“தப்பு தான் ஆதி”, என்றவர் தமயந்தியைப் பார்க்க அவள் அழுத கண்களுடன் “என்னை மன்னிச்சிரு ஆதி. நான் செஞ்சது தப்பு தான்”, என்றாள்.
“இன்னைக்கு இந்த மன்னிப்பு உண்மைன்னா அன்னைக்கு கேட்ட மன்னிப்புக்கு என்ன அர்த்தம்?”, என்று கேட்க தமயந்தியால் பதிலே சொல்ல முடிய வில்லை.
“என்ன டா அவளுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணி என் மருமகளை குறை சொல்ற?”, என்று எரிச்சலுடன் கேட்டாள் பார்வதி.
பாட்டிக்கு பதில் கொடுக்க மனதில்லாமல், ஏன் பேசக் கூட விருப்பம் இல்லாமல் அன்னையைப் பார்த்தவன் “நீங்க தப்பு செஞ்சது தெரிஞ்சும் உங்க மாமியார் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுறாங்க. ஆனா என் பொண்டாட்டி என்ன தப்பு பண்ணினான்னு அவளை கஷ்டப் படுத்துறீங்க?”, என்று கேட்டான்.
அடுத்து அனைவரும் அமைதியாக இருக்க “செழியன் நீ மறுபடியும் மதியை திட்டினது எனக்கு தெரியும். நந்துவும் விக்கியும் மறுபடியும் மதியை ஒதுக்கி வச்சதும் எனக்கு தெரியும். நீங்க எல்லாம் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க அவளைப் பத்தி? நீங்க அவளை இஷ்டத்துக்கு கஷ்டப் படுத்துவீங்க. சாரி சொன்ன அப்புறம் அவ சமாதானம் ஆகிறணுமா? இப்படி தப்பு தப்பா பண்ணிட்டு மறுபடி மறுபடி மன்னிப்பு கேக்குறது தப்பா தெரியலையா உங்களுக்கு?”, என்று கேட்க மூவரும் தலை குனிந்தார்கள்.
“அப்பா”, என்று ஆதி அழைக்க “சொல்லு ஆதி”, என்றார் ராயர்.
“உங்களை எதிர்த்து பேசுறது என்னோட நோக்கம் இல்லை. ஆனா உண்மை முக்கியம். நமக்கு ரிஷி யார் என்னன்னு தெரியாது. அவனைப் பத்தி விசாரிச்சதுல நல்ல தொழில் பண்ணுறான்னு மட்டும் தான் சொல்றாங்க. அவன் குணம் எப்படின்னு யார் கிட்ட விசாரிக்க முடியும்? ஆனா மூணு வருஷம் மதி ஒண்ணா அவன் கூட படிச்சிருக்கா. மதி நந்து மேல வச்சிருக்குற அன்பு என்னைப் பொருத்த வரை பொய் இல்லை. அவ எதுக்கு நந்தினி மேல பொறாமை பட்டு இந்த கல்யாணத்தை நிறுத்தணும்? சம்திங் பிஸ்ஸி”
“இப்ப என்ன சொல்ல வர?”
“நான் மதி சொல்றதை நம்புறேன். எனக்கு இந்த கல்யாணம் நடக்க கூடாதுன்னு தோணுது. ஒருத்தி இத்தனை தடவை போராடுறான்னா அதுல ஏதோ ஒரு காரணம் இருக்கணும். நான் அவளை நம்புறேன். அந்த ரிஷியை பத்தி விசாரிக்க போறேன். அவன் தப்பானவனா இருந்தா யார் தடுத்தாலும் நானே இந்த கல்யாணத்தை நிறுத்துவேன். என் தங்கச்சி வாழ்க்கையை காப்பாத்த வேண்டியது என்னோட பொறுப்பு”, என்று சொல்ல ராயரே அவனுக்கு பதில் சொல்ல திணறத் தான் செய்தார்.
“என் மகன் எது செஞ்சாலும் நியாயமா தான் இருக்கும். நீ உன் பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணணும்னு அவ கூட சேந்து என் மகன் முடிவை தப்புன்னு சொல்ற?”, என்று கேட்டாள் பார்வதி.
இப்போதும் பாட்டிக்கு பதில் சொல்லாமல் தந்தையைக் கண்டவன் “நான் கிளம்புறேன் பா”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். பார்வதிக்கு மூக்கு அறு பட்டது போல இருந்தது.
அங்கே அமைதியே நிலவ “என்ன நடக்குது இந்த வீட்ல? நான் இந்த கோவையையே என் கண்ட்ரோல்ல வச்சிருக்கேன். ஆனா இந்த வீட்ல என்னால எதையும் சரியா செய்ய முடியலை? என்ன தமயந்தி இது? உன் கிட்ட இருந்து நான் இதை எதிர் பாக்கலை. ஏற்கனவே உன் கிட்ட சொன்னேன் தானே? இப்ப விளக்கம் கேட்டா மதி என்னை எதிர்த்து பேசினது பிடிக்கலைன்னு சொல்லுவீங்க. எனக்கு என்னமோ என் பேச்சுக்கு மண்டை ஆட்டிட்டு இருக்குற உங்களை விட எனக்கு நேருக்கு நேர் நின்னு மனசுல பட்டதை பேசுற மதி தான் உண்மையா இருக்கான்னு தோணுது. அப்படி என்ன அந்த சின்ன பொண்ணு மேல உங்களுக்கு கோபம்? இவனுங்க ரெண்டு பேருக்கு தான் புரியலை. உனக்கு எங்க போச்சு நந்தினி புத்தி? அவ உன் கிட்ட அண்ணி மாதிரியா பழகினா? ஒரு தோழியா தானே பழகினா. அப்படி இருக்கும் போது அவ கிட்ட பொறுமையா பேசிருக்கணுமா இல்லையா? ரிஷி நல்லவனா கெட்டவனான்னு சொல்றது வேற விஷயம். ஆனா அந்த பிள்ளை நம்ம வீட்டு பிள்ளை தானே? இப்ப ஆதி கேட்ட கேள்விக்கு யாரால பதில் சொல்ல முடிஞ்சது? அந்த பிள்ளை வந்ததும் சாப்பிடுறியான்னு ஏன் கேக்கலை? உள்ள போய் அவளை இன்சல்ட் பண்ணுற? அதான் அவ சாப்பிடாம போயிட்டா?”, என்று கேட்க தமயந்தி கண்களில் கண்ணீர் வழிய நின்றாள்.
“என்ன தமயந்தி மாமியார் கிட்டயும் நாத்தனார் கிட்டயும் இருந்து நம்ம மகன் உன்னைக் காப்பாற்றியதுனால கடைசி வரை உனக்காக நிப்பான்னு நினைச்சியா? அவன் எப்பவும் நியாயத்தின் பக்கம் நிப்பான் டி. அவன் ஆதித்யகரிகாலன். உன் பக்கம் நியாயம் இருந்தப்ப அப்பனுக்கு எதிராவே நிப்பேன்னு சொன்னவன் இன்னைக்கு மதி பக்கம் நியாயம் இருக்கும்னு புரிஞ்சு அம்மா அப்பா ரெண்டு பேரையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டு போறான். பாக்கலாம் இனியாவது நீங்க எல்லாம் திருந்துறீங்களான்னு. மதி கிட்ட மன்னிப்பு கேட்டு அந்த மன்னிப்பையே திருப்பி திருப்பி அசிங்க படுத்தாதீங்க”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
அனைவருக்கும் மனது கஷ்டமாக இருந்தது. அப்போது டூர் முடிந்து அஞ்சனா வீட்டுக்கு வர அங்கே நிலைமை கொஞ்சம் சரியானது. ஆனால் அனைவரின் மனமும் பாரமாக இருந்தது.
அன்று ஆதி ஆபீஸ் சென்றதும் அன்றைய வேலைகளை பி. ஏ விடம் கேட்டு பட்டியல் செய்தவன் ஓர் பதினொரு மணி போல தான் ரிலாக்ஸாக அமர்ந்தான்.
மனைவி நினைவு தன்னாலே வந்தது. “சாப்பிட்டுருக்க மாட்டா”, என்று வருத்தமாக எண்ணிக் கொண்டவனுக்கு அந்த ரெக்காடிங்க் நினைவு வர உடனே அதை எடுத்துப் கேட்டான். முதலில் ரிஷியின் பேச்சே ஒரு மாதிரி இருக்க அவசரமாக பூலுட்டூத் ஹெட்ஸெட்டை கணேக்ட் செய்தவன் அதைக் கேட்க அதிர்ந்து தான் போனான்.
ரிஷி இவ்வளவு கேவலமானவனாக இருப்பான் என்று அவன் எதிர் பார்க்கவே இல்லை. சிரித்து சிரித்து எப்படி ஏமாற்றி இருக்கிறான் என்றும் மனைவி இவனால் எவ்வளவு மன உளைச்சலில் இருந்திருப்பாள் என்றும் புரிந்தது. நேற்று இரவு அவள் வந்து குளித்ததின் காரணமும் புரிந்தது.
இருவருக்கும் எதனால் இப்படி ஒரு பகை வந்தது என்று தெரிந்தது. அவன் தான் மெஸ்ஸேஜ் அனுப்பி திருமணத்தை நிறுத்த முயற்சி செய்திருக்கிறான் என்றும் புரிந்தது.
“நான் மதியை நம்பிருந்துருக்கணும். அவ சொல்றதை நம்பாம அவ ஏன் என் கிட்ட உரிமையா நடந்துக்க மாட்டிக்கா, எந்த உதவியும் கேக்க மாட்டிக்கா, என்னை புருசனா நினைக்க மாட்டிக்கான்னு நான் முட்டாள் தனமா நினைச்சிட்டு இருந்துருக்கேன். இப்படி பட்டவன் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சு அவ டென்சன்ல இருக்கும் போது நான் அவளை கட்டிப் பிடிச்சதுனால தான் அவ அப்படிக் கத்திட்டா. அவ நிலைமைல நான் இருந்தாலும் அதை தானே பண்ணிருப்பேன்?”, என்று எண்ணியவனுக்கு உடனே அவளை காண வேண்டும் போல இருந்தது.
அதற்கு முன் ரிஷிக்கு முடிவு கட்ட எண்ணியவன் போலிஸ்க்கு அழைத்து அந்த போதை மருந்தை அனுப்பியது ரிஷி என்றும் அவன் எப்படி இதில் ஈடு பட்டான் என்றும் கண்டுபிடிக்க உத்தரவிட்டான். அரசியல் சதி என்ற கோணத்தில் இருந்து இப்படி ஒரு கோணத்துக்கு திரும்பியதும் ரிஷியைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக விசாரித்தனர்.
விசாரித்து முழுத் தகவலையும் சிறிது நேரத்திலே போலீஸ் அவனுக்கு கொடுக்க அதைக் கேட்ட ஆதியே நடுங்கிப் போனான். பல பெண்களை அவன் ஏமாற்றி இருப்பதும் தெரிந்தது. அவனை வீட்டுக்குள் விட்டிருந்தால் தினம் தினம் மதி நிம்மதி இல்லாமல் தவித்திருப்பாள் என்று எண்ணியவன் உடனே அவளைக் காண கிளம்பி விட்டான்.
அவள் பள்ளியில் இருக்க அவளைக் காண அறைக்குச் சென்றான். அவனைக் கண்டதும் ஒரு நொடி முகம் மலர்ந்தவள் அவன் கோபம் புரிந்து “வாங்க”, என்று மட்டும் சொன்னாள்.
அவள் அருகே வந்தவன் அவள் கை பற்றி “இங்க வா”, என்று அழைத்தான்.