அலைபேசியை கையில் வாங்கியவன், பக்கவாட்டில் இருந்த பொத்தானை அழுத்த, அப்போதுதான் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததை கவனித்தான்.
தரையில் அமர்ந்திருந்தவளை முறைத்தபடியே, அவன் அலைபேசியை உயிர்ப்பிக்கவும், அலைபேசி அலறவும் சரியாக இருந்தது. அழைத்தது அவன் தந்தை தான். நேற்றிலிருந்து அவருக்கு அழைத்துப் பேசாதது நினைவு வரவும், அழைப்பை ஏற்று, “சொல்லுங்கய்யா” என்றான் சக்திவேலன்.
“தம்பி… தம்பி இப்போ வேதாம்மா பேசுச்சேய்யா.” என்று அவர் பதட்டத்துடன் பேச,
“ஏன் இப்படி கிடந்து குதிக்கிறிங்க. உங்க உடம்பு இருக்க நிலைமை நியாபகம் இருக்கா. நிதானிச்சு பேசுங்க” என்று சக்திவேலன் அதட்ட,
“இல்லையா… வேதாம்மா”
“இங்கேதான் இருக்கா. உங்ககிட்ட பேச வேணாமுன்னு போனை அமர்த்தி போட்டுட்டு உட்கார்ந்திருக்கா. போதுமா” என்று உள்ளதை உள்ளபடியே அவன் உரைத்திட, வேதவள்ளி அவனை உறுத்து விழித்தாள்.
ஆனால், சொக்கநாதனோ, “அந்த புள்ளைக்கும் கோபம் இருக்கும்ல சத்தி.” என்று மருமகளுக்கு வக்காலத்து வாங்கிட,
“இருக்க வேண்டியது தான் அய்யா…” என்றதுடன் முடித்துக் கொண்டான் சக்திவேலன்.
“நீ எப்படிய்யா அங்கன. உனக்கு வேதாம்மா பத்தி தெரிஞ்சு தான் இருந்ததா. எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமேய்யா.” என்று பெற்றவர் மகனின் வேதனையை மனதில் கொண்டு பேச,
“என் பொண்டாட்டி இருக்க இடம் எனக்கு எப்படிய்யா தெரியாம இருக்கும்.” என்று அதிராமல் கேட்டு நின்றான் மகன்.
“தெரிஞ்சும் ஏன் சாமி இப்படி தனியா கிடக்கணும்”
“என் பொண்டாட்டிக்கு என்னோட வாழவே விருப்பமில்லையே. என்னை வேற என்ன சொல்லுதீக”
“நீங்க அவகிட்ட பேச ஒன்னும் இல்ல ஐயா. மரியாதை தெரியாதவகிட்ட எங்க ஐயா பேச வேணாம். அவ என்னோட வாழ வரமாட்டேன்னு சொல்லிட்டா. நான் என் புள்ளையை தூக்கிட்டு வண்டி ஏறுறேன். நான் பெத்த புள்ளையாவது எனக்கு நிலைச்சு இருக்கட்டும்.”
“சத்தி வேண்டாம்ய்யா. அவசரப்பட்டு நீயா ஏதும் செஞ்சு வச்சிடாத. ஏற்கனவே ரணப்பட்டு கிடக்குற பிள்ளை. நீயும் நோகடிச்சுடாத தம்பி.”
“என்னை என்னதான்ய்யா செய்ய சொல்றிங்க”
“நீ என் மருமககிட்ட போனை கொடு சத்தி” என்று முடிவாக தந்தை உரைத்துவிட, அவர் பேச்சை மீறி பழக்கம் இல்லாதவன் வேதவள்ளியிடம் அலைபேசியை நீட்டினான்.
அதை கையில் வாங்கி பேசும் துணிவு இல்லாமல், வேதவள்ளி மறுப்பாக தலையசைக்க, கையில் இருந்த அலைபேசியை அவள் பார்த்திருக்கும்போதே, பட்டென தரையில் வீசிவிட்டான் சக்திவேல். அலைபேசி நான்கைந்து பாகங்களாக சிதறிப்போக, புதிதாக வெளிப்படும் அவன் கோபத்தை தாங்க இயலாதவளாக கண்களை மூடிக்கொண்டு அழுது கரைந்தாள் வேதவள்ளி.
அவளையோ, அவள் கண்ணீரையோ கண்டு கொள்ளாதவனாக சக்திவேல் வேகமாக அங்கிருந்து விலகிச் சென்றுவிட, அவன் சென்றபின்பும் நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தாள் வேதவள்ளி.
இந்த கோபக்கார கணவன் பெரிதாக அச்சப்படுத்திப் பார்த்தான் அவளை. கோபக்காரன் தான் அவள் அறிவாள். ஆனால், அவளிடம்…
என்னவோ மிக மோசமாக தோற்றுக் கொண்டிருப்பதாக தோன்றியது அவளுக்கு. இதில் சக்திவேல் சொன்னபடி பிள்ளையை தூக்கிச் சென்று விடுவானோ என்று அதுவேறு சேர்ந்து கொண்டது இப்போது.
அவள் பிள்ளையை தூக்கி கொடுத்ததெல்லாம் வீம்புக்கென தான். எப்படியும் தன்னை காயப்படுத்த மாட்டான் என்ற நம்பிக்கையில் தான். ஆனால், இப்போது நிகழ்வதெல்லாம் அவள் நம்பிக்கையை குலைக்கும் வண்ணமே இருக்க, உண்மைக்கும் சக்திவேலனைக் கண்டு அஞ்சி நின்றாள் வேதவள்ளி.
அவள் அச்சத்திற்கு காரணமானவனோ, இன்னும் உக்கிரம் குறையாமல் தான் நடமாடிக் கொண்டிருந்தான் மகளின் அறையில். குளித்து முடித்து அயர்வு தீரும்படி அழகாக உறங்கி கொண்டிருந்தவளை பார்த்திருந்தாலே அவனுடைய சஞ்சலங்கள் குறைவது போன்ற உணர்வு சக்திவேலனுக்கு.
மெல்ல கைகால்களை அசைத்தபடி, சோம்பலாக அவன் மகள் கண்விழிக்க, தூர நின்றே அவளை ரசித்துக் கொண்டிருந்தான் தந்தை. ஆனால், எல்லாம் சில நொடிகள்தான்.
தனது கோலிக்குண்டு கண்களால் அறையைச் சுற்றிப் பார்வையைச் செலுத்திய மகள் தேடிய முகம் கிடைக்காமல் போகவும் தனது அழுகை கச்சேரியைத் தொடங்கிவிட்டாள்.
பெற்றவன் பதறிப் போனவனாக மகளை கைகளில் தூக்கிக்கொள்ள, ம்ஹூம்… அழுகை நிற்கவே இல்லை. மாறாக, அவன் கையில் இருந்து நெளிந்து இறங்க முற்பட்டு இன்னும் பெரிதாக அவள் சத்தம் கூட்ட, பயந்தவனாக மகளை மீண்டும் கட்டிலில் கிடத்திவிட்டான் சக்திவேல்.
குழந்தையின் அழுகுரல் கூட கேட்கவில்லையா இவளுக்கு? என்ன பிள்ளை வளர்க்கிறா? என்று சட்டென கோபம் பொங்கிவிட, வேகமாக அவள் இருந்த இடத்தை நோக்கி சக்திவேல் விரைய, இன்னமும் அழுது கொண்டு தான் இருந்தாள் மனைவி.
“பாப்பா அழறா பாரு. எழுந்து போ” என்று சக்திவேல் அதட்ட, அவனை கண்டுகொள்ளாதவளாக தனக்குள் கரைந்து கொண்டிருந்தாள் வள்ளி.
அதில் சினம் கொண்டு, “வள்ளி” என்று கணவன் அதட்டலுடன் அவள் கையைப் பிடித்து எழுப்பி நிறுத்திட, அவன் மகளை போலவே அச்சத்துடன் விழி விரித்தாள் மனைவி. அந்தநேரம் மகளுக்கும், மனைவிக்கும் பெரிதாக வித்யாசம் தெரியவே இல்லை சக்திவேலுக்கு. அதற்குமேல் எங்கே அவன் கோபம் கொள்வது.
மனைவியின் கண்களில் வடிந்து கொண்டிருந்த கண்ணீரை மென்மையாக துடைத்து, அவள் நெற்றியில் முத்தம் வைக்க மட்டுமே முடிந்தது அவனால்.
வள்ளி அவனின் இந்த செய்கையில் அனிச்சையாக நகர முற்பட, விடாமல் பிடித்து தன்னுடன் நிறுத்திக் கொண்டான் சக்திவேல்.
“நிறைய பேசணும். நிறைய சண்டை போடணும். நிறைய நிறைய மன்னிப்பு கேட்கணும். தெரியுது. ஆனா, இப்போ நேரமில்ல. உன் பொண்ணு அழுதுட்டு இருக்கா அங்கே. முதல்ல அவளைப் பாரு” என்று நிதானமாக அவள் காதருகில் அவன் உரைக்க,
“முதல்ல என் மாமன் பொண்ணைத்தான் தூக்கணும். அவளை தூக்கினா, என் பொண்ணு தன்னால என்கிட்டே வருவா. அவ ஒருத்தி என்னோட வந்தா, எனக்குன்னு ஒரு குடும்பமே வரும்.”
“நான் உங்களோட வரமாட்டேன்.”
“அப்புறம் பேசுவோம். முதல்ல உன் மகளை பாரு” என்று சக்திவேல் அழுத்திக் கூறவும், மகள் மீண்டும் அழவும் சரியாக இருக்க, கணவனை மறந்து மகளைத் தேடி ஓடினாள் வள்ளி.
மகள் அவள் முடியை அவளே பிடித்திழுத்தபடி அழுது கொண்டிருக்க, சட்டென ஒரு செல்லக்கோபம் அன்னைக்கு.
“எப்பவும் இதே வேலையா போச்சு மீனு” என்று பிள்ளையின் கையில் லேசாக ஒரு அடி வைத்தாள் அவள். அதில் இன்னும் முறுக்கிக்கொண்டு மகள் உதட்டைப் பிதுக்கி அழுகையின் சுதி கூட்ட, “அச்சோ… என் தங்கப்பிள்ளை அழாதடி குட்டிம்மா” என்று மகளை கையில் அள்ளிக்கொண்டாள் அன்னை.
அன்னையின் மார்பில் சாய்ந்து கொள்ளவும், அழுகையை மறந்து குதூகலித்த மகள் அன்னையின் முகத்திலும், அவள் இதழ்களிலும் முகத்தால் மோதி, ஆங்காங்கே முத்தமிட, அந்த காட்சியை கதவோரம் நின்றபடி, ஏக்கத்துடன் பார்த்திருந்தான் சக்திவேல்.
எதேச்சையாக திரும்பிய வேதவள்ளியின் கண்களில் ஏக்கம் நிறைந்த அவன் முகம் தென்பட, என்னவோ ‘தவறு செய்கிறோமோ’ என்று குழம்பி நின்றாள் மனைவி.