமில்லாமல் எவ்வளவு கஷ்டப்படுவாங்க?  நீ பிரச்சனைன்னு சொல்லீட்டு இருக்க?”

அய்யோ, “உன்னையும் உன்னோட குடும்பத்தையும் எப்படி தான் சமாளிக்கப் போறேனோ?” என்று அவள் சொல்ல, “அமைதியா இரு” என்று அவன் சிந்தித்து விட்டு எல்லாரும் செல்லும் வழியே செல்ல, இப்ப தான் நீ “குட் மாமா” என்றாள் ரித்திகா.

“நீ அமைதியா இருக்கிறாயா?” என்று அவளிடம் பேசிக் கொண்டே அவன் முன் செல்ல, அவனை விட்டு முன்னே ஓடிய ரித்திகா, எல்லாரும் வழிய விடுங்க..நகருங்க..நகருங்க. அண்ணி உங்களுக்கு “சர்பிரைஸ்” என்று கத்திக் கொண்டே நட்சத்திராவிடம் வந்தாள்.

அடியேய், வெள்ளி வளையல் எங்கடி? ரித்திகா அம்மா அவளிடம் சத்தமிட்டார்.

“இந்தா, நீயும் உன் வளையலும்” என்று ரித்திகா அவள் அம்மாவிடம் கொடுத்து விட்டு, அண்ணி “மாமா வந்திருக்காங்க” என்றாள்.

“மாமாவா?” என்று அனைவரும் ரித்திகாவை பார்க்க, அனைவரும் வந்து கொண்டிருந்த உதிரனை வியந்து பார்த்தனர். அப்பா சொல் மீறாத மகன். இன்று அப்பா பேச்சை மீறி தன் தங்கையை பார்க்க வந்திருக்கான் என்று அவன் காதுபடவே பேசினர். அவனை பார்த்ததும் நட்சத்திரா கண்ணீருடன் எழுந்தாள்.

உதிரன் அவளருகே வர, கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்த நட்சத்திரா அவனை அணைத்து மகிழ்ச்சியில் அழுதாள்.

அந்நேரம் சினமுடன் உள்ளே வந்து உதிரனை பிடித்து இழுத்து கன்னத்தில் பளாரென அறைந்தார் புகழேந்தி. அவன் அம்மா அம்சவள்ளியும் பின்னே ஓடி வந்தார்.

பெரிய மாமா, “எதுக்கு மாமாவை அடிச்சீங்க?” ரித்திகா கேட்க, “சும்மா இருடி” என்று அவள் அம்மா கூறினார்.

அம்மா, நீ சும்மா இரு. மாமா அண்ணியை தான் பார்க்க வந்தார். “அதுக்கு அடிப்பாங்களா? எதுக்கு பெரிய மாமா உதி மாமாவ அடிச்சீங்க?” ரித்திகா கேட்டாள்.

“யாருக்கு யார் மாமா?” புகழேந்தி கத்தினார்.

“மாமாவை மாமான்னு தானே சொல்லணும்? உதி மாமா நீங்க எனக்கு சித்தப்பாவா?” அவள் துடுக்காக கேட்க, புகழேந்தி கோபம் எகிறியது. அவர் கோபத்தில் கையை ஓங்கினார்.

சிம்மா அவர் கையை பிடித்து, ரித்து கேட்டதில் தவறில்லை மாமா. நீங்க மாமான்னா மாமான்னு தான் கூப்பிட முடியும். அப்புறம் பொம்பள பிள்ளைங்கள அடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம். இது உங்க வீடில்லை.

சிம்மா..அன்னம் சத்தமிட, அம்மா நீ எதுவும் பேசாத. நான் இதுவரை இவரிடம் ஏதும் பேசியதில்லை. “அது எப்படி நம்ம ஏரியாக்குள்ள வந்து என் தங்கையவே அடிப்பாரோ?” அப்புறம் உதி மச்சான் உங்க வீட்டுக்கு வருவார். அப்ப உங்க பிரச்சனையை வச்சுக்கோங்க. இப்ப நாங்க உங்க பொண்ணுக்கு நடத்திய சீமந்தம் நல்ல படியாக நடக்கணும் என்றான்.

“அவ என்னோட பொண்ணில்லை” புகழேந்தி சத்தமிட்டார்.

நீங்க சொன்னாலும் சொல்லலைன்னாலும் அவ உங்க பொண்ணு தான். அவ உங்களுக்கு பிடிச்ச மாதிரி இத்தனை வருடங்கள் இருந்துட்டா. இனி அவளுக்கு பிடித்த மாதிரி அவ இருக்கப் போறா. அவ்வளவு தான்.  உதி மச்சான் இப்ப வர மாட்டாங்க. அவங்க வீட்டுக்கு வரும் போது உங்க பிரச்சனையை வச்சுக்கோங்க என்றான் சிம்மா.

புகழேந்திக்கு வந்த சீற்றத்தில் சிம்மாவை அடிக்க வர, வயிற்றை பிடித்துக் கொண்டு நட்சத்திரா அவன் முன் வந்து அறையை வாங்கிக் கொண்டாள்.

ஏய்..என்று சிம்மாவும் உதிரனும் சத்தமிட்டனர்.

“போதுமா உங்களுக்கு? “வந்த வேலை முடிஞ்சிருச்சுல்ல. கிளம்புங்க நட்சத்திரா கன்னத்தை பிடித்துக் கொண்டு அவள் அப்பாவிடம் சொன்னாள்.

“இனி வீட்டு பக்கம் கூட வராத?” என்று புகழேந்தி உதிரனிடம் கத்தி விட்டு செல்ல இருந்தவர் முன் வந்த தங்கம்மா பாட்டி,

அய்யா, உன் பிள்ளைகள் செய்தது தப்பு தான். “அதுக்காக இப்படி அடிச்சிட்டு பேசாம போற?”

“என்ன செய்யணும்? இவளுக்கு ஆராத்தி காட்டணுமோ?” புகழேந்தி கத்தினார்.

ஆமா, காட்டணும். என்ன இருந்தாலும் நீ தான் அவளோட அப்பன். அது என்றும் மாறாது. நீ பணம் காசு கொடுக்க வேண்டாம். ஆசிர்வாதம் செஞ்சிட்டு போயிடு.

“ஆசிர்வாதமா? இவளுக்கா?” என்று நட்சத்திராவை பார்த்தவர், “எவனுடனோ படுத்து ஏமாந்துட்டு வந்து நிக்குறா?” இவளுக்கு இது ஒன்று தான் கேடு என்று அருகே இருந்த நாற்காலியை தட்டி விட்டார்.

“நில்லுங்க பிரசிடண்ட் சார்” என்று நட்சத்திரா புகழேந்தியிடம் வந்தாள். ரித்திகாவை நட்சத்திரா அழைக்க, அவளும் அவர்களிடம் வந்தார்.

ரித்தி, “உனக்கு என் மேல் கோபம் வரலையா? உன் அண்ணா என்னை காதலிப்பது உனக்கும் தெரியும்ல்ல? நான் இப்படி வாயும் வயிருமாக வந்து நிற்கிறேனே?” என நட்சத்திரா கேட்டாள்.

என்ன அண்ணி! “உங்களை பற்றி எனக்கு தெரியாதா?” ஏதோ தப்பு தான் நடந்திருக்குன்னு அம்மா விசயத்தை சொன்ன போதே தெரிந்து கொண்டேன்.  “கல்யாணத்திற்கு முன் இப்படி வந்து நிற்கும் ஆசையா உங்களுக்கு? உங்களோட ஆசை எனக்கு தெரியாதா?” என்று கேட்டாள்.

மிஸ்டர் பிரசிடன்ட் புகழேந்தி சார், “உங்களுக்கு உங்க பொண்ணு மேல இல்லாத நம்பிக்கை இந்த பொண்ணுக்கு எப்படி வந்தது? இங்கிருப்பவர்களுக்கு எப்படி வந்தது? உங்களுக்கு ஏதாவது புரியுதா?” கேட்டாள் நட்சத்திரா.

“அது தெரிந்தால் இவர் எதுக்கு உன்னை வெளியே அனுப்பப் போகிறார்?” உதிரன் எளக்காரமாக கேட்டான்.

அண்ணா, நான் அவரிடம் தான் பேசுகிறேன்.

“நீ பேச வேண்டியதை அப்புறம் பேசு” என்ற உதிரன் புகழேந்தியிடம் வந்தான்.

எல்லாமே உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும். சாப்பாட்டிலிருந்து நாங்கள் பயன்படுத்தும் பொருள் அனைத்தும்.

மாமா, “சும்மா இரு” என்று அம்சவள்ளியை பார்த்துக் கொண்டே உதிரனை தடுத்தாள் ரித்திகா.

ஷ்..பேசாத. நான் மட்டும் தான் பேசணும்.

“நீ மட்டும் பேச நீ பைத்தியமா மாமா?” ரித்திகா கேட்க, உனக்கு வாய் கூடி போச்சு. நீ அமைதியா இரு என்றான்.

முடியாது மாமா. நீங்க பேசக் கூடாது. அத்தை கஷ்டப்படுவாங்க என்றாள்.

அத்தை, மாமாவா? எவ்வளவு தைரியம் உனக்கு? உரிமையா பேச இங்க ஏதுமில்லை. அவனை அப்படி என்ன மாமா மாமான்னு கூப்பிடுற? நீயும் இவளை போல் வயிற்றை பெரியதாக்கிட்டு இவனுடன் வரப் போகிறாயோ? புகழேந்தி கேட்க, எல்லாரும் அதிர்ந்தனர்.

அப்பா..உதிரனும், மாமா என்று சிம்மாவும், அண்ணா என்று அன்னமும் சத்தமிட்டனர்.

“வெயிட் எதுக்கு டென்சன்?” என்று மாமா, நகருங்க என்று உதிரனை நகர்த்திய ரித்திகா புகழேந்தி முன் வந்து, நான் மாமாவுடன் படுக்க அவர் பின் சுற்றவில்லை. காதலிக்கிறேன் அதான் பின் சுற்றுகிறேன்.

இரண்டும் ஒன்று தானே? புகழேந்தி நக்கலாக கேட்டார்.

அடியேய், “எத்தனை பேர் இருக்காங்க. கூச்சமே இல்லாம பேசுற?” ரித்திகா அம்மா அவளை அடிக்க, மகிழன் முன் வந்து, “அம்மா அக்காவை எதுக்கு அடிக்கிற?”

“இந்தாளுக்கு தான் பாசம்ன்னா என்னன்னு தெரியாம பேசுறான்னா, நீ எதுக்கு அக்காவை அடிக்கிற? அக்காவையும் அண்ணி மாதிரி வீட்டுக்காக காதலை விட சொல்லப் போறீயா?” அவன் கத்தினான்.

“சின்னப்பையன் மாதிரியா பேசுற?” மகிழன் அப்பா அவனை அடிக்க வந்தார்.

சித்தப்பா நிறுத்துங்க என்ற சிம்மா, “இங்க என்ன நடக்குது? எல்லாரும் என்ன செய்றீங்க?” மாமா, “உங்களுக்கு காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசமே தெரியல” என்று சிம்மா புகழேந்தியிடம் கூறினார்.

கல்யாணத்துக்கு பின் எல்லாம் நடக்க தான் செய்யும். எல்லா காதலும் உடம்பில் ஆரம்பிக்குது என்றார் புகழேந்தி. ரித்திகா கோபமாக, “மாமா நீங்க தப்பா பேசுறீங்க?” என்றாள்.

“ஏன் உனக்கு எங்க உதி மேல் அந்த எண்ணம் வரலையா?” அவர் கேட்க, ரித்திகா கண்ணீர் வடிந்தது.

ச்சீ, “என்ன பேச்சு பேசுறீங்க?” மிருளாலினி கோபமாக கேட்டாள்.

ஏன்ம்மா, உங்களுக்கு என்று ஆரம்பிக்கும் போது, “வெளிய போங்க” என்று உதிரன் கத்தினான்.

டேய், “யார்கிட்ட பேசுற?” அம்சவள்ளி கேட்க, “ஏம்மா உன் புருசன் பேசுற எல்லாத்தையும் எல்லாரும் கேட்டுட்டு அமைதியா இருக்கணுமா? இதுக்கு மேல என்னால முடியாது.

உங்களுக்கு பிடிக்காதுன்னு தான் காதலித்த சிம்மாவை விட்டு அவனிடம் பேசாது கூட விலகியே இருந்தாள் என் செல்லம்மா. அவளை வைத்து இப்ப எல்லா பொண்ணுங்க வாழ்க்கையையும் கொச்சையா பேசாதீங்க. அப்புறம் உங்களுக்கு மரியாதை இருக்காது என்றான்.

“என்னடா சொன்ன?” என்று அம்சவள்ளி உதிரனை அடிக்க, அவரை தடுத்த சிம்மா, “நான் நிரூபித்து காட்டுகிறேன்” என்றான்.

“என்ன?” என்று அம்சவள்ளி கேட்க, ஆமா அத்தை. நான் நிரூபிக்கிறேன். நானும் தான் உண்மையாக உங்க பொண்ணு ஸ்டாரை காதலித்தேன். அவளை தவிர என் வாழ்க்கையில் எந்த பொண்ணுக்கும் இடமில்லை. ஏன்? இனி அவளும் என்னிடம் வர மாட்டாள். வரவும் முடியாது. காமத்தை விட காதல் உயர்ந்ததுன்னு நான் நிரூபித்து காட்டுகிறேன். இந்நேரம் முதல் என் வாழ்க்கையில் எந்த பொண்ணுக்கும் இடமில்லை என்றான் சிம்மா.

சிம்மா, அன்னம் சத்தமிட்டார்.

இல்லம்மா. என்னால நிஜமாகவே ஸ்டாரை தவிர என் மனதில் எந்த பொண்ணையும் நினைக்க கூட முடியாது. அப்பா, “யூ.பி.எஸ்.சி” எக்சாமில் பாஸ் ஆகிட்டேன். நான் நாளைக்கான நேர்க்காணலில் கலந்து கொள்ள போகிறேன். போன முறை அவளுக்காக காத்திருந்தேன். இனி நான் யாருக்காக காத்திருந்தும் ஏதும் ஆகப் போறதில்லை.

நீ என்ன செய்தாலும் இவன் போலுள்ள ஆட்களுக்கு ஏதும் புரியப் போறதில்லை. உன் வாழ்க்கையை வீணாக்க எனக்கு விருப்பமில்லை என்று அன்னம் அழுதார்.

இல்லம்மா, இது என் இறுதி முடிவு. இதுக்கு மேல யாரும் எதுவும் பேச வேண்டாம். விருப்பமுள்ளவர்கள் இங்கிருந்து ஸ்டாரை ஆசிர்வாதம் செய்யுங்கள். விருப்பமில்லாதவர்கள் கிளம்புங்கள் என்றான் சிம்மா கத்தினான்..

உதிரா, அம்சவள்ளி அழைக்க, அதான் உன் புருசன் போறார்ல்ல போ. “என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்” என்றான் உதிரன்.

அண்ணா, “அம்மாவை தனியா விடாத” நட்சத்திரா சொல்ல, “அம்மாவா? அந்த பாசம் கொஞ்சமாவது நம் மேல் இருக்கா? இருந்தா இப்படி தான் வேடிக்கை பார்ப்பாங்களா?” என்னை விடு. உன்னை இந்த நிலையில் தனியா விடுவாங்களா? உதிரன் கேட்க, அழுது கொண்டே அம்சவள்ளி புகழேந்தியின் பின்னே சென்றார்.

எல்லாரும் சிம்மாவை பெருமையோடு பார்த்தனர். நட்சத்திராவிற்கு கொஞ்சமும் குற்றவுணர்வு இல்லாமல் மனதில் மகிழ்ச்சியுடன் இருந்தாள்.

பாரேன் மிரு, இருவரும் ஒரே மாதிரி பேசுறாங்கல்ல. அவள் செய்வதில் நானும் வருத்தப்பட்டேன். ஆனால் “நம் நட்சுவிற்கு ஏற்ற காதலனும் கணவனும் சிம்மா தான்” என்று கர்வமாகவும் மகிழ்வுடனும் சுபிதன் மிருளாலினியிடம் சொன்னான். ம்ம்..என்று மிருளாலினி இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

ஆமாம், “நம் நட்சத்திராவின் வயிற்றில் வளரும் குழந்தை சிம்மாவுடையதே!”

“என்ன? எல்லாரும் அமைதியா இருக்கீங்க?” ஆரம்பிங்க சிம்மா சொல்ல, நட்சத்திராவின் மனமே சிம்மாவை அணைத்து முத்தமிட ஆசையுற்றது. அவனோ அவளை பார்க்காது நின்று பேசிக் கொண்டிருந்தான்.

அன்னமும் நட்சத்திராவின் பார்வையில் சிம்மா மீதுள்ள காதலை கவனித்தார். ஆனால் அவருக்கு குழப்பம். “அவளுக்கு தான் வேறொருவனை பிடித்திருக்கே? என் சிம்மாவை எதற்காக இப்படி பார்க்கிறாள்?” என்று கவனித்தார்.

“முதலில் யார் ஆரம்பிப்பது?” ஒருவர் கேட்க, “அதான் என் மகன் இருக்கானே?” என்ற பரிதி நம் எல்லாரையும் விட பாப்பா நல்லா இருக்கணும்ன்னு நினைக்கிறவன். பாப்பா, “நீ என்ன சொல்ற?”

“என்ன பேசுறீங்க மாமா? அவ கட்டிக்கப் போறவனுக்கு தெரிந்தால் தப்பா நினைக்க மாட்டானா?” என்று ரித்திகாவின் அம்மா கேட்டார்.

ஆமாப்பா, முறைப்பையன். ஒரு காலத்தில் இருவரும் காதலித்து இருக்காங்க. தப்பாகப் போகுது என்றார் ஓர் பாட்டி.

அவரு தப்பாவெல்லாம் நினைக்க மாட்டார். என்னோட சிம்மா மாமாவே செய்யட்டும் என்றாள். இதையே தானே அப்பொழுதும் சொன்னாள் என்று சிம்மா சிந்தனையுடன் நின்றான்.

மாப்பிள்ள, பிள்ளையே ஒத்துகிச்சு. முறைய ஆரம்பிப்பா என்றார் ஒருவர். சந்தனம், குங்குமம் அடங்கிய தட்டை எடுத்துக் கொண்டு ரித்திகா நிற்க, எல்லாரும் உதிரனை பார்த்தனர்.

சிம்மா, நீ முதல்ல ஆரம்பி. பின் நான் சேர்ந்து கொள்கிறேன் என்றான் உதிரன்.

சந்தனம், குங்குமத்தை எடுத்து நட்சத்திராவின் கைகள், கன்னம் என தடவிய சிம்மா, கைகள் நடுங்க குங்குமம் பக்கம் சென்றவன் சந்தனத்தை மட்டும் எடுத்து அவள் நெற்றியில் வைத்து விட்டு, பூவை தூவி விட்டு, அவள் கையில் பத்தாயிரம் கொடுத்தான்.

அடேய் சிம்மா, “உனக்கேதுடா இவ்வளவு பணம்?” ஒருவர் கேட்க, நட்சத்திரா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாமு, அவன் பைக்கை வித்துட்டான் என்று முகேஷ் வெளியே இருந்து சத்தமிட்டான். நட்சத்திராவின் கண்கள் கலங்கியது. சிம்மா அவளை பார்த்துக் கொண்டே நகர்ந்தான்.

ஏம்மா, “இதுக்கெல்லாம் உன் பிள்ளையிடம் கத்த மாட்டீயா?” ஒரு பாட்டி அன்னத்திடம் கேட்டார்.

எப்படிம்மா, இத்தனை வருடமாக என்னோட மருமகள் எங்கள் யாரிடமும் பேசியது கூட இல்லை. “இப்ப தான் பிள்ளை பேசுறா?” எங்களுக்கும் ஆசை இருக்கும்ல்ல. அதை விட அவனுக்கு பிடிச்ச பொண்ணு. “அவளுக்கு செய்யாம வேற யாருக்கு செய்வான்?”  என்ற அன்னத்தையும் நட்சத்திரா கண்ணீருடன் பார்த்தாள்.

அப்படின்னா, சிம்மாவுக்கு திருமணம்? ஒருவர் கேட்க, அதை நாங்க பார்த்துக்கிறோம் என்றார் பரிதி.

உதி, “நீ வாப்பா” என்று பரிதி அழைக்க, மாமா முதல்ல பெரியவங்க எல்லாரும் பார்க்கட்டும் என்று விலகி நின்றான் உதிரன்.

அன்னம், முதல்ல நீயும் ராதாவும் குங்குமம் வச்சு விடுங்க என்று தங்கம்மா பாட்டி சொல்ல, அம்மா முதல்ல நீங்க வையுங்க என்றார் அன்னம்.

எல்லாரும் வைக்க, உதிரனை அழைத்தனர். அவன் வைத்து விட்டு தன் கையில் இருந்த கிரிடிட் கார்டை கொடுத்தான்.

“என்னடா இது?” நட்சத்திரா கேட்க, “பார்த்தால் உனக்கு தெரியலையா?” அவன் கேட்டான்.

“அது தெரியுது? இது எதுக்கு? உனக்கும் தேவைப்படும்ல்ல?” நட்சத்திரா கேட்க, “சிம்மாவிடம் மட்டும் ஏதும் சொல்லாமல் வாங்கிகிட்ட?” உதிரன் கேட்க, மாமாவை அடுத்து மீட் பண்ணுவேன்னான்னு தெரியல. அதான் வாங்கிக் கொண்டேன் என்றாள்.

அண்ணி, “உங்க பேச்சே சரியில்லை” என்று ரித்திகா சிம்மாவை பார்த்தாள். எல்லாரும் அவனை பார்க்க, அவன் வெளியேறினான். மனதில் வலியுடன் அவன் செல்ல, அதே வலியுடன் நட்சத்திரா எல்லார் முன்னும் சிரித்துக் கொண்டிருந்தாள்.

மிரு அவளிடம் வந்து, “நட்சு சிம்மாவை பார்க்கவே பாவமா இருக்குடி” என்றாள். அவள் அவனை தேட, நீ இவ்வளவு பேசி செய்தும் அவன் எப்படி இங்க இருப்பான்?

ஆமா நட்சு, அவனுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? இதை விட பெரிய வலி அவனுக்கு ஏதுமிருக்காது என்றான் சுபிதன்.

“நான் சந்தோசமா இருக்கிறேன்ல்ல?” நட்சத்திரா கேட்க, அவர்கள் இருவரும் நகர்ந்தனர்.

சுபிதன் சிம்மாவை காண சென்றான். அவனும் அவன் நண்பர்கள், இன்னும் சில ஆட்களும் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தனர். சுபிதன் சிம்மாவை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். சிம்மா அவனை கண்டு விட்டு நகர்ந்து சென்றான். சுபிதன் அவன் பின்னாலே ஓடினான்.