கொஞ்சம் பழைய வீடு. ஆனால், சொல்லிக் கொள்ளும் பெருமைகளை கொண்ட செட்டிநாடு வீடு இது. சின்ன சின்ன விழாக்களை செய்யும் அளவு.. பெரிதாகவே இருந்தது.
நேற்று வந்து மாப்பிள்ளை வீட்டில் பார்த்து சென்றிருந்தனர் கிருபாகரியை. அந்த வீட்டின் பேத்தி கிருபா. கடந்த மூன்று வருடமாக வரன் பார்க்கின்றனர்.
காலை நேரம் மணி 5:10. தாத்தா அருணாச்சலம் எழுந்து வந்து ஹாலில் அமர்ந்திருந்தார். பேத்தி கிருபாவும் எழுந்து, ஜாக்கிங் உடையணிந்துக் கொண்டு வந்து நின்றாள் அவரின் முன் “தாத்தா..” என்றாள்.
பெரியவர் என்னமோ யோசனையில் இருந்தார் போல.. அமைதியாகவே இருந்தார்.
மீண்டும் பேத்தி “தாத்தா.. என்ன கல்யாண கனவா” என்றாள், கிண்டலான குரலில்.
அருணாசலம் “ம்.. இல்ல டா ம்மா.. பேத்தி கனவு” என்றவர் பொறுமையாக எழுந்து வெளியே வந்தார்.. வாசல் படிக்கட்டுகள் இறங்கி நடந்தார். பேத்தி, அவர் படிக்கட்டுகள் இறங்கும் வரை அவருடன் வந்தவள்.. ரோட்டிற்கு வந்ததும்.. “தாத்தா.. ரவுண்டு போயிட்டு வந்திடுறேன்.. பார்த்து நடங்க” என்றவள் சிட்டாக பறந்தாள் ஷூ கால்களுடன்.
காரைக்குடி மண்… பளபளவென பொழுது விடியும் நேரம்.. இருபக்கமும் பெரிய பெரிய மரங்கள்.. அதை போலவே.. பழமையை சொல்லும் வீடுகளை கொண்ட அகலமான சாலையில், தாத்தா.. தூரத்தில் நடந்துக் கொண்டிருந்த தன் நண்பனை எட்டி பிடிக்க.. வேகமாக நடந்தார்.
இருவரும் 6:30 மணி போல வீடு வந்தனர். சிவகாமி பாட்டி பொறுமையாக பேத்தியின் அருகே அமர்ந்தார். கிருபா, கிருபாவின் அன்னை கோகிலா எல்லோருக்கும் காபி எடுத்துக் கொண்டு வந்தார்.
பாட்டி “கிருபா.. இன்னிக்கு கடைக்கு நீ போக வேண்டாம் டா.. தாத்தா பார்த்துக்குவார்..” என்றார் பேத்தியிடம் வாஞ்சையாக.
கிருபாகரி “ஏன் பாட்டி” என்றாள்.
பெரியவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அதை உணர்ந்த கிருபா தன் அன்னையை முறைப்பது போல பார்த்தாள்.
பாட்டி அந்த புன்னகையை உணர்ந்து “என்னமோ இந்தமுறை உனக்கு.. முடிஞ்சிடும்ன்னு தோணுது டா.. கொஞ்சநாள் வீட்டில் இருந்து சமையல் எல்லாம் கத்துக்கோ. மாப்பிள்ளை அமெரிக்காவில் இருக்காருல்ல.. நம்ம ஊர் சாப்பாடெல்லாம் அதிகம் சாப்பிட்டிருக்க மாட்டார். அத்தோட, உன் உடபையும் கொஞ்சம் தேத்திக்கானும் நீயு. பாரு கன்னமெல்லாம் ஒட்டி போச்சு. ரொம்ப அலைச்சல் தங்கம் உனக்கு..” என்றார் கோர்வையாக.. பேத்தி மறுக்க கூடாது என பேசினார்.
கிருபா புன்னகைத்துக் கொண்டாள் தனக்குள். ஏதும் பாட்டியை எதிர்த்து பேசவில்லை.
தாத்தா “அவளுக்கு சமையல் இன்னும் என்ன தெரியனும். என் பேத்தி சமையலுக்கு எல்லாரும் கட்டுபட்டிடுவாங்க. சும்மா கன்டிஷன் பண்ணாத, இஷ்ட்டம் போல இருக்கட்டும் அவள்” என தன் மனையாளை அதட்டினார்.
சிவகாமி “க்கும், அதேதான் நானும் சொல்றேன். அவளை வேலைவாங்காதீங்கன்னு சொல்றேன். வீட்டில் இஷ்ட்டம் போல் இருக்கட்டுமே. அந்த கடையை அவள்தான் பார்க்கனுமா, ஆம்பள பையன் மாதிரி அவளை வேலை வாங்க வேண்டியது. உங்களுக்கே முடியலை.. கடையை எதுக்கு வைச்சிகிட்டு” என்றார் கணவனை பார்த்து நொடித்த குரலில்.
கிருபா “பாட்டி, தாத்தா எங்க வேலை வாங்குறாங்க. அப்படி எல்லாம் இல்லை, பாட்டி.. இது நம்மோடது.. நான்தானே எல்லாம் பார்க்கணும்.” என தொடங்க
அருணாசலம் தாத்தா “நீ போடா.. குளிச்சிட்டு கிளம்பு, இவளுக்கு என்ன வேலை.. அங்கிருக்க கடை எல்லாம் நம்மோடது.. யாரு என்ன செய்யறாங்கன்னு பார்க்க வேண்டாமா.. உங்க பாட்டிக்கு ஒன்னும் புரியாது.. அவளுக்கு என்ன இருக்கு.. எப்படி வருதுன்னு என்ன தெரியும். எல்லோரும் கண்ணுமுன்னாடியே இருக்கணும்.. நல்லா சாப்பிடனும்.. சிரிக்கணும். அதுமட்டும் போதும் அவளுக்கு. அதை பாதுக்காப்பது எப்படின்னு அவளுக்கு எப்படி தெரியும்.. நீ போடாம்மா” என்றார் எப்போதும் போல மனைவியை தாக்கி பேசி.
கிருபா ஒன்றும் சொல்லாமல் அமைதியாகினாள். காபி பருகினாள்.. அன்னை பிஸ்கட் எடுத்து கொடுக்கவும்.. குழந்தையென அதை உடைத்து.. அதில் போட்டு.. உண்டாள். பெரியவர்கள் பார்த்துக் கொண்டே இருந்தனர்.
கோகிலாவிற்கு ஆனந்தமும் பெருமூச்சும் சேர்ந்தே வந்தது. தன் அன்னை சொல்லுவது போல.. ஆண் பிள்ளை போலதான் அலைகிறாள். ஆனாலும் இப்படி அமைதியாக அமர்ந்து.. சொல்லுவதை கேட்டு பிஸ்கட்ம் உண்ணுகிறாள்.. எப்படி முடிகிறது இவளால் என ஆனந்த பெருமூச்சு அவரிடம்.
ஆனாலும் மனதின் ஓரம் ஒரு வருத்தம் ‘வயது 25 ஆகுது ஆண்டவா.. என் பெண்ணுக்கு நல்ல வழி காட்ட கூடாதா!. ஆண்டவா.. என் வாழ்க்கை போலல்லாமல் அவளாவது நன்றாக இருக்க வேண்டும்’ என வேண்டிக் கொண்டார் கடவுளிடம்.
பெரியவர்கள் அமர்ந்திருக்க. கிருபா எழுந்து தனதறைக்கு சென்றுவிட்டாள்.
அருணாசலம், தன் பெரிய மகனுக்கு போனில் அழைத்து பேசினார் “எப்போ கிளம்புகிறாய்..” என்றார்.
மகன் ஷண்முகநாதன் “ப்பா, இப்போதான் எலெக்ஷன் முடிஞ்சிருக்கு.. எனக்கு வேலை இருக்கு.. இந்த வாரம் கஷ்ட்டம் ப்பா. அடுத்த வாரத்தில் ஒருநாள் வரேன்.” என்றார்.
அருணாசலம் “டேய், நாலு மாசமாக டயர் கடைக்காரன் வாடகையும் கொடுக்கலை.. கடையை காலியும் செய்ய மாட்டேங்கிறான், வந்து பார்த்துட்டு போடா..” என்றார்.
ஷண்முகம் “அப்பா, வேலை இருக்கு.. நான் திருநெல்வேலி வரை போகிறேன்.. வர முடியாதுப்பா. கிருபா பார்த்துக்குவா.. நான், இன்ஸ்பெக்ட்டர் முத்துராஜ்கிட்ட சொல்லி வைக்கிறேன். ஏதாவது தகராறு செய்தால், அவனை வந்து பார்க்க சொல்றேன். கிருபாகிட்ட பேசிட்டேன் நேற்று இரவு. பார்த்துக்கலாம் ப்பா.. நீங்க உடம்பை பாருங்க” என்றார் சலிப்பான த்வனியில், மகன்.
அருணாசலம் விடாமல் “என்னமோ போ… கிருபாவை வந்து நேற்று பார்த்துட்டு போனாங்க, நீ அவங்க வீட்டில் பேசணும் இன்னிக்கு. என்ன சொல்றாங்க கேளு. ஜாதகம் கொடுத்திருக்கு.. மேற்கொண்டு பார்த்துவிட்டு கூப்பிட சொல்லுப்பா..” என்றார் சலிப்பாக.
ஷண்முகம் “அப்பா.. பார்த்துக்கலாம், அவங்க சும்மா போறபோக்குல வந்து பார்த்திருக்காங்க.. அவங்க, அண்ணன் பையனுக்கு ஏற்கனவே கிருபாவை பார்த்து தட்டி போச்சு.. உங்களுக்கு இதெல்லாம் தெரியாது ப்பா.. அவசபடாதீங்க பார்த்துக்கலாம்” என்றார்.
அருணாசலம் அமைதியாகிவிட்டார்.
சண்முகம் “அப்பா நான் பார்த்துக்கிறேன், கிருபா என் பொறுப்பு. என் தங்கை பெண்.. நான் விட்டுடமாட்டேன்” என்றார் ஆதரவாக.
அருணாசலம் ‘க்கும்..’ என தொண்டையை சரி செய்துக் கொண்டு “எல்லாம் தெரியும் டா.. சரி, வைக்கிறேன்..” என்றவர் அழைப்பை துண்டித்தார்.
மனையாள் சிவகாமி தன்னையே குறுகுறுவென பார்ப்பதை உணர்ந்து “என்ன காலையில் டிபன் இல்லையா.. என் முகத்தையே பார்த்துகிட்டு இருக்க” என்றார்.
சிவகாமி “என் பேத்தி, கல்யாணம் முடியட்டும்.. அப்புறம் நான் ஏன் உங்க முகத்தை பார்க்கிறேன்” என்றவர் எழுந்து சமையலறை சென்றார். இருவருக்கும் வயது ஆகிறது.. கொஞ்சம் பயம் கிருபாவை நினைத்து, அதனாலேயே சரியாக பேசிக் கொள்ள முடியவதில்லை இருவருக்கும். இது இயல்புதான் அவர்களுக்குள்.
சிவகாமி என்ன சமையல் என கேட்டார் மகளிடம்.. கோகிலாதான் எல்லாம் பார்ப்பது, உதவிக்கு என கண்ணம்மா அக்கா இருக்கிறார், அதனால் பாட்டி அதிகம் சமையலறை வருவதில்லை. இப்போது காலை உணவை கேட்டுவிட்டு.. குளிப்பதற்கு சென்றார்.
இயல்பான வேலைகள் நடந்தது.. கிருபா, குளித்து வந்து பூஜை அறையில் சுவாமிகளுக்கு பூ வைத்தாள். பாட்டி வந்து.. பூஜை செய்தார்.. கிருபா அதற்கு உதவினாள்.. தாத்தாவும் குளித்து வர.. எல்லோரும் பூஜை முடித்து ஹாலுக்கு வந்தனர்.
கோகிலா உண்பதற்கு அழைத்தார்.. அப்படியே மூவரும் உண்டனர்.
கிருபா லாப் எடுத்துக் கொண்டு வெளி திண்ணைக்கு செல்ல.. தாத்தாவும் உடன் சென்றார். இவர்களின் பரம்பரை தொழில் வெள்ளி வியாபாரம். முன்பெல்லாம், அதாவது அருணாசலத்தின் தந்தை காலத்தில் தாங்களே ஆட்கள் வைத்து வெள்ளி பொருட்கள் செய்வர். அதெல்லாம் அப்போதே முடிந்துவிட்டது.
அருணாசலம் பொதுப்பணி துறையில் வேலை செய்து ஒய்வு பெற்றவர். அவர் தலையெடுத்த காலம் தொட்டு.. அரசாங்க வேலையில்தான் எல்லோரும் இருந்தனர். அருணாசலம் ஒரே மகன், மூன்று அக்காக்கள். எனவே, தந்தையின் தொழிலை காக்க வேண்டுமே என.. வெள்ளி கடை.. ஹோல்சேல் வைத்திருக்கிறார் அப்போதுத் தொட்டு.
அருணாசலம் வேலையில் இருந்தவரை.. பெரிதாக தொழிலில் வளர்ச்சி இல்லை.. எதோ கடையை வைத்திருந்தார். அவர் ரிட்டையர் ஆனது முதல்.. கடையை நன்றாக கவனிக்க தொடங்கினார்.