நஞ்சினாலான அமுதன்!

8

சங்கர் நன்றாக இருந்தார். முன்போல மூச்சு பிரச்சனை வரவில்லை. இயல்பாக பேசினார்.. தொடர் நினைவும் இருந்தது. ஒரு இட்லிக்கு மேல் உண்ணாதவர்.. இரண்டுகவளம் அதிகமாக உண்டார். வயிற்று வலி என சொல்லவேயில்லை.. இந்த நான்கு நாட்களில்.

சஹா நேற்று இரவுதான் பெங்களூர் கிளம்பி சென்றிருந்தாள். தாத்தா தைரியம் சொல்லினார்.. “பயப்படாத டா.. நாங்க பார்த்துக்கிறோம். அடிக்கடி வந்துட்டு போ.. நல்லா சாப்பிடு” என சொல்லி அனுப்பினார்.

சங்கர் மகளிடம் “நான் நல்லா இருக்கேன் டா.. நீ நிம்மதியா இரு ம்மா.. சாப்பிடு, கவலை பட கூடாது.” என்றார்.

சஹானா உண்மையாகவே நிம்மதியாக சென்றாள்.. அப்பாவிற்கு ஒண்ணுமில்லை என அவரின் புன்னகை.. சொன்னது. நம்பி சென்றாள்.

ஈசன், வேலையில் சேர்ந்து இருந்தான். மதியம் இரண்டு மணிமுதல் இரவு இரண்டு மணிவரை அவனுக்கு ஷிபிட். 

வீட்டில் எல்லோரும்.. கொஞ்சநாள் எல்லாம் சரியாக இருக்கும் என எண்ணி ஒரு நிலைக்கு வந்திருந்தனர் எனலாம். இல்லை, சங்கரின் பேச்சிலும் செயலிலும்.. சரியாகிவிடும் என்று நம்பினாரோ தெரியவில்லை. வீடு கொஞ்சம் இயல்புக்கு வந்திருந்தது. அப்படி இருப்பது போல எல்லோரும் காட்டிக் கொண்டனர். எல்லோரின் முகத்திலும் ஒரு படபடப்பு எப்போதும் இருந்துக் கொண்டே இருந்தது. 

சங்கரின் வரவால்.. வீடு கொஞ்சம் பேச்சு சத்தம் கொண்டது. சங்கர் காலையில் காபி குடிக்கும் போதே பட்டாசலைக்கு நர்ஸ் உதவியோடு வந்திடுவார். தாத்தாவும் கிருபாவும் வாக்கிங் சென்றுவிட்டு வருவர்.. பாட்டியும் கோக்கிலாவும் சேர்ந்துக் கொண்டுதான் அந்த காலை நேரத்தை செலவிட்டனர்.

சங்கருக்கு, கிருபா.. கடைக்கு செல்லவதை கேட்டதும் அப்படி ஒரு ஆனந்தம் “வியாபாரம் இப்போ எப்படி போகுதும்மா.. எத்தனை பேர் வேலை பார்க்குறாங்க.. கந்தசாமி அண்ணன்னு ஒரு இருப்பார்.. எங்க அப்பா நைட் வருவார். நானும் அவரும்தான் ஒன்றாக வீட்டுக்கு வருவோம். என்ன சண்டையோடு வருவோம்.” என்றார் சிர்த்துக் கொண்டே.

கிருபா “தாத்தா சண்டையெல்லாம் போடமாட்டார்.. மாமா நீங்க சும்மா சொல்றீங்க” என்றாள்.

தாத்தா “அப்படி சொல்லுடா.. இவன், சரியான இளிச்சவாயன்.. யாராவது என் பேர் சொல்லிக்கிட்டு வந்தால்.. இவனை சர்’ன்னு சொல்லிட்டாக்க.. காசு வாங்கும் போது.. அவங்க கேட்க்காலமே.. காசை குறைச்சிடுவான். சண்டை போடாமல் என்ன பண்ணுவாங்க டா..” என்றார் பேத்தியிடம் சிரித்துக் கொண்டே.

எல்லோரின் முகத்திலும் புன்னகை.

சங்கர் “அன்னிக்கெல்லாம் பிக்ஸ்டு ரேட் கிடையாது. எப்படி குறைக்காமல் இருக்க முடியும் கிருபா, கணக்கு பார்க்கும் போது.. கத்துவார்.. இவ்வளோவா.. கம்மியாக கொடுக்க  கூடாதுன்னு கத்துவார் ம்மா, அளவாகத்தான் நானும் கொடுப்பேன், இவருக்கு நான் லெஸ் செய்ய கூடாது. அவரிடம் பேசி.. அவர் அமௌன்ட் லெஸ் பண்ணனும்ன்னு சொல்லுவார்.. அப்போதான் திருப்தி. நான் செய்தால் குற்றம், இவர் செய்தால்.. சரி கிருபா” என்றார்.. புன்னகையோடு

எல்லோரும் சிரித்தனர்.

தாத்தா “போடா.. என்னமோ சொல்றான் இவன்” என்றார் புன்னகைத்துக் கொண்டே.

எல்லோரும் மீண்டும் சிரித்தனர்.. பாட்டி “உங்க ப்பா, அதெல்லாம் செய்வார் டா..” என்றார்.

கிருபாவும் சிரித்தாள்.. 

ஈசன், இன்று சீக்கிரமாக எழுந்து வந்து அமர்ந்தான்.. பட்டாசலையில், கோக்கில எழுந்து சென்று காபி எடுத்து வந்தார். ஈசன்தான், மிகவும் அமைதியானவனாக மாறிவிட்டான் இந்த நான்குநாட்களில். என்னமோ அதிகம் பேச்சு வார்த்தை இல்லை யாரிடமும். 

பேச்சுகள் தொடர்ந்துக் கொண்டிருந்தது. ஈசன் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக எதை நோக்கி பேச்சு இருக்கிறது என புரிய தொடங்கியது.

சங்கர் “எங்க அப்பா, உனக்கு தாத்தாவாகிட்டதால.. இப்போ ஏதும் சொல்றதில்லை போல” என்றார்.

கிருபா “மாமா.. நாம இப்போ அதிகமாக ரீடைல் பண்றதில்லை. ஹோல்சேல் மட்டும்தான். அதுவும் பிக்ஸ்டு ப்ரைஸ் மாமா. இப்போவெல்லாம் ஆர்டர் எடுக்கணும். அதுதான் வேலை.” என்றாள்.

சங்கர் சிரித்தார் “ம்.. எத்தனை வசதி.. இப்போ” என்றார்.

ஈசன் அப்போதுதான்  கிருபாவை  பார்த்தான். கிருபா, அவன் பார்ப்பது போல எதோ உந்த.. தாத்தாவின் அருகில் கீழே அமர்ந்திருந்தவள்.. நிமிர்ந்து ஈசனை பார்த்தாள். ‘ஓ..’ என எதோ தெரிந்துக் கொண்டவன் போல.. அவன் தலையசைக்கவும்.. கிருபா இமைக்காமல் பார்த்தாள் அவனை.. என்னவென புரியாமல்.

ஈசன் சுதாரித்து பார்வையை அவளிடமிருந்து எடுத்துக் கொண்டு.. தன் தந்தையிடம் எதோ பேச தொடங்கினான். 

ஈசனின் இந்த அமைதிமுகம் கிருபாவை யோசிக்க வைத்தது. ஏதாவது திட்டம் போடுறாங்களோ.. சென்னையில் தாத்தாவிடம் பேச மாட்டாங்க.. சாப்பாடு இல்லை.. இங்கே அமைதியாக அப்பாவின் அறையிலேயே இருக்கிறான்.. என்னவாக இருக்கும். ஒருவேளை பயந்துட்டாங்களோ என எண்ணிக் கொண்டே எழுந்து சென்றாள், தன் அறைக்கு.

இப்படியே தினப்படி வேலைகள் தொடரும்.

இன்றும் அப்படிதான் சங்கர், தமதாமாகதான் வந்தார். அதனால் காபி நேரம் முடிந்துவிட்டது, ஒவ்வொருவ்வராக வேலைக்கு கிளம்பினர். பாட்டி பூஜை அறைக்கு சென்றுவிட்டார்.. கோகிலா காலை உணவினை பார்க்க சென்றார். தாத்தாதான் மகனோடு அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

கிருபா காலையில் கடைக்கு செல்வதற்காக கிளம்பி வந்தாள்.. பாட்டிக்கு பூஜையில் உதவி செய்துக் கொண்டிருந்தாள்.

ஈசன், எழுந்து வந்தான். வந்தவனின் கண்கள் அனிச்சையாய் கிருபாவை தேடியது. கண்ணம்மா அக்கா காஃபி கொண்டு வந்து கொடுத்தார். பருகிக் கொண்டே அவளை தேடினான்.. பூஜை அறையில் இருப்பதற்கான அறிகுறியாக.. பேச்சு சத்தம் கேட்டது. கண்கள் தேடுதலை நிறுத்தியது.

கோக்கிலா, இப்போது சங்கருக்கு உணவு கொடுத்தனர். நீண்ட நேரமாக அமர்ந்தே இருக்கிறான் தம்பி.. அதனால் உறங்கட்டும் என கொடுத்தார்.

தாத்தா குளிக்க சென்றிருந்தார்.

கோக்கிலா “ஈசா, பாட்டி பூஜை செய்யறாங்க.. போ, சாமி கும்பிடு” என்றார்.

ஈசன் “பரவாயில்ல அத்தை..” என சொல்லி பேப்பர் பார்க்க தொடங்கிவிட்டான்.

சங்கர் “கோக்கிலா, அவனுக்கு அவங்க அம்மா போனதிலிருந்து கோவில் சாமி எல்லாம் கும்பிடறதில்ல.. விட்டுட்டான். முன்னாடி நாங்க பெங்களூரில் இருந்த போது.. சனிக்கிழைன்னா.. ஆஞ்சினேயர் கோவிலுக்கு போய்டுவான். பிரதோஷத்திற்கு அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு போவான். ரேவதி கிண்டல் பண்ணுவா.. என்ன டா, கல்யாணம் ஆகணும்ன்னு விரதம் இருக்கியா என்பாள்.” என்றார் புன்னகையோடு.

கோக்கிலா “ரேவதியோட போட்டோவை அன்னிக்கு சஹா காட்டினாள். ஈசன் மாதிரிதான் ஜாடை இருந்தது. ஈசனுக்கு உன்னை மாதிரி உடல்வாகு. முகம் கண்ணு எல்லாம் ரேவதி போல போல..” என்றார்.

சங்கர் “ம்.. சஹாவும் அப்படிதான் இல்ல அக்கா..” என்றார்.

கோக்கில “ஆமாம் டா.. உனக்கு என்ன இப்போ அதில் கேள்வி” என்றார் சிரித்துக் கொண்டே.

சங்கர் “நாங்க கல்யாணம் ஆகி இங்கேதான் வந்தோம்.. 24 வயசு. அப்பா திட்டி அனுப்பிட்டார். எங்க போறதுன்னு தெரியலை. அவங்க வீட்டுக்கு போக எனக்கு மனசு வரலை. அத்தோட அவளுக்கு நிச்சயம் செய்திருந்தாங்க.. அதை நிறுத்திட்டுதான் கல்யாணம் செய்துகிட்டோம். அதனால், அவங்க வீட்டில் கோவமாக இருப்பாங்க. அவங்க இப்போ வரைக்கும் வந்து பார்க்கவேயில்லை.  என் பிரெண்ட்ஸ் எல்லாம் அங்க போக வேண்டாம்ன்னு சொல்லி.. ரயில் ஏற்றி திருச்சி அனுப்பிட்டாங்க.

பிரெண்ட் வீட்டில் இருந்தோம். அவன்.. பெங்களூரில், வாட்ச் கம்பெனியில் வேலை வாங்கி கொடுத்தான். அதன்பிறகு, எங்க வாழ்க்கையில் எந்த குறையும் இல்லை அக்கா. நான்கு ஐந்து வருடம், சஹா பிறக்கும் வரை.. வீட்டு நினைப்பே இல்லாமல்.. இருந்தேன்.

சஹா பிறந்ததும் கொஞ்சம் தெளிவு வந்தது.. வீம்பு கொஞ்சம் போனது. தேடினேன்.. அப்பா எப்படி இருப்பார்ன்னு கேட்ப்பேன்.. என் நண்பன் வெங்கடேசனிடம். அவனும் அப்போது வெளிநாட்டில் இருந்தான். அவர்கள் வீட்டில் சொல்லுவதை  எனக்கு அவ்வபோது சொல்லுவான். அவனிடம் மட்டுமே தொடர்பில் இருந்தேன். அதன்பின் வேளையில்தான் கவனமாக இருந்தேன். சாதரண சூப்பர்வைசராக சேர்ந்தேன்.. join G.M வரை உயர்ந்தேன். பசங்களை படிக்க வைச்சேன்.

என்னமோ கம்பெனியை மூடும் நேரமும் வந்துவிட்டது. நல்ல விதமாக எங்களை செட்டில் செய்தனர். அப்போதுதான் கொரொனோ முடிந்திருந்தது. ஈசனுக்கு, சென்னையில் வேலை கிடைத்திருந்தது.  எங்களை விட்டுதான் இருந்தான். கம்பெனியை மூடவும் சென்னையில் வீடு வாங்கிக் கொண்டு வந்தோம் அவனோடு. எதோ நிம்மதியாக இருக்க போகிறோம்ன்னு வந்தோம்.

ஆனால், எதுவும் நடக்கலை.. ஒரு வருஷம் நல்லா இருந்தோம். ரேவதிக்கு பெரும்நோய் வந்தது.. அவள் அதில் போய்சேர்ந்துவிட்டாள். வீடே ஒன்றுமில்லாமல் ஆனது. அவளை நம்பியே இருந்துட்டேன் அக்கா.. என்னால் வேற யோசிக்கவே முடியலை. என்னமோ நாட்கள் கடந்தது, மனசு பரமாச்சி.. நாம அப்பாவை இப்படிதான் தவிக்க விட்டு வந்தோம்ன்னு தோணிச்சு” என்றார்.

ஈசன் “அப்பா.. இதென்ன நீங்க அப்படி ஏதும் தப்பு செய்யலை.” என்றான்.

கோக்கிலா “நீ பெரிய தப்பு ஏதும் செய்யலை டா. அதெல்லாம் முடிஞ்சி போச்சு. நீ அப்போவே வந்திருந்தால்.. இத்தனை கஷ்ட்டம் இல்லையே டா..” என்றார்.

ஈசன் அதன்பின் அங்கே நிற்க பிடிக்காமல் தங்களின் அறைக்கே சென்றுவிட்டான்.