“நீங்க அப்படி செஞ்சா உங்க மகனை மதிக்கலைன்னு அர்த்தம் பாட்டி. அதுக்கு மேல உங்க விருப்பம்”, என்று அவருக்கு பதிலடி கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றாள் மதி. போகும் அவளையே பார்த்த படி இருந்தார்கள் அனைவரும்.
அனைவரும் தவறு பண்ணி விட்டோமோ? மதியை கஷ்டப் படுத்தி விட்டோமோ என்ற குற்ற உணர்வில் தவித்தவர்கள் ஆதியைப் பார்த்தார்கள். அவன் அப்போதும் போனை தான் பார்த்துக் கொண்டிருந்தான். இந்த அளவுக்கு ஒரு மனிதன் இருக்க முடியுமா என்று வியப்பாக இருந்தது அனைவருக்கும்.
“ஆதி நான் செஞ்சது தப்பு தான். உன் அப்பாவையும் மதியையும் கம்பேர் பண்ணி பாத்ததுல என்னோட தராசு தட்டு உன் அப்பா பக்கம் இறங்கிருச்சு. ஆனா நான் மதியை உன் மனைவியா பாத்துருந்துருக்கணும்”, என்றாள் தமயந்தி.
“எனக்கு உங்க மேலயும் பாட்டி மேலயும் எந்த கோபமும் இல்லை மா. ஏன்னா பாட்டிக்கு என் பொண்டாட்டியே பதிலடி கொடுத்துருவா. நீங்க அவ கிட்ட தப்பு உணர்ந்து மன்னிப்பு கேட்டுட்டீங்க. அதனால உங்க மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனா இவங்க மூணு பேரையும் என்ன சொல்ல?”, என்று தம்பிகளையும் தங்கையையும் பார்த்தான்.
மூவரும் குற்ற உணர்வில் தலை குனிய “ஏன் செழியா, உன்னை எப்பவுமே நான் ராமரோட லட்சுமணனா தான் பாப்பேன். புரியலையா? ராமருக்கு லட்சுமணன் எப்படியோ அப்படி தான் நீ எனக்குன்னு நினைப்பேன். ஆனா லட்சுமணன் அண்ணன் தனி அண்ணி தனின்னு பிரிச்சு பாத்தது இல்லை. ஆனா நீ பாத்துட்டல்ல? நான் உனக்கு அப்பா மாதிரின்னா மதி உனக்கு அம்மா மாதிரி தானே? அம்மாவை அப்படி தான் முறைச்சிட்டு திரிவியா? அவ சாப்பிட வாங்கன்னு கூப்பிட்டா உங்க வேலையைப் பாத்துட்டு போங்கன்னு சொல்லுவியா?”, என்று கேட்க செழியனுக்கு கஷ்டமாக இருந்தது.
“இல்லைண்ணா… அது வந்து…. அப்பா…”
“அவர் எனக்கும் அப்பா தான் செழியா. இன்னும் சொல்லப் போனா எனக்கு தான் முதன்முதலா அப்பாவா ஆனார்? எனக்கும் அவர் மேல அன்பும் அக்கறையும் உண்டு. மதி அப்பாவை பேசினா நான் வேடிக்கை பாப்பேனா? அன்னைக்கு மதி பேசினதுல எனக்கு தப்பு இருக்குறதா தெரியலை. அதை அன்னைக்கே சொல்லிட்டேன். நானும் அப்பாவுமே அதை பெருசா எடுக்காதப்ப அவளுக்கு தண்டனை கொடுக்க நீங்க யார்?”, என்று கேட்க “சாரிண்ணா”, என்றான் செழியன்.
“அப்புறம் நீங்க ரெண்டு பேரும் பண்ணது எவ்வளவு பெரிய இன்சல்ட் தெரியுமா?”, என்று விக்கி மற்றும் நந்தினியைப் பார்த்துக் கேட்டவன் “எப்பவும் என் பொண்டாட்டி கூட தான் விளையாடுவீங்க. இப்ப அவளை உங்க ரூம்ல கூட சேத்துக்குறது இல்லைல. உண்மையான நட்புன்னா என்னன்னே தெரியாத உங்க கிட்ட அதைப் பத்தி பேசி என்ன பண்ண? இனி கவனமா இருங்க. எனக்கு நீங்க எப்படியோ அதே மாதிரி தான் மதியும். என்ன டா எங்களை விட நேத்து வந்தவ முக்கியமான்னு நீங்க கேக்கலாம். ஆனா நேத்து வந்தவளா இருந்தாலும் என்னோட உயிர் வேற மதி வேற இல்லை. அவ கஷ்டப் பட்டா நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன். அவளுக்கு ஒண்ணு நடந்தா அதுக்கு பதிலை நான் திருப்பிக் கொடுப்பேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
ராயர் பேசும் போது கூட அனைவருக்கும் மனது அவ்வளவு பாரமாக இல்லை. ஆனால் ஆதி பேசியதும் அனைவரின் மனதிலும் பாரம் ஏறி அமர்ந்திருந்தது. ஆதி அப்படி தான். யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று அறிந்து அதன் படி பேசுவான். அவர்கள் தப்பை உணரச் செய்தது மட்டுமல்லாமல் அவர்களின் குற்ற உணர்வையும் தூண்டி விட்டுவிடுவான். அவர்களின் மனசாட்சியே அவர்களைக் துடிக்க வைக்கும்.
ஆதி அறைக்குச் சென்ற போது மதி அவனுக்காக தான் காத்திருந்தாள். அவள் தன்னிடம் பேச காத்திருக்கிறாள் என்று புரிந்தும் அவன் அலுவலகம் கிளம்பினான்.
“எனக்கு உங்க கிட்ட பேசணும்”, என்று அவள் ஆரம்பிக்க “எனக்கு ஆபீஸ் போகணும். நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். “கடவுளே கண்டுக்காம போறானே? எப்படி இவனை சமாளிக்க? எல்லாரும் என்னை கஷ்டப் படுத்தினாங்கன்னா நான் இவனைக் கஷ்டப் படுத்திட்டேனே?”, என்று எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அப்போது பதுங்கி பதுங்கி அவளது அறைக்கு வந்தார்கள் செழியன், நந்தினி, விக்கி மூவரும். மூவரையும் குழப்பமாக பார்த்தவள் அறைக்கு வெளியே வர “சாரி அண்ணி. உங்களை நாங்க புரிஞ்சிக்கலை. இனி இப்படி நடக்காது”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான் இளஞ்செழியன்.
மற்ற இருவரும் எப்படி அவளிடம் பேச என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றார்கள். யார் எப்படி இருந்திருந்தாலும் அவர்கள் இருவரும் மதி பக்கம் நின்றிருக்க வேண்டுமே. அவளை அவர்கள் அண்ணி என்று அழைத்தாலும் மூவருக்கும் இடையே இருப்பது அழகிய நட்பேயன்றி வேறில்லையே? அதை தானே ஆதி சொல்லி விட்டுச் சென்றான். ஆனால் இவர்கள் மதியை ஒதுக்கி வைத்தார்களே?
“என்ன? எல்லாம் ஒண்ணா என்னைப் பாக்க வந்துருக்கீங்க? நான் பேச வந்தாலே எனக்கு படிக்க இருக்குன்னு சொல்லுவீங்க? எழுத இருக்குன்னு சொல்லுவீங்க? இப்ப இவ்வளவு நேரத்தை வேஸ்ட் பண்ணுறீங்க? போங்க போங்க உங்க வேலையைப் பாருங்க”, என்றாள் மதி. அவள் குரலில் கோபம் இல்லை. ஆனால் ஒரு ஆதங்கம் இருந்தது.
“சாரி அண்ணி”, என்று இருவரும் ஒன்று போலச் சொல்ல வீட்டுப்பாடம் முடிக்காத சிறுவர்கள் ஆசிரியையிடம் மன்னிப்பு கேட்பது போல தான் அவள் கண்களுக்கு தெரிந்தார்கள். அவர்கள் முகத்தைப் பார்த்து மதிக்கு சிரிப்பு தான் வந்தது.
“உங்களை மன்னிக்கணுமா? அது எப்படி முடியும்? வாய்ப்பே இல்லை. மன்னிக்கவே மாட்டேன். வேணும்னா ஒண்ணு செய்ங்க. ஆயிரத்தி ஐநூறு ரூபாய்க்கு ஒரு டேரி மில்க் இருக்காம். அதை வாங்கிட்டு வந்தா உங்க சாரி அக்சப்டட்”, என்று சொல்ல இருவர் முகமும் மலர்ந்தது.
“கண்டிப்பா வாங்கித்தறோம். ஆனா எங்களுக்கும் அதுல பங்கு வேணும்”, என்றான் விக்கி.
“ஆமா, எனக்கும் வேணும்”, என்றாள் நந்தினி.
“அடபாவீங்களா? செல்லாது செல்லாது. அது எனக்கு மட்டும் தான்”, என்று சொல்ல “உங்க புருசனுக்காவது தருவீங்களா இல்லையா?”, என்று கேட்டாள் நந்தினி.
“கண்டிப்பா மாட்டேன். அவர் மேல சரி கோபத்துல இருக்கேன்”
“என்னது கோபமா? எங்க அண்ணன் உங்க மேல உயிரையே வச்சிருக்கார். நீங்க என்னடான்னா இப்படிச் சொல்றீங்க? இவ்வளவு நேரம் அவர் உங்களுக்காக பேசி எங்களை திட்டினதுல எங்க காதுல இருந்து ரத்தமே வந்துருச்சு. நீங்க என்னடான்னா இப்படிச் சொல்றீங்க?”, என்று விக்கி கேட்க “என்னது அவர் உங்களை திட்டினாரா? எதுக்கு? என்ன நடந்துச்சு?”, என்று குழப்பமாக கேட்டாள்.
“அதை இந்த குண்டம்மா சொல்லுவா அண்ணி. நான் கிளம்புறேன் அண்ணி. பாய் அக்கா, நைட் கேரம் விளையாடுவோம். நான் அந்த நேரத்தை ரொம்ப மிஸ் பண்ணுனேன்”, என்று சொல்லிச் சென்றான் விக்கி.
“உள்ள வா நந்து”, என்று உள்ளே அழைத்துச் சென்ற மதி அவளிடம் என்ன நடந்தது என்று கேட்க அனைத்தையும் அவள் சொல்ல ஆதியின் பேச்சைக் கேட்டு உடல் சிலிர்த்தது மதிக்கு. ஏனோ அந்த நொடியில் ஆதியை அவளுக்கு அவ்வளவு பிடித்தது. தான் அவனுக்கு பொருத்தம் இல்லையோ என்று கூட தோன்றியது அவளுக்கு.
“ஏன் நந்து, உங்க அண்ணன் வேற யாரையாவது லவ் பண்ணிருந்தா, இல்லை கல்யாணம் பண்ணிருந்தா நீங்க எல்லாரும் சந்தோஷமா இருந்துருப்பீங்கல்ல?”, என்று கலக்கமாக கேட்டாள்.
“பாட்டி பேசினதுனால அப்படி கேக்குறீங்களா அண்ணி? அண்ணனுக்கு நீங்க தான் அண்ணி பொருத்தம். வேற யாரா இருந்தாலும் அண்ணாக்கு பொருத்தமாவே இருந்திருக்காது. அண்ணா அப்பா சொல்ற பொண்ணைத் தான் கட்டுவாங்க. அப்படி எல்லாம் யாரையும் லவ் பண்ணிருக்க மாட்டாங்க”
“ஒரு வேளை லவ் பண்ணி உங்க அப்பா திட்டுவார்ன்னு மறைச்சிருந்தா?”
“எங்க அப்பா ஒண்ணும் காதலுக்கு எதிரி கிடையாது. ஆனா நாங்க லவ் பண்ண மாட்டோம். எங்க அப்பா சொல்றவங்களைத் தான் கல்யாணம் செஞ்சிப்போம். கண்டிப்பா அண்ணன் லவ் பண்ணிருக்க மாட்டாங்க. அப்படிப் பண்ணிருந்தாலும் உங்களைத் தான் பண்ணிருப்பாங்க. சரி அண்ணி எனக்கு ஒரு செமினார் இருக்கு. நாம நைட் பேசலாம்”, என்று சொல்லிச் சென்றாள்.
வான்மதிக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. தனக்காக அவன் பேசியது அவ்வளவு நிறைவாக இருந்தது. அவள் மனதில் ஒரு படி முன்னேறி தடம் பதித்தான் ஆதி. அவனிடம் நிறைய விஷயங்கள் பேச வேண்டும் போல இருந்தது.
அன்று இரவு ஒன்பது மணிக்கு எப்போதும் போல அறைக்குள் வந்தான் ஆதி. அவனைக் கண்டதும் எப்போதும் அசால்ட்டாக இருப்பவள் இப்போது எழுந்து நின்று அவனைப் பார்த்தாள்.