நஞ்சினாலான அமுதன்!

14

கிருபாவின் கோவம் என்னமோ குறையவேயில்லை. நிராகரிப்புகள் புதிதல்ல அவளுக்கு. ஆனால், ஈசனின் நிராகரிப்பை அவளால் ஏற்க முடியவில்லை. பரபரப்பாக இருந்தாள். காலையில் சீக்கிரமாக எழுபவள்.. இன்னும் நேரமாக எழுந்து ஜாக்கிங் செல்ல தொடங்கினாள். கடைக்கு இன்னும் சீக்கிரமாக கிளம்பினாள். மதியம் தாமதமாக வந்தாள். என்னமோ ஒய்வு எடுக்க முடியவில்லை அவளால். அவன் வந்து நின்றுக் கொள்ளுகிறான்.. மூளையில்.

ஈசனுக்கும் அதே நிலைதான். கேஸ், தாத்தா.. சண்முகம்.. இவர்களை எல்லாம் விட.. தவிர்க்க முடியாதவளாக கிருபா.. அவளை நன்றாக பார்த்துக் கொள்ளவேண்டும்.. அதனாலேயே நான் சரியாக இன்னும் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டான் ஈசன்.

ஆனால், இருவரும் பேசிக் கொள்ளவில்லை. 

தாத்தா, ஈசன் சொல்லிவிட்டு போனதால்.. தனது வக்கீல் அழைத்து பேசினார். எப்போது  சென்னை செல்ல வேண்டும்.. என கேட்டுக் கொண்டார். இங்கிருந்த வக்கீல்.. சென்னையில் இருக்கும் தனது சினீயாருக்கு அருணாசலத்தினை பேச வைத்து.. விவரங்கள் கேட்டுக் கொள்ள வைத்தனர். ஆக, கேஸ்.. சென்னை வக்கீலுக்கு மாறிவிட்டது.

கிருபா, முன்பும்  ஷண்முகம் மாமாவிற்கு அழைத்து ஓய்ந்து போனாள். இப்போது, ஈசன் ஊருக்கு சென்றுவிட்டான் என ஒரு மெசேஜ் செய்துவிட்டு.. மாமாவிற்கு அழைத்தாள் பெண். சண்முகமும் அந்த அழைப்பினை ஏற்றார்.

கிருபாவிற்கு மாமாவிடம் பேசுவது சந்தோஷம் என்றாலும்.. ஈசன் போய்விட்டார் என்றதும்.. அந்த வார்த்தைகள் அவளுக்கு வெறுமைதான் வந்தது. ஷண்முகம் “ம்கூம்.. கிளம்பிட்டானா” என்றார்.

கிருபா “மாமா, நீங்க எப்படி இருக்கீங்க.. அவர் ஒத்தருக்காக, எங்க எல்லோரையும் தள்ளி வைப்பீங்களா” என்றாள்.

ஷண்முகம் “இல்லை டா.. இல்லடா.. அவனை பார்த்தாலே கோவமா வருது. அவனை பற்றி பேச வேண்டாம். விடு, எப்படி இருக்கீங்க எல்லோரும்..” என்றார்.

கிருபா பாட்டி பற்றி சொன்னாள்.. தாத்தா பற்றி சொன்னாள். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.. இருவரும். அப்போது கிருபா கேஸ் பற்றி சொன்னாள்.. “நம்ம வக்கீல், சென்னையில் ஒரு வக்கீலை சொல்லி இருக்காங்க. தாத்தா சென்னைக்கு வரணும் மாமா.. நீங்க வக்கீலை பார்க்குறீங்களா.. எப்படி, எது வசதி மாமா” என்றாள்.

ஷண்முகம் “அப்பா என் பேச்சையெல்லாம் கேட்க்க மாட்டார் கிருபா, அவர் வரட்டும்.. நீயும் வந்திடு அவர்கூட.. வக்கீல் என்ன சொல்றாரோ செய்துக்கலாம்” என்றார்.

கிருபா “ம்.. சரி மாமா.. பாட்டிகிட்ட பேசுங்க” என்றாள்.

ஷண்முகமும் சரி என சொல்லி அழைப்பை துண்டித்தார்.

தாத்தாவும் கிருபாவும் ஈசன் சென்று இரண்டு வாரத்தில் சென்னை கிளம்பினர். நேராக ஷண்முகம் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். ஒருநாள் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு.. மறுநாள் வக்கீலை பார்ப்பதற்கு என.. கிருபாவும் தாத்தாவும்தான் சென்றனர்.

சண்முகம், காலையில் வந்த தந்தையிடம் வரவேற்பாக தலையசைத்தார் அவ்வளவே. மீனாட்சிதான் மாமனாரை கவனித்தாள். முன்போல ஏதும் பேசிக் கொள்ளவில்லை. சபையில் என் பேரன் என மாமனார் சொல்லிவிட்டாரோ, அதிலிருந்து பங்காளி ஆகிபோனான் ஈசன். அதனால், உன் மாமனாரை பகைக்காதே என மீனாட்சிக்கு.. அவளின் உறவுகள் எடுத்து சொல்லியிருக்க.. மீனாட்சி.. எந்த கேள்வியும் கேட்க்காமல் மாமனாரை கவனித்தார்.

ஷண்முகம், எதுவும் சொல்லவில்லை. ஆனால், இத்தனை வருடம் பார்த்த என்னை விட்டு விட்டாரே தந்தை.. என தார்மீக கோவம் மகனுக்கு. மகனோ, மகளோ.. தந்தைக்கு தாங்களே.. பெரிதாக இருக்க வேண்டும் என எண்ணுவோம். அதிலும், சங்கர் போல ஒருவர்.. அவமானம் இழைத்து சென்ற போது.. தந்தையை தாங்கி நின்ற என்னை ஒதுக்கிவிட்டாரோ என் தந்தை. என் உழைப்பு.. என் அருமை என் தந்தைக்கு புரியவில்லையோ என ஒரு ஆதங்கம்.. ஷண்முகத்திற்கு. அது கோவமாக மற்ற்வர்களுக்கு தெரிந்தாலும்.. தந்தை மகனின் பனி போர் இது.

அருணாசலம், எதையும் காட்டிக் கொள்ளவில்லை. மருமகளிடமும் எப்போதும் போல நடந்துக் கொண்டார், பேத்தி தாத்தா என ஆசையாக பேசினாள்.

மறுநாள் கிருபாவும் தாத்தாவும் வக்கீலை பார்த்துவிட்டு வரும் போது, தாத்தாவிற்கு அழைத்தான் ஈசன். தாத்தா நேற்றே வந்துட்டோம் ப்பா.. எப்படி இருக்க, என்ன சாப்பிடுற..” என வினவினார்.

ஈசனும் எல்லோரும் எப்படி இருக்கின்றனர் என வினவினான்.. “உங்க துணைக்கு கிருபா வந்திருக்காளா” என அப்பட்டமாக கேட்டான். கிருபா தாத்தாவின் அருகில்தான் இருந்தாள்.

தாத்தாவும்.. “அவள் இல்லாமல் நான் வருவேனா.. கடையை ராமிடம் விட்டு விட்டு, அவளை கூட்டி வந்துட்டேன்.” என்றார் பெரிதாக சிரித்துக் கொண்டே.

இந்த மூவருக்கும் இந்த பதில் அத்தனை அர்த்தமானதாக இருந்தது.

மாலையில், கிருபாவிற்கு அழைத்தான் ஈசன். அப்போதுதான் மதியம் உறங்கி எழுந்து அமர்ந்திருந்தாள். ஈசனின் அழைப்பு அவளை எழுப்பியது எனலாம். எடுப்பதா வேண்டாமா என அவளுக்கு போராட்டாம்.

மூன்றாம் முறையும் விடாமல் ஈசன் அழைக்கவும் எடுத்தாள் பெண் .. ஈசன் அவள் அழைப்பை ஏற்றம் இரண்டு நொடிகள் பேசவில்லை. என்னென்னமோ சொல் வேண்டும் என எண்ணம்.. ஆனால், போனில் எதை முதலில் பேசுவது.. என்ன கேட்பது என அவனுக்கு தயக்கமாக இருக்க அமைதியாக இருந்தான்.

கிருபா “சொல்லுங்க” என்றாள் அழுத்தமான குரலில். என்னமோ தொண்டையை அடைத்தது.. அன்னிக்கு கோவமாக பேசினேன்.. என்னை எந்த வகையிலும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை.. இப்போது எதற்கு இந்த அழைப்பு.. தாத்தா பேசியதும் ஞாபகம் வந்துவிட்டதோ என மனது குழப்பிக் கொள்ள.. தொண்டை அடைத்து பெண்ணுக்கு.

ஈசன் “எப்படி இருக்க..க்கும்..” என்றான்.

கிருபா “ம்.. நல்லா.. திவ்யமா இருக்கேன். மூனுக்கு நாலுவேளை சாப்பிடுறேன்.. ரெண்டுகிலோ வெயிட் போட்டிருக்கேன்” என்றாள் படபடப்பாக.

ஈசனும் அசராமல் “ம்.. இருப்ப இருப்ப.. அதான் உங்க ஆசை மாமா வீட்டில் இருக்கில்ல, இன்னும் வெயிட் போடத்தான் செய்யும்.. சந்தோஷமாதான் இருப்ப” என்றான்.

கிருபாவிற்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை.

ஈசனே “கோர்ட்டுக்கு போயிட்டு, மறுநாள் நம்ம வீட்டுக்கு வாங்க தாத்தாவும் நீயும். அதை சொல்லத்தான் கூப்பிட்டேன். சஹா நாளைக்கு நைட் கிளம்பி வருவாள்.. ஒருநாள் வந்துட்டு போங்க” என்றான், அதட்டலாக.

கிருபாவிற்கு இது எவ்வளோ பெரிய சிக்கல் எனதான் தோன்றியது. அதுவும் சனிகிழமை.. சம்பூர்ணா வீட்டில் இருப்பாள்.. எப்படி வருவது.. மாமாவிடம் என்னவென சொல்லுவது என கலவரமானது அவளின் மனது.

கிருபா “தாத்தாகிட்ட சொல்லிட்டீங்களா” என்றாள்.

ஈசன் “அவரிடம் நான் சொல்லிடுறேன்.. இது ஸ்பெஷலி போர் யூ..” என்றான், குரல் மெல்லிதாக இருந்தது..

கிருபாவிற்கு அத்தனை கலக்கத்திலும், மனது பூவாக மாறியது. ஏதும் பேச தோன்றாமல் நின்றாள்.

ஈசன் “கொஞ்சம் உன்னோட கடை.. கடமை.. தியாகம்.. உங்க மாமா.. எல்லாத்தையும் அங்கேயே விட்டுட்டு வா.. என்னையும்.. நம்மையும்.. க்கும்.. மனசுல வைச்சிகிட்டு வா.. ம்..” என்றான் அதட்டலா அன்பா என தெரியாத குரலில்.

கிருபா அமைதியாகவே இருந்தாள். தெரியவில்லை அவளுக்கு இதெல்லாம் நடக்குமா என.. இவ்வளவு ஆசையாக கூப்பிடுகிறவனை எப்படி மறுப்பது என தெரியவில்லை. அதனால் சரி.. இல்லை.. என எந்த வார்த்தையும் சொல்லவில்லை.

ஈசனே “என்ன, எனக்குனா மட்டும், வாய் திறக்காதே.. ஏதாவது சொல்லு” என்றான் மிரட்டலாக.

கிருபா “தாத்தாகிட்ட பேசுங்க” என்றாள்.

ஈசன் “அது வேற.. நான் நம்மை பத்தி கேட்க்கிறேன்” என்றான் அன்று போல..

கிருபாவும் “நாம் என்பதே.. அவர்களும் சேர்த்துதான்” என்றாள்.

ஈசன் “உனக்கு எப்படி டி, தைரியமாக மாப்பிள்ளை பார்த்தார்கள் உன் வீட்டில், நீ தொட்டதுக்கும் எங்க தாத்தா.. மாமான்னா?, எப்படி கல்யாணம் செய்துக்குவான் வருகிறவன்” என்றான் சந்தேக குரலில்.

அவ்வளவுதான், கிருபாவிற்கு அப்படி ஒரு கோவம் அழைப்பை துண்டித்துவிட்டாள்.

ஈசன் தன்னையே நொந்துக் கொண்டான். இனி அவள் அழைத்தாலும் எடுக்கமாட்டாள் என எண்ணி தாத்தாவிற்கு அழைத்து விஷயத்தை சொன்னான்.

தாத்தா “பார்க்கலாம் பா, கிருபா சம்பூர்ணா சஹா என பிள்ளைகள் எல்லாம் வெளியே போய்ட்டு வாங்க.. எனக்கு ஒய்வு வேணும்ப்பா.. அடுத்தமுறை அங்கே வரேன்” என்றார்.

ஈசன் “தாத்தா வாங்க,” என அடம்பிடித்தான்.. 

தாத்தா “நீ கௌரவம் பார்த்து உன் வீட்டுக்கு வந்திடுவா.. நான் வரணுமா டா அங்க” என்றார் அதட்டலாக.

ஈசன் அமைதியானான்.

தாத்தா “ஒழுங்கா.. அங்க வந்து வேலையை பாரு.. உன் பெரியப்பன் கோவபட்டான்னு இனி நீ தனியாவெல்லாம் இருக்க வேண்டாம். அவனை எப்படி பார்க்கனும்ன்னு எனக்கு தெரியும். வா, அங்க வந்து சேர்” என்றார் அதட்டலாக.

ஈசன் “ம்..” என்றான் ஈன ஸ்வரத்தில்.

தாத்தா மீண்டும் அவனை அதட்டிவிட்டு, போனை வைத்தார்.

மறுநாள் சண்முகமும் கோர்ட்டுக்கு வருவதற்காக கிளம்பினார். தாத்தா மருமகளிடம் “இங்க பாரும்மா, யாரோட உதவியையும் எனக்கு தேவையில்லை. அன்னிக்கு எப்படி என்னை எல்லோரின் எதிரிலும் தனியாக விட்டு வந்தவன்.. இப்போது எதுக்கு கோர்ட்டுக்கு வரான். நான் பார்த்துக்கிறேன். இன்னும் என் மனசில் தெம்பு இருக்கு.. நான் பார்த்துக்கிறேன். அவன் வேலையை பார்க்க சொல்லு” என்றார் கர்ஜனையாக.

கிருபா “தாத்தா, மாமா வரட்டுமே.. இதென்ன தாத்தா இப்படி சொல்றீங்க” என்றாள்.

தாத்தா “ஏன் ம்மா, அங்கேயும் வந்து இவன் குதிப்பான். கேஸ்’சினை சுமூகமா முடிக்க போறோம். எல்லாம் எழுதி கொடுத்தால் போதும்ன்னு வக்கீல் சொல்றாரு. இவன் ஈசனை கண்டால்.. பேசுவான் பிரச்சனைதான் ஆகும்” என்றார்.

கிருபா பேசும் முன்.. ஷண்முகம் “யாரு, நான் பிரச்சனை பண்றேன்..” என்றார் காட்டமாக.

அருணாசலம் “ஆமாம் டா.. நீதான். இதெல்லாம் நான் சம்பாதித்தது. வீடு மட்டும்தான் பரம்பரை வீடு. உன் தாத்தாவெல்லாம்.. வெளிநாட்டில் போய் வேலை பார்த்தாங்க. அவ்வளவுதான். அதனால், எல்லாம் என்னோட வருமானத்தில் சேர்த்தது. நீ நினைப்பது போல்.. உனக்கு மட்டுமே எல்லாவற்றையும் கொடுக்க முடியாது. சங்கர் கோகிலா நீ.. என மூவருக்கும் பங்கு உண்டு. தெரிஞ்சிக்க.. எனக்கு பிறகு குடும்பத்தை காக்கும் பெரியவன் நீ.. பக்குவமா நடக்க கத்துக்க சொல்லிட்டேன்” என்றவர் தன் அறைக்கு சென்றுவிட்டார்.

ஷண்முகம் சிறுபையன் போல.. புலம்பிக் கொண்டே உண்டு விட்டு, அலுவலகம் கிளம்பினார்.

அதன்பின்னே தாத்தா வெளியே வந்து உண்டு கிளம்பினார்.

கோர்ட் வந்தனர் தாத்தாவும் கிருபாவும். வக்கீலும் சற்று நேரத்தில் வந்து சேர்ந்தார். 

ஈசனும் வந்து சேர்ந்தான்.

இவர்கள் முறை மதியத்திற்கு மேல் ஆனது. நீதிபதி சங்கரின் மரணம் பற்றி கேட்டுக் கொண்டார்.. தாத்தா, நாங்கள் பார்த்தோம்.. நல்லவிதமாக எல்லாம் நடந்தது. எங்கள் பேரன்தான் இவன். நடுவில் எதோ கோவம், அதனால், சங்கர்’ரை பார்க்கவில்லை. இனி இது எங்கள் குடும்பம். என எல்லாம் சொல்ல.. நீதிபதி திருப்த்தியாகி.. இருதரப்பும் ஒத்து போகிறது என கேஸ்’னை முடித்தார்.

சண்முகம் வந்து கையெழுத்து  இட வேண்டும் என்றனர். அதனால், கிருபா சண்முகத்தை அழைத்து பேசினாள். எனவே, அவர் வந்து கையெழுத்து இட்டு.. என வேலை முடிய.. மாலை ஆகிவிட்டது. ஒரேநாளில் வேலை முடிந்ததே பெரிய விஷயமாக இருந்தது எல்லோருக்கும்.

சண்முகம், ஈசனை முறைத்துவிட்டுதான் சென்றார். தந்தையின் பேச்சை மீறி ஏதும் கலாட்டா செய்யவில்லை. அதுவே அருணாசலத்திற்கு போதுமானதாக இருந்து.

தாத்தா, ஈசனிடம் விடைபெற்று கிளம்பினார். கிருபா குழப்பத்திலேயே இருந்தாள். ஈசன் கண்களால் அவளுக்கு விடை கொடுத்தான். பெண்ணவள்.. கண்களால் கூட பதில் கொடுக்கவில்லை.

ஈசன், இரவு கிருபாவிற்கு அழைத்தான்.. எடுக்கவில்லை, கிருபா.

சஹா அழைத்தாள்.. கிருபா தவிர்க்க முடியாமல் அழைப்பை ஏற்றாள். சஹாவும், அண்ணன் சொன்னதை சொன்னாள். கிருபாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பார்க்கிறேன் என சொல்லி வைத்துவிட்டாள்.

மறுநாள் காலையிலேயே தாத்தா, கிருபா சம்பூர்ணா இருவரிடமும் “சஹா வந்திருக்காலாம் கிருபா, உங்களை திநகர் வர சொல்லியிருக்காள். பத்து மணிக்கு போயிட்டு வாங்க.. நான் சரின்னு சொல்லிட்டேன் போயிட்டு.. வாங்க.” என்றார்.

சண்முகம் “எதுக்கு, அதெல்லாம் வேண்டாம்” என்றார்.

தாத்தா அழுத்தமாக பார்த்தார் மகனை. 

மீனாட்சி “மாமா சொல்றாங்க, நீங்க அமைதியாக இருங்க” என்றாள்.

சம்பூர்ணாவிற்கு கொண்டாட்டம். இன்று அவளுக்கு பள்ளி இருந்தது. அம்மாகூட அதைபற்றி கேட்டாக்காததால்.. ஜாலியாக கிளம்பினாள் பெண். 

கிருபாவிற்கு என்னமோ பயம்தான். ஏனோ ஒரு நல்ல சூழலை கூட அவளால் ஏற்க முடியவில்லை இந்த பெரியவர்களோடு பழகி.. எல்லாம் சரியாக இருக்கனும்.. எப்போதும் தப்பு நடக்க கூடாது.. என ஒரு சித்தாந்தம் போல.. இந்த சூழலை அவளால் ஏற்க்க முடியவில்லை தயக்கம்தான்.

முகம் அந்த தயக்கத்தை காட்டிக் கொண்டே இருந்தது திநகர் செல்லும் வரை. சம்பூர்ணா பேசிக் கொண்டே வந்தாள்.. எனக்கு இது வேண்டும்.. அது வேண்டும் என. 

கார் திநகரில் ட்ராப் செய்ததும்.. ஈசன் சஹா காரில் நின்றனர். இவர்களை பிக்கப் செய்துக் கொண்டனர்.

சம்பூர்ணா “சஹா அக்கா.. எப்படி இருக்கீங்க” என்றாள்.

அடுத்து சம்மு “அண்ணா எப்படி இருக்கீங்க” என்றாள் ஈசனை பார்த்து.. ஈசனும் “ஞாபகம் இருக்கா உனக்கு.. உங்க அப்பா மாதிரி” என எதோ பேச வர..

கிருபா “இவகிட்ட ஒழுங்கா பேசுங்க” என்றாள்.

ஈசன் புன்னகை மாறாமல் கிருபாவை பார்த்து“எஸ் பாஸ்” என்றவன், “நல்லா இருக்கேன் சம்பூர்ணா” என்றான்.

அதன்பின் எங்கே செல்வது என சஹா சொல்ல.. சம்பூர்ணா மேலும் சில இடங்கள் சொன்னாள். இருவரும் பேசி.. வேறு இடம் சொல்லினர். ஆனால், கிருபாவும் ஈசனும் ஒருவரை ஒருவர் பார்த்து.. இதம் கொண்டனர்.

மாலை மூன்று மணி வரை.. மால், ஹோட்டல் என சுற்றினார். சஹா உடைகள் ஷூ மேக்கப் திங்க்ஸ் என வாங்கினாள். 

கிருபா, எதோ எடுக்க வேண்டுமே என.. சம்பூர்ணாவிற்கு உடைகள், தனக்கும் இரண்டு என எடுத்தாள். பின் ஈசனை கண்டு அவனுக்கு என டி-ஷர்ட் எடுத்தாள். வீட்டில் எல்லோருக்கும் என ஏதேதோ பொருட்கள் வாங்கினாள். 

ஈசன், அவ்வபோது கிருபாவின் அருகே வந்து நின்றான்.. அவள் முறைக்கவும் தள்ளி நின்றுக் கொண்டான். பேச்சுகள் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், கிருபாவின் மனம் இப்போது தயக்கத்தை விட்டு.. புன்னகைக்கு மாறி இருந்தது. கலகலவென சஹா சம்முவோடு பேச தொடங்கினாள்.

உண்டு மதியம் மூன்று மணிக்கு மேல்.. ஈசன், கிருபா சம்பூர்ணம் இருவரையும், அவர்கள் வீட்டில் இறக்கிவிட்டான். மனதேயில்லை தன் வீட்டிற்கு கூப்பிட்டு போக வேண்டும் எனத்தான் ஆசை, ஈசனுக்கு. 

ஆனால், தாத்தா.. எங்காவது போயிட்டு வாங்க எனத்தான் சொல்லியிருந்தார். அதனால், ஈசன் கண்ணியமானவனாக நடந்துக் கொண்டான்.

இப்போது இறங்கும் போது.. கிருபாவின் கையில் ஒரு பாக் கொடுத்தான்.. கிருபாவிற்கு பிள்ளைகள் எதிரில் என்ன இது என தோன்றினாலும்.. மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். பிள்ளைகள் இறங்கி இருந்தனர்.

கிருபா, அவனுக்கு என வாங்கியிருந்த டி-ஷர்ட் எடுத்து கொடுத்தாள்.  ஈசன் “தேங்க்ஸ்” என சொல்லி.. அவளின் விரல்களை பற்றினான் இறுக்கமாக. கிருபாவும் அசையவில்லை ஆடவில்லை.. கண்களால் அவனையே பார்த்திருந்தாள். இருவரும் தளும்பி நின்றனர்.. என்ன நடக்கிறது எங்களுக்குள் என தெரிகிறது.. ஆனால், அதை காட்டிக் கொள்ள முடியாமல் தவித்தனர். ஈசன் “உன்கிட்ட தப்பா ஏதாவது பேசியிருந்தால்.. மறந்துடு” என்றான்.

கிருபா ஏதும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.

ஈசன் “கிருபா, நான் வேற கம்பெனி  பார்த்துட்டேன்.. ஆன்சைட் போறேன்.. க்கும்..” என சொல்லி.. யாரும் அறியாமல் அவளின் விரல்களை அழுத்தினான்.. இல்லை இறுக்கிக் கொண்டான்.. விடேன் என..

“தொடு வானமாய் பக்கமாகிறாய்..

தொடும் போதிலே.. 

தொலைவாகிறாய்..”

கிருபா அதிர்ந்து அவனை பார்த்தாள்.

சம்பூர்ணா “அக்கா போலாமா” என்றாள்.. தலையை மட்டும் காரின் உள்விட்டு..

கிருபா அனிச்சையாய், கையை இழுத்துக் கொண்டு விடைபெற்றாள்.. கண்களால் ஈசனிடம்.