அத்தியாயம் -12

ஸ்ரீ கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போதே நந்தன் அவளுக்கான திருமண ஏற்பாட்டை துவங்கிவிட்டார்.

ஸ்ரீ எவ்வளவோ சொல்லியும் கேட்காதவர் ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்தும் விட, அவளோ தந்தைக்காக மண்டையை ஆட்டிவிட்டாள்.

தன் ஒரே மகளின் திருமணத்தை தாம் தூம் என்று நடத்த நந்தன் ஏற்பாடு செய்ய, மாப்பிள்ளை முகூர்த்த நேரத்தில் தான் வேற பெண்ணை விரும்புவதாக சொல்லி எழுந்து சென்றுவிட, ஸ்ரீக்கு ‘ஹப்பாடா தப்பிச்சிட்டோம் என்ற உணர்வு’.

நந்தன் மகள் வாழ்வை எண்ணி வருந்தி கொண்டு இருக்க, அவர் அருகில் சென்ற சீனிவாசன் தன் மகனுக்கு ஸ்ரீயை கேட்க,

கண்ணீரோடு நண்பனை அணைத்து கொண்ட நந்தன் தன் சம்மதத்தை தெரிவித்தார்.

வேலை விஷயமாக தந்தையுடன் வந்திருந்த தீரனுக்கு திடீரென்று அவரிடம் இருந்து அழைப்பு வர, புருவம் சுருக்கியவன் ‘என்ன காலைலதானே இவரை மண்டபத்தில் விட்டுட்டு வந்தேன். அதுக்குள்ள கூப்பிடறாரு. எதுவும் பிரச்சனையோ’ என்று நினைத்தவன் போனை அட்டன் செய்து பேசிய அடுத்த பத்தாவது நிமிடம் தந்தையின் முன் கோபமாக நின்றிருந்தான்.

“அப்பா…என்ன பேசுறீங்க. கல்யாணம் நின்னுடுச்சுனா. கிளம்பி ஹோட்டல் ரூமுக்கு போறதை விட்டுட்டு, தேவியில்லாத வேலை எதுக்கு பண்றீங்க”.

“நான் தேவையில்லாத வேலை பார்க்கல. நீதான் இப்போ தேவையில்லாம பேசிட்டு இருக்க, போ போய் மண மேடையில் போய் உட்காரு”.

“அப்பா உங்களுக்கு நான் சொல்றது புரியுதா இல்லையா. என்னால இந்த பொண்ண கல்யாணம் செய்துக்க முடியாது”.

“அதான் ஏன் முடியாது. நல்ல பொண்ணு. நல்லா படிச்சுருக்கா, பார்க்க லட்சணமா இருக்கா, எல்லாத்துக்கும் மேல அவ என் உயிர் நண்பனோட மகள். வேற என்ன வேணும்”.

“அப்பா……”

“அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டுற அவ்வளவுதான். இல்ல முடியாதுனா என்னை உயிரோட பார்க்க முடியாது.

குடுத்த வாக்கை காப்பாத்த முடியாம போயிட்டாங்கர பேச்சுக்கு சாவது எவ்வளவோ மேல்” என்று பிடிவாதமாக சொன்னவரின் வார்த்தைக்கு பதில் சொல்ல முடியாதவன் வேறு வழி இல்லாமல் தன் சம்மதத்தை தெரிவிக்க, ஸ்ரீக்கு ‘ஹையோ….’ என்றானது.

இரண்டு வருடமாக தன்னுள் இருக்கும் காதலை மனதின்னுள்ளேயே போட்டு புதைத்துவிட்டு ஸ்ரீயின் கழுத்தில் தாலியை கட்டினான் பிரகதீரன்.

திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் நடக்க போகும் விஷயம்தானே ஏற்று கொள்வோம் என்று தனக்குள் சொல்லி கொண்ட ஸ்ரீ, அமைதியாக அதன்பின்னான சம்பிரதாயங்களை செய்து முடித்தாள்.

இருவரும் மண்டபத்தில் இருந்து நேராக தீரன் வீட்டிற்கு சென்றனர். அங்கு சிவகுமாரி மகனின் திருமண கோலத்தை கண்டு மகிழ்ந்துதான் போனார்.

மாமியார் என்ன சொல்வாரோ என்று பயந்து வந்த ஸ்ரீக்கு குமாரியின் மகிழ்ச்சி சந்தேகத்தை கொடுத்தது.

‘என்ன இவங்கபாட்டுக்கு இவ்ளோ சந்தோஷமா இருக்காங்க. இவரு இவங்க புள்ளதானா இல்ல. குப்பை தொட்டில இருந்து தூக்கிட்டு வந்தாங்களா. திடீர் கல்யாணம்னு கவலைப்பட்ட மாதிரியே தெரியலையே’ என்று யோசிக்க, அவளுக்கு பதில் சொல்வது போல்,

“ஹப்பாடா எப்படியோ என் பையன் கல்யாணம் முடிச்சுட்டான். நான் மாமியார் ஆகிட்டேன். எத்தன தடவை கேட்டேன் பொண்ணு பார்க்கட்டுமா…பொண்ணு பார்க்கட்டுமான்னு கடைசில அலைச்சல் இல்லாம நல்ல அழகான பொண்ண என் புருஷன் உனக்காக செலக்ட் பண்ணிட்டாரு பார்த்தியா,

என்ன இருந்தாலும் என் புருஷன் செலக்சன் செம்மதான் போ” என்க, நந்தனுக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.

நட்புக்காக வீட்டில் கூட சொல்லாமல் திருமணம் செய்ய கேட்கிறானே. அவன் மனைவி என்ன சொல்வாறோ என்று பயந்து கொண்டே வந்தவருக்கு குமாரியின் மகிழ்ச்சி மகள் வாழ்க்கைபற்றிய பயத்தை போக்கி இருந்தது.

ஸ்ரீயோ திருமண வாழ்க்கைக்கு தன்னை தயார்படுத்த நேரம் தேவை என்று கணவனிடம் சொல்ல எண்ணி இருந்தாள்.

உறவுகள் ஸ்ரீயை அழைத்து வந்து தீரன் அறையில் விட, மனதில் எழுந்த பட படப்போடும், பயத்தோடும்,பேச வேண்டியதை மனதினுள் உரு போட்டு கொண்டே உள்ளே நுழைந்தவள் தலையை நிமிர்ந்து பார்க்க,தீரன் அவளுக்கு முதுகு காட்டிஅமர்ந்தவாறு ஏதோ யோசனையில் இருந்தான்.

அடி மேல் அடி வைத்து மெதுவாக அவன் அருகில் சென்றவள், எப்படி அழைப்பது என்று தெரியாமல் “ம்கூம்…” என்று கனைக்க,

அந்த குரலில் தன்னிலை அடைந்தவன் அவளை பார்க்க, அவளோ “பால்….” என்று சொம்பை நீட்டினாள்.

அவளையும் பால் சொம்பையும் மாறி மாறி பார்த்தவன் “எனக்கு நைட் பால் குடிச்சு பழக்கம் இல்ல. ஒரு முக்கியமான போன் வர வேண்டி இருக்கு நான் பேசிட்டு வரேன். நீ தூக்கம் வந்தா தூங்கு”.

“அ…. அ…. அதுங்க நான் உங்ககிட்ட பேசணும்”.

“நான்தான் சொல்றேன்ல முக்கியமான போன் கால்னு” என்று கோபமாக சொல்ல, பயந்து போனவள் எதுவும் சொல்லாமல் நிற்க,

அவளை கண்டு கொள்ளாதவன் விறு விறுவென பால்கனி நோக்கி சென்றுவிட்டான்.

‘இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இவர் கோபப்படுறாரு’ என்று தனக்குள் கேட்டு கொண்டவளுக்கு பதில்தான் இல்லை.

காலையும் தீரன் ஸ்ரீயுடன் முகம் கொடுத்து பேசவில்லை. அவளிடம் இருந்து விலகியே இருந்தான். ஸ்ரீ சாதாரணமாக பேச முயற்சித்தாலும் அவளை அவன் கண்டுகொள்வதில்லை.

இதற்கிடையில் அஸ்வின், ஸ்ரீ இருவரும் ஒன்றாக கல்லூரி சென்று வந்தனர். தன் நெருங்கிய தோழி அண்ணியாக வந்ததில் அஸ்வின்கு மிகுந்த மகிழ்ச்சி.

ஸ்ரீ படிப்பு ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டு இருக்க, திருமண வாழ்க்கை பட்டும் படாமல் சென்று கொண்டு இருந்தது. அவ்வப்போது தந்தையை சென்று பார்த்துவிட்டு வருவாள்.

தீரனுக்கு எதுவும் பர்பெக்டாக இருக்க வேண்டும் என்று மாமியார் சொன்னதை கேட்டு கொண்ட ஸ்ரீ அறையை சுத்தமாக வைத்து கொள்வாள். அவனுக்கான உடைகளை எடுத்து வைப்பாள். அவள் தனக்காக செய்யும் வேலைகளை ஏற்று கொள்பவன் அவளிடம் பேசுவது மட்டும் இல்லை.

எல்லோரிடமும் நன்றாக பழகும் ஸ்ரீ தீரனிடம் பேசி நண்பர்கள் போல் தங்கள் உறவை துவங்க எண்ணி, “ஏங்க உங்களுக்கு நைட்டுக்கு பூரி பிடிக்குமா? இல்ல இட்லி வேணுமா?” என்று கேட்க,

அவனோ பதில் பேசாமல் தன் வேலையே முக்கியம் என்று லேப்டாப்பை பார்த்து கொண்டு இருந்தான்.

கணவன் கவனிக்கவில்லை என்று நினைத்தவள் இரண்டு மூன்று முறை கேட்க, அப்போதும் அவனிடம் பதில் இல்லை.

உடனே அவன் அருகில் சென்று லேப்டாப்பை விளையாட்டாக பிடுங்கியவள் “நான் உங்ககிட்டதான் பேசிட்டு இருக்கேன். பதில் சொல்லுங்க. உங்களுக்கு நைட் டின்னர் என்ன வேணும்” என்க,

அவனோ ஒரு முக்கியமான புராஜெக்ட் கை நழுவி போட்டி கம்பெனிக்கு சென்ற கடுப்பில் இருந்தவன் எங்கு தவறு செய்தோம் என்று லேட்டாப்பில் பார்த்து கொண்டிருக்க அவளை கவனிக்கவில்லை .

திடீரென்று லேப்டாப் பிடுங்கப்படவும் ருத்ரனானவன் “என்னடி வேணும் உனக்கு? நானும் போனா போகுது படிக்கற புள்ளைன்னு அமைதியா இருந்தா சும்மா சும்மா வந்து ஒரசிட்டு நிக்குற.

திடீர்னு கல்யாணம் ஆனதால டைம் குடுக்கலாம்னு பார்த்தேன். நீ பண்றதை பார்த்தா அந்த டைம் தேவையில்லை போல, கடமைக்குனாலும் என்னோட வாழுனு சொல்றியா அதுவும் சரிதான் வா” என்றவாறு அவள் முந்தானையில் கை வைக்க,

அவ்வளவு நேரமும் அவன் கோபத்தில் அதிர்ந்து நின்றவள் அவன் சேரியில் கைவைக்கவும் தன்னிலை அடைந்து, வேகமாக அவன் கையை தட்டிவிட்டவள் “என்ன பண்றீங்க” என்று கோபமாக கேட்க,

“இதுக்காகதானே சுத்தி சுத்தி வர. வா…” என்று கையை பிடிக்க,

“ச்ச…. நான் பிரண்ட்லியாதான் உங்ககூட பேச வந்தேன். தேவையில்லாம நீங்களா எதாவது கற்பனை பண்ணிக்கிட்டு பேசாதீங்க”.

“பிரண்ட்லியா பேச வந்தியா. நாம ஒன்னும் பிரண்ட்ஸ் இல்ல. புருஷன் பொண்டாட்டி”.

“ஹோ…. அது இப்போதான் உங்களுக்கு நியாபகம் வருதா”

“அட என் பொண்டாட்டிக்கு அந்த கோபம்தானா. நான்தான் சொன்னனே படிக்கற பொண்ணுன்னு. நீ இந்த விஷயத்தில் பிஞ்சுலயே பழுத்துருப்பன்னு நான் என்ன கனவா கண்டேன்”.

“ச்சி…. என்ன பேசுறீங்க. கண்டபடி பேசாதீங்க. முதல்ல கையை எடுங்க”.

“கண்டபடி பேசுறனா கல்யாணம் ஆனா அடுத்தது இதுதான்ம்மா தெரியாத மாதிரி பேசுற. நீதான் டாக்டர் ஆச்சே. தியரில எல்லாமே படிச்சுருப்பியே இப்போ வா பிராக்டிக்கலா தெரிஞ்சுக்கலாம்” என்று அவள் கையை பிடிக்க,

அவன் பேச்சில் வெறுத்து போனவள் “நான் பேச வந்தது தப்புதான் என்னை விடுங்க” என்று கண்ணீரோடு சொல்ல,

அவளை அழுத்தமாக பார்த்தவன் “ஏன்மா நீ ஆசைப்பட்டதுதானே….”,

“ச்ச…. நிறுத்துங்க. இனி நீங்க இருக்க பக்கம் கூட நான் வர மாட்டேன். என்னைவிடுங்க”என்று கதறியவள் அவன் அசந்த நேரம் பார்த்து, அவனை தள்ளிவிட்டு அறையைவிட்டு வெளியில் ஓடிவிட்டாள்.

சீலையை மார்போடு அணைத்து கொண்டு வழிந்த கண்ணீரை துடைத்தவாறே ஓடியவளை கோபமாக பார்த்து கொண்டிருந்தான் தீரன்.

அதன்பின்னான நாட்களில் ஸ்ரீ கணவனிடம் இருந்து விலக துவங்கினாள். அவனுக்கான வேலைகளை செய்து வைப்பவள், இரவு தனிமையில் அவனுக்கு முதுகு காட்டி படுத்துவிடுவாள். அவனும் அவளை கண்டு கொள்வது இல்லை.

வெளியில் அமைதியாக இருப்பது போல் இருந்தாலும் மனதில் கணவனை கழுவி ஊற்றி பின் ‘நான் என்ன கேட்டேன்னு அன்னைக்கு அப்படி பேசினார். என்ன டின்னர் வேணும்னு கேட்டதுக்கு போய்…ச்ச…. இனி நாம போய் பேச கூடாது. நான் பேசுனது தப்புதான். சாரின்னு வந்து சொல்ற வரை அவர்கூட பேச கூடாது’ என்று முடிவெடுத்து கொண்டு அமைதியாக அவனை கடந்து செல்ல துவங்கினாள்.

கணவன், மனைவி உறவு இப்படி இருக்க, ஒருநாள் சிவகுமாரி இருவரையும் குல தெய்வம் கோவிலுக்கு சென்று வர சொன்னார்.

அஸ்வினோ “ம்ம்ம்…. என்ன மேடம் ரெண்டு பேரும் தனியா.. ஒரே ஜாலிதான்” என்று கிண்டல்பண்ண, அவளோ “ஹிஹி……” என்று கஷ்டப்பட்டு அவனிடம் சிரித்து வைத்தவள் மனதினுள் “ஹையோ அந்த சிடு மூஞ்சிக்கூட போகறதுக்கு நான் நாலு கழுதையை மேச்சுட்டு வந்துடுவேனே. இவன்கிட்ட கோர்த்து விடறதே இந்த கோதண்டராமனுக்கு வேலை. ராமா அந்த சிடு மூஞ்சிகிட்ட இருந்து என்னை காப்பாத்திடு, நான் உனக்கு மூணு தேங்கா உடைக்கறேன்” என்று கடவுளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருந்தாள்.

அப்போது சரியாக தீரன் அங்கு வர குமாரி அவனிடமும் கோவிலுக்கு சென்று வர சொல்ல, அவனோ “எனக்கு வேலை இருக்கு. இப்போ எல்லாம் என்னால போக முடியாது” என்றுவிட்டான்.

மகன் அந்த பக்கம் சென்றவுடன் மருமகளிடம் வந்த குமாரி “அவன் அப்படிதான் சொல்லுவான். நீ சொன்னா கேட்பான். போய் சொல்லு. சொல்லி ரெண்டு பேரும் கோவிலுக்கு போயிட்டு வாங்க” என்க, இவளுக்கோ எங்காவது சென்று முட்டி கொள்ளலாம் போல இருந்தது.

‘நான் சொல்லி அவன் கேட்க போறானாம் இதெல்லாம் நடக்கற விஷயமா. இப்படி ஒரு புரளிய எவன்டா பரப்புனீங்க. ஏற்கனவே என்னை பார்த்தா நாய் மாதிரி வல்லுனு விழுவான். இதை போய் சொன்னேன் கடிச்சு வச்சாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல. சரி குத்து மதிப்பா மண்டைய ஆட்டி வைப்போம். காலைல வந்து முடியாதுனு சொல்லிட்டாருன்னு சொல்லுவோம்’ என்று நினைத்தவள் மாமியாரிடம் மண்டையை ஆட்டிவிட்டு சென்றுவிட்டாள்.

மறுநாள் காலை எழுந்து கல்லூரிக்கு கிளம்பி வந்தவள் “அத்த அவரு முடியாதுனு சொல்லிட்டாரு”என்க,

அவரோ “எல்லாரும் சொன்னாங்க மருமக வந்தா மகன் மாறிடுவான்னு. நான் நம்பல. ஆனா இப்போல தெரியுது. நான் என்ன சொன்னாலும் மறு பேச்சு பேசாம கேட்பான். இப்போ என்னன்னா முடியாதுங்கறான். இந்த அநியாயத்தை எங்க போய் சொல்லுவேன். கல்யாணம் ஆகி முழுசா ரெண்டு மாசம் ஆகல. அதுக்குள்ள என் புள்ளைய மாத்திட்டா” என்று புலம்ப,

அவளோ ‘எது….. நான் மாத்திட்டனா. என்னம்மா புள்ள வளர்த்துருக்க. எப்போ பாரு உர்ருனு இருக்கான்னு உன்கிட்ட சண்டை போடலாம்னு நினைச்சுட்டு இருக்கேன்., இவங்க என்னன்னா என்னை சொல்றாங்க. அப்பா பரந்தாமா இந்த கோளாறு குடும்பத்துல இருந்து என்னை மட்டும் காப்பாத்திவிடப்பா’ என்று நினைத்து கொண்டு நிற்க,

அவள் மாமியாரோ மூக்கை சீந்தி கொண்டே மருமகளை முறைத்துவிட்டு சென்றுவிட்டார்.

ஸ்ரீ அவர் போவதை கண்டு ‘பார்றா பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கங்கற மாதிரில்ல இருக்கு. போய் உங்க மகன்கிட்ட பேசிக்கோங்க. என்கிட்ட பேச சொல்லி சொல்லாதீங்க” என்று கத்தி சொன்னவள் உதட்டை பிதுக்கிவிட்டு கிளம்பிவிட்டாள்.

தீரனை தவிர மற்ற அனைவரும் ஸ்ரீயுடன் நன்றாகவே பழகினர்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல, நாட்கள் மாதங்கள் ஆனது. இருவருக்கும் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் சென்றிருந்தது. ஸ்ரீக்கும் படிப்பு முடிந்து ப்ராக்டீசை துவங்கி இருந்தாள். வாழ்க்கை ஏனோ தானோவென்று செல்வது போல் ஸ்ரீக்கு தோன்றியது. எதிலும் பிடிப்பு இல்லாமல் இருந்தாள்.

மாமியார் வேறு அடிக்கடி விஷேசம் இல்லையா விஷேசம் இல்லையா என்று கேட்க, அவளுக்கு பதில் சொல்லவே சங்கடமாக இருந்தது.

அவள் செட்டிலேயே திருமணமான பெண் இவள்தான் என்பதால் நண்பர்கள் கிண்டல் செய்யும்போது கணவனை நினைத்து அவள் மனதில் ஒரு வெற்றிடம் தோன்றுவதை அவளால் நிறுத்த முடியவில்லை.

‘நான் என்ன செஞ்சேன். ஏன் என்கிட்ட பேச கூட மாட்டிக்கிறாரு. ஒரு வேலை நான் அந்த மாப்பிள்ளையை விரும்பி இருப்பேன்னு நினைச்சுட்டாரோ. ஆனா…. அதை என்கிட்ட கேட்டிருந்தாலே நான் சொல்லியிருப்பேனே. நானும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல்தான் இருந்தேன் என்று’

கணவனின் செய்கையில் மனம் வெதும்பியவளுக்கு அவனிடம் மீண்டும் சென்று பேசும் தைரியம்தான் வரவில்லை.

‘என்ன பிரச்சனையாக இருந்தாலும் பேசினாள் சரியாகாதது எதுவும் இல்லை. ஆனால் பேசுவதே இங்கு பிரச்சனையாக இருக்கும்போது எதை…. எப்படி சரி செய்ய’ என்று பெருமூச்சு விட்டவள் கணவனை எண்ணி வருந்தினாள்.

இவ்வளவு நாட்கள் இல்லாமல் இப்போது ஏன் இந்த வருத்தம் என்றால் அவளது கணவன் மீது அவளுக்கு உருவான காதல் காரணம்.

நீயில்லாமல் நான் இல்லை என்ற விடலை பருவ காதல் இல்லை இது. இவன்தான் என் கணவன் என் முழு காதலும் அவன் ஒருவனுக்குதான். அவன் என்னவன் யாராலும் இதை மாற்ற முடியாது என்ற மஞ்சள் கயிறு மேஜிக்கால் உருவான காதலாக இருக்குமோ, ஸ்ரீக்கே வெளிச்சம்.

அவனோடு சரியாக பேசியது கூட இல்லை. ஆனாலும் அவன் மீது காதல். ஏன் என்று கேட்டாள் காரணம் தெரியாது. காரணத்தோடு வருவது காதல் இல்லையே. காரணமே இல்லாமல் வருவதுதானே காதல் அப்படித்தான் தீரனும் ஸ்ரீயின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டான்.

ஸ்ரீ ஒவ்வொரு நாளும் அவன் தன்னுடன் ஒரு வார்த்தையாவது பேச மாட்டானா என்று ஏக்கத்தோடு பார்க்க, அவனோ அவள் இருக்கும் பக்கம் கூட திரும்பி பார்க்க மாட்டான். இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்க,

ஸ்ரீயோ சரி ஒன் சைட் லவ் மூட் செம்மையா இருக்கும்னு சொன்னாங்களே நாமும் ஒன் சைடா முதல்ல லவ் பண்ணுவோம் அப்புறம் டபுள் சைட் ஆகி அப்புறம் அப்படியே பிக்அப் பண்ணி போயிடலாம் என்று முடிவெடுத்தவள் அவன் அருகில் இருக்கும் தருணத்தை ரசிக்க துவங்கினாள்.

காதலை உணர்ந்து அனுபவிக்க துவங்கினாள். திருமண பந்தத்தில் உருவான இந்த காதலை அழிக்க என்றே அன்றைய நாளும் வந்தது.

ஸ்ரீ தன் நண்பர்களுடன் ஒருநாள் ஹோட்டலுக்கு சென்றிருந்தாள். தங்களுக்கான டேபிளை தேடி அமர்ந்தவர்கள் சல சலவென பேசி கொண்டிருக்க, தங்களுக்கு தேவையான உணவை ஆர்டர் செய்ய துவங்கினர். ஸ்ரீ தனக்கு தேவையானதை சொல்லிவிட்டு ஹோட்டலை சுற்றி பார்வையை ஓட விட்டாள்.

அப்போது அங்கு ஓரத்தில் இருக்கும் டேபிளில் அமர்ந்திருந்தவர்களில் அவள் பார்வை நிலைக்க தடுமாறி போனவள், நண்பர்கள் முன் எதுவும் காட்டி கொள்ளாமல் தனக்குள் இறுகி போனாள்.

தாங்கள் ஆர்டர் செய்த உணவு வர,இறங்க மறுத்த உணவை கஷ்டபட்டு நீர் குடித்து உள்ளே தள்ளிவிட்டு, அதற்கு மேலும் அங்கு இருக்க பிடிக்காமல் தனக்கு தலை வலிப்பதாக சொல்லி வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.

ஸ்ரீ அங்கு யாரை பார்த்திருப்பாள். அடுத்த எபியில் பார்க்கலாம்…..