அத்தியாயம் -8

தன் எதிரில் இருக்கும் உருவத்தை கண்டு மீனா பயந்து போய் கையில் இருந்த பையை கீழே போட,

“அக்கா நாங்கதான் பயப்படாத…” என்றாள் கண்ணம்மா.

உடன் பிறப்புகளை கண்டு நிம்மதி மூச்சு விட்டவள் தம்பியின் கரங்களை பிடித்து கொண்டு “மல…. மல…அது…அது…”என்று தடுமாற,

ஏழுமலையோ அவளை அணைத்து கொண்டவன் “எல்லாத்தையும் நானும் கேட்டேன்க்கா. நீ எந்திரிச்சு போறத பாத்து பயந்து போய்தான் உன் பின்னாடியே வந்தோம். அம்மாவும்….நம்பள புரிஞ்சுக்காம இப்படி இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லக்கா” என்று வருத்தமாக சொல்ல,

கண்ணம்மாவோ “சரி போதும். அவங்க இப்படிதான்னு நமக்கு தெரிஞ்சு போச்சுல்ல. இனி அடுத்து என்ன பண்ணலாம். சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க. நமக்கு நேரம் இல்ல”.

மீனா, “நான் முடிவெடுத்துட்டேன் கண்ணு. எனக்கு இவங்க யாரும் வேண்டாம். என் குழந்தை எனக்கு வேணும். அதான் வீட்டவிட்டு கிளம்பிட்டேன்”.

“என்னக்கா சொல்ற. இந்த ஊரைவிட்டா உனக்கு வேற யாரை தெரியும். தனியா…. அதுவும் இந்த நிலமைல எப்படி சமாளிப்ப. நாம வேற எதாவது பண்ண முடியுதான்னு பார்க்கலாம்”.

“ இல்ல கண்ணு நான் முடிவெடுத்துட்டேன். எப்போ அவர் உயிரை பணயமா வச்சு கையெழுத்து வாங்கிட்டு வர சொன்னாங்களோ அப்போவே என் உயிரை வெறுத்துதான் வாழ ஆரம்பிச்சேன்.

குழந்தைனு சொன்னப்போ என் வாழ்க்கைக்கு ஓர் புதிய பாதை கிடைச்சுதுனு சந்தோஷப்பட்டேன். ஆனா அந்த சந்தோசத்தையும் அழிக்க முடிவெடுத்துட்டாங்க இனி நான் இங்க இருந்தா. உயிர் இருந்தும் பிணமாதான் வாழணும். எனக்கு என் குழந்தை வேணும் கண்ணு ப்ளீஸ் புருஞ்சுக்கோ…” என்று முகத்தை மூடி கொண்டு அழ,

ஏழுமலையும் கண்ணம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நின்றிருந்தனர்.

பின் ஒரு முடிவெடுத்த ஏழுமலை, சரி உன் முடிவை நாங்க ஏத்துக்கறோம். ஆனா.. இப்போ போக வேண்டாம். எல்லாரும் தூங்கட்டும். ரெண்டு மணிக்கு மேல நானே உன்னை ஊர் எல்லை வரை கொண்டு வந்து விட்டுட்டு வரேன். இப்போ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு” என்க,

அவளோ “இல்லை பரவால்ல நான் அதுவரைக்கும் இப்படியே உட்கார்ந்து இருக்கேன்” என்றாள்.

“சொன்னா கேளுக்கா. இதுக்கு அப்புறம் உனக்காக நீ மட்டும்தான் ஓடணும். ஓடறதுக்கு நீ உன்னை தயார்படுத்திக்கோ. நான் கொஞ்ச நேரத்தில் வரேன்” என்று சென்றுவிட,

கண்ணம்மா மீனா கரத்தை பிடித்து கொண்டு சோகமாக அமர்ந்துவிட்டாள்.

மலை சொன்னது போல் ஒன்னரை போல் வர சகோதரிகள் இருவரும் கொட்ட கொட்ட விழித்து கொண்டு இருந்தனர்.

தம்பியை கண்டு எழுந்த மீனா “போகலாமா…” என்று கேட்க,

ஏழுமலை தன்னிடம் இருந்த பையை அக்காவிடம் கொடுத்தான்.

மீனா பையையும் அவனையும் மாறி மாறி பார்க்க,அவனோ “இது எல்லாமே உன்னோட நகை. வீட்ல இருந்த பணத்தையும் இதுல வச்சுருக்கேன். இந்த வீட்டை விட்டு போகணும்னு ஒரு வேகத்துல வேணா நீ முடிவெடுத்திருக்கலாம்.

ஆனா இந்த உலகத்துல உன்னால தனியா வாழ முடியாது. எல்லாத்துக்கும் பணம் வேணும். இங்க பணம் இல்லன்னா எதுவும் பண்ண முடியாது. இது உனக்கான பணம் உன்னோட நகை. அதனால தைரியமா எடுத்துட்டு போய் சந்தோசமா வாழு. குட்டிய நல்லா பார்த்துக்கோ. நான் உழைச்சு என்னோட சம்பாத்யத்துல வாழற அன்னைக்கு உன்னை தேடி கண்டு பிடிச்சு வருவேன்” என்று சொல்ல,

மீனா கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. இருவரையும் அணைத்துக் கொண்டு சத்தம் இல்லாமல் அழ,

கண்ணம்மா அக்கா கண்ணீரை துடைத்தவள் “அழாம தைரியமா போ. பார்த்து பத்திரம் குழந்தையை சந்தோஷமா பாத்துக்கோ. மறுபடியும் எப்போ உன்னை பார்க்க போறேன்னு எனக்கே தெரியல. இருந்தாலும் உன்னோட இந்த தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. எல்லாரையும் வெகுளித்தனமா நம்பாத இந்த உலகம் மோசமானது. அதுக்கு நம்ம அம்மா அப்பாவே சாட்சி கவனமா இரு” என்றவள் அக்காவின் வயிற்றை தடவி “குட்டி சித்தி உன்னை எப்போ பார்க்க போறேன்னு தெரியல ஆனா கண்டிப்பா உன்னை நினைச்சிட்டே இருப்பேன்”என்றாள்.

மலை, “போதும் நேரம் ஆகுது. வாங்க போலாம்” என்றவன் பெற்றோர் இருவரும் நன்றாக தூங்குவதை உறுதி செய்துவிட்டு வீட்டை விட்டு மெதுவாக வெளியில் வந்தனர்.

கிளம்பும் சமயம் கண்ணம்மாவை இறுக்கி அணைத்த மீனா “பார்த்துடி. நீயும் கவனமா இரு. என் மேல வர கோபத்தை உங்க மேலதான் காட்டுவாங்க ரெண்டு பேரும் பத்திரமா இருந்துக்கோங்க” என்றுவிட்டு தம்பியுடன் கிளம்பினாள்.

கண்ணம்மா இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு சத்தம் இல்லாமல் வந்து ஹாலில் அமர்ந்துவிட்டாள். ஏழுமலை மீனாவை ஊர் எல்லை வரை கொண்டு சென்று விட்டுவிட்டு வந்து விட,

அவன் வருவதை ஜன்னல் வழியாக பார்த்த கண்ணம்மா ஓடி சென்று மெதுவாக கதவை திறக்க, மூச்சு வாங்க நின்றிருந்தான் ஏழுமலை.

“என்னடா பஸ் எதுவும் இப்போ இல்லையே அக்கா எப்படி போனா”.

“தெரியலடி…ஊர் எல்லை வரைக்கும் போனோம். இனி நான் போறேன். நீ வீட்டுக்கு போன்னு அக்கா சொல்லிடுச்சு. நான் வந்துட்டேன்”.

“லூசு பயலே இந்நேரத்துக்கு பஸ் எதுவும் வேற இருக்காதே. அவ தனியா என்ன பண்ணுவா”.

“எனக்கு மட்டும் அது தெரியாதா. நான் சொல்றதை அக்கா காதுலயே வாங்க மாட்டிக்குது. நீ போ…நான் பார்த்துக்கறேன்னு பிடிவாதமா சொல்லும்போது என்னை என்ன பண்ண சொல்ற?” என்று கோபமாக சொல்ல,

“சரி விடு. இனி விதிவிட்ட வழி. அவ நல்லபடியா வாழ்ந்தா ஓகேதான். வா போய் தூங்கலாம். காலைல ஒரு போராட்டமே இருக்கு. அதை சமாளிக்க தெம்பு வேணும்ல” என்று கண்ணம்மா சொல்ல, ஏழுமலையும் ஒப்புதலாக தலை அசைத்து தன் அறைக்கு சென்றுவிட்டான்.

ஊர் எல்லையில் நின்றிருந்த மீனாவிற்கு எந்த பக்கம் செல்வது, என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. கால் போன போக்கில் நடந்து கொண்டு இருந்தவளுக்கு யாரோ தன் பின்னால் வருவது போன்ற உணர்வு தோன்ற பயந்து போனாள்.

யார் தன் பின்னால் வருவது என்று நடுங்கி போனவள், திரும்பி பார்க்க முரட்டு உருவமாக ஒருவன் அவளை தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். அவன் கண்கள் வேறு குடித்ததில் சிவந்து போய் இருக்க,அரண்டு போனவள் தன் நடையை வேகப்படுத்த, அவனும் நடையை வேகப்படுத்தினான். இவள் மேலும் வேகமாக ஓட ஆரம்பித்தாள்.

பின்னால் வந்த நபரும் அவளை துரத்திக் கொண்டே வர, தன் குழந்தையை காப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டவள் கண் மண் தெரியாமல் வேகமாக ஓட, திடீரென்று ஒரு வளைவில் வந்த காரை எதிர்பாராமால் அதில் மோதி “என் குழந்தை…….” என்ற அலறலோடு மயங்கி விழுந்தாள்.

சத்யா வேலையில் மூழ்கி போனான். வீட்டில் இருந்தே ஐடி பைல் பண்ணும் வேலையை செய்ய துவங்கினான். நம்பகமான ஆட்களை கொண்டு ஆபிசை நடத்தினான்.

லதா மகனை நன்றாக கவனித்து கொண்டார். தாய் சிரமப்படுவதை கண்ட சத்யா வீட்டு வேலைக்கு ஆள் வைத்துவிட்டான். ஆனால் அவர்களுடனான பேச்சை முற்றிலும் நிறுத்திவிட்டான்.

பெற்றோர் இருவரும் முற்றிலுமாக மாறி போய் இருக்கும் மகனை நினைத்து மிகவும் வருந்தினர். தங்களது பழைய மகிழ்ச்சியான வாழ்க்கை மீண்டும் கிடைக்காதா? இது அனைத்தும் கெட்ட கனவாக இருக்க கூடாதா…. என்று தவிக்க ஆரம்பித்தனர்.

மகனிடம் பேச முயன்று தோற்று போயினர். தனக்குள் இறுகி போயிருந்தவன் என்ன பதிலை தர போகிறான். அமைதியயே அவர்களுக்கு பதிலாக தர, சோர்ந்து போனவர்கள் கடைசியில் இந்த வாழ்க்கையை ஏற்று கொள்ள துவங்கினர்.

“ஐயோ……என் குழந்தை……” என்று மீனா அலறி அடித்து கொண்டு எழ, அவ்வளவு நேரம் அவளை கன்னத்தில் கை வைத்து பார்த்து கொண்டிருந்த உருவம் “ஆத்தாடி……” என்ற அலறலோடு சுவரோடு சுவராக பல்லி போல் ஒட்டி கொண்டு நின்றது.

பிறகுதான் தான் இருக்கும் இடத்தை கவனித்த மீனா சுற்றி முற்றி பார்த்து பின் குனிந்து தன் வயிற்றில் கைவைத்து என் குழந்தை என்று சொல்ல எதிரில் இருந்த உருவமா “ஆத்தாடி ஆத்தா என்னம்மா. நீ இப்படி அலறுற. என் குழந்தை…. என் குழந்தை சொல்லிக்கிட்டு இருக்க. உன்னை மட்டும்தான் எங்க பாப்பா கூட்டிட்டு வந்துச்சு” என்று சொல்ல,

தலையில் கை வைத்தவள் “எனக்கு என்ன ஆச்சு? நான் எங்க இருக்கேன்?” என்று கேட்க,

அவள் அருகில் வந்த அந்த உருவம் “ஹப்பாடா…. படத்துல பார்க்கும்போது மயக்கத்துல இருந்து எந்திரிக்கறவங்க கேக்குற கேள்வி. நீயும் கரெக்ட்டா கேட்டுட்டம்மா. இப்போதான் என் சந்தேகம் சரியாயிருக்கு. இதுக்குதான் இவ்ளோ நேரம் காத்திட்டு இருந்தேன். இரு நான் போய் எங்க பாப்பாவ கூட்டிட்டு வரேன்” என்றுவிட்டு நாற்பது வயது மதிக்கதக்க பெண் அறையைவிட்டு வெளியில் ஓட,

“ஒரு நிமிஷம்…. நான் சொல்றதை கேளுங்க……” என்ற மீனாவின் குரல் காற்றோடுதான் கலந்து போனது.

தான் இருக்கும் அறையை சுற்றி பார்த்தாள் மீனா. நன்கு பெரிய அறை. உயர்தர மெத்தை, அலங்கார பொருட்கள் என்று பார்க்கவே அந்த அறை அளவாகவும் பார்க்க அழகாகவும் இருந்தது.

“இது என்ன இடம். நான் எப்படி இங்க வந்தேன். நைட்டு ஓடி வந்தோம் எதிர்ல ஒரு கார் வந்தது…அப்புறம்……”
“எந்திரிச்சிட்டீங்களா…. இப்போ உங்களுக்கு ஓகேவா…” என்று கேட்டவாறு வந்தாள் ஒரு அழகிய யுவதி.

மீனா அவளையே குழப்பமாக பார்த்து “நீங்க யாரு? நான் எப்படி இங்க வந்தேன்? இது எந்த இடம்?என்னோட குழந்தை…….”

“சொல்றேன்…. சொல்றேன்…பயப்படாதீங்க. நீங்களும் உங்க குழந்தையும் சேப். எந்த பிரச்சனையும் இல்ல. இது என்னோட வீடுதான். நாம திருச்சில இருக்கோம். என் பெயர் நித்ய ஸ்ரீ. நீங்க எங்க வீட்லதான் இருக்கீங்க. நான் ஒரு வேலை விஷயமா போயிட்டு வரும்போது என் வண்டில நீங்க விழுந்ந்துடீங்க நைட் டைம் வேற. உங்களை எங்க விடறது. என்ன பண்றதுனு ஒன்னும் தெரியல. உங்கள துரத்திட்டு வந்த ஆள் காரை பார்த்த உடனே ஓடிட்டாரு. அது மட்டும் இல்லாம, அவசரமா இங்க ஊருக்கு வர வேண்டி இருந்தது அதான். உங்களை இங்க அழைச்சுட்டு வர வேண்டியதா போச்சு.”என்று சொல்ல,

மீனா அமைதியாக அனைத்தையும் கேட்டு கொண்டு இருந்தாள்.