“சார் உங்களை பார்க்க விவசாயிகள் சங்க தலைவர் வந்து இருக்காரு.’’. திருவின் உதவியாளன் அவனிடம் ஆங்கிலத்தில் உரைக்க, கோப்பில் கவனமாய் இருந்தவன் நிமிர்ந்து, “அவங்களை உடனே உள்ள அனுப்புங்க.’’ என்றான்.
திரு ஆந்திராவில் உள்ள சித்தூரில் துணை ஆட்சியாளாராய் இணைந்து இரு மாதங்கள் கடந்திருந்தது. சில நொடிகள் கடந்ததும், பச்சை துண்டணிந்த ஐவர் அந்த அறைக்குள் பிரவேசித்தனர்.
அவர்களை அவன் வரவேற்று அமர வைத்ததும், “வணக்கம் தம்பி. நல்ல நேரத்துல நீங்க தண்ணி ஏற்பாடு செஞ்சி தந்தீங்க. இல்லனா பயிறு மொத்தமா வீணாகிப் போயிருக்கும். நீங்க நூறு வருசம் நல்லா இருக்கணும்.’’ என்று சங்க தலைவர் தெலுங்கில் உரைக்க, அவனோ புன்முறுவலோடு அவர்களைப் பார்த்திருந்தான்.
இங்கு பணியில் இணைந்த ஆரம்பத்தில், அவர்கள் பேசும் சுந்தர தெலுங்கை புரிந்து கொள்ள சிரமப்பட்டவன், ஒரு மாத பயிற்சியில் இலகுவாக அவர்களின் மொழியை புரிந்து கொள்ள தொடங்கினான். ஆயினும் சரளமாக பேசுவது அவனால் இயலாது.
“ நான் என் வேலையை தானே பார்த்தேன் ஐயா.’’ என்றான் திரு தெலுங்கில் ஒவ்வொரு வார்த்தையாக கோர்த்தெடுத்து. “இந்த காலத்துல அதுதானே தம்பி பெரிய விசயமா இருக்கு. எங்க குலசாமிக்கு படைச்ச மொதோ அறுவடை நெல்லை உங்களுக்கு கொடுக்க எடுத்துட்டு வந்து இருக்கோம். தம்பி மறுக்காம வாங்கிக்கணும்.’’ என்றார் அருகில் இருந்த மற்றொருவர்.
“இதெல்லாம் எதுக்குங்க ஐயா.’’ என்றவன் அவர்கள் நீட்டிய மஞ்சள் பையில் இருந்து கையளவு நெல்லை அள்ளி மேஜையில் வைத்தவன், “இதுவே எனக்கு அதிகம். இனிமே எந்த பிரச்சனைனாலும் உடனே என்னை வந்து பாருங்க.’’ என்றவன் எழுந்து நின்று கை கூப்பினான்.
அவர்களும் எழுந்து வணங்கி விடை பெற்று கிளம்பினர். தன் மேஜை மீதிருந்த மணியை அழுத்த, அவனின் உதவியாளர் கோபால் வந்து எட்டிப் பார்த்தார். “மதியம் ரெண்டு மணிக்கு வாட்டர் போர்ட் கமிட்டி மீட்டிங் டைம் சேஞ் ஆயிருக்கு இல்ல. அதை நம்ம அபிசியல் க்ரூப்ல அப்லோட் செஞ்சிடுங்க. அப்புறம் அந்த ரோட் காண்ட்ராக்ட் டெண்டர் சம்மந்தப்பட்ட பைல்ஸ் எல்லாம் கொண்டு வாங்க. அனேகமா நாளைக்கு சாயங்காலம் டெண்டர் இருக்கும்னு நினைக்கிறன். ஸ்ரீதரன் சார் கேட்டா நான் டீடைல்ஸ் கொடுக்கணும்.’’ என்றதும், கோபால் ‘சரி’ என்பதாய் தலை அசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
காலையிலிருந்து இடைவிடாத பணி அவனை சற்றே அயற்சியில் தள்ளி இருந்தது. சற்று நேரம் இளைப்பாறலாம் என தன் அலைபேசியை திறந்தவன், நண்பன் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து வந்திருந்த புலன செய்திக்கு பதில் கொடுத்து கொண்டிருந்தான்.
அலுவல் சம்மந்தமாகவும் நிறைய செய்திகள் வரிசைகட்டி காத்திருந்தன. புலனத்தை மூடியவன், முகநூல் பக்கத்தை திறக்க, மெசெஞ்சர் செயலியில் வழக்கம் போல நிறைய செய்திகள், தெரிந்த மற்றும் தெரியாத நபர்களிடமிருந்து வந்திருந்தது.
அவன் குடிமை பணியில் இணைந்த செய்தியை அவன் முகநூலில் பதிந்த நாள் முதலே தினம் நூறு நட்பு அழைப்புகளும், செய்திகளும் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தன. முதலில் தன் மீது படிந்த பிரபல வெளிச்சத்தில் சற்றே தடுமாறியவன், பின்பு மெதுமெதுவாய் அதற்கு தன்னை பழக்கப்படுத்திக் கொண்டான்.
வழக்கம் போல அலட்சியமாய் செயலியை திறந்தவன், இளவயது பெண்களிடமிருந்து வந்திருந்த செய்திகளை வாசிக்காமலேயே கடந்தான். மேலிருந்து கீழ் செய்திகளை நகர்த்திக் கொண்டே வந்தவன், “சகி’’ என்ற பெயரில் அவன் ஆள் காட்டி விரல் சற்றே ஓய்வெடுத்தது.
அந்த செய்தியை திறக்க,
“கால காலாமாய் காத்திருக்கிறேன் – உன்
கண்களை நேருக்கு நேர் பார்த்து
கொஞ்சமும் குற்ற உணர்ச்சியின்றி
ஒற்றை மன்னிப்பை யாசித்திட – நீ என்னை
மன்னிப்பாயா…?’’
அந்த வரிகளை வாசித்ததும் திருவின் உதட்டில் ஒரு குறுநகை வந்து அமர்ந்தது. வழக்கமாக இளம் பெண்கள் அவனுக்கு அனுப்பும் கவிதைகள் காதலை சொல்லி தான் வரும். அன்றி பொதுவாக ஏதாவது செய்தி அனுப்பி அவனுடன் பேச முயல்வார்கள்.
ஆனால் முதல் முறையாக பெண்ணொருத்தி, மன்னிப்பை யாசித்து இருக்க, ‘யாராயிருக்கும்…?’ என்று சிந்தித்தவன், அந்த முகநூல் கணக்கை ஆராய தொடங்கினான். பார்த்தமாத்திரத்தில் தெரிந்தது அது ஒரு போலி கணக்கு என்பது. அவனிடம் பேசுவதற்காக பிரத்யேகமாக உருவாக்கி இருக்கிறார்கள் என.
அந்த முகநூல் கணக்கு ஒரு பொண்ணா பையனா என்பதே தற்சமயம் அவனுக்கு சந்தேகம் வந்தது. முகநூலில் முகப்பில் ஒரு முத்து மாலை அறுந்து அதன் முத்துகள் நாலா புறமும் சிதறுவதை போன்ற புகைப்படம் அமர்ந்திருந்தது.
அதன் கீழே குறிப்பில், “இயற்கை நேர்பட வாழ்பவள்.’’ என்ற வரிகள் அமர்ந்திருந்தது. அவளிடம் பேச வேண்டும் என்று தோன்ற, அவள் அனுப்பிய குறுஞ் செய்திக்கு, “ மன்னிப்பை யாசிக்கும் யட்சகியின் முகவரி என்ன…?’’ என்று அனுப்பிவிட்டு சற்று நேரம் அந்த செய்தியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அது ஒற்றை சரி குறியை காட்டவும், கையை மேலே தூக்கி சோம்பல் முறித்தவன், தன் அலுவலக பணிகளில் மீண்டும் மூழ்க தொடங்கினான்.
“சீக்கிரம் அந்த இன்டுபேசன் ட்ரேவை எடுங்க…’’ என்று அங்கிருந்த பயிற்சி இயன்முறை (பிசியோ தெரபி) மாணவிகளை நோக்கி அலறிக் கொண்டிருந்தாள் மித்ரா. தன் இளநிலை கல்வியை முடித்த அவள் தற்சமயம் ‘சேவ் லைப்’ மருத்துவமனையில் இயன்முறை சிகிச்சை நிபுணராய் பணியில் இணைந்திருந்தாள்.
இரண்டு மணி நேரத்திற்கு முன்னால், விஷம் அருந்தி அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன், சற்றே சுய நினைவு திரும்பவும், தனக்கு இணைக்கப் பட்டிருந்த செயற்கை சுவாச குழாயை கழற்றி வீசியிருந்தான்.
சில நிமிடங்களில் மீண்டும் அந்த செயற்கை சுவாசக் குழாயை (ஈ.டி டியூப்) அவனுக்கு பொருத்தாவிட்டால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவன் இறப்பது உறுதி. அங்கு இருந்த நோயாளிகளின் மூச்சு திறனை மேம்படுத்த மார்பில் இயன்முறை சிகிச்சை அளித்து கொண்டிருந்த மித்ரா காணும் போது தான் அந்த சம்பவம் அரங்கேறியது.
சில வினாடிகள் கூட தாமதிக்காத மித்ரா, உடனடியாக அங்கிருந்த பயிற்சி மாணவிகளின் துணை கொண்டு அந்த நோயாளிக்கு செயற்கை சுவாசக் குழாயை இணைந்தவள், அவன் படுக்கைக்கு அருகில் இருந்த மயக்க மருந்தையும் தேவைப்படும் அளவிற்கு அவன் உடலில் செலுத்தினாள்.
அவன் மெல்ல தளர்ந்து கண்களை மூட, அதுவரை வேறொரு நோயாளியின் நின்றிருந்த இதய துடிப்பை மீட்பதில் முனைந்திருந்த மருத்துவக்குழுவும் செவிலியர்களும் அவளின் அருகே வந்தனர். அவசர சிகிச்சையின் மூத்த துறை பேராசிரியர், “வெல்டன் மித்ரா. சரியான நேரத்துல ரீ இன்டுபேட் செஞ்சிட்ட. எம். எம்.சி ப்ரொடக்ட்னு சரியா நிரூபிக்கிற. கீப் இட் அப். அப்படியே எல்லா பிசியோ ஸ்டூடன்ஸ்க்கும் இன்டுபேசன் செய்றது பத்தி ப்ராக்டிகல் கிளாஸ் எடுத்துரு.’’ என்றதும், மித்ரா “எஸ் சார்.’’ என்றாள்.
அவர்கள் அடுத்த நோயாளியின் முன்னேற்றம் கணிக்க செல்ல, மற்ற நோயாளிகளுக்கும் அனைத்து வகை இயன்முறை சிகிச்சையையும் செய்து முடித்தவள், கைகளை கழுவி விட்டு, ஓய்வறையில் சென்று அமர்ந்தாள்.
அவளின் பணி சரியாக காலை ஏழு மணிக்கு தொடங்கும். அதனால் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து காலை உணவை எடுத்து வருபவள், ஒன்பது மணி போல வேலைகள் அத்தனையும் முடித்துவிட்டு, அதன் பிறகே ஓய்வறையில் தன் உணவினை எடுத்துக் கொள்வாள்.
உணவு டப்பாவை திறந்தவள், தன் அலைபேசியை கையில் எடுத்து வீட்டிற்கு முதலில் காணொளி காட்சியுடன் கூடிய புலனத்தில் அழைத்தாள். அடுத்து முதுநிலை கல்வியில் இணையும் முன் களப் பணி அவசியம் என்பதால், இளநிலை முடித்த ஒரே வாரத்தில், தன் திறனை மேம்படுத்தும் மருத்துவமனையை தேர்ந்தெடுத்து பணியில் இணைந்தாள்.
அதில் மதுராவுக்கு ஏக வருத்தம். வழக்கம் போல பால்கி தான் மகளின் விருப்பத்திற்கு துணை நின்றார். பால்கியின் எண்ணிற்கு மித்ரா அழைக்க அழைப்பை ஏற்றது கார்த்திக். அவன் முகத்தை திரையில் கண்டதும், “டேய்… அண்ணா…! ப்ராக்டீஸ் போகல.’’ என்றாள்.