“கூப்பிட்டா என்னனு கேக்க மாட்டியா? எல்லாரும் தெரிஞ்சவங்கதானே” என்க மெல்ல தலை ஆட்டினாள்.
“அப்புறம் என்ன பயம்” என்றவனின் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை அவளுக்கே தெரியவில்லையே ஏன் பதட்டம் என்று, மனதிற்குள் கயல்விழியை குனியவைத்து கும்மிக்கொண்டிருந்தாள்.
“எங்க உன் கூட்டாளி வரலையா!” என்றவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள் கொடிமலர்.
“நாளைல இருந்து தாவணியை இடுப்புல பின் பண்ணிக்கோ” என்றவன் விழிகள் அவள் நேத்திரங்களை தவிர வேறு எங்கும் பதியவில்லை, மெல்லிய புன்னகையோடு கடந்து சென்றவன் புல்லட்டை எடுக்கச் சிலையாகச் சமைந்து நின்றாள் கொடி.
கருப்பட்டி பணியாரத்தை ரசித்து ருசித்து விழுங்கிக்கொண்டிருந்த கயல்விழியின் முதுகை பதம் பார்த்தது மலரின் கையில் இருந்த புத்தகம்.
“ஆத்தி” என்று முதுகை தேய்த்துக்கொண்டே அவளைத் திரும்பிப் பார்த்த விழி “அடியே கொரங்கு எதுக்குடி அடிச்ச” என்க.
“எரும காலைல வயிறு வலின்னு இழுத்து போத்திட்டு கிடந்த இப்போ பணியாரத்தை முழுங்கிட்டு இருக்க” என்றவளிடம் ‘ஈ’ என்று பல்லைக் காண்பித்தவள் “நிஜமா காலைல வயித்துவலி டி, கஷாயம் குடிச்சதும் சரியாப்போச்சு” என்று அடுத்த பணியாரத்தை உள்ளே தள்ளினாள்.
“இன்னைக்கு என்ன ஆச்சு தெரியுமா?” என்று அவள் அருகில் அமர்ந்தாள் மலர்.
“என்ன உன் தாவணி இடுப்புல நிக்காம போயிருக்கும் அதானே,நீ தாவணி போட்ட நாள்ல இருந்து இதே கதைதான் இதுல என்ன புதுசு” என்க.
“புதுசுதான் அவங்க வந்தாங்க” என்றாள் மெல்ல, முகம் மென்மையாகி கன்னங்கள் துடுத்தது.
வேண்டும் என்றே “யார் அந்த அவரு!!” என்றாள் விழி.
மலரிடம் மௌனம் “வீரா அண்ணா வந்தாங்களா” என்க “ஹ்ம்ம்” தாவணியை இனிமே பின் பண்ணிக்கோ சொன்னாங்க” என்றாள்.
“ஒஹ்ஹஹ் அவ்ளோ தூரம் போய்டுச்சா,இது எங்க போய் முடியுமோ ஒன்னும் புரியல நல்லது நடந்தா சரி” என்றாள் விழி.
தோழிகள் இருவரும் பணியாரம் உண்டு தேநீர் அருந்தி வீட்டுப்பாடங்கள் முடிக்கத் தங்கையைத் தேடி வந்துவிட்டான் சுகுமார்.
“பாப்பா முடிச்சுட்டியா வாப்போலாம்” என்றவன் குரல் கேட்டு வெளியில் வந்த பூங்கோதை “ஏன்யா தோசை ஊத்துறேன் இங்கயே சாப்பிட்டு சின்னவனுக்கு எடுத்துட்டு போ” என்க.
“சரி” என்று கொஞ்சம் பணியாரத்தை அவனிடம் கொடுத்துவிட்டார், அடுத்த தெருவில் இருக்கிறது மலரின் வீடு.
கொடிமலர்… வீட்டின் கடைக்குட்டி இரண்டு அண்ணன்கள் இரண்டு அக்காக்கள்.
யசோதா சங்கரன் தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் சுகுமாரும் முத்துவும் மூத்தவர்கள் அவர்களுக்குப் பிறகு சுமதியும் கஸ்தூரியும் அனைவருக்கும் இடையில் இரண்டு வயது வித்யாசமே.
யசோதாவின் அண்ணன் மகனுக்குச் சுமதியையும் சங்கரனின் தங்கை மகனுக்குக் கஸ்தூரியையும் மனம் செய்து கொடுத்தனர், அதே ஊரில் மூன்று தெரு தள்ளி அக்கா தங்கை இருக்கிறார்கள்.
அவர்களின் திருமணம் நடக்கும்போது கொடிமலருக்கு இரண்டு வயது, இனி பிள்ளைகள் இல்லை என்று அவர்கள் இருக்க அந்த வீட்டின் இளவரசியாக வந்து பிறந்திருந்தாள் கொடிமலர்.
சங்கரன் அரசு பணியில் இருந்தார் பெரிய பதவியெல்லாம் இல்லை என்றாலும் நிறைவான வாழ்க்கை அவர்களுடையது, கொஞ்சம் நிலம் இருக்க அதில் பருவத்திற்கு ஏற்றப் பயிர்செய்தனர், மிகச் சிறிய கிராமத்து வீடு அவர்களுடையது.
முன்னில் நிறைய இடம் இருந்தது வராண்டாவில் ஒரு சிறிய அறை உள்ளே நுழைந்தால் பெரிய ஹால் அறைகள் கிடையாது அந்த வீட்டில், இறுதியில் ஒரு தடுப்பு வைத்துச் சமையல்கூடம் பின்னில் பெரிய தோட்டம் அங்கே சிறிய கொட்டகையில் விரக்கடுப்பு இருக்கும்,பெண் பிள்ளைகள் திருமணம் முடிந்த பிறகு ஹாலின் ஒரு மூலையில் தடுப்பு வைத்துச் சிறிய ஒரு அறை மட்டும் கட்டினார்கள்.
ஆடம்பரங்கள் இல்லாத எளிமையான வாழ்வு, அன்பு நிறைந்து கிடந்தது அவர்களிடம் ஊரில் பாதி பேர் சொந்தங்களே அனைவரின் அன்பிலும் அரவணைப்பிலும் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டாள் கொடிமலர்.
உடன் பிறந்தவர்களுக்கு அவள் அவர்களுடைய முதல் குழந்தை அப்படித்தான் பார்த்துக்கொண்டார்கள் அவளை, வீட்டின் சுவற்றில் பெரிதாக மாட்டப்பட்டிருக்கும் புகைப்படம் அந்த வீட்டிற்குள் நுழையும் அனைவரையும் ஒருநொடி ரசித்துப்பார்க்க வைக்கும்.
இரண்டு வயதான கொடிமலரை தந்தையின் அன்போடு சுகுமார் கையில் ஏந்தி சாதம் ஊட்டப் முல்லைப்பூவை அவள் தலையில் சூடிக்கொண்டிருந்தான் முத்து, சுமதி கஸ்தூரி திருமணத்தில் எடுத்தது.
கொடிமலரின் மூன்று வயதில் பணியில் இருக்கும்போதே சங்கரன் இறந்துவிட்டார், கல்லூரி படிப்பை முடித்திருந்த சுகுமாருக்கு தந்தையின் வேலை கிடைத்தது குடும்பத்தைத் தாங்கிக்கொண்டான்.
இரண்டு வருடத்திற்கு பிறகு முத்துவும் இணைத்துக்கொண்டான் சுமைகளைத் தாங்க, திருமணம் முடித்துக் கொடுத்த தங்கைகளின் நல்லது கேட்டது அனைத்தையும் பார்க்க வேண்டுமே செலவுகள் இருந்துகொண்டே இருந்தது.
கொடிமலர் தங்களின் மகள் என்ற எண்ணம் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது போலும் இருவருமே திருமணம் செய்துகொள்ளவில்லை, எத்தனையோ முறை கேட்டும் எனக்கு வேண்டாம் முத்துவுக்கு பாருங்கள் என்றான் சுகுமார்.
எனக்கு வேண்டாம் அண்ணனைச் செய்துகொள்ள சொல்லுங்கள் என்றான் முத்து இறுதிவரை இருவருமே துணையை தேடவில்லை போன வருடம் அவர்களின் தாயும் மறைந்துவிட்டார்.
அண்ணனும் தங்கையும் வீட்டிற்குள் நுழைய முத்து அப்பளம் பொறித்துக்கொண்டிருந்தான் “எப்போடா வந்த?” என்ற அண்ணனைப் பார்த்தவன்.
“வேணாம்ண்ணா இதே போதும்” என்றவள் துணிகளை எடுத்துக்கொண்டு குளிக்கப் பின்னில் தடுப்புக்கு செல்ல “பாப்பா இரு தண்ணி சில்லுனு இருக்கு என்னாலேயே குளிக்க முடியல உனக்கு அடுப்புல தண்ணி வெச்சுருக்கேன்” என்ற முத்து அதைச் சரியான பதத்தில் அவளுக்கு விளாவி வைத்தான்.
குளித்துவந்த பிறகு உணவுண்டு கதைகள் பேச அண்ணனின் மடியிலே அப்படியே உறங்கியிருந்தாள் கொடிமலர்.
அவசரம் ஏதும் இல்லாமல் மெல்லமாக கிளைச் சாலையில் வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தான் அதிவீரன், அந்தப் புன்னகை இப்பொழுதும் மறையாமல் ஒட்டிக்கொண்டிருந்தது அவனிதழில்.
காற்றில் முடியிழைகள் நர்த்தனம் ஆட அவன் மனதும் துள்ளிக்கொண்டிருந்தது வலக்கையால் மீசையை முறுக்கியவன் இதழ்கள் “தேன்மிட்டாய்” என்று முணுமுணுத்தது ரசனையாக.
கொடிமலரின் மிகப்பெரிய பலவீனம் தேன்மிட்டாய் பள்ளிக்குச் செல்ல அழும்வேளையில் “அண்ணே சாயந்திரம் உங்களுக்குத் தேன்மிட்டாய் வாங்கி வைப்பேன்” என்று சொல்லிச் சொல்லியே அவளைப் பள்ளியில் விட்டுவருவான் சுகுமார்.
எந்தக் கடைக்குச் சென்றாலும் அவள் தேடும் முதல் விஷயம் தேன்மிட்டாய் அதை அவள் ரசித்துச் சாப்பிடுவதை இவன் ரசித்துப் பார்த்து நின்றிருக்கிறான்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு அவன் மாமா பார்த்திபனுடன் ஒரு கடை வாங்கும் விஷயமாகக் கயல்விழியின் தந்தையை பார்க்கச் சென்றபோது அவரின் மளிகை கடையில் முதன் முதலாக அவளைப் பார்த்தான்.
கடையின் முன்னில் இருந்த வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்து பல்லாங்குழி விளையாடிக்கொண்டிருந்தனர் தோழிகள் இருவரும், கடையில் வேலை செய்யும் பையன் “என்னங்க வேணும்” என்க.
“ராஜப்பன் இல்லையா” என்றார் பார்த்திபன்.
“முதலாளி சரக்கு எடுக்கப் போயிருக்கார் இப்போ வந்துடுவார், நீங்க உக்காருங்க” என்றவன் உள்ளே சென்றான்.
பார்த்திபன் ஏதோ பேசிக்கொண்டிருக்க அதிவீரனின் விழிகள் கொடிமலரில் நிலைத்தது, உள்ளே இன்னதென்று தெரியாத ஒரு உணர்வு அவன் விழி வழி மெல்ல மெல்ல உள்ளே நிறைந்துகொண்டிருந்தாள்.
வண்டி சத்தத்தில் இருவரும் திரும்பிப் பார்க்கச் சரக்குகளோடு வந்து நின்றார் ராஜப்பன், பார்த்திபனை பார்த்தவர் “வாங்க வாங்க இவர் தான் உங்க மாப்பிள்ளையா” என்றவர்.
அவனையும் வரவேற்று “அஞ்சு நிமிஷம் பொருளை எடுத்துவைக்க சொல்லிட்டு வரேன்” என்க.
“பொறுமையா வாங்க” என்றார் பார்த்திபன்.
“ஏத்தா மலரு இந்தா உன்னோட தேன்மிட்டாய்” என்று அவளிடம் நீட்ட ஆசையாக வாங்கிக்கொண்டாள், அதில் ஒன்றை எடுத்து இரண்டாய் பிளந்து அதன் அழகை ரசித்து வாயில் இட்டு விழிகள் மூடி அதன் சுவையில் லயித்தாள், அந்தச் சுவை தன் தொண்டை வழி உள்ளில் நிறைவதாகத் தோன்றியது அதிவீரனுக்கு.
“என்ன இது” என்று தலையைக் குலுக்கிக்கொண்டவன் பார்வையை திருப்பிக்கொண்டான், அவர்களின் முன்னே வந்து அமர்ந்தார் ராஜப்பன் இடத்தைப் பற்றிய விவரத்தைக் கூறி அனைத்தையும் பேசிமுடிக்க, ஒரு முறை பார்த்து விடலாம் என்று அவர்கள் புறப்பட்டனர்.
“எம்மா கொஞ்ச நேரம் கடையைப் பாத்துக்கோங்க” என்று சொல்லிச் சென்றார்.
ஒரு வாரத்திற்கு பிறகு ‘விடுமுறையில் வீட்டில் சும்மா இருக்கிறோமே’ என்று தோழிகள் இருவரும் கணினி வகுப்பிற்கு சென்றனர், அங்கே மாணவர்களை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான் அதிவீரன்.
அவன் மிடுக்கும் தோரணையும் பார்த்த கொடிமலருக்கு கைகள் வேர்க்க தொடங்கியது “ஏய் விழி வாடிப் போய்டலாம், கமலா அக்காகிட்ட தையல் படிச்சுக்கலாம்” என்க.
“இங்க வாங்க” என்றான் அவர்களிடம், விழியன் பின்னில் தன்னை மறைத்துக்கொண்டே அவன் எதிரில் சென்று நின்றாள்.
“பேர் என்ன” என்றான் கயல்விழியிடம், என்ன கோர்ஸ் என்ற விவரத்தைக் கேட்டுக்கொண்டவன் “உள்ள போய் வெயிட் பன்னு வரேன்” என்றான் அவளிடம்.
உடன் செல்லப் பார்த்த மலரைத் தடுத்தவன் “நீ போ” என்க.
தோழியைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே உள்ளே சென்றாள் விழி.
அவளைப் பார்த்து “பேர் என்ன” என்றவனின் விழிகளில் இப்பொழுது ரசனை கொட்டிக்கிடந்தது “கொடிமலர்” என்றாள் மலரின் மென்மையோடு.
“என்ன படிக்கப் போற” என்க.
“கம்ப்யூட்டர் பேசிக்” என்றாள்.
“ஹ்ம்ம், உங்க சார் பேர் தெரியுமா” என்றான் கூர்மையாக அவளைப் பார்த்து.
“ஐயோ தெரியாதே! இந்தக் கேள்வியெல்லாம் அவகிட்ட கேக்கலையே… திட்டுவாரோ” என்றவள் விழிக்க.
சம்மதமாகத் தலை அசைத்தாள் “சரி உள்ள போ” என்றவன் சிரிப்பை அடக்கி நின்றான், மலரின் வாசம் போலக் கொடிமலரும் அவன் அகம் நுழைந்து வாசம் பரப்பினாள்.
“சாரி மாப்ள போன எடத்துல கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு” என்று வந்தான் அந்தச் சென்டரின் உரிமையாளன் அதிவீரனின் நண்பன்.
“பரவாயில்ல… ரெண்டு பொண்ணுங்க வந்தாங்க உள்ள வெயிட் பண்றாங்க” என்றான் ஒன்றும் அறியாதவனை போல.
“ஆமா அவங்க வீட்ல வந்து விசாரிச்சுட்டு போனாங்க” என்றவன் உள்ளே செல்ல “ஒகே நாக்கிளம்புறேன்” என்று விடை பெற்று சென்றுவிட்டான்.
அதிவீரன் இங்கே வேலை பார்க்கவில்லை தங்களுக்கு பாடம் எடுப்பவன் பெயர் அதிவீரன் இல்லை என்பதெல்லாம் அன்றே தெரிந்துவிட்டது அவளுக்கு.
அதன் பிறகும் சில முறை அவனை அங்கே பார்த்திருக்கிறாள், உண்மையில் மறக்க முடியவில்லைதான் அந்தப் பெயரையும் அதைச் சொன்னவனையும் குறும்பு மின்னும் விழிகளையும் வசீகரிக்கும் அந்தப் புன்னகையையும்.