வான்மதியின் கழுத்தில் அவள் வைத்திருந்த வாள் அழுந்தி படிந்தது. அந்த வீரனின் வாளின் கூர்மையால் அவள் கழுத்தில் அது சிறு கீறலையும் ஏற்படுத்தியது.
வெண்ணையை குழைத்தது போல இருந்த அவள் வெண்ணிற சங்கு கழுத்தில் அந்த சிறு கீறலினால் வந்த ரத்தத்தின் சிவப்பு அனைவரையும் கலங்கடித்து.
“இப்படி எல்லாம் செய்யாதே வான்மதி. என்னால் தாங்க இயலவில்லை”, என்றாள் அருந்ததி.
ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விட்டார் வாசுதேவசக்கரவர்த்தி. பின் மகளிடம் திரும்பி “என்னை மன்னித்து விடு மகளே. சிறு வயதில் இருந்து உன் மனம் புரிந்தாலும் உன்னை இந்த இக்கட்டில் வந்து நிறுத்தி விட்டேன். இப்போது என்னவாயிற்று என்று இந்த விபரீத முடிவை நீ எடுத்தாய்? நீ நம் தேசத்தின் இளவரசி. அது மட்டும் இல்லாமல் நம் பிரஜைகளின் செல்ல குழந்தை. உன்னை சாக விட்டுவிட்டு அனைவரும் வேடிக்கை பார்ப்பார்களா? செங்கல்வராயன் படை எடுத்து வந்தால் என்ன? வந்து விட்டு போகட்டும். நாம் ஒன்றும் போரை பார்த்து பயந்து பின்வாங்கியது இல்லையே? அவனை எதிர்த்து போரிடுவோம். நீ உன் முடிவை மாற்றி கொள். இனி உன்னை திருமணத்துக்கு வற்புறுத்த மாட்டோம் அம்மா. எங்களுக்கு நீ வேண்டும் மகளே”, என்றார்
தந்தையின் பாசமிகு குரலில் நெகிழ்ந்த வான்மதி “மெய் தானா தந்தையே? தாங்கள் இப்போது உரைத்ததை நான் மெய் என்று நம்பலாமா?”, என்று கண்களில் ஒரு வித மின்னலுடன் கேட்டாள்.
“கட்டாயம் அம்மா. அந்த வாளை வீரனிடம் கொடு. உன் விருப்பத்தை மீறி எதுவும் நடக்காது”
“நன்றி மஹாராஜா. அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். இந்தாருங்கள் வீரரே தங்கள் வாள்”, என்று சொல்லி அவனிடம் அதை கொடுத்தாள்.
கொடுத்தால் போதும் என ஆனந்தத்துடன் அதை வாங்கி கொண்ட அந்த வீரனுக்கு போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது.
“எனக்கு மனதும், உடலும் களைப்பாக இருக்கிறது தந்தையே. நான் ஓய்வு எடுக்க செல்லலாமா?”, என்று கேட்டாள் வான்மதி.
“சரி மகளே. நீ போய் ஓய்வெடுத்து கொள். போகும் முன் வைத்தியரிடம் சென்று காயத்துக்கு மருந்திட்டு கொள்”
“அப்படியே ஆகட்டும் தந்தையே! வருகிறேன் மகாராணி”, என்று கூறிவிட்டு முகம் முழுவதும் புன்னகையுடன், கால்களில் ஒரு துள்ளலுடன் அங்கிருந்து அவள் செல்வதை இரு கண்கள் ஆசையாக, ஆர்வமாக நோக்கியது.
அந்த கண்களில் அவள் மேல் காதல் கரை புரண்டோடியது. இரண்டு கண்கள் தன்னை அங்குலம் அங்குலமாக மொய்ப்பதை அறியாமல் அங்கிருந்து ஓடியே போனாள் வான்மதி.
போன அவளையே பார்த்து கொண்டிருந்த மகாராஜா முகத்தில் சோகம் கவிழ்ந்திருந்தது. அவர் யோசனையுடன் அமைச்சரை பார்த்தார்.
“இளவரசி தங்கள் முடிவை கூறி விட்டார்கள் மகாராஜா. அடுத்து நாம் என்ன செய்ய போகிறோம்?”, என்று கேட்டார் அமைச்சர்.
“படையை தயாராக சொல்லுங்கள் அமைச்சரே. போருக்கு நம் வீரர்கள் தயாராகட்டும். நாம் இழப்பை சந்தித்தே ஆக வேண்டும். அது மட்டும் அல்லாமல் செங்கல்வராயனை முறியடித்தே ஆக வேண்டும்”, என்றார் மகாராஜா.
“அது அவ்வளவு எளிதல்ல மகாராஜா”, என்று மக்கள் இடையில் இருந்து சிரிப்புடன் கூடிய ஒரு கம்பீரமான குரல் கேட்டது.
அந்த குரலில் இருந்த கேலியிலும், திமிரிலும் மகாராஜாவின் புருவங்கள் உயர்ந்தன.
அனைவரும் திகைப்புடன் குரல் வந்த திசையை நோக்கினார்கள். ஆனால் அங்கே யார் உரைத்தது என்று யாராலும் அறிய முடிய வில்லை.
கண்களில் சினத்துடன் “யாரது?”, என்று கேட்டார் மகாராஜா.
அந்த அரண்மனையே அமைதியில் மூழ்கி இருந்தது. எந்த சத்தமும் வர வில்லை. அனைவரும் தலையை திருப்பி திருப்பி பார்த்தார்கள்.
“அவையை அவமதிப்பது போல், நாம் நாட்டு மக்களின் வீரத்தை பரிகசிப்பது போல் பேசியது யார்?”, என்று மறுபடியும் கேட்டார் மகாராஜா.
“மகாராஜா தான் முடிவை கூறி கொண்டிருக்கும் போது அபசகுனமாய் பேசியது யாரப்பா? வெளியே வா”, என்றார் அமைச்சர்.
“அமைச்சரே, இப்போது பேசியது யார் என்று கண்டறிந்து அவனுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்”, என்று மகாராஜா கூறியதும் “அப்படியே ஆகட்டும் மகாராஜா”, என்றார் அமைச்சர்.
“அதுவும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல மகாராஜா”, என்று மறுபடியும் அதே குரல் கேட்டது.
இந்த முறை குரலோடு சேர்த்து அவனும் வெளியே வந்தான். ஆறடி உயரத்தில் உருண்டு திரண்ட தோள்களுடன், கண்களில் கூர்மையுடன், இடுப்பில் சொருகிய வாளுடன் அவையின் நடுவே வந்து நின்றான் அவன்.
“நீயா மகாராஜாவின் உரைக்கு நடுவே அபசகுனமான வார்த்தையை உதித்தாய்?”, என்று கேட்டார் அமைச்சர்.
“யாம் தான் உரைத்தோம் மந்திரியாரே”, என்று புன்னகையுடன் கூறினான் அவன். அவனுடைய அந்த சிரிப்பில் அனைவரும் அவனையே ஆராய்ச்சியாக பார்த்தார்கள்.
அவனுடைய கம்பீரத்திலும், அவன் கண்களின் கூர்மையிலும் மகாராஜாவே அவனை திகைத்து போய் பார்த்தார்.
அங்கிருந்த மக்களோ ஏதோ தேவலோகத்தில் இருந்து மன்மதன் தான் இறங்கி வந்து விட்டானோ என்று பார்த்தார்கள். அழகில் கந்தர்வன் போல் இருந்தான் அவன்.
“உன்னை பார்த்தால் சாதாரண குடிமகன் போல் அல்ல. எங்கள் நாட்டை சேர்ந்தவன் போலவும் தெரிய வில்லை. யார் நீ?”, என்று கேட்டார் அமைச்சர்
“தங்கள் கணிப்பு சரியானது தான் மந்திரியாரே. வாசுதேவ சக்கரவர்த்தியின் அமைச்சர் என்றால் சும்மாவா? புத்தி கூர்மையில் சிறந்து விளங்குகிறீர்கள், போங்கள்”, என்று சிரித்தான் அவன்.
அவனுடைய இடக்கான பேச்சில் அமைச்சர் முகம் சிவந்தது.
“இவனுடைய பேச்சு மரியாதையானதாக தெரியவில்லை மகாராஜா”, என்றார் அமைச்சர். மகாராஜாவின் எண்ணமும் அது தான். “யார் இவன்?”, என்ற யோசனை தான் அவருக்குள்ளும் இருந்தது.
“தாங்கள் இப்படி கூறலாமா மந்திரியாரே. தாங்கள் எனக்கு தகப்பனை போன்றவர். தங்களுக்கு மரியாதை அளிக்காமல் இருப்பேனா? சிறு வயதில் இருந்தே எனக்கு கொஞ்சம் நகைசுவை உணர்வு அதிகம். நான் சாதாரணமாக உரைத்ததை புன்னகையுடன் கூறியதால் தாங்கள் நான் கேலி செய்கிறேன் என்று நினைத்து கொண்டீர்கள் போல? தங்களை அவமதித்தமைக்கு என்னை மன்னியுங்கள்”
“ஆம் அமைச்சரே. இந்த வீரன் நம் இருவரையும் பாராட்ட தான் செய்தான். தவறாக எண்ண எதுவும் இல்லை. அவன் உதடுகள் சிரித்தாலும் அவன் கண்கள் உண்மை கூறுகின்றன”, என்றார் மகாராஜா.
“தாங்கள் எப்படி என்னை வீரன் என்று அடையாளம் கண்டு கொண்டீர்கள் மகாராஜா?”, என்று கேட்டான் அவன்.
“இது என்ன மாயாஜாலமா? உன் இடுப்பில் தொங்கும் வாளே கூறுமே, நீ வீரன் தான் என்றும் அதுவும் நீ சாதாரண வீரன் அல்ல என்று”
“தங்கள் புத்தி கூர்மைக்கு என் வந்தனங்கள் மகாராஜா”
“உன் புகழ்ச்சி உரையை கேட்க எங்களுக்கு கால அவகாசம் இல்லை வீரனே. முதலில் நீ யாரென்று கூறு? நீ முதலில் எப்படி அரண்மனைக்குள் நுழைந்தாய்? யார் உனக்கு அனுமதி கொடுத்தது?”
“அப்படி இருக்கிறது தங்கள் நாட்டின் காவல் மகாராஜா”, என்று மறுபடியும் கேலி செய்தான் அவன்.
அவன் சிரிப்பில் வெகுண்டார் மகாராஜா.
“கேலியை நிறுத்து வீரனே. என் நாட்டிற்கே வந்து என் காவலை குறை கூறுகிறாய். இதற்கு தக்க தண்டனை உண்டு என்பதை அறிவாயா நீ?”
“தங்கள் தண்டனை சரி என்றால் சிரம் தாழ்த்தி ஏற்று கொள்வேன் மகாராஜா. ஆனால் நான் சரியாக தானே கூறினேன். நான் எவ்வாறு இந்த தேசத்துக்குள் நுழைந்தேன்? எவ்வாறு இந்த அரண்மனைக்குள் நுழைந்தேன் என்று எவருக்குமே தெரியாதே. நான் திருட்டு தனமாக நுழைந்ததை கூட எவருமே தடுக்க வில்லையே. அந்த அளவுக்கு இருக்கிறது தங்கள் தேசத்தின் பாதுகாவலும், வீரர்களின் வீரமும்”
“என் பொறுமையை வெகுவாக சோதிக்கிறாய் வீரனே. எதற்கும் ஒரு எல்லை உண்டு. நீ யாரென்று கூறி விடு. உன் பரிகாச வார்த்தைகள் எனக்கு சினமுண்டாக்குகிறது. இதே போல நீ மறுபடி உரைத்தால் நிச்சயம் சிறை பிடிக்க படுவாய்”, என்று கர்ச்சித்தார் மகாராஜா.
“ஹா ஹா,”, என்று உறக்க சிரித்தான் அவன். அவன் குரல் அரண்மனை முழுவதிலும் எதிரொலித்தது. அனைவர் முகத்திலும் சினம் படர்ந்தது.
ஆனால் புன்னகைத்துக் கொண்டு இருந்த அவன் “தாங்கள் என்னை சிறை பிடிக்க போகிறீர்களா? எங்கே முயற்சி செய்யுங்கள் பார்க்கலாம்”, என்றான்.
“யாரங்கே? முதலில் அவனை சிறையில் அடையுங்கள்”, என்று உத்தரவிட்டார் மகாராஜா.