கிருபாவிற்கு, ஷண்முகம் மாமா.. அப்படி கோவமாக சென்றது.. ஈசனின் மேல் கோவத்தை கொடுத்திருந்தது. அவள் மாமாவிற்கு அழைத்தாளும் எடுக்கவில்லை அவர். ஷண்முகம் என்றவரின் கவலைதான் வீட்டில் எல்லோருக்கும்.
நாட்கள் இயல்பாக தொடங்கியது.
ஆனால், ஈசனின் நாட்கள் இயல்பாக இல்லை அங்கே. என்னமோ வெறுமை.. ஷண்முகம் சொல்லுவது போல.. ஒட்டிக் கொண்டு வந்த நிலையோ என உணர்ந்தான். அப்பா இருந்தவரை தெரியவில்லை. அவர் சென்றதும்.. மீண்டும் ஒரு தனிமையை உணர்ந்தான்.
முன்பு இருந்த தனிமை வேறு, ஒரு குடும்பத்தில் இருந்த தனிமை. எங்களுக்கு நாங்கள்.. என்ற தனிமை. அதில் பெரிதாக பயம் இல்லை.. ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக.. அன்பாக சென்றது நாட்கள்.
ஆனால், இந்த தனிமை.. எதோ சாபமாக தோன்றியது அவனுக்கு. அப்பா எல்லோரையும் தங்களுக்கு என சொல்லி சென்றிருக்கிறார். ஆனாலும் சத்தமில்லா சாபமாக இந்த தனிமை அவனை கொள்ளுகிறது. அறையைவிட்டு, வெளியே வர தயக்கமாக இருக்கிறது.. உணவு உண்ண ஒரு தயக்கம்.. இங்கிருந்து போகவும் தயக்கம்.. இவர்களையும் விட்டுவிட்டு பிரிந்தால்.. ஊருக்கு சென்றுவிட்டால்.. திரும்ப எப்படி வருவேன்.. என்ன காரணம் சொல்லி வருவேன் என தயக்கம். அதைவிட முக்கியமாக யாருமே.. கேஸ் பற்றி கேட்கவேயில்லை. எப்போது வாபஸ் வாங்குவாய் என்றோ.. ஏன் கேஸ் கொடுத்தாய் என்றோ ஒருவார்த்தை கேட்கவில்லை. அவனை உறுத்துகிறது. எத்தனை நம்பிக்கை.. என்மேலா இல்லை, அப்பாவின் மேலா.. அதை நான் எப்படி..எதிர்கொள்வேன் என்ற எண்ணமும் ஒருசேர எழ.. ஈசன் முடங்கினான் தனக்குள். கிருபாவை பார்க்கவே அவனுக்கு சங்கடமாக இருக்கிறது. அது அவனுக்கு கொஞ்சம் சங்கடமாகவே இருக்கிறது.
ஈசனை வெளியே காண்பதே அரிதானதாக இருந்தது வீட்டாருக்கு. பாட்டி உண்ணும் போதெல்லாம் “ஈசா” என அழைப்பார். அவன் குளித்துக் கொண்டிருப்பான் இல்லை.. வேலையில் இருப்பான். கண்ணம்மா அக்கா “அப்புறம் சாப்பிடுறேன்னு சொல்லிட்டாங்க” என்பார்.
கோகிலா அறைக்கே சென்று அழைத்து வருவார்.. ஆனாலும் ஈசனுக்கு எதோ கூச்சம். ஓரிருநாள் வந்து உண்பான். அடுத்தநாட்கள் தனக்குள் முடங்கிக் கொண்டான்.இப்படியே அவனின் யோசனையும் நேரமும் கடந்தது.
ஈசன், கேஸ் வாபஸ் வாங்குவது பற்றி வக்கீலிடம் பேசினான். அவரோ.. நேரில் வந்து ஒரு தரப்பும்.. ஒத்து போகிறோம் என கையெழுத்து போட வேண்டும் என்றுவிட்டார். ஈசனுக்கு, தாத்தாவிடம் எப்படி சொல்லுவது என யோசனை.
கிருபா.. தாத்தா.. கண்களில் ஈசன் படவேயில்லை. தாத்தா, கிருபாவோடு காலையில் கடைக்கு சென்றுவிட்டார். அதனால், ஈசன் உண்டானா என கேட்பார்.. அசதியில் உறங்கிடுவார். அடுத்த ஒருவாரமும் ஈசனின் நிலை இதுதான்.
ஆனால், கிருபாவிற்கு, ஈசன் வெளியே வராதது.. என்ன திட்டம் போடுகிறானோ என்ற எண்ணத்தைதான் கொடுத்தது. அதுவும் ஷண்முகம் மாமா அப்படி சென்றது.. கிருபாவின் மனதில் ஈசன் மேல் வெறுப்பை விதைத்திருந்தது. ஏன் இன்னும் கேஸ் வாபஸ் வாங்கவில்லை என அவனை கேட்க வேண்டும் என எண்ணிக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால், நேரம் அமையவில்லை. ஆனாலும், மனதில் ஒரு சாப்ட் கார்னர்.. என்னாச்சு அவன் ஏன் வெளியே வரவில்லை.. எப்போ சாப்பிடுறானோ.. என ஒரு சாப்ட் கார்னர் இருக்கவே செய்கிறது அவளுக்கு. ஆனாலும் மாமாவை அவன் போசியது அவளால் மன்னிக்கவே முடியவில்லை.
ஆனால், சஹா அண்ணனனுக்கு நேர் எதிராக தினமும் கோகிலாவிற்கு அழைத்து பேசுவாள். தாத்தா பாட்டிக்கு அழைப்பாள். இரவில் கிருபாவிற்கு என எல்லோரோடும் பழகினாள்.. பேசினாள்.
இன்று கிருபாவிற்கு எழ முடியவில்லை. தாத்தா, எப்போதும் போல கிளம்பிவிட்டார்.. பேத்தியை தேடினார். கோகிலா அப்போதுதான் “அவளுக்கு உடம்பு முடியலை அப்பா, மாத்திரை கொடுத்திருக்கேன். பார்க்கணும்” என்றார்.
தாத்தா கிருபாவின் அறைக்கு வந்தார்.. பேத்தியின் நெற்றியில் கை வைத்து பார்க்க.. உடல் சுட்டது லேசாக. முகமெல்லாம் சிவந்து.. இருந்தது. பெண் போர்த்தி படுத்திருந்தாள்.
தொடர் பேச்சு சத்தத்தில்தான் கண்விழித்தாள் கிருபா. தாத்தா “என்ன டா, என்ன ஆச்சு.. கிளம்பு, ஹாஸ்ப்பிட்டல் போகலாம்” என்றார்.
கிருபா “பார்க்கலாம் தாத்தா, டேபிலேட் எடுத்திருக்கேன். கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து பார்க்கிறேன் தாத்தா.” என்றாள். அப்படியே உறங்கவும் தொடங்கிவிட்டாள்.
தாத்தா, செய்வதறியாது திண்ணையில் ஈசி சேரில் அமர்ந்துக் கொண்டார். என்னமோ அவருக்கு கிருபா இல்லாமல் ஒன்றும் ஓடாது. போனில் பேசி கடையை கவனித்துக் கொள்ளும் படி.. ராம்மிடம் சொல்லிவிட்டு.. அமர்ந்துக் கொண்டார்.
கிருபாவின் அறைக்கே உணவு வந்தது. எழுந்துக் கொள்ளவில்லை பெண் மாலை வரை.
மாலையில் கடையிலிருந்து கிருபாக்கு முதலில் அழைப்பு வந்தது. கிருபா, எடுக்கவில்லை. அதன்பின் தாத்தாவிற்கு அழைப்பு வந்தது.
ராம் அழைத்திருந்தார் “அய்யா, நம்ம டயர் கடைக்காரன் வந்திருக்கானுங்க அய்யா, லைட் போடலை ஏதும் செய்யலை.. சாமான்கள் எல்லாம் லாரியில் ஏற்றிக் கொண்டு இருக்கான் போல.. லாரி பின்னாடி நிக்குது. கடைக்கிட்ட சத்தம் கேட்கவும், போய் பார்த்தோம். கடையை காலி செய்துக்கிட்டு இருக்கான். நீங்க வரீங்களா.. கிருபாவுக்கு கூப்பிட்டேன். பாப்பா எடுக்கலை” என சொல்லி நிறுத்தினார்.
தாத்தா “என்ன டா, வந்திருக்கானா.. ஆறுமாச வாடகை கொடுக்கலை.. கடையை கரியா செய்துவைச்சிட்டு.. சொல்லாமல் கொள்ளாமல் எங்க போறான். வரேன்.. நீ பிடி.. இல்ல, பத்துநிமிஷத்தில் வந்திடுவேன்.. வை” என சொல்லி பார்க்க மணி 7க்கு மேல்.. டிரைவர் வீடு சென்றிருப்பார்.
என்ன செய்வது.. கிருபாவுக்கும் முடியலை என தாத்தா உள்ளே வந்து கோகிலாவிடம் சொல்லிக் கொண்டு இங்கும் அங்கும் நடக்க.. பாட்டி “ஈசனை கூட்டி போங்க” என்றார்.
தாத்தா “கூப்பிடு” என சொல்லி கொண்டே தயாரானார்.
கோகிலா வந்து சொல்லவும்.. ஈசன் “போலாம் அத்தை” என சொல்லி தயாராகி கார் சாவி எடுத்துக் கொண்டே வெளியே வந்தான்.
ஈசன் “ஏன் தாத்தா.. பிரச்சனை ஏதும் பன்றானா.. கிருபா தனியாவா இருக்காங்க.. மணி வேற எட்டு.. வேலை செய்யறவங்க இருக்காங்கல்ல” என கேட்டுக் கொண்டே கார் ஓட்டினான்.
தாத்தா “கிருபா இன்னிக்கு கடைக்கே போகலை ஈசா. உடம்பு சரியில்லை அவளுக்கு. நானும் கடைக்கு போகலை. இல்லனா, முன்னமே கிருபா பார்த்திருப்பா.. பாரேன் யாருமில்லா நேரம் பார்த்து வந்திருக்கான்.” என தாத்தா பேசிக் கொண்டே வர.. ஈசனுக்கு, கிருபாவிற்கு உடல்நலமில்லை என்ற இடத்திலேயே ‘எனக்கு ஏன் சொல்லலை’ என எண்ணிக் கொண்டான்.
தாத்தா வழி சொல்லும் போதுதான், ஈசன் சுதாரித்தான் “தாத்தா, எனக்கு தெரியும். நீங்க டென்ஷன் இல்லாமல் உட்காருங்க.. நான் சீக்கிரம் போய்டுவேன்” என சொல்லி அமைதியாகினான்.
அப்படியே சீக்கிரம் வந்துவிட்டான். தாத்தா சொன்ன இடத்திலேயே காரை நிறுத்திவிட்டு.. தாத்தாவோடு வந்தான். வேலை செய்யும் ஆட்கள் மட்டுமே இருந்தனர் போல.. கடையை வாடகைக்கு எடுத்தவன் இல்லை.
பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தவர்களிடம்.. தாத்தா “எங்க அந்த விவேக்.. சத்தமில்லாமல் திருடன் மாதிரி, சொல்லாமல் கொள்ளாமல் சாமான்களை எடுக்கிறான். எங்க டா அவன்” என்றார்.
பணியாளர்கள் “தெரியாதுங்க.. சாவி கொடுத்து எடுத்துக்க சொன்னாங்க, அவரை எங்களுக்கு தெரியாது. எங்க முதலாளி சொன்னாங்க நாங்க எடுக்கிறோம், எதுவாக இருந்தாலும் அங்கே கேளுங்க” என்றவிட்டு வேலையை பார்த்தனர்.
இதை கேட்டிருந்த ஈசனுக்கு பொறுக்க முடியவில்லை.. எப்போதும் இடக்குமுடக்கான வழிகள்தானே தெரியும்.. அவனுக்கு. தங்களின் கடைக்கு சென்றவன்.. ஒரு பூட்டு சாவியை வாங்கிக் கொண்டு வந்தவன்.. பணியாளர்கள் டயர்களை எடுக்க எடுக்க.. ஷட்டரை இறக்கி.. பூட்டு போட்டுவிட்டான்.
தாத்தா “ஈசா, என்ன இது.. இரு பேசிக்கலாம்” என பதற.
ஈசன் அவரின் பேச்சினை காதிலே வாங்கவில்லை. பூட்டு போட்டுவிட்டுதான் நிமிர்ந்தான். நான்கு பணியாளர்கள், அதில் மூவர் உள்ளே இருக்க.. மற்றொருவரும் லாரி டிரைவரும் கத்தி கூச்சல் போட்டனர்.
கூட்டம் கூடி விட்டது. அக்கம் பக்கம் கடைக்காரர்கள் அருணாசலத்தின் அருகே வந்தனர்.. நம்ம கடை ஊழியர்களும் வந்தனர். சலசலப்பு கூடியது.
டிரைவரும் பணியாளரும் ஈசனிடம் திறந்துவிடுங்க என கேட்டுக் கொண்டிருந்தனர்.
ஈசன், அசால்ட்டாக அந்த படிகளில்.. பின்பக்கம் தன் கையை ஊன்றிக் கொண்டு.. அமர்ந்திருந்தான், கண்களில் கலக்கமோ தயக்கமோ இல்லை.. அத்தனை அலட்சியம்.. “எங்க கடைக்காரன்” என்றான் வெளியே நின்ற பணியாளரிடம்.
பாவம் அந்த மனிதரும் “முதலில் திறங்க.. எங்க முதலாளிக்கு தெரிந்தால் அவ்வளவுதான்” என்றான்.
ஈசன் “அதான் தெரியனும்ன்னு சொல்றேன். அவனை வர சொல்லு.. சீக்கிரம் போன் செய்து சொல்லிடு.. பத்து நிமிஷத்தில் வரணும்” என்றான் அலட்சியம் மாறதா குரலில்.
ராம் இதை பார்த்துக் கொண்டே இருந்தார்.. அமைதியாக கடையில் கிருபாவின் பின்னால் சென்றவனா இது.. என ஆராய்ச்சியாக பார்த்தார் ஈசனை.
ஈசன், இப்போது ராம் அவர்களை பார்த்து “ராம் அண்ணா, தாத்தாவை கடையில் இருக்க சொல்லுங்க.. இந்த கடைக்காரன் வர வரையில் நம்ம இங்க இருப்போம்” என்றான்.
அருணாசலத்திற்கு என்ன செய்வதென தெரியவில்லை. ஈசனை பார்த்தார்.