நீ என் அலாதிநேசம்

28

மிர்த்திக்கா யோகேஷ்வர் திருமணம்.

எங்கும் விட்டு கொடுக்காமல் சிறப்பாக நடத்தினார் வாசு. திருச்சியில்தான் திருமணம் என்றுவிட்டார், பெண்ணை பெற்றவர். யோகி, திருமணம் தேதி.. பத்திரிகை.. சீர்வரிசை.. மண்டபம்.. என எதற்கும் அவன் மறுப்பு சொல்லவில்லை. எல்லாம் தன் மாமனாரின் இஷ்ட்டம் போல நடக்கட்டும் என்றுவிட்டான்.

மிர்த்திக்காவும் அப்படியே.. அப்பா என்ன சொன்னாரோ செய்தாள். யோகியின் எதிர்ப்பை எதிர்பார்த்தவள்.. யோகி ஒன்றும் சொல்லாமல் எல்லாவற்றுக்கும் ஒத்துக் கொண்டதும் சந்தோஷமாகிவிட்டாள். 

வாசு, மகளிடம் என்ன விதமாக திருமணம் வேண்டும்.. என்ன மாலை.. என்ன மண்டபத்தில்.. என்ன அலங்காரம் வேண்டும்.. என்ன உணவு.. என எல்லாவற்றையும் கேட்டார். பெண்ணவள்.. “அப்பா உங்க விருப்பம் போல.. எனக்கு எல்லாம் பிடிக்கும்” என்றுவிட்டாள். பெரிதாக அவளுக்கு சொல்ல தெரியவில்லை.

ஜெகன், அக்காவின் விருப்பம் இதுவாக இருக்கலாம் என எண்ணி.. நிறைய செய்தான். பெரிதாக மிர்த்திக்காவிற்கு.. மறுப்புகள் இல்லை.. தம்பியின் விருப்படி எல்லாம் நடந்தது.. மேடை அலங்காரம்.. சாப்பாடு.. டிவி ஆட்களை அழைத்து பாட வைத்தது.. மாலையில் ரிசப்ஷன் மேடையில்.. தன்னையும் யோகியையும்  கேக் கட் செய்ய சொன்னது.. என எல்லாம் அவளுக்கு பிடித்திருந்தது.

யோகிக்கும், கல்யாணம் என்றதும் இவள் மட்டுமே நின்றாள் போல.. வேறு எந்த ஆசைகளும் இல்லை போல. நடப்பதை ஏற்பவன் போல எல்லாவற்றுக்கும் தன்னவளின் புன்னகையை பார்த்தே நின்றான்.. செய்தான். கண்ணசைவில் இருவரும் பேசிக் கொண்டனரா.. இல்லை சம்மதம் வாங்கிக் கொண்டனரா.. தெரியவில்லை. இருவர் முகத்திலும் அமைதியான ஆனந்தம்.

மறுநாள் காலையில்.. திருமணம். சுற்றமும் நட்பும் கூடி இருந்தது. யோகியின் அருகே வந்து அமர்ந்தாள்.. மிர்த்திக்கா. வாசு பெண்ணையே பார்த்திருந்தார். இன்னமும் யோகியின் மீது பார்வையும் சரி.. நல்லெண்ணமும் சரி படரவேயில்லை. யோகி அதையெல்லாம் இப்போதும் கணக்கில் கொள்ளவில்லை. முறைகள் எல்லாம் நடந்து மாங்கள்யாதாரணமும் நடந்தது. எல்லாம் சரியானது போல மணமக்களின்  கைகளும் சட்டென பற்றிக் கொண்டது. இதுவரை ஒருவித நிதானத்தில் தன் திருமணத்தையே வெளியிலிருந்து வேடிக்கை பார்த்தவன் போலிருந்தவன், இப்போது தன் குற்றயுணர்விலிருந்து.. வெளிவந்து.. தன்னவளை பார்த்து புன்னகைத்தான். அவளின் கைகளை எடுத்து தனக்குள் பொதித்துக் கொண்டான் இறுக்கமாக. அந்த ஷனத்தில் இருவரின் உலகமும் விவரிக்க முடியாத எல்லையில் இருந்தது. தவறுகள் நேராகிவிட்டது என்றதா.. இனிய பயணம் தொடங்கியது என்றதா.. தெரியவில்லை. இருவருக்கும் கண்கள் கலங்கியது. இறுகிய பிடியும்.. மலர்ந்த முகமாக தங்களை தாங்களே தேற்றிக் கொண்டனர். காதலில் தவறுகளை சரிசெய்துக் கொள்ளும்.. பாக்கியம் உண்டு.

மற்றவர்கள், யாரின் கண்ணிலும் இது தெரியவில்லை போல.. எல்லோரும் பிசியாக இருந்தனர்.. அவர்களின் மீது அட்சதை தூவி முடித்து.. எல்லோரும் ஆசுவாசம் அடையும் அந்த ஷனத்தில் மணமக்கள் தங்களை தாங்களே தேற்றிக் கொண்டனர்.

மற்ற நடைமுறைகள் எல்லாம் சரியாக நடந்தது. மதியம் உண்டு.. மணமக்கள் மிர்த்திக்காவின் வீடு வந்தனர். யோகி மிர்த்திக்காவின் அறையில் வந்து அமர்ந்துக் கொண்டான் சுதந்திரமாக., என்னமோ அவனுக்கு கூச்சமில்லை வெட்கம் வரவில்லை. 

ஜெகன், யோகியின் பாக் கொண்டு வந்து கொடுத்தான்.. ஒரு ஷார்ட்ஸ் அணிந்துக் கொண்டு.. அப்படியே அவளின் மெத்தையில் படுத்து கண்கள் மூடிக் கொண்டான். நிம்மதியாக உறங்கினான் .

நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே வீட்டில். காமாட்சி அத்தைதான் எல்லாம் பொறுப்பாக பார்த்தார். வாசு இரவு உணவிற்கு ஹோட்டலில் சொல்லிவிட்டார். எனவே, மாலை காபியை சுவைத்தபடி அனைவரும் கல்யாண கலாட்டாக்களை பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் யோகி பொதுவாக, காமாட்சி அத்தையை பார்த்து பேசினான் “பெரியம்மா.. நானும் மிர்த்தியும் எங்க வீட்டுக்கு போறோம். அப்பா இருந்தவரை இருந்த வீட்டிற்கு போலாம்ன்னு இருக்கேன். அங்கே வேறு ஆட்கள் குடியிருக்காங்க.. அவர்கள் வீடு மாற்றுவதற்கு டைம் கொடுத்திருக்கேன். அதுவரைக்கும்..” என சொல்லி தயங்கினான்.

தமிழரசி “நம்ம வீட்டில் இருப்பாங்க இரேண்டுபேரும்.. சரிதானே அண்ணா” என்றார் வாசுவை பார்த்து. வாசுவிற்கு இந்த முடிவில் முன்பிலிருந்தே மறுப்புதான். யோகி, திருமணம் பேசும் போதே சொல்லியிருந்தான்.. எங்கள் வீட்டுக்கு போகிடுவோம் என. ஆனால், வீடு இன்னுமும் ப்ரீ ஆகவில்லை. அதனால், தயங்கினான்.

இப்போது வாசு “அதான் மிர்த்திக்கா இப்போ இருக்கிற வீடு இருக்குல்ல.. அங்கேயே இருங்க” என்றவர்.. “அக்கா.. சரிதானே. மிர்த்திக்காவிற்கும் வேலைக்கு போகவர.. கொஞ்சம் பக்கமாக இருக்குமில்ல” என்றார்.

காமாட்சிக்கு அதுதான் சரியாகபட்டது. ஆனால், தமிழரசிக்கு என்னமோ போலானது.. யோகி மொத்தமாக தங்களிடமிருந்து விலகிடுவனோ எனத்தான் தோன்றியது. நிவிக்கும் அதுதான் எண்ணம். என்னமோ ஓருமாதிரியாக இருந்தது.

மிர்த்திக்கா இந்த பெண்களின் முகத்தை கவனித்தாள்.. எனவே, சத்தமாக “அப்பா.. யோகி இத்தனைநாள் அங்கேதானே இருந்தார்.. படித்தார்.. அப்போ நானும் அங்கதானே இருக்கனும். அங்க  இருக்கேன் அப்பா. நான் தனியாக இருக்க வேண்டாமில்ல.. அவர் வரும் வரையில். அபீஸ்க்கு லோக்கல் ட்ரைன் இருக்கே அப்பா..” என்றாள், தந்தையை பார்த்து சமாதானம் செய்யும் எண்ணத்தோடு.

தமிழரசியின் முகம் தெளிந்தது. யோகி வளர்ப்பு மகன்தானே. வீட்டில் எல்லாம் அவன் பொறுப்புதான் இப்போது வரையும். சட்டென வாடிவிட்டார். இப்போதுதான் கொஞ்சம் தெளிந்தார்.

யாரும் ஏதும் பேசவில்லை.

வாசு ஒன்றும் சொல்லாமல் தன் அக்காவை பார்த்தார்.

காமாட்சி “ம்.. ஆமாம் தம்பி, பெண் தனியா இருக்க வேண்டாம். ஆபீஸ் கூட்டி போறது எல்லாம் மாப்பிள்ளை பார்த்துக்குவார். என்ன யோகி” என்றார்.

யோகி “அதெல்லாம் ப்ரோப்லேமில்ல பெரியம்மா” என்றான்.

வாசு “சரி, நைட் அரேஞ்மெண்ட் சொல்லிடு அக்கா.. நீங்க பார்த்துக்கோங்க..” என்றவர் வெளியே சென்றுவிட்டார்.

நிவேதித்தா “ஹா.. மாம்ஸ்.. உன்னைவிட டெரரா இருக்கார் உங்க மாமனார்” என யோகியின் காதில் கிசுகிசுத்தாள்.

யோகி.. அமைதியாக புன்னகைத்தான். பார்த்திருந்த நிவிக்கு என்னமோ போலானது.. நிவி “கல்யாணம்தானே ஆச்சு உனக்கு.. ஏதோ சன்யாசம் வாங்கினமாதிரி அமைதியா இருக்க மாம்ஸ்” என்றாள் விடாமல்.

யோகி அதற்கும் புன்னகைதான் செய்தான்.

நிவி “மிர்த்தி அக்காவின் அழகில் மயங்கிட்டியோ” என்றாள்.. இன்னமும்  அமைதியை பார்த்து.

இப்போது, யோகியின் பார்வை காதலாக தன்னவள் மேல் படிய..  “எப்பவோ அது.. நடந்திடுச்சு..” என்றவன் சட்டென சுதாரித்து.. நிவியை பார்த்து புன்னகைத்தான்.. பின் யோகி “மிர்த்தி.. இங்க பாரேன்.. நிவி எதோ கேட்க்கிறா” என மிர்த்திக்காவை அழைத்து அருகமர்த்திக் கொண்டான்.

மூவரும் எதோ பேச தொடங்கினர்.

இரவில் சடங்குகள் எல்லாம் செய்து.. மிர்த்திக்கா யோகியை தனியே மிர்த்திக்காவின் அறையில் சேர்த்தனர். இருவரும் இயல்பாக இருக்க முற்பட்டு தோற்றே போக்கினர் எனலாம். 

அத்தனை தயக்கம்.. வெட்கம்.. இருவருக்கும். நிகழ்வது நிஜம்தான் என புத்தி சொன்னாலும்.. இந்த திருமணம் நடக்க அவர்கள் கடந்த பாதை.. நீண்டதே.. அதனால் வந்த தயக்கத்தில்  இருவரும் ஒருவரையொருவர் பார்த்தே நின்றனர். என்னமோ முதல்முறை தங்கள் இணையை உணரும் ஒரு அழகிய தருணமே.. இருவருக்கும். 

யோகிதான் முதலில் சுதாரித்தான்.. அவளை சுற்றிக் கொண்டு சென்று.. அவளை பின்னிலிருந்து அணைத்துக் கொண்டான். சுவாசம் கூட தப்பிபோனது உரிமையான இந்த அணைப்பில் இருவருக்கும்.. என்னவெல்லாம் அவளிடம் பகிற வேண்டும் என எண்ணியிருந்தானோ.. அதெல்லாம் மறந்தே போகிற்று அவனுக்கு. 

ஒன்றுமே எண்ணமில்லை.. மேகமில்லா வானம்.. எண்ணமில்லா வெற்று மனம். பலநாட்கள் தியானம் செய்தாலும்.. சட்டென அகப்படாத வெற்றுமனம்.. இப்போது அவர்கள் வசம். 

யோகிதான் சற்று நேரம் சென்று அந்த அமைதியை கலைத்தான் “லட்டு..” என சொல்லி அவளை, தன் பக்கம் திரும்பினான்.. இடையோடு தூக்கி சுற்றினான். மிர்த்திக்கா அதிர்ந்து அவனின் ஷர்ட் காலர்களை பற்றிக் கொண்டாள்.

யோகி இரண்டு நிமிடம் சென்றுதான் அவளை கீழே இறக்கினான்.. அவன் மேலேயே சாய்ந்தாள் பெண்.. யோகி “லட்டு.. ஹாப்பியா இருக்கேன்.. தேங்க்ஸ் டி” என்றவன் அப்படியே அவளை அள்ளிக் கொண்டு வந்து.. தங்களின் எதிரே இருந்த டேபிளில் அமர வைத்தான்.. தான் சேரில் அமர்ந்தான்.

அவளின் இரு கைகளையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.. “ம் எங்க நான் போட்ட கோல்ட் மெட்டி.. வைச்சிருக்கேன்னு சொன்ன” என்றான்.

மிர்த்திக்கா “சொன்னேன் இப்போ எதுக்கு.. அதான் காலில் புது மெட்டி இருக்கே” என்றாள்.

யோகி அவளின் பாதங்களை எடுத்து மடியில் வைத்துக் கொண்டான்.. மெதுவாக வருடினான்.. “அது எங்க” என்றான்.

மிர்த்திக்கா “அந்த கப்போர்ட்டில்தான் இருக்கு” என சொல்லி எழுந்தாள்.

யோகி “இரு நான் எடுக்கிறேன்” என சொல்லி, எழுந்தான்.

மிர்த்திக்கா எங்கு இருக்கு என சொல்ல.. யோகி சின்ன பர்ஸ்சில் இருந்த சிவப்பு டப்பாவை எடுத்தான். அப்படியே இருந்தது பார்ப்பதற்கு.. அதே பொலிவோடு அப்படியே இருந்தது. முகம் விகாசிக்க.. தன்னவளை நோக்கி வந்தான், யோகி.