மீண்டும் அதே சேரில் அமர்ந்தான். மிர்த்திக்காவின் பாதம் எடுத்து.. தன் மடியில் வைத்துக் கொண்டான்.. காலையில் அணிவித்த மெட்டி அவளின் காலில் மின்னியது, யோகி “ஹேய்.. இதை கழட்டிடவா.. ப்ளீஸ்” என்றான்.

மிர்த்திக்கா “அப்போ காலையில் யாராவது பார்த்துவிட்டால்” என்றாள்.

யோகி “இனி என்ன.. சொல்லிடு.. நான்தான் குடுத்தேன்னு” என பேசிக் கொண்டே.. புது மெட்டியை கழற்றினான்.

மிர்த்திக்கா ஏதும் சொல்லவில்லை.. யோகி பொறுமையாக தான் கொடுத்த தங்கமெட்டியை அவளின் விரல்களில் அணிவித்தான்.. அளவு இப்போது சரியாக இருந்தது.. யோகி “லட்டு, இதையே போட்டுக்கோ” என்றான்.

மிர்த்திக்கா “ம்..” என்றாள்.

அப்படியே சேரில் ஆசுவாசமாக சாய்ந்துக் கொண்டவன்.. டேபிளில் அமர்ந்திருந்தவளின் பாதங்களை எடுத்து முத்தமிட்டான்.. மிர்த்திக்கா  இமைக்காமல் தன்னவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன்னவளின் பார்வை வீச்சில் சற்று நேரம் லயித்தவன்.. “இங்க பாரு.. ஒரு ஐந்து வருஷம் குழந்தை குட்டி ஏதும் கிடையாது. நான் உன்னை மடிச்சி கேஸ்கட்டுக்கு நடுவில் வைச்சி.. அப்படியே கோர்ட்டுக்கு கூட்டி போய்டுவேன். உன்னை ஷேர் பண்ற ஐடியாவே இல்லை இப்போதிக்கு.. அவ்வளோ டைம் என் கூடவே நீ இருக்கணும்..” என தன் மீசையை நீவிக் கொண்டே அவளை அதட்டினான்.

மிர்த்திக்கா தன்மடியில் கை ஊன்றி.. கன்னத்தில் கை வைத்து..  தன்னவனின் அதிகாரத்தை ரசிக்க தொடங்கினாள்.. பதிலேதும் சொல்லாமல். யோகிக்கு, அந்த ரசனை பார்வை.. உசுப்பிவிட “சும்மா அப்பாவை பார்க்கிறேன் தம்பியை பார்க்கிறேன்னு கிளம்பிட கூடாது சொல்லிட்டேன்..”என்றவன் இப்போது சரணடைந்தவனாக. காதலில் மட்டுமே அதிகாரத்தையும்.. அடிமைத்தனத்தையும் ஒரே நேரத்தில் காணமுடியும் போல.

மிர்த்திக்கா  ரசனையாக “நீங்க பயங்கரமா உளருறீங்க..” என்றாள்.

யோகி தன் கண்களை சுருக்கி.. நெற்றியை தேய்த்துக் கொண்டான்.. ஆம் என ஒப்புக்கொள்கிறானாம். ஆனாலும் அதிகாரமான குரலில் “உண்மை டி எல்லாம் உண்மை.. இந்த மிர்த்திக்காவையே சுத்தி சுத்தி வர போறேன்.. நீ தூங்கும் போது எப்படி இருப்ப பார்க்க போறேன்.. குளிக்காமல்.. அழுக்கு நைட்டியும்.. மையில்லாத கண்களையும் பார்க்க போறேன்.. அப்புறம் ஐந்தாவது படிக்கும் போது.. ரெண்டு போனி போட்டுக்கிட்டு.. சின்ன பிராக் போட்டுக்கிட்டு இருப்பியே அப்படியும்.. இன்னும் எப்படி எல்லாம் உன்னை பா..ர்க்கனுமோ அப்படி எல்லாம் பார்க்க போறேன்..” என்றான் அவளின் பாதங்களை அழுத்தி பிடித்துக் கொண்டு.

மிர்த்திக்கா தன்னவனை பார்க்க முடியாமல் தலை தாழ்ந்துக் கொண்டாள்.. 

யோகி “இன்னும் உளறவா..” என்றான்.

மிர்த்திக்கா ‘வேண்டாம்’ என தலையைசைத்தாள். எழ முற்பட்டாள்.

யோகி அவளின் முழங்கால்களை பிடித்துக் கொண்டான்.

மிர்த்திக்கா “போது ப்ளீஸ்.. என்னமோ பண்ணுங்க.. ஆனால், பேசாதீங்க..” என்றாள்.

யோகி அவளின் வெட்கத்தை ரசித்தான்.. தன்முகம் நோக்கி அவளின் முகத்தை நிமிர்த்தினான்.. “ஓ.. லட்டு.. கம்ப்ளைன்ட்ஸ் எல்லாம் க்ளியர் செய்யப்படும்.. இனி.. ம்..”  என்றவன்..  அமைதியாக எழுந்து.. நின்றான். பின், எதோ சின்ன பிள்ளையை அழைப்பது போல.. இரு கைநீட்டி அவளை வா என அழைத்தான் கண்களால். மிர்த்திக்கா “வேண்டாம்.. விழுந்திடுவீங்க..” என்றாள்.

யோகி “ பார்ப்போம்” என்றான்.

மிர்த்திக்காவும் குழந்தையென அவனிடம் சேர்ந்தாள்.. லாவகமாக அவளை ஏந்திக் கொண்டான் யோகி. ஆனால், அவளை தள்ளி நிறுத்தாமல் அவளின் இதழ்களை தன் அதரங்களால் இணைத்துக் கொண்டான்.. இருவரின் மூச்சும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க தொடங்கியது.. இன்பமெனும் மோட்ஷம் தேடி.

!@!@!@!@!@!@!@!@!@!@!

இரண்டு நாட்கள் திருச்சியில் இருந்தனர் மணமக்கள். பின் சென்னை கிளம்பினர். 

சந்தோஷமாக வரவேற்றனர் தமிழரசி வீட்டில். நிவிதான் ஆர்த்தி எடுத்து.. யோகி மிர்த்திக்காவை அழைத்தாள். வீடு அழகாக பிரமாண்டமாக பளபளவென மின்னியது. நிவேதித்தா வீட்டினை சுற்றிகாட்டினாள். வேலையாட்களை அறிமுகம் செய்து வைத்தாள்.

யோகியின் அறைக்கு அழைத்து வந்தாள்.. “மிர்த்தி” என அழைத்தாள் நிவேதித்தா.. மிர்த்திக்கா, அதிர்ந்தாள். இத்தனை நாட்களாக அக்கா எனத்தான் மரியாதையாக அழைத்திருந்தாள். இப்போது இப்படி கூப்பிடவும் கொஞ்சம் அதிர்ச்சி.

மிர்த்திக்காவின் அதிர்ச்சி பார்வையை பார்த்த நிவேதித்தா “வ்வை.. லுக்..” என்றாள்.

மிர்த்திக்கா என்ன சொல்லுவது என தெரியாமல் விழித்தாள்.

நிவி “உங்களை அக்கான்னு கூப்பிட சொல்றாங்க மாம்.. அவ்வளோ வயசாகலைதானே.. நான் மிர்த்தின்னு கூப்பிடுறேன்” என்றாள்.

மிர்த்திக்காவிற்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை “ம்.. ம்” என்றாள்.

நிவி “இது உங்கள் ரூம்..” என்றாள்.

யோகி, தங்களின் லக்கேஜ்களை அறையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். அறையில் புதிய கட்டில் காத்திருந்தது. மிர்த்திக்கா தயங்கி தயங்கி.. உள்ளே வந்தாள்.

நிவி “எங்க மாம்ஸ் ரூம் எப்போதும் கிளீன்னா இருக்கும். அதோட, நிறைய புக்ஸ் இருக்கும்” என சொல்லிக் கொண்டே உள்ளே வந்தாள். சுற்றிலும் பார்த்தாள்.. அந்த புக் கப்போர்ர்ட் காணோம். நிவி “மாம்ஸ்.. எங்க புக்ஸ் எல்லாம்” என்றாள்.

யோகி புன்னகைத்துக் கொண்டே.. “பாக்ஸ் போட்டு மேலே வைச்சிருக்கேன்.. வா மிர்த்தி” என அழைத்தான் நிவிக்கு பதில் சொல்லிக் கொண்டே.

நிவி “மாம்ஸ்.. என்ன என்ன மாற்றங்களோ..” என பாடிக் கொண்டே அமர்ந்தாள்.

தமிழரசி “நிவி” என அழைக்கும் சத்தம் கேட்டது.

நிவேதித்தா “ம்.. என் அம்மா.. இனி என்னை இங்கே இருக்க விடமாட்டாங்க.. ஆனால்” என மிர்த்திக்காவை பார்த்தவள் “நீங்க என் கூட வாங்க மிர்த்தி” என்றாள்.

யோகி “ஏய்.. நிவிம்மா.. மரியாதையா கூப்பிடு.. அக்கான்னு” என்றான் புன்னகைத்துக் கொண்டு.

நிவி “மிர்த்தியே ஒன்னும் சொல்லலை” என்றாள்.

யோகி “சொல்லலைன்னா.. மரியாதையாக கூப்பிட மாட்டியா” என்றான்.

நிவி மிர்த்திக்காவை பார்த்தாள். மிர்த்திக்கா தன் உடைகளை எடுக்கும் சாக்கில் குனிந்துக் கொண்டாள்.

யோகி “என்ன பார்க்கிற” என்றான்.

நிவி “மிர்த்திக்கா அக்கா.. வாங்க என்கூட” என்றாள்.

யோகி “குட்..” என்றபடி வேலையை பார்த்தான்.

மிர்த்திக்கா “நீ போ நிவி, நான் ட்ரெஸ் சேஞ்ச் செய்துகிட்டு வரேன்” என்றாள்.

நிவி வெடுக்கென திரும்பிக் கொண்டு சென்றாள்.

நிவேதித்தாவின் போக்கு.. யோகிக்கும் மிர்த்திக்குமே ஒருமாதிரி இருந்தது. ஆனாலும், இருவரும் அதை பெரிதாக எடுக்கும் நிலையில் இல்லை. மிர்த்தியின் பாக் எடுத்து கட்டில் மேல் வைத்தான்.. யோகி. மிர்த்திக்கா உடைகளை எடுத்து கொண்டு ரெஸ்ட் ரூம் சென்றாள். கொஞ்சம் புரிந்தும் புரியாத நிலையில் மிர்த்தியின்வின் புகுந்தவீட்டின் பயணம் தொடங்கியது.

யோகிக்கு வேலைகள் இருந்தது.. ஹனிமூன் செல்லவில்லை. மிர்த்திக்கும் லீவ் இல்லை.. யோகிக்கும அதே நிலைதான்.

இயல்பான நாட்கள் தொடங்கியது. யோகிக்கு, அலுவலகம் நேரமாக செல்ல வேண்டி இருந்ததால்.. மிர்த்திக்காவை அழைத்து செல்ல முடியவில்லை தினமும். வாரத்தில் இரண்டுநாள் கணவனோடு மிர்த்திக்கா அலுவலகம் சென்றால்.. அதிசயம். அதனால், மிர்த்திக்கா லோக்கல் ட்ரைனில் அலுவலகம் செல்ல பழகிக் கொண்டாள். தூரம் அதிகம் எனவே, சீக்கிரம் கிளம்பி செல்ல வேண்டுமாக இருந்தது.. தாமதமாகதான் வீடு வர முடிந்தது. இருவருக்கும் நேரம் சரியாக அமையவில்லை.

மிர்த்திக்காவிற்கு, இங்கே சமையல் வேலை இல்லை. காலையில் கணவனே காபியை பிளாஸ்கில் அறைக்கே எடுத்து வந்துவிடுவான். அதனால், இவள் எழுந்து வேலை செய்ய வேண்டும் என ஏதும் இல்லை. அதனாலோ என்னமோ பெண்ணுக்கு அங்கே பொருந்த முடியவில்லை. இரவு உணவின் போது மட்டுமே தமிழரசியையும் நிவியையும் பார்க்க முடிந்தது. என்னமோ எதோ தொலைவது போல உணர்ந்தாள்.. நாட்கள் செல்ல செல்ல மிர்த்திக்கா.

யோகி, மிர்த்திக்காவை பார்த்துக் கொண்டான். ம்.. அவளிடம் சேர்ந்தார் போல பேச நேரம் அமைவதில்லை என்றாலும்.. போனில் பேசினான்.. ‘வீடு ஒகே தானே.. கொஞ்சநாள் அட்ஜெஸ் பண்ணிக்கோ’ என்பான்.  மிர்த்திக்காவிற்கு, தமிழரசி வீட்டில் இருப்பது பெரிதாக வருத்தமில்லைதான். ஆனால், தங்கள் இருவரும் சேர்ந்திருக்க முடியவில்லையே என வருத்தம் இருந்தது.

ஒருமாதிரி இறுக்கமாகவே இருந்தனர் இருவரும். வார இறுதியின் ஜெகன் வீட்டிற்கு கிளம்பினர் இருவரும். மிர்த்திக்கா திருமணத்திற்கு முன் இருந்த வீடு வந்தனர். அதுதான் அவர்களின் சின்ன உலகமாக மாறியது இப்போது. மிர்த்திக்கா சமைக்க.. ஆண்கள் இருவரும் இயல்பு போல அவளை கிண்டல் செய்துக் கொண்டே உதவ.. என அந்த இருநாட்களும் நேரம் போவதே தெரியாமல் சென்றது.

இருமாதங்கள் இருவரும் இங்கேயே இருந்தனர். யோகியின் வீடு தயாராகியது. யோகிக்கு நிம்மதி. உடனே மராமத்து பணிகள் பார்த்து.. மிர்த்திக்காவிற்கு தேவையானதை செய்து.. என அடுத்த ஒருமாதம் கடந்து.. நல்ல நாளில் மிர்த்திக்கா யோகி தம்பதி தங்களின் பயணத்தை தொடங்கினர்.

வாசு.. காமாட்சி அத்தை.. என எல்லோரும் வந்திருந்தனர். தேவையான பொருட்கள் எல்லாம் ஜெகன் வாசு இருவரும் சேர்ந்து மிர்த்திக்காவிற்கு பிடித்தபடி வாங்கி கொடுத்தனர். 

யோகி இதிலெல்லாம் தலையிடுவதேயில்லை. மாமனார் இப்போதான் வந்திருக்கிறார். அதனால், யோகி ஏதும் பேசுவதில்லை அவரிடம்.. ‘வாங்கள்’ என தலையசைத்ததுடன் சரி.. அதன்பின், தங்களின் அறையில் புகுந்துக் கொண்டான். ஜெகன்தான் வந்து பேசி.. தாங்கள் பொருட்கள் வாங்குகிறோம் என எல்லாம் சொன்னான். யோகி, சரியென தலையசைத்தான். ஆக, யோகி மிர்த்திக்கு அடங்கவில்லை மாமனார்க்கு அடங்கி போகினான்.

வாசு இப்போதெல்லாம் இரண்டு வார்த்தை பேசுகிறார் யோகியிடம் “சாப்பிடுங்க.. கிளம்புகிறேன்” என கேட்கவும் சொல்லிக் கொள்ளவும் செய்கிறார் மனிதர். யோகிக்குதான் இன்னமும் மாமனார் அலர்ஜி தீரவில்லை.

தமிழரசியின் உறவுகள் வந்தனர். நிவேதித்தா.. வந்தாள்.. “மாம்ஸ் நீங்க என்னை விட்டுட்டீங்க” என வம்பிழுத்தாள்.

மிர்த்திக்கா சிரித்துக் கொண்டே நகர்ந்துவிட்டாள். யோகி “அடி வாங்க போற.. ஒழுங்கா படி. டிஸ்ட்ராக்ட் ஆக கூடாது.” என்றான்.

நிவி “மாம்ஸ்.. சும்மா உங்க பொண்டாட்டிக் கூட விளையாடுனேன்” என்றாள்.

யோகி “ம்.. வயசுக்கு மீறிதான் எல்லாம்… ம்..” என்றான்.

அதன்பின் நிவி ஏதும் பேசவில்லை. விடைபெறும் போது “மிர்த்திக்கா அக்கா..” என அழுத்தி மிர்த்திக்காவை அழைத்தாள். மிர்த்தி புன்னகைத்துக் கொண்டே திரும்பினாள்.

நிவி “அங்க அடிக்கடி வரணும்.. நான் தனியாதான் இருக்கேன்.. ப்ளீஸ்.” என்றாள்.

மிர்த்திக்கா “இதெல்லாம் நீ சொல்லனுமா.. நாங்க கண்டிப்பா வருவோம்.” என்றாள்.

அந்த ஒருவாரம் உறவுகள் எல்லாம் வந்து சென்றது. எல்லோருக்கும் ஊருக்கு சென்றனர். அதன்பின்தான் யோகி மிர்த்திக்கு ஒரு தனிமை கிடைத்தது. அஹ.. தங்கள் இடம் என்ற தனிமை. எங்களின் உலகம் இந்த சின்ன வீடு என்ற தனிமை. பழைய கதைகளை.. இதுவரை பேச முடிந்திராத கதைகளை அசைபோட.. யாரும் வந்து கேள்வி கேட்க்காத தனிமை.. தங்களுக்குள் வேண்டிய தனிமை இப்போதுதான் வாய்க்க பெற்றது இவர்களுக்கு.

காலையில் நேரமாக எழுந்தனர் இருவரும்.. காபி.. டிபன்.. மதிய உணவு என சேர்ந்தே பேசிக் கொண்டே வேலையும் செய்தனர்.. காதலும் செய்தனர். ம்.. சிலநேரம் காதல் மட்டுமே செய்தனர்.. உணவு எல்லாம் ஆர்டரில் வந்து சேர்ந்தது. யோகி, அவளை நிரம்ப ரசித்தான். தன்னுடைய தனிமையில்லாத நாட்களை தன் அகராதியில் சேர்த்துக் கொள்பவன் போல.. எதற்கும் “மிர்த்தி..” என அவளின் பெயரைத்தான் சொன்னான்.

மளிகைகடைக்கு கூட தனியாக செல்லவில்லை யோகி.. எங்கும் அவள் வேண்டும்.. கொஞ்சம் அதிகமாகவே அவளை தேடினான். என்ன செய்ய அவனின் தனிமையான நாட்கள்.. இல்லை, வருடங்கள் அதிகம்தானே.. அதை உணர்ந்து மிர்த்திக்காவும்.. கணவனை கண்களில் பொத்தி வைத்துக் கொண்டாள். நேசம் மட்டுமே சாஸ்வதம். 

$சுபம்$