அத்தியாயம் 3

நமக்குள் எழுந்த

விரிசலை காதலால்

தைக்க வா பெண்ணே!!!

 

மனம் முழுவதும் ஆனந்தத்துடன் அந்த வீரனுடன் நடந்தான் நரேந்திரவர்மன்.

அவன் கண்கள் சுற்றிலும் பார்வையை ஓட்டியது. முதல் பார்வையிலே மனம் கவர்ந்தவளை அவன் கண்கள் தேடின. அவளை நினைத்த மாத்திரத்தில் அவன் நெஞ்சமெல்லாம் இனித்தது.

“இந்த தேசத்தின் நந்தவனம் அவ்வளவு அழகானதா வீரரே?”, என்று பேச்சு கொடுத்தான் நரேந்திரவர்மன்.

“ஆம் இளவரசே.  ஆனால் உள்ளே எவ்வாறு இருக்கும் என்று நான் அறியேன்”, என்றான் அவ்வீரன்.

“என்ன வீரரே? இந்த தேசத்தில் இருந்து கொண்டு நந்தவனத்தை அறியீரா?”

“ஆம் இளவரசே, எமது பணி அரண்மனையில் மட்டும் தான். இங்கே தான் வந்தது கிடையாது?”

“பின் எவ்வாறு நந்தவனம் அழகென்று உரைத்தீர்”

“என்னுடைய மைத்துனன் சொல்லி ஒரு முறை செவி மடுத்திருக்கிறேன்”

“அது என்ன? எனக்கும் கூற முடியுமா?”

“நிச்சயமாக இளவரசே. அவன்  ஒரு முறை மட்டும் தான் உள்ளே சென்றானாம்”

“ஏன் ஒரு முறை? தங்கள் மைத்துனன், நந்தவனத்தில் வேலை செய்யவில்லையா? அவர் பல முறை உள்ளே சென்றது இல்லையா?”

“இல்லை இளவரசே, உள்ளே யாரும் செல்ல கூடாது என்று அரசரின் கட்டளை. இளவரசிக்கு உதவ வேண்டுமானால் உள்ளே செல்லலாம்”

“அப்படியா?”

“ஆம் இளவரசே, நந்தவனத்தை சுத்தம் செய்வதற்காக மட்டும் தான் உள்ளே செல்ல அனுமதி. அவர்களை தவிர இளவரசி அவர்கள் தோழிகளை கூட உள்ளே கூட்டி  செல்ல மாட்டார்கள்”

“ஏனப்பா? இளவரசிகள் எப்போதுமே தோழிகளுடன் தானே எங்கேயும் செல்வார்கள்”

“ஆம் இளவரசே, ஆனால் எங்கள் இளவரசி, அனைத்திலும்  வேறுபட்டவர். அவர் மட்டும் தான் உள்ளே செல்வார். உள்ளே அழகான பூங்கொடிகளும், நறுமணம் தரும் மரங்களும், பூத்து குலுங்கும் செடிகளும், பலவிதமான பழங்களும் கொண்ட  அற்புத சோலை போல இருக்குமாம்”

“எல்லா நந்தவனத்திலும் அதே போல் தானே உள்ளன வீரரே?”

“ஆம் இளவரசே, ஆனால் இங்கே குடி கொண்டிருக்கும் ராம பிரான் மட்டும் தனி சிறப்பு வாய்ந்தவர்”

“என்ன, நந்தவனத்தில் ராமரா?”

“ஆம் இளவரசே, நாங்கள் அனைவரும் கிருஷ்ணனையோ, சிவனையோ வழிபட்டால் இளவரசி மட்டும் ராம பக்தை”

“ஒரு வேளை ஆண்டாள் போல தங்கள் இளவரசியும் ராமர் மீது காதல் கொண்டு விட்டாரோ என்னவோ?”, என்று சிரித்தான் நரேந்திரவர்மன்.

“அவ்வாறு இளவரசியை கேலி செய்யாதீர்கள் இளவரசே. இளவரசி, அற்புதமானவர். அவர் ராமன் மீது காதல் கொண்டால் நிச்சயம் அந்த ராமரே மனிதனாக அவதாரம் எடுப்பார்”

“என் கேலிக்கு மன்னிப்பளியுங்கள் வீரரே”

“ஐயோ, தாங்கள் என்னிடம் மன்னிப்பை வேண்டுவதா? அதற்கு அவசியம் இல்லை இளவரசே. எங்கள் இளவரசி, ராமர் மீதும் மட்டும் பக்தி கொண்டிருக்க வில்லை”

“பின்னே?”

“சீதா பிராட்டியின் மீது கூட அளவற்ற பக்தி கொண்டுள்ளார்”

“என்ன?”

“ஆம் இளவரசே. நந்தவனத்தில் இருப்பது சீதாவுடன் இருக்கும் ராமரின் சன்னிதானம்”

“ஓ அப்படி என்றால் ராமர் கோவில் என்று கூறுங்கள். கூடவே அனுமனும், லக்குவனனும் இருப்பார்களே?”

“அது தான் இல்லையாம் இளவரசே. உள்ளே இருப்பது ராமரும், சீதா தேவியும் திருமண கோலத்தில் இருக்கும் சிற்பம்”

“என்ன விந்தை? அது எப்படி அவர்கள் இருவரும் மட்டும்?”

“ஆம் இளவரசே, இளவரசியின் ஆசைக்கினங்க எங்கள் சிற்பி அந்த சிலையை வடித்து தந்திருக்கிறார். அதையே பார்த்த படி தான் இளவரசி இருப்பார்களாம்”

“ஓ?”

“ஆம் இளவரசே. இளவரசி அரண்மனைக்கு வரும் போது யாரையாவது நந்தவனத்தை சுத்த படுத்த அனுப்புவார்களாம்.  அதன் பின் மகாராஜாவின் சபை கலைந்த உடன் நந்தவனத்தில் இளவரசி குடியேறி விடுவார்களாம். சூரியன் மறையும் நேரத்தில் தான் அரண்மனைக்கே செல்வார்களாம்”

“என்ன? அப்போது மதிய உணவு”

“அது தான் நான் கூறினேனே. உள்ளே பழங்கள் காய்த்து தொங்கும் என்று. அது தான் இளவரசியின் மதிய உணவாம்”

“வியப்பாக இருக்கிறது வீரரே”

“ஆம் அதனால் தான் இளவரசி அனைத்திலும் வேறுபட்டவர் என்று நான் உரைத்தேன். இதோ நந்தவனம் வந்து விட்டது. இனி தாங்கள் செல்லலாம்”

“தாங்கள் கூறுவதை பார்த்தால் உள்ளே இளவரசி மட்டும் தனியே இருப்பது போல் தோன்றுகிறது. நான் உள்ளே செல்லலாமா?”

“தாங்கள் எங்கும் செல்லலாம் இளவரசே. தாங்கள் யாரென்று கூறினால் இளவரசியே தங்களுக்கு நந்தவனத்தை சுற்றி காண்பிப்பார் என்று மகாராஜா தங்களிடம் கூற சொன்னார்”

“சரி நல்லது. நான் சென்று பார்க்கிறேன்”, என்று சொன்னவனின் மனது ஆனந்த கூக்குரல் இட்டது.

இளவரசியை பார்க்க நந்தவனத்தில் ஒரு தனிமையா? மனதுக்குள் மகாராஜாவுக்கு நன்றி கூறி கொண்டான்.

அவன் பாதம் நந்தவனத்தில் பிரவேசித்தது.

“எங்கே என் தேவதை?”, என்று தேடி கொண்டே முன்னேறி சென்றவன் மீது ஓடி வந்து மோதினாள் வான்மதி. அவன் கைகள் அவளை வளைத்து கொண்டது.

அவளுடைய திடீர் மோதலில் தடுமாறி கீழே  விழுந்தான்  நரேந்திரவர்மன். அவன்  மீதே  விழுந்தாள்  வான்மதி.

அவள் பார்வை அவன் மீது விழாமல் பின்னே நோக்கியது. அவள் பார்வை செல்லும் திசையை நோக்கி பார்வையை திருப்பினான் நரேந்திரவர்மன்.

அங்கே அவளை துரத்தி கொண்டு வந்தது ஒரு குரங்கு. அதை பார்த்ததும் சிரிப்பு வந்தது நரேந்திரவர்மனுக்கு.

இவனை பார்த்ததும் அது ஓடியே போனது. நிம்மதியாக மூச்சு விட்டாள் வான்மதி.

“ஒரு சாதாரண மந்திக்கு ஒரு நாட்டின் இளவரசி அச்சம் கொண்டு ஓடி வரலாமா?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.

அவனை நிமிர்ந்து நோக்கியவள் “நான் அச்சம் கொண்டு ஓடி வர வில்லை. அது என்னை காய படுத்தினால் எனக்கு ஒன்றும் இல்லை. ஆனால் அது என்னை தாக்குகிறது என்று நினைத்து என்னையே அறியாமல் நான் அதை காய படுத்தினால் அதற்கு வலிக்குமே. அதனால் தான் அதன் கண்ணில் இருந்து மறைவதற்காக ஓடி வந்தேன்”, என்றாள் வான்மதி.

“அது ஏன் தங்களை தூரத்துகிறது இளவரசி?”

“ராமரை தரிசனம் செய்ய சென்றேன். இது சிலை மேல் அமர்ந்து கொண்டு என்னை தரிசிக்க விடாமல் செய்தது. நான் அதை அகன்று போக சொன்னேன். அதை காய படுத்த வந்தவள் என்று நினைத்து என்னை தாக்க வந்தது. அதனால் தான் ஓடி வந்தேன்”

“ராமர் மீது மந்திக்கு  தங்களை  விட பக்தி அதிகம் இளவரசி. அது அனுமனின் வழித்தோன்றல். அதை தடுக்கலாமா?”

“தாமதாமாக புரிந்தது. அது சரி தாங்கள் யார்? நந்தவனத்திற்குள் நுழைய உமக்கு அனுமதி கொடுத்தது எவர்?”

“உங்களுடைய தந்தை தான் இளவரசி”

“தந்தையா?”

“ஆம் அவர் தான் நந்தவனத்தை  சுற்றி பார்வை இட சொன்னார். உங்களிடம் கூறவும் சொன்னார். நீங்கள் எனக்கு சுற்றி காட்ட வேண்டுமாம்”

“அப்படியா? வெகுநாளாக நந்தவனத்தை சுற்றி வேலி இட சொல்லி கொண்டிருந்தேன். அதற்காக தங்களை தந்தை அனுப்பியுள்ளார் போல? வாருங்கள் சுற்றி காட்டுகிறேன். இந்த பூஞ்சோலைக்கு அழகான வேலியை தாங்கள் தான் அமைத்து தரவேண்டும்”

“நான் பார்வை இட வேண்டுமானால் தாங்கள் என் மீதிருந்து எழுந்தால்  தானே முடியும் இளவரசி?”

இப்போது தான் அவன் மீது விழுந்து கிடப்பதே உரைத்தது அவளுக்கு. அவன் கைகள் அவள் இடுப்பை சுற்றி இருந்தது. இருந்த நிலைமையை கண்டு சிவந்து போனாள் வான்மதி.

அவனிடம் இருந்து விலகி அமர்ந்தவள், உடனே எழுந்து நின்றாள். அவனும் அவளுடனே எழுந்து நின்றான்.

“மந்தியை பார்த்து தடுமாறி தங்கள் மீது விழுந்து விட்டேன். மன்னித்து கொள்ளுங்கள் வீரரே”

“மன்னிப்பு தேவை இல்லை இளவரசி, பூஞ்சோலை வந்து என் மீது மோதினால் எனக்கு என்ன நோவு வந்து விட போகிறது?”, என்று சிரித்தான் நரேந்திரவர்மன்.

தடுமாற்றமாக உணர்ந்தாள் வான்மதி.

“தடுமாற்றத்தை  விடுங்கள்  இளவரசி. பதட்டத்தில்  தானே  என்  மீது  விழுந்தீர்கள். அதனால்  கவலை  இல்லை. நந்தவனத்தை  பார்வை  இடலாமா?

“வாருங்கள்  வீரரே. இது  தான் நந்தவனத்தின் ஆரம்பம். இங்கிருந்து  தான்  தாங்கள்  வேலியை  நட  வேண்டும்”

“ஆகட்டும்  இளவரசி”, என்று கூறிய நரேந்திரவர்மனின் மனதில் கவலை மேகம் சூழ்ந்தது.

“தான் அவளை கண்டு மதி மயங்கி இருக்கிறேன். அவளை முதல் முறை தொட்ட வேளையிலே அவளை ஆண்டு விட துடிக்கிறேன். ஆனால் நான் ஒரு ஆண் என்ற தடுமாற்றம் மட்டும் தான் அவளிடம் இருக்கிறது.

அவள் மனம் மயங்கி ஒன்றும் என்னிடம் தடுமாற வில்லை. அவள் என் மனதை கொள்ளை கொண்டது போல் நான் அவளை மயக்க வில்லையா? என்னைப் பார்த்தவுடனே அவளுக்கு என் மேல் மையல் ஏற்பட வில்லையா? என் மனம் கவர்ந்த இளவரசிக்கு என் மேல் காதல் வர வில்லையா? என் அழகின் மீது கூட அவளுக்கு நாட்டம் இல்லையா?”

“நான் யாரென்று தெரிந்த பின்னால் என் மேல் அவளுக்கு காதல் வந்தால் அந்த காதல் மெய்யானதாக எப்படி இருக்கும்? பார்த்த உடனே அவள் கண்ணிலும் மனதிலும் நுழைந்தால் அல்லவா நான் அவளுடைய மணாளனாக இருக்க முடியும். அரண்மனையில் அத்தனை பேர் முன்னிலையில் கம்பீரமாக இவள்  உரைத்த சொற்கள் அனைத்தும் பொய்யானவையா? அப்போது இவள் மனதில் ஒரு ஆணுக்கு இடம் இல்லையா? ஒரு அரச குமாரனுக்கு மட்டும் தான் இடமா?”, என்று யோசனை செய்து அவன் மனமே அவனை அலைக்கழித்தது.

தன்னை தனிமையில் பார்த்ததும் தன் அழகில் மயங்கி, தன்னிடம் அவள் கிறங்கி இருக்க வேண்டும் எதிர் பார்த்தான் நரேந்திரவர்மன்.

ஆனால் வான்மதி அப்படி இருக்க வில்லை. அவன் கண்களை நேருக்கு நேர் சந்தித்து உரையாடினாள். அவன் மீது விழுந்த போது கூட ஒரு அந்நிய ஆண் என்று நினைத்து விலகினாளே தவிர அவன் கரங்களுக்குள் புகுந்து கொள்ள விளைய வில்லை.

அவள் மனதிலும், தன்னுடைய தாய் தந்தை மனதிலும் திருமண ஆசை இப்போதைக்கு ஏற்படுத்த வேண்டாம் என்று சித்தரிடம் சொன்ன அவனே, அவள் தன்னை நேசித்து தன் கரங்களுக்குள் அடைக்கலம் புக வேண்டும் என்று நினைத்து ஆசை கொண்டான்.

அவள் மீதான அதிக மயக்கத்தில் அனைத்தையும் மறந்து, பல ராஜ்யங்களை வென்ற இளவரசன் என்பதையும் மறந்து ஒரு சாதாரண ஆண்மகனாக அவள் மனதில் காதல் இல்லை என்று கலங்கி நின்றான் நரேந்திரவர்மன்.

நினைக்க நினைக்க அவன் மனது வெகுவாக கூம்பி போனது. ஒரு கன்னியின் மனதில் சலனத்தை விதைக்க முடியாவிட்டால் அவன் என்ன ஆண் மகன்?

தன் அழகின் மீது, அலாதி வெறுப்பு வந்தது அவனுக்கு. அந்த அழகு அவளை கவர வில்லையே.

தன்னுடைய கர்வத்துக்கும், செருக்குக்கும் அவளுடைய மயக்க மின்மை பெரிய அடியை கொடுத்தது. “அவள் தன்னிடம் மயங்கி நிற்க வில்லை. அவள் மனதில் காதல் தன்மீது இல்லை”, என்று நினைத்து சோர்ந்து போனான்.