அவளின் நண்பர்கள் கவலை தேய்ந்த முகத்துடன், வெளியே நின்று கொண்டிருந்தனர். நேராக அவன் தீவிர சிகிச்சை பிரிவிற்குள் நுழைய, அங்கிருந்த காவலாளி அவனை தடுக்க, அப்போது தான் திருவை கவனித்த கோபி ஓடி வந்து, “அண்ணா அவர் சப் கலெக்டர்.’’ என அறிவிக்க, அந்த காவலாளி பயந்து போய் சலாம் வைத்தார்.
அது எதையும் கவனிக்கும் மன நிலையில் இல்லாத திரு, நேரடியாக உள்ளே நுழைந்து, இடைமறித்த செவிலியர்களை தாண்டி, நேராக மித்துவின் படுக்கையின் அருகில் சென்று நின்றான்.
அவனின் பின்னால் வந்த கோபி, அங்கிருந்தவர்களிடம் அவன் யார் என அறிவிக்க, அடுத்த இரண்டாம் நொடி, தீவிர சிகிச்சை பிரிவின் மருத்துவர் அவன் அருகில் வந்து நின்றார். சற்று நேரம் பலவகை இயந்திரங்களோடு இணைக்கப்பட்டு செயற்கை சுவாசத்தோடு மூச்சு விட்டுக் கொண்டிருந்த மித்ராவை ஆழ்ந்து பார்த்திருந்தவன், “என்ன ஆச்சு..’’ என்றான் மருத்துவரை நோக்கி திரும்பி.
“செடேடிவ்ஸ் அளவுக்கு அதிகமா எடுத்து இருக்காங்க. வீ தின்க் இட்ஸ் ய சூசைடல் அட்டம்ப்ட். இங்க கொண்டு வரும் போதே, அன்கான்சியஸா இருந்தாங்க. கூட ரெஸ்பிரேட்டரி டிப்ரஷன் (மூச்சு விடுதலில் சிரமம்) இருந்தது. அதனால இன்டூபேட் செஞ்சி இருக்கோம். அவங்க என்ன ட்ரக் எடுத்தாங்கன்னு தெரிஞ்சிக்க ப்ளட் டெஸ்ட் செஞ்சி இருக்கோம். ரிசல்ட் வந்தா ஆன்டிடோட் (விஷமுறிவு மருந்து) கொடுக்கணும். இப்போதைக்கு மெஷின் சப்போர்ட்ல ஸ்டேபிளா தான் இருக்காங்க.’’ என்றார்.
‘ம்’ என்று தலை அசைத்தவன், வெளியே சென்று நிற்க, கோபி அவன் அருகில் வந்து நின்றான். “சார்… உங்களுக்கு எப்படி…?’’ என அவன் தயக்கமாய் நிறுத்த, “நாங்க ரிலேடிவ்ஸ் தான்.’’ என்றான்.
கோபியை நேராக பார்த்தவன், “என்ன ஆச்சு..?’’ என்றான். உடனே கோபி பின்னால் திரும்பி ஒரு ஓரத்தில் நின்று அழுது கொண்டிருந்த சரிகாவை பார்த்தான். “சரிகா…’’ என அவன் அழைக்க, அவள் கண்களை துடைத்தபடி நிமிர்ந்து பார்த்தாள்.
“சார்… டீடைல்ஸ் கேக்குறாரு.’’ என்றான் மெலிதான குரலில். சிவந்த கண்களோடு மூக்கை உறிஞ்சியபடி முன்னால் வந்த சரிகா, “எனக்கு எதுவும் தெரியாது சார். ரூம்ல எப்பவும் போல நைட் தூங்கிட்டு இருக்கான்னு நினைச்சேன். நடுவுல ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்து பாக்கும் போது கொஞ்சம் அப் நார்மல் பொசிசன்ல படுத்து இருக்க மாதிரி இருந்தது. எழுப்பி பார்த்தேன் அவ எழுந்துகல. உடனே பக்கத்து ரூம்ல இருந்தவங்களை எல்லாம் எழுப்பி இங்க கூட்டிட்டு வந்து அட்மிட் செஞ்சிட்டோம்.’’ என்றாள்.
முகத்தில் எந்த மாற்றத்தையும் காட்டாத திரு, “சரி…! நேத்து என்ன நடந்தது. எதுக்காச்சும் அப்சட்டா இருந்தாங்களா..? வேற எதாச்சும் பிரச்சனைன்னு உங்ககிட்ட சொன்னாங்களா..?’’ என கேள்வி எழுப்பினான்.
“எப்பவும் போல கிளாஸ் போயிட்டு வந்தோம். அவன் ஈவ்னிங் சைக்ளிங் முடிச்சிட்டு படிச்சிட்டு இருந்தா. ரெண்டு பேரும் ஒண்ணா மெஸ் போயி சாப்பிட்டு வந்தோம். அப்புறம் நான் தூங்கிட்டேன். வேற எதுவும் பெருசா நடக்கல சார்.’’ என்றாள்.
தலையை உலுக்கி கொண்டவன், “சரி அவங்க போன் எங்க…?’’ என கேட்டான். “ரூம்ல இருக்கு’’ என்றாள் சரிகா. கோபியை அழைத்தவன் மற்ற மாணவர்களை கிளம்ப சொன்னான். அனைவரும் கிளம்பிய பின்பு சரிகாவும், கோபியும் மட்டும் அங்கேயே தேங்கினர்.
‘அப்படி என்ன தான் நடந்திருக்கும்’ என அவன் தனக்குள் மறுக, அவன் கேள்விக்கான விடையை அவன் தற்செயலாய் திறந்த முக புத்தகம் வழங்கியது. அதில் வைரலாய், ‘காதலித்து கழற்றிவிட்ட கார்திக்கின் தங்கை..’ என்ற பதிவு முன் வந்து நிற்க, அதிலிருந்த உரலியை தொட்டு உள் சென்றான் திரு.
அங்கு விரிந்த வலையொளியில்(youtube) முன்பொரு காலத்தில் மித்ரா, அரவிந்தனோடு பேசிய அத்தனை வார்த்தைகளும் அட்சரம் பிசகாமல் அரங்கேறி இருந்ததோடு, அவளின் அந்த அரைகுறை புகைப்படங்களும் சேர்த்து பகிரப்பட்டு இருந்தன.
இப்படியெல்லாம் ஆசை வார்த்தை கூறி காதலித்தவள், தன் அண்ணன் கிரிக்கெட்டில் சாதித்தவுடன், தன் நண்பனை கழற்றி விட்டு சென்று விட்டதாக புலம்பி இருந்தான் அடையாளம் தெரியாத ஒருவன்.
திரு மித்ராவின் அலைபேசியில் இருந்தவற்றை மட்டும் அழித்த தன் மடத்தனத்தை தற்சமயம் எண்ணி நொந்து கொண்டான். இந்த விஷயம் விடியும் முன் வைரலாகிவிடும் என்று உணர்ந்தவன், உடனடியாக சைபர் கிரைமை தொடர்பு கொண்டு அந்த காணொளியை அழித்துவிட்டு, அதை பகிர்ந்தவனை கண்டு பிடிக்க சொன்னான்.
இதன் பின்னணியில் நிச்சயம் அரவிந்தன் இருப்பான் என உறுதியாய் நம்பினான் திரு. தன் மேலேயே ஆத்திரம் பொங்க என்ன செய்வது என புரியாமல் முன்னும் பின்னும் நடந்தவன்,கையை மடக்கி சுவற்றில் குத்தி தன் ஆத்திரத்தை மட்டுப்படுத்திக் கொண்டான்.
அவன் கோபத்தின் காரணம் புரியாத கோபி, அவனின் அந்த உக்கிரத்தில் மிரண்டு நின்றான். அங்கிருக்கும் மற்றவர்கள் தன்னை கவனிக்கிறார்கள் என புரிந்ததும் திரு முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.
ஒரு மணி நேரத்தில் அவனை மீண்டும் அழைத்த மருத்துவர்கள், “சார் என்ன காம்பவுண்ட்னு தெரிஞ்சிருச்சு. நாங்க ஆன்டிடோட் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கிறோம். நீங்க அவங்களுக்கு என்ன வேணும். பஸ்ட் டிகிரி ப்ளட் ரிலேடிவ் கன்சன்ட் வேணும்.’’ என்றார்.
“நான் சைன் பண்றேன். அவங்க என்னோட தாய் மாமா பொண்ணு தான்.’’ என்றான் திரு. அவன் கையெழுத்திட்ட சிறிது நேரத்தில், சிகிச்சை தொடங்க, மணி அதிகாலை நான்கை தொட்டிருந்தது. அதே நேரம் இனியனோடு, பால்கியும், மதுவும் மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.
திரு அவர்களை கண்டதும் எழுந்து முன்னே நடக்க, மது ஓடி வந்து திருவின் கரங்களை பற்றிக் கொண்டார். திரு ஆறுதலாய் அவரின் தோள் தட்ட, “எம் பொண்ணு… அவ எப்படி இருக்கா திரு..? நல்லா இருக்கா தானே. நீ பார்த்தியா…?’’ என்றார் உயிர் பயத்தை கண்களில் தேக்கி.
பால்கி எதுவுமே பேசவில்லை. தவறாக எதுவும் சொல்லிவிடாதே என்பதை போல, பரிதவித்து போய் திருவை பார்த்துக் கொண்டிருந்தார். திரு இருவரையும் மாறி மாறி பார்த்தவன், “மித்ராவுக்கு ஒண்ணும் இல்ல. விஷமுறிவு மருந்து கொடுத்துட்டு இருக்காங்க. சீக்கிரம் சரி ஆயிடுவாங்க.’’ என்றான்.
இருவரும் மகளை பார்க்க உள்ளே செல்ல, திரு அவர்களோடு தானும் சென்றான். மகளை செயற்கை சுவாச இணைப்போடு, தீவிர சிகிச்சை பிரிவில் கண்ட இருவருமே மொத்தமாய் நொறுங்கிப் போயினர்.
மது பேசவும் முடியாமல் அங்கிருந்த இருக்கையில் சாய்ந்து கொள்ள, பால்கி தளர்ந்து போய் அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து மௌனமாய் அழ தொடங்கினார். யாரை முதலில் தேற்றுவது எனப் புரியாத திரு, முதலில் தன் மாமனின் கரங்களை சென்று பற்றிக் கொண்டான்.
அவனின் தொடுகையில் சுய உணர்வை பெற்றவர், விழி நீரை துடைத்து கொண்டு, அவனின் இருகரங்களையும் ஆதரவாய் பற்றிக் கொண்டவர், “எம் பொண்ணை எனக்கு சரியா வளர்க்க தெரியலியா திரு… நான் எங்க தவறினேன்னு தெரியலையேப்பா…?’’ என்றார் உடைந்து போய்.
“அப்படியெல்லாம் இல்ல பால்கிப்பா…’’ என அவன் ஆறுதல் சொல்ல, “இல்ல… எனக்கு தான் அவளை சரியா வளர்க்க தெரியல… நான் அவளை ஒழுங்கா பார்த்துக்கல… நீ தான் சரி திரு… அவளுக்கு நீ தான் சரி… நீயே என் பொண்ணை இனி பார்த்துக்கோ… நான் அவளை உனக்கே கல்யாணம் செஞ்சி கொடுத்துடுறேன். நீ அவளை நல்லா பார்த்துப்ப தானே…’’ என அவர் கலங்கிய கண்களோடு கேட்க, இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் திகைத்து போய் அவரை பார்த்துக் கொண்டிருந்தான்.