ஆள வந்தாள் -3
அத்தியாயம் -3(1)
மாலையில் ஊர் வந்து சேர்ந்த சேரனை பிலு பிலு என பிடித்துக்கொண்டார் அவனது அம்மா கனகாம்புசம்.
“ரவைக்கு எங்கடா போயிருந்த, நீ செஞ்சது பத்தாதுன்னு நேத்து ரா மூச்சூடும் அந்த சிறுக்கி கூட இருந்திட்டு வர்றியளோ?” என உச்சஸ்தாயில் அவர் அலற, “இந்தாடி சவுண்ட குறை” என இரைந்தார் சேரனின் அப்பா கந்தசாமி.
“ஆமாம் அவ கூடத்தான் இருந்திட்டு வர்றேன், இப்ப என்னாங்குற?” அலட்சியமும் கோவமுமாக கேட்டவன் உள்ளே சென்று விட்டான்.
“ரோஷங்கெட்டவனே வெக்கமாவே இல்லையாடா உனக்கு?” என கத்தினார் கனகா.
“அதான் ரோஷங்கெட்டவன்னுட்டியே… அப்புறம் எங்கேருந்து வெக்கம் வரும்? சீக்கிரம் அவதான் இங்க வருவா” பதிலுக்கு கத்திய சேரன் அறைக் கதவை அடித்து சாத்தினான்.
கருமை படர்ந்த முகத்தோடு அழுகையும் ஆத்திரமுமாக கணவரை பார்த்தார் கனகா.
“ஏட்டி தேவையாடி உனக்கு?” நக்கலாக கேட்டார் கந்தசாமி.
“நடந்த அவமானம் முழுக்க மறந்து போயிட்டான்ன இந்த பய? எனக்கு மறக்கலையே… ஆறவும் இல்லையே” கொதிப்பாக சொன்னார் கனகா.
“பஸ்ல ஒண்ணா போயிருக்கான். சும்மா துணைக்கு வேண்டி, நீதான் தப்பா பேசி அவனை கோவமாக்கி விட்டுட்ட”
“அதைத்தான் கேட்குறேன், இத்தனை வருஷம் இல்லாம இப்ப என்ன புதுசா இவனுக்கு அவ மேல அக்கறை வெளக்கமாறு வந்து கெடக்குங்குறேன்?”
“புதுசான்னு எத வச்சு சொல்ற? இவனுக்கு அந்த பொண்ணு மேல கோவம்தானே தவிர மனச எல்லாம் மாத்திக்கல, இவன் வெவகாரத்துல நீயும்தான் என்ன செய்யலாம்னு இருக்க? எப்டி இவன் இப்படியே ஒத்தையா சுத்தினா பரவாயில்லையாடி?”
“ஏன் ஒத்தையா சுத்தனும் எம்மூட்டு ராசா? எண்ணி மூணு மாசத்துல இவனுக்கு ஏத்தவள பார்த்து கல்யாணத்த முடிக்கல… ங்கொப்புரானா எம்பேர் கனகா இல்லைங்றேன்” கொண்டையை அவிழ்த்து மீண்டும் இறுக்கி கொண்டையிட்டு கொண்டே எழுந்தார் கனகாம்புசம்.
“ரம்பா மேனகான்னு மாத்திக்கம்மோய்!” கிண்டலாக சொல்லிக் கொண்டே வந்தான் அவர்களின் இளைய மகன் சரவணன்.
கந்தசாமி வாய்க்குள் சிரிக்க, சின்ன மகனை முறைத்து விட்டு உள்ளே சென்றார் கனகா.
“உன் அம்மா கெடக்கா, நாத்து நடவு நாளைக்கு இருக்கு, உன் அண்ணன் பார்ப்பானா தெரியலை, நெனப்பு மூட்டு அவனுக்கு”
“நீங்களே சொல்றதுக்கென்ன?”
“எனக்கு கட்சி ஆஃபீஸ்ல வேலை இருக்குன்ன” என்றவர் கிளம்பி விட்டார்.
கந்தசாமியும் மதுராவின் பெரியப்பா சிதம்பரமும் அந்த பகுதியில் அரசியல் பிரமுகர்கள். தமிழகத்தின் முதன்மையான இரு வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள். காலம் காலமாக அவர்கள் குடும்பம் அப்படி அரசியல் ரீதியாக எதிர்த்து எதிர்த்து குடும்பத்திற்குள்ளாகவும் பகையாகி விட்டது.
இரு குடும்பங்களுக்கும் ஒத்து வராது என சுற்று வட்டாரத்தில் அனைவருக்கும் தெரியும்.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வார்டு கவுன்சிலராக உள்ளான் சேரன். ஊரின் பிரஸிடெண்ட் சின்னய்யன் ஒரு வகையில் இவனுக்கு மாமன் முறை.
பெரிய மகனிடம் இன்னும் தன் கோவத்தை தீர்த்துக் கொள்வதற்காக கனகா அவனது அறைக்கு வந்த போது நல்ல உறக்கத்தில் இருந்தான் சேரன். எழுப்பி விட்டு கத்த வேண்டும் போல அவருக்கு அத்தனை ஆத்திரம், இருப்பினும் அயர்ந்து தூங்குபவனை எழுப்ப மனமில்லாமல் பின்கட்டுக்கு சென்றவர் அவரது மூத்த மகள் பூங்கொடிக்கு அழைத்து பேசினார்.
அதே ஊரில் இரண்டு தெருக்கள் தள்ளித்தான் அவளது புகுந்த வீடு.
“ஏட்டி சேதி தெரியும்ன? ஒந்தம்பி அவ கூட ஒண்ணா மெட்ராஸ் வரைக்கும் போயிட்டு வந்திருக்கான்” என ஆரம்பித்தார் கனகா.
“உன் மாப்ள வந்து சொன்னாரும்மா, இந்த கோமுட்டி பயலுக்கு ஏந்தான் புத்தி பெசகி போச்சோ? இன்னுமா அவளை நினைச்சிட்டு இருக்கான் இவன்? நாமதான் என்ன எதுன்னு பார்த்து செய்யணும்மா” என்றாள் பூங்கொடி.
இப்படியாக விரைவிலேயே சேரனுக்கு ஒரு பெண்ணை பார்த்து மணமுடிக்க வேண்டுமென தாயும் மகளுமாக பேசி முடிவெடுத்தனர்.
கல்லூரி முடிந்து சித்தியின் வீடு வந்த மதுரா குழப்ப மனநிலையில் இருந்தாள். இத்தனை கலவரத்துக்கு பின்னரும் தன்னை தேடி அவன் வரக்கூடும் என அவள் நினைத்ததே கிடையாது.
தன்னிடமிருந்து ஒரேயடியாக விலகி விட்டான் என்றே நினைத்திருந்தவளுக்கு அவன் திடீரென காட்டும் உரிமையை எப்படி எடுத்துக் கொள்வது என சுத்தமாக புரியவில்லை. ஆனால் ஒரு வகையில் அவனது இந்த உரிமை அவள் மனதுக்கு சமாதானமாக இருந்தது.
தள்ளி இருந்தாலும் தன் மீது அக்கறையோடுதான் இருக்கிறான் என்பதும் நன்றாக புரிய, இது எங்கு போய் முடியுமோ என்ற அச்சமும் எழுந்தது.
தன் கழுத்தை தடவிக் கொண்டவளுக்கு அழுகையாக வந்தது. கைப்பொம்மை போலவே தன்னை பாவித்து ஆளாளுக்கு தன் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள் என்ற எண்ணமும் நேற்றைய தினம் அவளது அண்ணி பேசியதும் கழிவிரக்கத்தை உண்டு பண்ணியது.
எந்த கோயிலுக்கு சென்றாலும் தனக்காக வேண்டிக் கொள்வதை காட்டிலும் சேரனின் நலனுக்காகத்தான் வேண்டுவாள். அண்ணனுக்கு குழந்தை இல்லையே என சமீபமாக அவர்களுக்காகவும் வேண்டுகிறாள். அப்படிப்பட்டவள் போய் அவர்கள் வாழ்வதை கண்டு அழுகிறாள் என சரஸ்வதி பேசியதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
பலவித நினைவுகளுடன் அப்படியே உறங்கிப் போனாள்.
இரவில் கண் விழித்தவள் கைப்பேசியை தேடி எடுக்க இரண்டு தவறிய அழைப்புகள் வந்திருந்தது. அந்த எண்ணை பெயரிட்டு சேமிக்கா விட்டாலும் அவளுக்கு நல்ல மனப்பாடம். சேரனின் எண்தான் அது. இன்னும் மாற்றியிருக்கவில்லை போலும்.
மனம் தட தடக்க அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
ஏற்றவன், “ஏட்டி… எப்படி போவ எப்படி போவன்னு எண்ணெய்ல போட்ட போண்டாவாட்டம் விடிகாலைல அப்படியே பசப்புன, போய் சேர்ந்தியான்னு ஒத்த வார்த்தை கேட்டுக்கல, அலம்பல் அம்புட்டுதானாடி என் நமத்து போன சிப்ஸு?” எனக் கேட்டான்.
“ஆமாம் நான் நமத்து போயிட்டேன், அங்க மட்டும் என்ன வாழுதாம்? ஊசிப் போன சாம்பார்” என நொடித்தாள்.
“அப்ப… இன்னும் அந்த வாய் மட்டும் குறையல. சொல்லு ஏன் போன் செய்யல எனக்கு?”
“ப்ச்… போயிருந்திருப்பீங்கன்னு நினைச்சேன்”
“நீங்களாவே எல்லாத்தையும் நினைப்பியளோ?”
“இப்ப எதுக்கு கால் பண்ணுனீங்க?”
“நான் எங்கடி பண்ணுனேன், நீயில்ல கூப்பிட்டிருக்க?”
“உங்க மிஸ்டு கால் பார்த்திட்டுதான் கூப்பிட்ருக்கேன்”
“அப்ப என் நம்பர் மறக்கல உனக்கு? ம்ம்ம்… இவ்ளோ நாள் ஏன் கூப்பிடல?”
“இதையே திரும்ப திரும்ப கேட்கத்தான் கால் பண்ணியிருந்தீங்களா? அதான் மதன் அத்தான்கிட்ட தெளிவா சொல்லியிருந்தேனே உங்ககிட்ட பேச மாட்டேன்னு, அப்புறம் எப்படி உங்களுக்கு கால் பண்ணுவேன்?”
“பண்ணனும்டி, என்ன கிறுக்கன்னு நினைச்சியா என்னை?” கோவமாக கேட்டவன், குற்றம் சொல்லும் தொனியில், “அப்படித்தான் ஆக்கி வுட்டுட்டீல நீ?” என்றான்.
“நிஜமா சலிச்சு வருதுங்க எனக்கு, என்ன வேணும் உங்களுக்கு? என்னால என்ன செஞ்சிருக்க முடியும்? இனிமேதான் என்ன செய்ய முடியும்?”
அரை நிமிடம் அமைதி நிலவியது.
“உன் பரிட்சை முடிஞ்சதும் நேரா என்கிட்ட வரணும் நீ” என்றான் சேரன்.
அதிர்ந்தவள், “அதெப்படி முடியும்?” எனக் கேட்டாள்.
“கட்டுனவன் நான் இருக்கையில என்கிட்டதான் வரணும் நீ, எப்படின்னு கேள்வி கேட்குற?”
“அது… அதான் அந்த கல்யாணம் செல்லாதுன்னு…”
“நிறுத்துடி, செல்லாதுன்னு எவன் சொன்னாலும் ஏத்துக்க முடியாது. அரை நாள் உன் கழுத்துல நான் கட்டின தாலி கிடந்துச்சுதானே? நான் உசுரோட இருக்கும் போதே கழட்டி கொடுத்தீல? போவுது, நீ சொல்லு, உன் மனசாட்சி தொட்டு சொல்லு நான் உன் புருஷன் இல்லைனு”
சட்டென, “இல்ல, நமக்குள்ள எந்த உறவும் இல்லை, இனிமே போன் பண்ணாதீங்க” என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டவளுக்கு மனம் கனமாகிப் போக மீண்டும் படுத்து விட்டாள்.
கைப்பேசியை வெறித்துக் கொண்டு நின்றிருந்த சேரனின் அருகில் வந்தனர் அவனது நண்பர்கள் இருவரும்.
“என்ன மாப்ள மூஞ்சு சுண்ணாம்புல முக்கி எடுத்த மாதிரி வெளுத்து போச்சு, திரும்ப அல்வா கொடுக்க பாக்குதா எந்தங்கச்சி?” எனக் கேட்டான் செழியன்.
“இருக்கும்டா பங்கு, அவ குடும்பமே அப்படித்தான?” என்றான் மதனகோபால்.
இயல்புக்கு வந்த சேரன், “இவளா வருவான்னு பார்த்தா ஏமாந்த சோனகிரி ஆக வேண்டியதுதான் நான். கட்டுனவள வச்சு வாழத் தெரியாதவன்னு ஊர்க்காரனுவோ அம்புட்டு பயலுவளும் என்னை கேவலமா பார்க்குறானுவோல்லடா? என் அம்மா என்னடான்னா எனக்கு பொண்ணு பார்க்க போறேன்னு ஜங்கு ஜங்குன்னு புதுசா கெடந்து ஆடுது, இனியும் பொறுமை கிடையாதுடா” என்றான்.
“நீ செய்டா பங்காளி” நண்பனின் தோளில் தட்டிக் கொடுத்தான் மதன்.
“ஆமாம்டா மாப்ள, தட்டி தூக்குறோம்டா” வேஷ்டியை மடித்துக் கட்டினான் செழியன்.
வனராஜன் பைக்கில் செல்கையில் இவர்களை, குறிப்பாக சேரனை பார்த்து முறைத்துக் கொண்டே செல்ல, ஒரு பக்க மீசையை முறுக்கி விட்ட சேரன் அதே முறுக்கோடு பதில் பார்வை பார்த்து வைத்தான்.
“அவன் கெடக்கான்டா ஒன்னுக்கும் லாயக்கில்லாத சவுக்காரம்” வசை பாடினான் செழியன்.
“ஈஸியா சொல்லாதடா, அவன்கிட்ட சூதானமா இருக்கணும்” என எச்சரித்தான் மதன்.
மதுரா பேசியதில் கோவமாக இருந்த சேரன் நண்பர்களுடன் பேச்சை வளர்க்காமல் வீடு சென்று விட்டான். வெளியில் சாப்பிட்டு விட்டதாக அம்மாவிடம் பொய் உரைத்தவன் மொட்டை மாடி சென்று வானத்தை பார்க்க படுத்து விட்டான்.
உணவு முடித்து உறங்க சென்ற மதுரா வெகு நேர யோசனைக்கு பின் சேரனுக்கு அழைத்தாள். அவன் எடுக்கவே இல்லை.
இவள் விடாமல் முயற்சி செய்து கொண்டே இருக்க அழைப்பை ஏற்றவன், “அதான் நமக்குள்ள உறவு இல்லைன்னு சொல்லிப்புட்டீலடி? அப்புறமும் நொய் நொய்யுன்னு எதுக்குடி கால் பண்ணிட்டே இருக்க?” என இரைந்தான்.
“நீங்க நல்லா இருக்கணும், இருப்பீங்க” கலங்கிய குரலில் சொன்னவள் அழைப்பை துண்டித்து கைப்பேசியை அணைத்து வைத்து விட்டாள்.
“ரோதனை புடிச்சவ, நான் கண்ணசர கூடாதுன்னு கங்கணம் கட்டிகிட்டு திரியுறா” வாய் விட்டு திட்டியவன் கடுப்போடு கைப்பேசியை அணைத்து வைத்தான்.
அதற்கு பின் இருவருமே பேசிக் கொள்ள முயலவில்லை.