கையில் இருந்த வக்கீல் நோட்டிசையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான் சத்யா. கேன்டீனிற்கு சென்று வந்த ஜெகன் மகன் கையில் இருக்கும் பேப்பரை பார்த்து “என்ன கண்ணா அது?” என்று வாங்க அதில் இருந்த விஷயத்தை பார்த்து விக்கித்து போனார்.
ஜெகன், “கண்ணா அது…..” என்று இழுக்க,
“நீங்க ஏம்பா தடுமாறுறீங்க என்றவன் வலி நிறைந்த சிரிப்பை உதிர்த்து நோட்டீசை ஓரமாக வைத்தான்.
“இல்லப்பா உனக்கு கொஞ்சம் சரியான பின்னாடி, மருமக வீட்டுக்கு நாங்களே நேர்ல போய் பேசலாம்னு இருந்தோம் அதுக்குள்ள”…..,
“அதான் சரியாக வாய்ப்பே இல்லைனு சொல்லி டைவஸ் கேட்கறாங்களேப்பா. சரியாக வாய்ப்பே இல்லைனு அவங்க சொல்றாங்களா? டாக்டர் சொன்னாராப்பா? என்க,
ஜெகன் மகனிடம் என்ன பதில் சொல்வது என்று அமைதியாக இருந்தார்.தந்தையின் அமைதி அவனுக்கு என்ன உரைத்ததோ “அவங்ககிட்ட எல்லாம் போய் பேச வேண்டாம்ப்பா. பாத்துக்கலாம்” என்றுவிட்டு,அவருக்கு முதுகை காட்டி படுத்து விட்டான்.
அங்கு வீட்டில் மீனா பாதியாக இழைத்து போனாள்.கணவன் உடல்நலம் சரியில்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க தான் அவன் அருகில் இருந்து பார்க்க வழியில்லாமல் இருப்பதை நினைத்து அழுதழுது சோர்ந்து போக,
மகள் சோக சித்திரமாக இருப்பதை கண்டு எரிச்சல் அடைந்த செனப்பன் “இங்க பாரு உன் வாழ்க்க எப்படி இருக்கணும்னு நான்தான் முடிவு பண்ணுவேன். அந்த வீணா போனவன் கதை எல்லாம் முடிஞ்சு போச்சு. அவனை பத்தின நினைப்பை தூக்கி போட்டுட்டு, நான் என் அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி நல்லா திடகாத்திரமா பாக்கற பையனுக்கு கழுத்தை நீட்டு”என்க,
“அப்பா என்ன பேசுறீங்க. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. என் புருஷன்….”
“அடி கழுதை என்கிட்ட குரல் உசத்தி பேசற அளவுக்கு தைரியம் வந்துடுச்சோ. கை, கால முறுச்சி வீட்டோட போட்றுவேன். உனக்கு நடந்ததுக்கு பேர் கல்யாணம் இல்ல. நம்ம குடும்பத்த பிடிச்ச பீடை . நம்ம நல்ல நேரம் கொஞ்ச நாள்லயே அது நம்மவிட்டு போய்டிச்சு. போய்தான் ஆகணும். இல்ல நான் அதை வேற மாதிரி போக வைப்பேன்.நான் முடிவுபண்ணிட்டேன். நான் சொல்றது மட்டும்தான் இந்த வீட்ல நடக்கணும்”என்று சொன்னவர் மனதில் ‘ச்ச…. என்ன…. இந்த சென்னப்பன ஏமாத்தியிருக்காங்களே. இந்த விஷயம் ஊர்ல இருக்கவனுக்கு எல்லாம் தெரிஞ்சா என்ன பேசுவாங்க. இல்ல அதுக்கு நாம விட கூடாது. எதாவது ஒரு காரணம் கண்டுபிடிக்கணும். என் மருவாதிக்கு எந்த பங்கமும் வராம இருக்கணும் அந்த காரணம்’ என்று யோசித்து கொண்டவர் கவனம் கலைக்கும் வண்ணம்.
“இல்லப்பா. அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல சும்மா இன்பக்ஷன்தான்……” என்று தந்தையை எப்படியாவது சமாளிக்கும் எண்ணத்தோடு மீனா பேச, அவள் கன்னத்தில் இடி என இறங்கியது அவர் கரம்.
“பொட்ட கழுதை என்ன திமிரு உனக்கு. கிளி புள்ளைக்கு சொல்றாப்ல சொல்லிட்டு இருக்கேன். மறுபடியும் மறுபடியும் கேனச்சி மாதிரி பேசிட்டு இருக்க. எனக்கு கூறு இல்லனு நினைச்சுட்டு இருக்குதியோ? டாக்டர நான் போய் பார்த்துட்டு வந்த பொறவுதான் இந்த முடிவ எடுத்தேன். ஒழுக்கமா நான் சொல்றதை கேட்டு நடந்துக்கிட்டா உனக்கும் நல்லது. அந்த சீக்கு கோழிக்கும் நல்லது. இல்ல…. அந்த சீக்குபுடிச்சவன் கூட தான் வாழ்வேன். அப்படி….இப்படின்னு…..ஏதாவது பிதட்டிக்கிட்டு இருந்த, உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன். ஆனா….அவன் உசுரோட இருக்க மாட்டான்.
எனக்கு என் மருவாதிதான் முக்கியம். ஊர்ல எல்லாரும் என் மேல இருக்க பயத்தால இப்போதைக்கு எதுவும் பேசாமல் அமைதியா இருக்காங்க. ஆனா இதுவே தொடரும்னு எதிர்பார்க்க முடியாது. அதுக்குதான் இன்னொரு பையன பார்த்து கட்டி வைக்கறேன்னு சொல்றேன்.ச்ச….”என்று கோபமாக சுவற்றில் குத்தினார்.
பின் மகள் புறம் திரும்பி “ இந்த ரெண்டு மாச வாழ்க்கைய கெட்ட கனவா நினைச்சு மறக்க பாரு” என்றார்.
அப்போது தனம் “என்னங்க…..” என்று ஏதோ சொல்ல வருவதற்குள் அவரையும் ஓங்கி ஒரு அரை அறைந்தவர் “நான் சொல்றதை கேட்கதான் நீங்க இருக்கீங்க. நீங்க சொல்றது எல்லாம் என்னால கேட்க முடியாது. இல்ல இங்க நான் கருத்து சொல்றேன், கருமத்தை சொல்றேன்னு வாய திறக்க யாருக்கும் உரிமை இல்லை புரிஞ்சுதா” என்று உறும, தனம் வாயை கப்பென்று மூடிக்கொண்டனர்.
“என்ன எல்லாருக்கும் குளிர்விட்டு போச்சோ, ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சுட்டீங்க. இதுக்கு மேல யாரவது வாய திறந்தீங்க பேச வாய் இருக்காது” என்றுவிட்டு சென்றுவிட,
மீனாவோ “ஏன்ம்மா? ஏன்? ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது. நான் என்ன தப்பு செஞ்சேன். இது நீங்க அமைச்சு கொடுத்த வாழ்க்கைதானே அதைகூட வாழவிடாம ஏன் என்னை இப்படி கொடுமை படுத்துறீங்க. அங்க ஹாஸ்பிடல்ல முடியாம கெடக்குறது என் புருஷனம்மா. ஆனா…. நான்…நான் அவரை பார்த்துக்காம இங்க உங்ககூட வந்து இருக்கேன்”என்று தாயைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
ஏதோ வேலையாக வெளியில் சென்ற சென்னப்பன் மீண்டும் உள்ளே வரும்போது மீனாவின் கதறல் காதில் விழ, மேலும் கோபமானவர் “ஓஹோ…. அவ்ளோக்கு ஆகிடுச்சா. சரி அவன் உசுரோட இருக்கறததானே பிரச்சனை. செத்துட்டான்னா ஒன்னும் இல்லையே”என்க, மீனா விக்கித்து போய் தந்தையை பார்த்தாள்.
“என்ன பாக்கற அவன் உசுரோட இருக்குறதும்,சாகறதும் உன் கையில தான் இருக்குது பாத்து பதவுசா நடந்துக்க” என்று மிரட்டலாக சொல்ல மீனாவோ குலை நடுங்கி போனாள்.
அதோ இதோ என்று கடினமானதாக ஒரு மாதம் சென்றது. வேறு ஒருவரிடம் எப்படி கிட்னி கொடு என்று கேட்பது என புரியாமல் ஜெகன் தடுமாறிக் கொண்டிருக்க, மருத்துவர்களும் சத்யாவின் உடலுக்கு ஏற்ற வகையில் உள்ள கிட்னி கிடைக்காமல் தடுமாறினர். இதற்கிடையில் டயாலிசிஸ் செய்வதில் சத்யா மிகவும் சோர்ந்து போனான்.
மன அளவில் ஜெகன் லதா தம்பதிகள் மிகவும் உடைந்து போய் இருந்தனர்.
உடலளவிலும், மன அளவிலும் மகன் படும் துன்பத்தை பார்க்க முடியாமல் பெற்றோர் வாட, வயதான காலத்தில் அவர்களை சிரமபடுத்துறோமே என்று சத்யா துடித்துக் கொண்டிருந்தான்.
இதற்கிடையில் சென்னப்பனின் வக்கீல் அவரிடம் என்ன சொன்னாரோ மருத்துவமனைக்கு நேராக வந்தவர் சத்யாவை சென்று சந்தித்து “உனக்கு தான் உடம்பு முடியாம போயி சாகப்போற, என் புள்ள வாழ்க்கையை ஏன் கெடுக்கணும்னு நினைக்கிற, ஒழுங்கா மறுவாதியா அந்த பேப்பர்ல கையெழுத்து போட்டு கொடு”
“என்ன பேப்பர் அது?” சத்யா.
“ம்ம்…. ரெண்டு பேரும் சம்மதத்தோடதான் பிரிய போறீங்கன்னு எழுதியிருக்கேன். கையெழுத்து போடு. உனக்கு பணிவிடை செய்ய ஒன்னும் நான் என் புள்ளைய உனக்கு கட்டி வைக்கல”.
“ஹோ…. அப்படிங்களா சார். நாளைக்கு உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்து இதே மாதிரி…இல்ல…. இல்ல…. இதைவிட மோசமா உங்க நிலைமை மாறுனா உங்க பொண்டாட்டியோட குடும்பம் வந்து அவங்கள கூட்டிட்டு போகலாம் இல்லையா. அவங்க மட்டும் உங்களுக்கு பணிவிடை செய்யவா கல்யாணம் பண்ணிட்டு வந்தாங்க”
“டேய்……” என்று உறுமிய சென்னப்பன் “கொஞ்ச நாள்ல சாக போற உனக்கு எவ்வளவு திமிருடா”
“ஹேய்.. நீ என்ன கடவுளா? நீ சொன்ன உடனே நான் சாக. எப்பேர்ப்பட்ட சூழ்நிலையும் ஒரு நிமிஷத்துல மாற்ற கூடிய மேஜிக் அந்த ஆண்டவன்கிட்ட மட்டும்தான் இருக்கு. சொந்த மருமகன சாக போறன்னு சொல்ற உனக்கெல்லாம் என்னடா மரியாதை முதல்ல இங்க இருந்து வெளிய போ”
“டேய் உன்னை……” என்று அடிக்க பாய்ந்தவரின் குறுக்காக வந்து நின்றார் ஜெகன்.
“என் மகன் சொல்லிட்டான்ல கிளம்புங்க முதல்ல”
“முடியாது இவன் கையெழுத்து வாங்காம நான் போக மாட்டேன்.என் பொண்ணு வாழ்க்கை எனக்கு முக்கியம். சீக்கு வந்த உனக்கு பணிவிடை செய்ய எல்லாம் என் பொண்ணை அனுப்ப மாட்டேன். அவ சின்ன பொண்ணு அவளுக்கு எதுக்கு இவ்ளோ கஷ்டம். நிம்மதியான வாழ்க்கை அவளை வாழவிடு” என்று காரமாக சொல்ல,
சத்தியா அவர் பேசுவதை எல்லாம் அமைதியாக கேட்டுவிட்டு “இப்போ உனக்கு என்ன வேணும் அந்த பத்திரத்துல நான் கையெழுத்து போடணும் அதானே” என்று கேட்க,
சென்னப்பனும் ‘ஆமாம்’ என்பது போல் திமிராக பதில் சொல்ல,
“ஓகே. நீங்க கேட்கற மாதிரி நான் சைன்பண்ணி தரேன்.” என்றவுடன் சென்னப்பனின் முகம் வெற்றி கர்வத்தில் மின்னியது.
“ஆனா… என்ற மருமகனின் இழுவையில் அவனை கூர்ந்து பார்த்தார் சென்னப்பன்.
“என் மனைவிகிட்ட பத்திரத்தை கொடுத்து அனுப்புங்க. அவ என்கிட்ட வந்து உங்களோட வாழ எனக்கு விருப்பம் இல்ல. கையெழுத்து போட்டு குடுங்கன்னு சொல்லணும். அப்படி அவ சொல்லிட்டா அடுத்த நிமிஷம் நான் கையெழுத்து போட்டுக் கொடுத்துடுவேன்”என்று சத்யா மாமனாருக்கு குறையாத திமிருடன் சொல்ல,
உடனே சென்னப்பன் கோவமாக “அவ எதுக்கு இங்க வரணும். அதெல்லாம் முடியாது”
“ஏன் உங்க மகளை இங்க கூட்டிட்டு வந்தா. என்கிட்ட தோத்து போயிடுவீங்கன்னு பயமோ” என்க,
“எனக்கா பயமா….” என்றவர் பின் சத்யாவை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்துவிட்டு “சரி நாளைக்கே என் பொண்ணோட வரேன். என்கிட்ட தோக்க ரெடியா இரு” என்று உறுமலாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
அவர் சென்றவுடன் அந்த அறையில் சற்று நேரம் அமைதியே நிலவியது. லதா விம்மி கொண்டு வந்த அழுகையோடு மகனை ஓடி சென்று அணைத்து கொள்ள,ஜெகன் மறுபுறமும் மகனை அனைத்து கொண்டார்.
சத்யா, “நீங்க ம்மா அழறீங்க. எனக்கு என் மீனா மேல முழு நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா அவ என்ன விட்டு போக மாட்டா” என்று சொல்ல,
பெற்றோர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மகனது நம்பிக்கை உண்மையாக வேண்டுமே என்ற ஆவலோடு.
ஆனால் அவன் அறியாத ஒன்று அவனது நம்பிக்கையை மனையாள் சுக்குநூறாக உடைக்கப் போகிறாள் என்று.
அடுத்த நாள் லதா அந்த சிவபெருமானின் முன் கண்ணீரோடு நின்றிருந்தார்.’அப்பா ஈசனே நாங்க அப்படி என்ன தப்பு பண்ணிட்டோம்னு எங்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை குடுத்துருக்கீங்க. நாங்க யாரும் கெட்டுப் போகணும்னு நினைச்சோமா, இல்ல மத்தவங்க உழைப்பை சுரண்டி வாழ்ந்தோமா? எதுக்காக இப்படி எங்களை சோதிக்கிறீங்க. என் மகனோட வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்க ‘என்று மனதினுள்ளேயே சிவனிடம் மகன் உயிருக்காக மன்றாடிவிட்டு அங்கிருந்த தூணில் சாய்ந்த அமர்ந்திருக்க அவர் முன் வந்து நின்றது ஒரு ஜோடி கால்கள் .
தன் முன் நிழல் ஆடவும் கண்ணை திறந்தவர் எதிரில் நின்றிருந்தவரை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தார்.
ஏனென்றால் அவர் எதிரில் இருந்தது. அவரது அண்ணன். சிறு வயதில் வேற்று இன பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டே ஓடி போனவர். வெகுநாட்கள் அண்ணனை நினைத்து லதா அழாத நாட்கள் இல்லை.
‘என்கிட்ட சொல்லி இருந்தா அப்பாட்ட பேசி இருப்பனேண்ணா. இப்படி யாருகிட்டயும் சொல்லாம போய்ட்டியே’ என்று மனதின்னுள்ளே புலம்பி கொண்டு இருப்பவர். இப்போது அவரை நேரில் பார்த்தவுடன் கண் கலங்கி அணைத்து கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார்.
தங்கை மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் கண்ணனும், அவர்கள் குடும்பத்தைப்பற்றி ஒரு டிடெக்டிவ் மூலம் அறிந்து கொண்டுதான் இருந்தார்.
சத்யா திருமணத்திற்கு கூட யாரும் அறியாமல் வந்து சென்று இருந்தார். இப்போது சத்யாவின் நிலை அறிந்து அவனுக்கு உதவவே முன் வந்துள்ளார்.
அண்ணனை அணைத்து கொண்ட லதா தன் மனப்பாரம் தீரும் வரை அழுது ஓய்ந்தார்.
“அழாத லதா தம்பிக்கு நான் கிட்னி தரேன்.”
“ என்னண்ணா சொல்றீங்க. உங்களுக்கெப்படி?”
“ எனக்கு எல்லாம் தெரியும். நீயும் என் மேல கோபமா இருப்பியோன்ற எண்ணத்துலதான் இவ்ளோ நாள் நான் உன் முன்னாடி வராம இருந்தேன். இப்போ உனக்கு ஒரு கஷ்டம்னா நான் பாத்துட்டு இருக்க முடியுமா? வா முதல்ல ஹாஸ்பிடல் போலாம்”.
“இல்லண்ணா வேண்டாம். இவ்ளோ நாள் உன்னை கண்டுக்காம விட்டுட்டு இப்போ என்னோட தேவைக்காக உன்கிட்ட வந்து நின்னா அது நல்லா இருக்காது”
“என்ன பேசற லதா. அதபத்தி பேசற நேரமா இது. என்னை நீங்க விலக்கி வைக்கல. நானாதான் விலகி இருந்தேன். அது என்னோட தப்புதானே தவிர உங்க தப்பு இல்ல. இப்போதைக்கு பையன் உசுருதான் முக்கியம். வா போலாம்”.
“இல்லண்ணா….”
“மூச்….இனி ஒரு வார்த்தை பேச கூடாது. வா ஹாஸ்பிடல் போலாம்”.
“சரி போலாம். ஆனா உங்க வீட்ல என்ன சொல்லுவாங்கன்னு…”
“ஹப்பாடா இப்போவாவது என்னைபத்தி பேசணும்னு தோணுச்சே அது வரை சந்தோஷம்” என்றவாறு வந்து அமர்ந்தான் ஒரு இளைஞன்.
“யார் இவன்? என்பது போல் லதா பார்க்க,
“இவன் என் மகன் அசோகமித்ரன் திருச்சில கலெக்ட்டரா இருக்கான்”.
“ஹாய் அத்த. ஆனாலும் உங்க அண்ணன் சரியான தங்கச்சி கோண்டு. எப்போ பாரு என் தங்கச்சி அப்புடி என் தங்கச்சி இப்புடினு ஒரே தங்கச்சி புராணம்தான்.
என் தங்கச்சி சமையல் தேவமிர்தம் மாதிரி இருக்கும்னு ஓவரா சீன் போடுவாரு. ஆனா பரவால்ல அத்த வயசானாலும் உங்க இளமையும், அழகும் இன்னும் உங்களவிட்டு போகல” என்று குறும்பு சிரிப்போடு சொல்ல,
அவன் சொன்னவிதத்தில் அந்த நிலையிலும் லதா இதழில் மென் சிரிப்பு வந்தது.
லதா,“என்னடா வாலு உன் மனசுல என்ன ரஜினினு நினைப்பா. அப்படி எண்ணம் இருந்தா அழிச்சுடு. நீ ரஜினியும் இல்ல நான் நீலாம்பரியும் இல்ல” என்க,
“ஹப்பா…. அத்த சிரிச்சுட்டாங்க” என்றவன் சொல்ல,
கண்ணன்,“டேய் கொஞ்ச நேரம் சும்மா இருடா. முதல்ல ஹாஸ்பிடல் போலாம்”.
“ஆமா…ஆமா.. அத்த வாங்க ஹாஸ்பிடல் போலாம். என் அப்பா கிட்னிய உங்க பையனுக்கு குடுக்கறதுல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை போதுமா”
“ஆனாண்ணா…அண்ணி….” என்று சொல்ல, கண்ணனின் முகம் வாடியது. லதா புரியாமல் தகப்பன், மகன் இருவரையும் பார்க்க,
“அத்த அம்மா எங்களவிட்டு போய் முப்பது வருஷம் ஆச்சு. நான் பிறக்கும்போதே….” என்றவனின் கண்கள் கலங்க, அவனை அணைத்து ஆறுதல்படுத்தினார் லதா.
ஒருவழியாக மூவரும் மருத்துவமனை நோக்கி சென்றனர்.
அதேநேரம் சத்யா முன் கோபமாக நின்றிருந்தாள் மீனாட்சி.
“மீனுக்குட்டி என்ன சொல்ற நீ?”
“ஏன் தமிழ்லதானே சொல்றேன் உங்களுக்கு காது கேட்கல. எனக்கு உங்களை பிடிக்கல. உங்ககூட வாழ விருப்பம் இல்ல. அ…. அ…. அந்த பத்திரத்துல சைன்பண்ணி குடுங்க”.
“என்ன பிடிக்காதவ எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட? எதுக்கு என்னோட வாழ்ந்த?”.
“நான் ஒன்னும் உங்களை பிடிச்சு கல்யாணம் செய்துக்கல. எங்க வீட்ல பார்த்த மாப்பிள்ளை நீங்க. எங்க வீட்ல சொன்னாங்க கல்யாணம் செய்துக்கிட்டேன். கல்யாணம் ஆனா அடுத்த நிலை குடும்பம் நடத்துறதுதானே. அதான் அப்படியே வாழ ஆரம்பிச்சுட்டேன். இப்போ உடம்புக்கு முடியாம இருக்க உங்களோட என்னால எப்படி இனி சந்தோஷமான வாழ்க்கை வாழ முடியும். ஹாஸ்பிடல், டேப்லெட் அப்படியே உங்க வாழ்க்கை போய்டும். உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்ட காரணத்துக்காக என் வாழ்க்கையும் ஹாஸ்பிடலோட முடிஞ்சு போகணுமா? நான் ஏன் இந்த சின்ன வயசுலயே கஷ்டபடனும்” என்க,
மனையாளை அடிபட்ட பார்வை பார்த்த சத்யா “அப்போ உன் குடும்பத்துக்காகதான் என்னோட வாழ்ந்தியா”.
“ஆமா…. ஆமா…. இப்போ அதுல சைன் பண்றீங்களா?” என்று கேட்க,
“இல்ல நீ பொய் சொல்ற. நீ பேசறதை பார்த்தா யாருக்கோ பயந்துட்டு பேசற மாதிரி இருக்கு. எனக்கு தெரியும் உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும்னு……”.
“மண்ணாங்கட்டி. அப்படி எல்லாம் எதுவும் இல்லை. எனக்கு உ…. உங்…ம்கூம்……உங்களை பிடிக்கல. உங்களோட சேர்த்து என் வாழ்க்கையையும் கெடுத்தறாதீங்க. தயவு செஞ்சு அதுல சைன்பண்ணி குடுங்க. எனக்கு என்னோட சந்தோஷமான வாழ்க்கை முக்கியம்” என்று கோபாமாக பேச,
சத்யாவோ கலங்கிய கண்களை மனையாள் அறியாமல் மறைத்தவாறு அந்த டைவஸ் நோடீசை கையில் எடுத்தவன் உயிர் உருக்கும் குரலில் “சைன் பண்ணட்டுமாம்மா” என்க,
இறுகிய முகத்தோடு நின்றிருந்த மீனா சம்மதமாக தலையசைக்க, வலி நிறைந்த புன்னகையை உதிர்த்தவன் “சரி இனி நீயே நினைச்சாலும் நமக்குள்ள எந்த உறவும் இருக்க போறது இல்ல” என்றவாறு நடுங்கிய விரல்களோடு கையெழுத்து போட, அதை வேகமாக வாங்கியவள் இல்லை இல்லை பிடுங்கியவள் அவனை திரும்பியும் பாராது வேகமாக ஓடி சென்று தாங்கள் வந்த காரில் ஏறி, தந்தையிடம் அந்த நோட்டீசை கொடுத்துவிட்டு தலையில் அடித்து கொண்டு கதறி அழ துவங்கினாள்.
சென்னப்பனோ கர்வமாக தன் மீசையை திருகி “யாருகிட்டல்ல சவால்விடற உன் வயசு என் அனுபவம்ல” என்று நினைத்து கொண்டு “எடுலே கார….” என்று சொல்ல,
உயிர் இருந்தும் உணர்வற்ற உடலாக தங்கள் வீட்டை நோக்கி சென்றது மீனாவின் கூடு.
பிரிந்த உறவு மீண்டும் இணையுமா? இல்லை புது உறவுடன் சேருமா காத்திருந்து பார்ப்போம்.