“இன்னைக்கு எங்க மேரேஜ்க்கு ட்ரெஸ் எடுக்க போறாங்க. அதனால ஐயா வீட்ல இருக்கேன்.’’ என்றார் காலரை தூக்கிவிட்டபடி. “மம்மி என்கிட்ட சொல்லவே இல்ல. என்னோட ட்ரெஸ் நான் ஊருக்கு வரும் போது தான் எடுக்கணும்.’’ என்றாள் மித்ரா வேகமாய்.
“அதெல்லாம் பத்து முறை அலைய முடியாது. உனக்கு வாட்ஸ் அப் கால் பண்றேன். நீ சூஸ் பண்ணு.’’ என்றான் கார்த்திக் வேண்டும் என்றே. “டேய்…’’ அவள் அலற, அதற்குள் பால்கி வந்து அலைபேசியை வாங்கி இருந்தார்.
கார்த்திக் பிரகாஷினியின் திருமணம், நிச்சயத்திற்கு பின் ஆறு மாதங்கள் கழித்து முடிவாகி இருந்தது. பிரகாஷினியின் பயிற்சி காலம் முடிந்த பின் திருமணத்திற்கு திட்டமிட்டு இருந்தார்கள். அதில் இரு மாதங்கள் கடந்திருக்க, மெல்ல மெல்ல திருமணத்திற்கான ஏற்பாடுகளை தொடங்கி இருந்தனர்.
இடைப்பட்ட நாட்களில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்ட கார்த்திக், சிறப்பாக விளையாடி அணியில் தனக்கென நிலையான ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டான். வெளியில் கிளம்பினாலே அவனை அடையாளம் காணும் அளவிற்கு பிரபலமாகி இருந்தான்.
“பா…’’ தந்தையை திரையில் கண்டதும் மகள் செல்லம் கொஞ்ச, “செல்ல குட்டி. அவன் கிடக்குறான் விடுடா. இந்த வீக் என்ட் நீ ஊருக்கு வந்ததும் நீயும் நானும் மட்டும் போத்தீஸ் போறோம். உனக்கு பிடிச்ச ட்ரெஸ் எடுக்குறோம். சரியா…? அப்படியே மூவி, மால்னு ஊர் சுத்திட்டு வரலாம்.’’ என்று சமாதனம் சொன்னதும், “அந்த தடியனையும் கூட்டிட்டு போலாம்பா.’’ என்றாள்.
சிறுவயதில் இருந்தே அப்படித் தான். தனக்கு எது கிடைத்தாலும் அதில் பாதியை தன் தமையனுடன் பகிர்ந்து கொள்வாள். கார்த்திக் உள்ளுக்குள் அவளின் அந்த செய்கையில் நெகிழ்ந்தாலும், வெளியே, “எனக்கு இது பிடிக்காது போடி…’’ என அவளுடன் வம்பு வளர்த்து திரிவான்.
“உன் கூட எல்லாம் வெட்டியா சுத்த வர முடியாது. இந்த சன்டே நான் என் பியான்சிய பாக்க போறேன்.’’ என்றான் வேண்டுமென்றே. மித்ரா மீண்டும், “பாருங்கப்பா…’’ என தந்தையிடம் குற்றப்பத்திரிக்கை வாசிக்க முயல, திரையில் எட்டிப் பார்த்த மதுரா, “சாப்பிடுறது ரெண்டு இட்லி. அதை திறந்து வச்சிட்டு இங்க கதை பேசிட்டு இருக்கியா. முதல்ல சாப்பிட்டு, கொண்டு வந்த ஜூசையும் குடிச்சிட்டு அப்புறம் போன் போடுடி. கழுத்து எலும்பு எல்லாம் தெரியுது. இன்னும் பத்து மாசம் போறதுக்குள்ள காத்துல கரஞ்சிடுவ போல.’’ என்று மகளை கண்டித்தவர் அலைபேசி இணைப்பையும் துண்டிக்க, மித்ரா ஒரு முறுவலோடு அலைபேசியை வைத்தாள்.
அரை மணி நேரத்திற்கு முன், மிக விவேகமாய் செயல்பட்டு ஒரு உயிரை காத்தவள் இவள் தான் என்றாள் யாரும் நம்ம முடியாதபடி அவளின் முகம் குழந்தை தன்மையை தத்தெடுத்திருந்தது. தாய் சொன்னபடி வேகமாய் உணவை உண்டு முடித்தவள், அதன் பிறகே மீண்டும் அலைபேசியை கையில் எடுத்தாள்.
அவளின் ஓய்வு நேரம் முடிய இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தது. அலைபேசியில் புலனத்தை திறந்தவள், தோழிகளிடம் சற்று நேரம் அரட்டை அடித்துவிட்டு, அலைபேசியை மூடி வைக்கும் போது தான் முகநூலின் வழி வந்திருந்த அந்த குறுஞ் செய்தியை கண்டாள்.
திரையில் அவன் பெயரை கண்டதுமே, அவள் உடல் முழுக்க ஒரு முறை சிலிர்ந்து அடங்கியது. வேக வேகமாக பர பரவென்று அவள் செய்தியை திறக்க, அதிலிருந்த செய்தியை வாசித்தவளின் இதழ்களில் மௌனப் புன்னகை வந்து அமர்ந்தது.
“யாசித்து பழக்கமில்லை – இந்த
யட்சிணிக்கு – என்னை
யார் என்று அறிந்தால் தான்
யாசகமாய் கிடைக்குமோ – உங்களின்
மன்னிப்பு.’’ என்று அனுப்பி வைத்தவள், அதோடு தன் பணியை பார்க்க கிளம்பினாள்.
பால்கியின் வீட்டிற்கு பிரதாப்பின் குடும்பம் வந்துவிட, குடும்பம் சகிதமாய் திருமண ஆடைகளை வாங்குவதற்கு அனைவரும் கிளம்பினர். பிரகாஷினி பயிற்சி காலத்தில் இருந்ததால் அவளுக்கு விடுமுறை கிடைக்கவில்லை.
ஏற்கனவே செய்ய கொடுத்திருந்த தாலியை வாங்கிக் கொண்டு, இருவரின் குல தெய்வங்களுக்கும் முதல் பத்திரிக்கையை வைத்து வணங்கிவிட்டு, திருமண ஆடைகளை வாங்கி திரும்பும் போது நேரம் இரவை தொட்டிருந்தது.
பிரதாப்பின் குடும்பம் அப்படியே தங்கள் வீட்டிற்கு கிளம்ப, பால்கியின் குடும்பமும் தங்கள் வீட்டிற்கு திரும்பினர். பால்கி தங்கள் அறையை நோக்கி நடக்கையில் அவரின் அலைபேசி இசைத்து அவரை அழைத்தது.
திரையில் வெண்ணிலாவின் எண் தெரிய முகத்தில் மலர்சியோடே பால்கி அந்த அழைப்பை ஏற்றார். ஆனால் அலைபேசியின் மறுபக்கம் பேசியது தமிழ் இனியன். திருப்பதியின் இரண்டாம் மகன்.
அவன் என்ன சொன்னானோ அடுத்த நொடி பால்கியின் முகம் அதிர்ச்சியில் இறுகியது. “என்னடா சொல்ற…? இதெல்லாம் எப்ப நடந்தது. முன்னாடியே கால் பண்றதுக்கு என்ன…? நான் உடனே பிரதாப்புக்கு பேசுறேன். அறிவே இல்லடா உங்களுக்கு எல்லாம்.’’ அவனிடம் பேசிக் கொண்டே பால்கி வாசலை நோக்கி விரைய, மதுராவும், கார்த்திக்கும் ஒன்றும் புரியாமல் அவரை பின் தொடர்ந்தனர்.
“அப்பா என்ன ஆச்சு. அவசரமா எங்க போறீங்க.’’ என கார்த்திக் வினவ, “நின்னு பதில் சொல்றதுக்கு எல்லாம் இப்ப நேரம் இல்ல. வெண்ணிலா வீட்ல கொஞ்சம் பிரச்சனை. நான் போயிட்டு வந்துடுறேன்.’’ என்றதும், மதுரா பதில் சொல்ல வகையின்றி பதட்டமாய் நிற்க, தன் இருசக்கர வாகனத்தை நோக்கி நடந்தவர் நிலைப்படியில் இடித்துக் கொள்ள, “ஏங்க…’’ “பா…’’ என்று மதுராவும், கார்த்திக்கும் ஒரே நேரத்தில் அலறினர்.
“பா…! ஒரு நிமிஷம் நில்லுங்க. நான் காரை எடுக்குறேன். இவ்ளோ பதட்டமா நீங்க எங்கயும் டூ வீலர் ஓட்டிட்டு போக வேண்டாம்.’’ என்றபடி கார்த்திக் முன்னால் வந்தான். அதுவே மதுராவுக்கும் சரியென தோன்ற, “என்ன நடந்து இருந்தாலும் சரி செஞ்சிக்கலாம். நீங்க டென்சன் ஆகாதீங்க சந்து. நாம பார்த்துக்கலாம்.’’ என்றபடி கணவரின் கைகளை பற்றிக் கொண்டார்.
அந்த நேரத்தில் பால்கிக்கு அந்த ஆதரவு மிகவும் அவசமியமாய் தோன்ற, தானும் மனையாளின் கைகளை இறுக பற்றிக் கொண்டார். இரண்டே நிமிடத்தில் கார்த்திக் வீட்டு பயன்பாட்டிற்காய் நிற்கும் இனோவாவை உயிர்ப்பித்து இருந்தான்.
“நீ ரெஸ்ட் எடு மது. நான் போயிட்டு உனக்கு கால் பண்றேன்.’’ என்றவர் மகனின் அருகில் ஏறி அமர, ஆரம்பத்திலேயே வாகனம் வேகம் எடுத்து தெருவில் இறங்கி மறைந்தது. மதுரா கண் முன் மறைந்த வாகனத்தை கவலையோடு பார்த்தபடி வாயிலில் நின்றிருந்தார்.
சேலம் மாநகரின் நெருக்கம் மிகு சாலைகளில் வாகனத்தை செலுத்தியபடி, “எங்க போகணும் பா…!’’ என்று கேட்டான். “அத்தை ஊருக்கு தான் போறோம். ரூட் தெரியும் இல்ல. இல்லனா கூகிள் மேப் போட்டுக்கோ.’’ என்றவர் தன் அலைபேசியை எடுத்து பிரதாப்பிற்கு அழைத்தார்.
அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்படவில்லை எனவும், “சை. டிரைவ் செஞ்சிட்டு இருக்கான் போல.’’ என்று சலித்து கொண்டவர், இரண்டு நிமிடன்கள் கண்களை மூடி சிந்தித்து விட்டு, உடனே திவ்யாவிற்கு அழைத்தார்.
சில நொடிகளில் அழைப்பு ஏற்கபட, “சொல்லுங்க பால்கி அண்ணா…!’’ என்ற குரல் கேட்டதும், “திவ்யா போனை ஒரு நிமிஷம் பிரதாப்கிட்ட கொடும்மா. ரொம்ப அவசரமா ஒரு விஷயம் பேசணும்.’’ என்றதும், “ஹைவேஸ்ல இருக்கோம் அண்ணா. ஒரு ரெண்டு நிமிஷம். சர்வீஸ் ரோட்ல கட் செஞ்சதும் கொடுக்குறேன் அண்ணா.’’ என்றார்.
அந்த இரண்டு நிமிடங்கள், கண்களை அழுந்த மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்துவிட்டார் பால்கி. கார்த்திக் நடப்பது எதுவும் புரியாமல் தந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அலைபேசி மீண்டும் இசைக்கவும், பால்கி பரபரப்பாக அழைப்பை ஏற்று காதில் வைத்தார். அந்தப்பக்கம் பிரதாப் ஹெலோ என்று சொல்வதற்கு கூட அவகாசம் கொடுக்காமல், “டேய் பிரதாப்…! பிருந்தாவை காணோம்டா. காலையில திருவந்தபுரம் எக்ஸ்ப்ரஸ் ட்ரைன் ஏறின பொண்ணு சேலம் வந்ததும் மிஸ் ஆகி இருக்கா. ஊர்ல இருக்க பிரச்சனை தான் உனக்கு ஏற்கனவே தெரியுமே. வீட்ல இருக்கவங்க அதையும் இதையும் கனெக்ட் செஞ்சி ரொம்ப பயந்துட்டு இருக்காங்கடா. எனக்கு என்ன செய்றதுன்னே புரியல…’’ என்று மூச்சு விடாமல் புலம்பினார்.
தந்தையின் வார்த்தைகளின் வழி, யாரையோ கடத்தி விட்டார்கள் என்பது புரிய, ‘பிருந்தான்னா யாரு’ என்று தன் நியாபக அடுக்குகளில் துலாவியவன் மனத்திரையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் பள்ளி சீருடையில் மருத்துவமனையில் பார்த்த சிறு பெண்ணின் முகம் நினைவிற்கு வந்தது.
அந்தப் பக்கம் பிரதாப் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பால்கி, “தெரியலையே…’’ என்பதையே பதிலாக கொடுத்து கொண்டிருக்க, “டேய்…! முதல்ல நீ ஊருக்கு போ. கம்ப்ளைன்ட் ரிஜிஸ்டர் செஞ்சாச்சான்னு பாரு. நான் இவங்களை வீட்ல விட்டுட்டு வந்துடுறேன். ஸ்டேசன் போயிட்டு நீ எனக்கு கால் பண்ணு.’’ என்றவர் அழைப்பை துண்டிக்க, பால்கியின் முகம் மேலும் தளர்ந்தது.
“பா…! என்ன பிரச்சனைப்பா…’’ என கார்த்திக் வினவ, “சொன்னா உனக்கு புரியாதுப்பா.’’ என்றவர் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டார். அவர் நினைவுகள் இருபத்தைத்து வருடங்களுக்கு முன் பயணிக்க தொடங்கியது.
இந்த போராட்டம் எல்லாம் என்றைக்கு முடிவுக்கு வரும் என்பது அவர் அறியார். ஆனால் ஏதோ ஒரு வகையில் இந்த பகை நெருப்புக்கு தன் காதலும் நெய் வார்த்திருக்கிறது என்பதை அவர் உள்மனம் உணர்ந்திருததால் நடப்பவைகளை எண்ணி அவர் நெஞ்சம் ரணம் கொண்டது.