உன் கண்ணே பேசுதடி
1
விழி வழி பேசும்
வார்த்தைகள் சற்றே
இதழ் பிரித்து
புன்னகைக்கிறது…
திருச்சியில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரியின் கடைசி வருட வகுப்பு மாணவிகள் தங்கி இருக்கும் ஹாஸ்டல் பகுதி..
அப்பாடி இந்த ஒரு செமஸ்டர் முடிஞ்சு போனா.., இன்னும் ஒரு செமஸ்டர் தாண்டி அதோட நம்ம படிப்பு முடிஞ்சிரும்., என்று அதிகமான மாணவிகளின் பேச்சாகவே இருந்தது.,
இன்னும் 6 மாதம் மட்டுமே படிப்பு இருக்கிறது என்ற நிலையில் கடைசி நிலை தேர்வுக்கு முந்திய தேர்வை எழுதிக் கொண்டிருக்கும் மாணவிகள் அவர்கள் இன்னும் இரண்டு நாளில் தேர்வு முடிந்து அவரவர் வீடு சென்று விடுவர்…
அம் மாணவிகளுக்கு மறுநாள் ஒரு பரீட்சை மட்டும் இருக்க.., அதற்கு மறுநாள் அந்த வருடத்தின் கடைசி நாளாக ஹாஸ்டலில் இருக்கப் போவதால் அன்று அனைவரும் ஹாஸ்டலில் இருந்து கொண்டாடி விட்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர்.,
ஏனெனில் அடுத்து புதுவருடம் பிறந்த பின் தான் கல்லூரிக்கு திரும்பி வருவார்கள் என்ற நிலையில் மாணவிகள் அனைவரும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தனர் சிறிய விழாவாக…
அங்கு ஒரு அறையில் “என்னடி புக்க திறந்து வைச்சிட்டு கனவு காணுறீயா., ஒழுங்கா உட்கார்ந்து படி” என்றாள் தோழி.,
“படிச்சிட்டு தான் இருக்கேன்” என்றாள் சலிப்போடு.,
“ஒரு பரீட்சை தானே இருக்கு இப்ப போயா வீட்டிலிருந்து போன் வரணும் உனக்கு., மூஞ்ச தூக்கி வச்சுட்டு உட்காந்துட்டு இருக்க” என்றாள் தோழி..
“இங்கேரு அவட்ட பேச்சு கொடுக்காத., நீ சத்தம் போட்டு படி னு சொல்லி ஏதாவது பேச்சு கொடுத்தா தான் கதை மாறிடும்., பிறகு நம்மளை படிக்க விடமாட்டா.., அவளும் படிக்க மாட்டா., நாளைக்கு ஒரே டெஸ்ட் தான்., ஒழுங்கா படி”., என்று சொன்னாள் மற்றொரு தோழி.,
புக்கை எடுத்து கொண்டு அமைதியாக மறுநாள் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தவள்., திடீரென நிமிர்ந்து தன் தோழிகளை பார்த்து “எப்படிடி அவங்களுக்கு இப்படி ஒரு மனசு வந்துச்சு., என்ன பாத்தா பாவமா தெரியலையா., நான் பாவம்டி”., என்றாள்.
“இங்கேரு இதுக்குதான் உன்னை அவ கிட்ட பேசாத பேசாத னு சொன்னேன்., இந்தா ஆரம்பிச்சுட்டா பத்தியா., இதுக்கு தான் சொன்னேன், இவட்ட பேசாத னு., நீயாடி பாவம்.., உன் கூட இருக்குற நாங்க தான் பாவம்” என்றாள் மற்றொரு தோழி…
“போடி. பானு உனக்கு கொஞ்சம் கூட என் மேல அக்கறையே இல்லை.., நான் எவ்வளவு பாவமா பீல் பண்ணிட்டு இருக்கேன்.., இப்ப போய் என்ன தீட்டிக்கிட்டு இருக்க”., என்றாள்..
“உன்னைய திட்டினதோட விட்டேன் னு சந்தோஷப்பட்டுக்கோ”… என்றாள் படிக்க முடியாத கடுப்போடு.
“நிவி பேசாம படி., தேவையில்லாம எதுக்கு புலம்புற., ஊருக்கு போற வரைக்கும் டைம் இருக்கு., அப்ப எல்லாத்தையும் நாளைக்கு பாத்துக்கலாம் ஒரே எக்ஸாம் தான் இருக்கு., கவனத்தை சிதற விடாதே., பானு நீயும் அவளை திட்டாத., என்றாள்.
“ஏண்டி நான் எவ்வளவு நல்ல பிள்ளையா இருக்கேன்., நான் என்னைக்காவது யாரையாச்சும் நிமிர்ந்து பார்த்து இருப்பானா”., என்றாள்.
“யாரு நீ., அடிப்பாவி ஒருத்தரை விடாம எல்லாத்தையும் சைட் அடிக்கிறது., நல்ல கமெண்ட் அடிக்கிறது., இப்ப பாரு நான் எவ்வளவு நல்ல பிள்ளை ன்னு., கேள்வி கேட்கிறா”., என்றாள் பானு.,
“சைட் அடிக்கிறது எல்லாம் ஒன்னும் தப்பே இல்ல., எல்லாருமே எல்லாரையும் பாக்குறாங்க., ரோட்ல போற வயசான கிழடு கட்டைகள் கூட எல்லாரையும் வாய் பிளந்து பார்த்துட்டு தான் போறாங்க., அதுக்கு என்ன பண்றது எல்லாம் தப்பு இல்லையா.., ஏன் காலேஜ்ல எத்தனை
பசங்க., பொண்ணுங்க வாயை திறந்து வைத்துட்டு பாத்துகிட்டுப் போறாங்க., அது தப்பில்லையா., பசங்க நல்ல டிரஸ் பண்ணிட்டு வந்தா பிரபசரை கூட தான் பார்க்குறாங்க., அழகா இருக்கீங்க ன்னு சொல்லிட்டு போறாங்க அப்ப அது தப்பு இல்லையா என்று கேட்டாள்…….
“வசு இவ ட்ட பேச்சு கொடுத்தா பேசிக்கிட்டே தான் இருப்பா., ன்னு சொல்லிட்டேன்., அவப் பேச்சு பேச்சா இருந்தாலும் படிச்சிருவா நல்லா ஞாபகம் வச்சுக்கோ., நாளைக்கு அவ உட்கார்ந்து எக்ஸாம்ல மாங்கு மாங்குன்னு எழுதிட்டு வந்துருவா.., நம்ம ரெண்டு பேரும் தான் முட்டிக்கிட்டு நிற்கனும்., ஒழுங்கா ஓடியா நம்ம ரெண்டு பேரும் படிப்போம்., அவ கிடக்கட்டும்”., என்றாள்.
“வசு., பானு., என்னைய பார்த்தா உங்களுக்கு பாவமா வே தெரியலையா., என்ன பாத்தா எப்படி தெரியுது., என்னப்பா நீங்களே எனக்கு சப்போர்ட் பண்ணாட்டி நான் பாவம் இல்லையா., நீங்க ஏன் அதை யோசிக்க மாட்டேங்கறீங்க”., என்றாள் முகத்தை பாவமாக முகத்தை வைத்தபடி..
திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்க பானு தான்., “ஆத்தா நீ ரொம்ப பாவம் தான் சரியா.., உலகத்துலயே நீ தான் ரொம்ப பாவப்பட்ட ஜீவன் சரியா., உனக்கு பேசவே தெரியாது பத்தியா., நாங்க ரெண்டு பேரும் தான் வந்து சொல்லிக் கொடுக்கணும் பாரு., நீ வாயை மூடிக்கிட்டு படி., எங்களையும் படிக்க விடாம பண்ணிட்டு நீ நாளைக்கு நல்ல டெஸ்ட் எழுதின இருக்கு பார்த்துக்கோ., ஏற்கனவே உனக்கு கேம்பஸில் வேலையும் கிடைச்சாச்சி.,
இப்போ எங்க ரெண்டு பேரும் எடுத்துக்க கம்பஸ் எல்லாம் கிடைக்கல., இத படிச்சு முடிச்சா தான் ஏதோ ஒரு வேலைக்காக ட்ரை பண்ண முடியும்., சத்தமில்லாம படி., இல்ல உன் புலம்பல தனியா உட்கார்ந்து வெளியே போய் பொலம்பிட்டு வா., நாங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் படிக்கிறோம்”..,என்றாள்.
“அதுதானே நானும் சொல்லுறேன்., நான் என்ன எல்லாம் கனவு கண்டேன் கேம்பஸில வேலைக்கு போகணும்னு நினைச்சேன்., படிப்ப முடிச்சிட்டு வேலைக்கு போகணும் இப்படி இருக்கனும்., அப்படி இருக்கனும் ன்னு எவ்வளவு கனவு கண்டேன்.., எல்லாத்தையும் அஞ்சு நிமிஷத்துல பால்படுத்துவாங்க போலவே., என் நிலைமையை யோசிச்சு பார்க்க மாட்டிங்களா”.., என்றாள்.
“அடியே நிவி இப்ப நீ புக்கை எடுத்து படிக்குற., இல்லனா எழுந்து வெளியே போய் உட்கார்ந்து புலம்பு., நாங்க படிக்கணும்., திரும்பத் திரும்ப ஏதாவது புலம்பின உன்னைய பொளந்து கட்டிருவேன் பார்த்துக்கோ”., என்று வசு வும் சேர்ந்து சத்தம் போட்டாள்.
சற்று நேரம் அமைதியாக பாவம் போல புக்கை வைத்துக் கொண்டு அவளுடைய படுக்கையில் அமர்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவள் புத்தகத்தை பார்ப்பதும் படிக்கும் தோழிகளை பார்ப்பதுமாக அமர்ந்திருந்தவள்.
“நீங்க ரெண்டு பேரும் என்னைய சின்ன புள்ள மாதிரி அதட்டுறீங்க தெரியுமா”என்றாள்…
“அப்ப நீ சின்ன பிள்ளை இல்ல., பெரிய பிள்ளை தானே”., என்றாள் பானு.
“ஆமா பெரிய… இல்லை இல்லை நான் சின்ன புள்ள தான்., நான் சின்ன பிள்ளை தான்” என்றாள்.
பெரியபிள்ளை என்று சொல்ல வந்ததை சின்ன பிள்ளை என்று மாற்றிக்கொண்டாள்..
“இங்க பாரு நிவி நமக்கு படிப்பு ரொம்ப முக்கியம் சரியா., இன்னும் ஒரு செமஸ்டர் இருக்கு., இப்போ இது தான் நமக்கு கடைசி எக்ஸாம்., அதுக்கப்புறம் ஆறு மாசம் படிப்பு இருக்கு.,
உனக்கு சும்மா தான் வீட்ல சொல்லி இருக்காங்க., உங்க அம்மா.. சொன்ன உடனே எல்லாமே முடியப் போறது கிடையாது., நீயா பொலம்பிட்டு இருக்காத சரியா., இப்ப பேசாம இரு சின்ன புள்ள பெரிய புள்ள னுட்டு”., என்று சொன்னவள்.,
அவர்கள் படிப்பை பார்க்கத் தொடங்க., அவளும் தோழிகளும் படிக்க வேண்டும் என்பதற்காக மனதிற்குள் ஆயிரம் குழப்பங்கள் இருந்தாலும் படிக்க தொடங்கியிருந்தாள்…
ஹாஸ்டலில் உணவு அறையில் சாப்பாடு எடுத்துக் கொண்டு அமர்ந்தவள்., மறுபடியும் தோழிகளிடம் ஒரு வாய் உணவை எடுத்து வாயில் வைப்பதற்குள்.,
“கொஞ்சம் கூட எங்கம்மா பீல் பண்ணல இல்ல., எவ்வளவு ஈசியா சொல்றாங்க மனசே கேக்கல டி., ஒரே கஷ்டமா இருக்கு” என்று மறுபடி குழம்ப தொடங்கவும்…
“இங்க பாரு ஒழுங்கா சாப்பிடு., ஏற்கனவே ஹாஸ்டல் சாப்பாடு வாயில வைக்க விளங்காது.., இட்லி மாதிரியா இருக்கு., நீயே இரண்டு இட்லி தான் எடுத்துட்டு உட்கார்ந்து இருக்க., நல்லா பாரு இதுக்கு மேல ஏதாவது பேசின இன்னும் நாலு இட்லி எடுத்துட்டு வந்து உன் தட்டில் வைத்து விடுவேன்.,
அப்புறம் வார்டன் பார்த்தாங்க னா., ஒன்னும் சாப்பிடாம எந்திரிக்க விட மாட்டாங்க., எது வசதியோ பார்த்துக்கோ எடுத்து வைத்திருக்குற இதை சாப்பிடுறியா., இல்ல இன்னும் நாலு இட்லி எடுத்து தட்டில் வைக்கவா”., என்று கேட்டவுடன்
சாப்பாட்டை கண்டு பயந்தவள் அவசரஅவசரமாக அமைதியாக சாப்பிட தொடங்கினாள்…
சாப்பிட்டு விட்டு கையை கழுவி அமைதியாக அறைக்கு வந்தவளுக்கு மறுபடியும் குழப்பம் மேலிட புத்தகத்தை எடுத்து சரியாகப் படிக்காமல் கூட குழம்ப தொடங்கவும்..,
தோழிகள் தான் “இவளை இப்படியே விட்டால் சரி வராது அவளை பேசி வழிக்கு கொண்டு வரனும்.., அப்படி இல்லாட்டி மண்ட காஞ்சு போய் உட்கார்ந்து ஒரு வார்த்தை சொன்னதுகே இவ இப்படி பயந்து போய் உட்கார்ந்துட்டா” என்று தோழிகள் பேசிக்கொண்டனர்..,
“நிவி., நிவி., இங்க பாரு சொல்றதை கேளு., எதைப்பத்தியும் யோசிக்காத சரியா., இப்ப என்ன ஆச்சுனு இப்படி பொலம்பிட்டு இருக்க., அம்மா போன்ல தானே சொன்னாங்க., அதுக்கே இப்படி குழம்பினா எப்படி., என்னமோ இப்போ உடனே கல்யாணம் பண்ணி வைக்க போற மாதிரி., மாப்பிள்ளை வீடு வந்து இருக்கு ன்னு தானே சொன்னாங்க.,
அதுக்கே இவ்வளவு குழம்பி., புலம்பி ட்டே நின்னா எப்படி., அவ அவ கல்யாணம் முடிச்சிட்டு வந்து காலேஜ்ல படிக்கிறா., உனக்கு மாப்பிள்ளை வந்துருக்கு ன்னு சொன்னதுக்கு இப்படி பொலம்புற”.., என்று தோழிகள் பேசிக்கொண்டிருந்தனர்..,
அவர்களிடம் இருந்து எழும்பி அவள் அங்கு இருந்த கண்ணாடியில் தன்னை அப்படியும் இப்படியும் திருப்பி பார்த்துகொண்டாள்.
“நான் ரொம்ப பெரிய பொண்ணா தெரியுறேனா என்ன.., ரொம்ப பெரிய பொண்ணா தெரிஞ்சவங்களுக்கு தானே சட்டுனு கல்யாணமும் பேசுவாங்க.., நான் இதுக்கு தான் சொல்றது நான் எப்பவும் மாடர்ன் டிரஸ் போடுறேன்னு..,
இந்த தடவை அம்மா தீபாவளிக்கு சாரி எடுத்து தரேன் சொன்னாங்க.., நானும் பல்ல காட்டிகிட்டு அஃட் ல இருந்த சாரி., ஆன் லைன் ல பார்த்த சாரின்னு சொல்லி.., ஒவ்வொரு சாரியா காமிச்சி., அம்மா எனக்கு அஞ்சாறு எடுத்துத் தரும் போதே நான் யோசிச்சு இருக்கணும்.., லூசு மாதிரி வாங்கிட்டேன்., அதனால தான் கல்யாணம் பேசினாங்களோ” என்றாள் நிவி என்ற நிவேதா..,
“பானு இவளுக்கு லூசு தாண்டி பிடிச்சிருக்கு., ஒரு போன் வந்ததுக்கே லூசு பிடிச்ச மாதிரி பொலம்பிட்டு இருக்காலே., இவளுக்கெல்லாம் திடுதிப்புன்னு மாப்பிள்ளை பார்த்து கூட்டிட்டு வந்து இவன் தான் மாப்பிள்ளை ன்னு சொன்னா.., இவ என்ன பண்ணி இருப்பா.., நிச்சயமாக மெண்டல் ஹாஸ்பிடலில் கொண்டு போய் அட்மிட் பண்ணி இருக்க வேண்டியது தான்., ஒரு போன்காலுக்கே இவ இப்படி பொலம்புறாளே”., என்று கேட்டாள் வசுமதி.,
“நீங்களும் என் கூடத்தான் படிக்கிறீங்க., உங்களுக்கு என்ன வீட்ல மாப்பிள்ளையா பார்க்குறாங்க.., அதனால நீங்க இப்படி பேச தான் செய்வீங்க., அவங்கவங்க லைஃப்ல செட்டில் ஆயிட்டு., கல்யாணம் பண்றாங்க., எனக்கு இந்த வயசுல கல்யாணம் பண்ணனும் நினைக்கிறாங்க”.. என்றாள்.
“நீ சரியான லூசு தாண்டி.., இங்க பாரு மாப்பிள்ளை பார்க்க தானே வர்றாங்க., இப்ப என்ன உனக்கு உடனே பேசி நிச்சயம் பண்ணவா போறாங்க.., நமக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு தட்டிக்கழிக்க எவ்வளவோ வாய்ப்பு இருக்கு..,
நீ உங்க அம்மா கிட்ட சொல்லிரு மாப்பிள குண்டா இருந்தா., ஒல்லியா வேணும் சொல்லு., ஒல்லியா இருந்தா குண்டா வேணும் சொல்லு., கலரா இருந்தா கருப்பா வேணும்னு சொல்லு., கருப்பா இருந்தாலும் அழகா இருக்கணும்னு சொல்லு., மீசை வைத்திருந்தா., மீச வச்சி இருக்க கூடாதுன்னு சொல்லு., நீ கேட்கிற மாதிரி எல்லாம் வந்துட்டு அப்படினா.., இப்போ உள்ள டிரென்ட் தாடி வைப்பது தான் தாடி வைத்திருக்கும் சொல்லு.., இல்லாட்டி கொஞ்சம் தொப்பை போட்டு இருக்கான் சொல்லு.., கரெக்ட்டா இருந்த இவர் எக்ஸசைஸ் பார்ட்டியா இருக்கான்னு சொல்லு.., எவ்வளவோ இருக்கு.., நீ எதுக்கு இப்படி பயந்துட்டு கிடைக்க” என்று சொன்னாள்.
“ஆமா இல்ல இப்படி எல்லாம் கூட சொல்லித் தட்டிக் கழிக்க நல்ல வாய்ப்பு இருக்கே” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்..
“பேண்ட் சர்ட் போட்டிருந்தா வேஷ்டி கட்டுறவங்க தான் வேண்டும் கேட்கணும்.., இப்படி இல்ல னா அப்படி ன்னு., அவங்கள குழப்பு., எனக்கு இது பிடிக்கலை என்று ஓப்பனா சொல்லணும்”.., என்றாள்.
“ஹே., ஐடியா நிறைய இருக்கு இதெல்லாம் பஸ்டே தெரியாம போயிடுச்சு., இதெல்லாம் சொல்லி இருக்கலாம் இல்ல.., நான் கொஞ்சம் ஃப்ரீயா படித்திருப்பேன்” என்று சிரித்தபடி சொன்னாள்..,
“அடிப்பாவி இவளோ நேரம் படி படின்னு சொன்னேன் இல்ல எங்கள மண்டைய காய வச்சிட்ட”., என்றாள்.
“அப்பவே இந்த ஐடியாவை சொல்லி இருக்கலாம்” என்றாள்.
“ஆனா நீ எங்க கேக்குற.., நாங்க தான் சொன்னோம் இல்ல., இதெல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாதுன்னு… எவ்வளவு வழி இருக்கு.., நாளைக்கு யோசிச்சி சொல்றேன்., வேற எப்படி எல்லாம் தட்டிக் கழிக்கும் வாய்ப்பு இருக்குன்னு..,
இப்ப உட்கார்ந்து படி நாளைக்கு காலையில செம்மையா எக்ஸாம் எழுதிட்டு வந்தா., அப்புறம் நாளைக்கு மதியத்திற்கு அப்புறம் ஃபுல்லா ஹாஸ்டல் பங்க்ஷன் கொண்டாடுவோம்., நாளை மறுநாள் தான் நம்ம ஊருக்கு கிளம்புவோம்.,
நாளைக்கு நைட் உட்கார்ந்து ஜாலியாக பேசலாம்., அப்ப நெறைய ஐடியா வரும்., நம்ம ஃப்ரெண்ட்ஸ் ட்ட சொன்னா போதும்., எல்லாரும் நிறைய ஐடியா தருவாங்க.., நிப்பாட்டா எவ்வளவு வழி இருக்கு.,
ஜாலியா என்ஜாய் பண்ணு.., இப்ப நல்லபடி நாளைக்கு எக்ஸாம் முடிச்சிட்டு வந்து கலக்கலாம்” என்று சொல்லி தோழிகளுக்கும் உற்சாக படுத்தி கொண்டு அவர்களுக்குரிய பாடத்தை படிக்க தொடங்கினர்..,
படிப்பைப் பொறுத்தவரை நிவேதா நன்றாக படிக்க கூடியவள் தான்., வசுவும் பானுவும் மே நன்றாக படிக்கக் கூடியவர்கள் தான்., ஆனால் கேம்பஸ் இன்டர்வியூவில் நிவேதாவிற்கு வேலை கிடைத்திருக்க..,
வசுவிற்கும்., பானுவிற்கும் கிடைக்காமல் இருந்தது.,
இந்த செமஸ்டர் முடிவுகளை வைத்து தான் மறுபடி வரும் கம்பெனிகளில் ஏதாவது ஒன்றில் தேர்வாக வாய்ப்பிருக்கிறது என்று சொல்லியிருந்ததால் அதற்காக படித்துக் கொண்டிருந்தனர்.,
நிவேதா வேலைக்கு தேர்வாகி இருப்பது வீட்டில் அப்படி ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை., பார்க்கலாம் என்று மட்டும்தான் சொல்லி இருந்தனர்.,
ஆனால் நிவேதாவிற்கு வேலைக்கு செல்லவேண்டும்., தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உண்டு..,
அதிகாலையில் எழுந்த தோழியர் மூவரும் மறுபடியும் படிப்பு., கல்லூரி கிளம்புவது என்று இருக்க அன்றைய பொழுது அவர்களுக்கு சரியாக இருந்தது..,
தேர்வறையில் நிவேதா வேக வேகமாக எழுதிக் கொண்டிருந்த போது தற்செயலாக நிமிர்ந்து நிவேதாவை பார்த்த வசு., ‘அம்மணி நேத்து ஃபுல்லா பொலம்புனா., இன்னைக்கு பாரு முட்டி முட்டி எழுதிகிட்டு இருக்கா.., எப்படித்தான் படிக்கிறாளோ., ஒரு தடவை படிச்சா மண்டையில ஏறிரும்.,
நமக்கெல்லாம் பத்து தடவை படிச்சா தான் மண்டையிலேயே ஏறுது’ என்று தனியாக புலம்பிக் கொண்டிருந்தாள்.
அதே நேரம் ‘பாவம் தான்., கல்யாணம் இஷ்டம் இல்ல., ஒன்னு மேல படிக்கணும்., இல்லாட்டி வேலை பாக்கணும் னு ஆசையோட இருந்த பிள்ளையை பிடிச்சு கல்யாணத்துக்கு பேசுறாங்களே.,
சரி நம்ம சொல்லிக் கொடுக்கிற ஐடியாவை சொல்லி கொடுப்போம்., அதுக்கப்புறம் அவங்க அம்மா அப்பா என்ன முடிவு பண்றாங்க ன்னு தெரியல., இன்னும் மாப்பிள்ளை போட்டோ பாக்கல இல்ல பார்ப்போம்’., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே சற்று தள்ளி அமர்ந்து எழுதும் பானுவையும் பார்த்துக் கொண்டாள்…
ஹாஸ்டலில் வந்து அன்றைய சிறிய விழா அவர்களுக்கு மட்டும் வைத்திருக்க கலந்து கொண்டு ஒரே ஆட்டமும் பாட்டமும் ஆக கல்லூரி மாணவிகளுக்கு உரிய சந்தோஷத்தோடு கழித்துக் கொண்டிருந்தனர்.,
அதன் பிறகு உணவு வேளையில் கல்லூரி தோழிகளிடம் பேசிக்கொண்டிருந்தனர்.
ஹாஸ்டல் தோழிகளோடு சேர்ந்து பேச அனைவரும் சேர்ந்து இதுக்கு போய் பயந்தயா.,
“அடியே நிவேதா நீ ஊரையே வித்துருவ., நீ பயந்தயா போடி போடி இதுக்கெல்லாம் பயப்படுவாங்களா., ரொம்ப சிம்பிள் டிப்ஸ் சொல்லித்தரேன் கேட்டுக்கோ., பொண்ணு பார்க்க வரும் போது மாப்பிள்ளை ட்ட பேசணும்னு சொல்லு”., என்றாள் ஒரு தோழி.,
அதற்கு மற்றொரு பெண் “அதெல்லாம் பேச விடுவாங்கடி.., அதெல்லாம் கண்டிப்பா மாப்பிள்ளை பொண்ணு கிட்ட பேசணும் கேப்பாரு”..,என்றாள்.
“ஒருவேளை மாப்பிள வரலைன்னா” என்று கேட்டாள்.
” அடியே அபசகுனமா பேசாதடி., அதெல்லாம் வருவாங்க., மாப்பிள பொண்ணு பார்க்க வருவாங்க வரும் போது மாப்பிள்ளை பேசும் போது., நான் சொல்ற மாதிரி சொல்லு மாப்பிள்ளை பொண்ணே வேண்டாம் ன்னு சொல்லுவாங்க”., என்றாள்.,
” இவ ஒருத்தி ஏடாகூடமா சொல்லி தொலைடி” என்றாள்., இன்னொருத்தி.,
” உருப்படியா சொல்லுங்கப்பா., எல்லோருக்கும் உதவும்” என்றாள்.. கூட்டத்தில் ஒருத்தி.
“நல்ல கேட்டுக்கோ மாப்பிள ட்ட என்ன சொல்லனும்னா., எனக்கு சமைக்க தெரியாது., வீட்டு வேலை எதுவும் செய்யத் தெரியாது., நல்ல சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குவேன்., அப்புறம் எனக்கு என் டிரஸ் எல்லாம் கூட யாராவது துவைச்சி தரனும்., நீ தான் பொறுப்பா பார்த்துக்கனும் அப்படிங்கற மாதிரி சொல்லு.., மாப்ள துண்டை காணோம்., துணிய காணோம் ன்னு ஓடிட மாட்டான்” என்றாள்.,
உடனே நிவேதா கண்கள் மின்ன தன் தோழிகளிடம் “இந்த ஐடியா நல்லா இருக்குடி” என்றாள்..
“அடியே ஐடியா நல்லா இருக்குன்னு., சொல்லிட்டு அங்க போய் சொதப்பிறாதே., சொல்றத கரெக்டா சொல்லணும்” என்று சொன்னாள்.
“அதெல்லாம் சொல்லிவிடுவேன்” என்றாள்.,நிவேதா.
“அதையும் மீறி மாப்பிள்ளை எல்லா வேலைக்கும் சர்வன்ட் வச்சிடலாம் அப்படின்னு சொன்னாரு னா.., இன்னொன்னு வழி நேரடியா மாப்பிள்ளை அம்மாவைப் பிடித்து பேசிரு., எனக்கு ஒரு வேலையும் செய்யத் தெரியாது., எல்லாம் உங்க பையன் செய்வாராம்.., சம்மதமா உங்களுக்கு ன்னு கேளு.., எந்த மாமியார் பையன வேலை செய்ய விடுவா.., உடனே வேண்டாம்னு சொல்லிடுவாங்க”., என்றாள்.
” இன்னொருத்தி இதுவும் நல்லா இருக்கு” என்று சொன்னாள்.
“ஐடியா எல்லாம் சூப்பரா தான் இருக்கு., ஆனா நீ சொதப்பாமல் இருக்கணும் அதுதான் முக்கியம்”., என்றாள் தோழி..
மற்றொரு அறையின் தோழியோ “நிவேதா பொண்ணு பாக்க வர்ற அன்னைக்கு எனக்கு மட்டும் சொல்லுடி நான் வந்துவிடுவேன்”., என்று கேட்டாள்.
இன்னொரு தோழி “நீ எதுக்கு போற மாப்பிள்ளைய சைட்டடிக்கவா” என்று கேட்டாள்.
” அந்த வேலையெல்லாம் நமக்கு எதுக்கு.., அதெல்லாம் நமக்கு தேவையில்லாத வேலை., நமக்கு முக்கியம் அன்னைக்கு பஜ்ஜி சொஜ்ஜி செய்வாங்க., நம்ம போனா ஒரு கட்டு கட்டிட்டு வந்துடலாம்” என்று சொன்னாள்.,
மற்ற தோழிகள் எல்லாம் “திங்குறதிலேயே இரு” என்றனர்.
ஹாஸ்டல் வார்டன் பார்த்துக்கொண்டே இருந்தார்.
“என்னைக்காவது ஒருநாள் தானே பஜ்ஜி சொஜ்ஜி கிடைக்கும் அதை சொல்லுங்க., எல்லாரும் சேர்ந்து போகலாம்” என்று அந்த தோழி சொன்னாள்.
“நாம என்ன விசேஷ வீட்டுக்கா போறோம்., அவளை பொண்ணு பாக்க வர்றவங்கள விரட்ட ஐடியா கேட்டுக்கிட்டு இருக்கா., நீங்க எல்லாம் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிடுவதற்கு போறதுக்கு ரெடியாகுங்க”., என்று கிண்டலும் கேலியுமாக தோழிகள் பேசிக்கொண்டிருக்க இவளுக்கோ மனதிற்குள் ஏக குஷியாக இருந்தது.
நிறைய ஐடியா கிடைத்துவிட்டது என்று தான்.
அறைக்கு தூங்குவதற்கு வந்த போது வசுவிடமும்., பானுவிடமும் “ஏய் நல்ல ஐடியா கிடைச்சிருக்கு இல்ல.., சூப்பர் பா” என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருந்தாள்…
“அதே மாதிரி இன்னொன்னு இருக்கு அது கூட செய்யலாம்” என்று சொன்னாள் பானு.,
” என்ன” என்றாள்., நிவேதா
“மாப்பிள்ளை இன்ஜினியரிங் படித்தவரா இருந்தா., எனக்கு டாக்டர் மாப்பிள்ளை வேணும்னு கேளு., வேற எதுவும் ஃபீல்ட் இருந்தா., எனக்கு இந்த பீல்டு வேணாம் இந்த பீல்டு தான் வேணும்னு கேளு., எல்லாம் சரியா வரும் நீ தைரியமா ஊருக்கு போலாம்” என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
மறுநாள் அவரவர் ஊருக்கு கிளம்பும் குஷியில் அவர்கள் கொண்டு செல்வதற்கு தேவையான பொருள்களை எல்லாம் அவர்களது பேக்கில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.,
ஊருக்கு சென்ற பின் நிவேதாவின் முடிவு என்னவாக மாறப் போகிறதோ என்ற எண்ணம் தோழிகளுக்கு மட்டும் இருந்தது., இவளது பேச்சு வீட்டில் எடுபடுமா என்ற எண்ணமும் இருந்தது..,
“விவாதங்கள் மோதல்கள் அல்லது பிரச்சினைகளை கண்டு அஞ்சத் தேவையில்லை., வானமே இடிந்தாலும் அதிலிருந்து புதிய உலகம் பிறக்கும் வாழ்க்கை இப்படித்தான்“.,
– சார்லி சாப்ளின்