“இவ்வளவு தைரியசாலியா இருக்குற நீ என் கைக்குள்ள மட்டும் எப்படி டி அப்படி உருகி கறைஞ்சு காணாம போயிற?”, என்று யோசனை வந்தது. அந்த யோசனையிலே அவள் தன்னுடைய கைக்குள் இருந்த நிமிடங்கள் நினைவில் வர அவன் உடல் சூடேறியது. அதே நினைவுடன் அவள் அறைக்குள் வர அவள் அவனை குற்ற உணர்வுடன் நிமிர்ந்து பார்த்தாள். அவள் ஆசைக்கு ஒரு வழி செய்யாமல் அவளிடம் பேசக் கூடாது என்று எண்ணி அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு விலகிச் சென்று விட்டான்.

     அடுத்து வந்த நாட்களும் அப்படியே கடந்தது. அதற்காக அவளிடம் பேசவே இல்லை என்று சொல்ல முடியாது. நெருக்கமாக பேச வில்லை என்று சொல்லலாம். அதற்கே தவித்து போனாள். டீச்சர் வேலையை உயிராக நினைக்கும் பெண்ணையே அது தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு அவள் மனதில் கதாநாயகனாக உயர்ந்து விட்டான் ஆதித்யகரிகாலன்.

     சில நாட்கள் அவன் பேசுவான், தன்னை தழுவிக் கொள்வான், தனக்காக உருகுவான் என்று காத்திருந்த மதி அவன் அப்படியே இருக்கவும் கோபத்தில் அவளும் அமைதியாக இருந்து கொண்டாள். அவளும் என்ன தான் செய்வாள்?

     அவனும் அவளை கண்டு கொள்ள வில்லை. அதே நேரம் வீட்டில் உள்ளவர்களும் அவளிடம் சரியாக பேச வில்லை. அதை விட கொடுமை, பார்வதி அவளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் காச்சு காச்சு என்று காச்சுவது தான் கடுப்பாக இருந்தது.

     முன்பெல்லாம் பார்வதி ஏதாவது சொல்லி வம்பிழுக்கும் போது பட் பட்டென்று பதில் கொடுப்பவளுக்கு இப்போது அந்த வீட்டில் அனாதையான உணர்வு வந்ததால் வாயை மூடிக் கொண்டு இருப்பதை தவிர வேறு வழி இருக்க வில்லை.

     எப்போதும் பார்வதி மதியை ஏதாவது சொன்னால் “சும்மா இருங்க அத்தை”, என்று தமயந்தி மதிக்காக பரிந்து பேசுவாள். இப்போது அவளும் சரியாக பேசுவதில்லை என்பதால் பார்வதியின் கொட்டம் அதிகமானது. அது ராயர் காதுக்கும் செல்ல வில்லை. ஆதியின் காதுக்கும் செல்ல வில்லை. மற்ற நேரமாக இருந்தால் மதி சொல்லாமல் இருந்தாலும் தமயந்தி ராயரிடம் சொல்லி இருப்பாள். இப்போது அவள் அமைதியாக இருப்பதே நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ளட்டும் என்பதாக தான் இருந்தது.

     பாட்டி பேசுவதே கஷ்டமாக இருந்தது என்றால் அது சரி என்று எண்ணி அமைதியாக இருக்கும் தமயந்தியின் செய்கையும் மதிக்கு கஷ்டமாக இருந்தது. மனதே வெறுத்து போனது என்று கூட சொல்லலாம். அவள் என்ன செய்தாலும் பார்வதி குற்றம் சொல்ல ஆரம்பித்தாள். தினமும் தந்தையிடம் போனில் பேசுவது மட்டுமே அவளுக்கான ஆறுதல். ஆனால் இங்கே நடப்பதைச் சொல்லி பரமசிவத்தை அவள் கஷ்டப் படுத்த வில்லை.

     எல்லாவற்றையும் ஆதியிடம் சொல்லி அவன் நெஞ்சில் சாய்ந்து அழ வேண்டும் போல இருந்தது. ஆனால் அவனிடம் கூட அவளால் கவலையை பரிமாற முடிய வில்லை என்பது தான் மிகுந்த வருத்தமே.

     இப்படியே நாட்கள் செல்ல அப்போது ஒரு நாள் வான்மதியின் போன் அடித்தது. எடுத்து காதில் வைத்தாள். “மதி கொஞ்சம் கீழே வா மா”, என்று ராயரின் குரல் கேட்க துணியை மடித்துக் கொண்டிருந்தவளுக்கு சலிப்பு வந்தது.

     “இன்னைக்கு என்ன பிரச்சனையோ? என்ன நடந்தாலும் வாயவே திறக்க கூடாது. என்ன பேசினாலும் ஒரு பயனும் இல்லை. நியாயத்தைப் பேசினாலும் எல்லாரும் என்னை வில்லியைப் பாக்குற மாதிரி தான் பாக்கப் போறாங்க. இங்க இருந்து கோச்சிக்கிட்டு போனா அப்பா வருத்தப் படுவாங்க. அதனால வாயை மூடிக்கிட்டு இருக்க வேண்டியது தான்” , என்று எண்ணிக் கொண்டே கீழே வந்தாள்.

     அவள் கீழே வரும் போது வீட்டில் இருந்த அனைவரும் அங்கே தான் இருந்தார்கள். ஆதியும் போனைப் பார்த்த படி அங்கே தான் அமர்ந்திருந்தான்.

     “என்ன இவ்வளவு நேரத்துக்கு சங்கம் கூடிருக்கு. ஒரு வேளை எல்லாரும் சேந்து என்னை விரட்டப் போறாங்களோ? ஆனா ஆதியை விட்டு எப்படி போறது? ஏற்கனவே அவன் தொடாம தூக்கம் வர மாட்டிக்கு?”, என்று எண்ணிக் கொண்டே ராயர் முன்னே சென்று நின்றவள் “கூப்பிடீங்களே மாமா?”, என்று கேட்டாள்.

      “ஆமா மா ஒரு விஷயம் பேச தான் உன்னைக் கூப்பிட்டேன்”, என்று ராயர் சொல்ல “இப்ப எதுக்கு டா அவளைக் கூப்பிட்ட? காபி டீ வேணும்னா என் மருமக கிட்ட கேக்க வேண்டியது தானே?”, என்று கேட்டாள் பார்வதி.

     “ஏமா, நீ உன் மருமக கையால காபி குடிக்கலாம். நான் என் மருமக கையால காபி குடிக்க கூடாதா?”, என்று கேட்டார் ராயர்.

     “ஒரு காபிக்கு தான் இந்த அக்கப்போரா?”, என்று எண்ணிக் கொண்டு காபி போடச் சென்றாள் மதி.

     “எங்க மா போற?”, என்று கேட்டார் ராயர்.

     “காபி போட”

     “அதெல்லாம் வேண்டாம் மா. நான் சும்மா தான் சொன்னேன். இங்க வந்து உக்காரு”, என்று சொல்லி எதிர் இருக்கையைக் காட்டினார்.

     அந்த ஒற்றை சோபாவில் தயக்கத்துடன் வந்து அமர்ந்தாள் மதி. அவளுக்கு அங்கே இருக்கவே எரிச்சலாக தான் இருந்தது. ஆனால் ஏற்கனவே எதிர்த்து பேசியாயிற்று. இன்னும் வேறு ஏதாவது பிரச்சனையை கிளப்ப வேண்டுமா என்று தான் அமைதியாக இருந்தாள் .

     அப்போது “இந்தா மா”, என்று சொல்லி ஒரு பைலை அவள் முன்பு நீட்டினார் ராயர்.

     “என்ன இது?”, என்று கண்களால் வினவினாள்.

     “வாங்கிப் படிச்சு பாரு மா”, என்று சொல்ல குழப்பத்துடன் அதை கைகளில் வாங்கினாள். அனைவரும் அவர்கள் இருவரையே தான் பார்த்துக் கொண்டிருந்தனர். யாருக்கும் என்ன விஷயம் என்று தெரிய வில்லை ஆதியைத் தவிர. ஆனால் அவன் கவனம் முழுக்க போனில் தான்.

     குழப்பத்துடன் அதை விரித்துப் படித்துப் பார்த்தாள் மதி. அது ஏ. என். எஸ் கல்விக் குழுமத்தை விலைக்கு வாங்கி இருப்பதற்கான பத்திரம் தான். “இந்த இன்ஸ்டிடியூசனை எதுக்கு வாங்கிருக்காங்க? அதை எதுக்கு என் கிட்ட காட்டுறார்?”, என்று குழப்பத்துடன் நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.

     “என்ன மா புரியலையா? படிச்சு பாத்த தானே? படிச்ச பொண்ணுக்கு இது கூட புரியலையா?”, என்று அவர் கேட்டதும் அவர் நக்கலாக கேட்கிறார் என்று எண்ணி எரிச்சல் வந்தது.

     “ஏ. என். எஸ் குருப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸை நீங்க வாங்கிருக்குறதா இந்த டாகுமெண்ட்ல இருக்கு”, என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தார்கள்.

     “ராயர், என்ன பா இதெல்லாம்? அந்த குருப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸை நாம வாங்கிருக்கோமா? எதுக்கு பா?”, என்று கேட்டார் சேதுராமன்.

     “ஆமா பா. நாம தான் வாங்கிருக்கோம். இனி சேது குருப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ்ன்னு பேர் மாறப் போகுது. எல்லா பேமண்ட்ஸும் முடிஞ்சிருச்சு”

     “இப்ப எதுக்கு இதெல்லாம்? நமக்கு இதெல்லாம் தேவையா? இதுல என்ன லாபம் வரும் ராயர்?”

     “லாபத்துக்காக நான் இதைச் செய்யலைப்பா. என்னோட மருமகளுக்காக செஞ்சேன்”, என்று சொல்லி அவர் மதியைப் பார்க்க அனைவரும் குழம்பினார்கள்.

     “இது என்ன புதுக்கதை? எனக்காகவா?”, என்ற குழப்பத்துடன் அவரைப் பார்த்தாள்.

     “புரியுர மாதிரி சொல்லு பா”, என்றார் சேதுராமன்.

     “மதி அன்னைக்கு வேலைக்கு போகணும்னு என் கிட்ட கேட்டா தானே?”

     “ஆமா ஆமா, அதை மறக்க முடியுமா? அன்னைல இருந்து இவளுக்கு குட்டு கொடுத்துட்டு தானே இருக்கேன்? ஆனாலும் திருந்த தான் மாட்டிக்கா”, என்றாள் பார்வதி

     “அம்மா, அப்படின்னா இத்தனை நாள் அவளை நீங்க கஷ்டப் படுத்திட்டு தான் இருக்கீங்களா?”, என்று கோபமாக கேட்ட ராயர் மனைவி புறம் திரும்பி “என்ன தமா இதெல்லாம்? இதெல்லாம் உனக்கு தெரியாம நடக்காது. அம்மா மதியைப் பேசும் போது நீ என்ன பண்ணிட்டு இருந்த? என் காதுக்கும் கொண்டு வரலை? ஏன் இப்படி பண்ணின?”, என்று கோபமாக கேட்க மதியே அவரை ஆச்சர்யமாக பார்த்தாள்.

     “இல்லை, அன்னைக்கு இவ உங்களைப் பேசினது எனக்கே கோபம்,. அதான்”, என்று தயக்கத்துடன் தமயந்தி சொல்ல “தப்பு தமயந்தி. யார் எப்படி இருந்தாலும் நீ இப்படி சுயநலமா இருக்க கூடாது. நான் அன்னைக்கே மதி பேசினது தப்பு இல்லைன்னு சொன்னேனே? அப்படியும் அவளை எல்லாரும் சேந்து கஷ்டப் படுத்திருக்கீங்க, அப்படி தானே?”

     “இல்லைங்க, அது வந்து….”

     “என்ன வந்து போயின்னு…. என் தங்கச்சி உன்னை ஒரு சொல் சொன்னதுக்கு உனக்காக முன்ன வந்து நின்னான் ஆதி. அவன் கூட ரத்தமும் சதையுமா வாழுற பொண்ணுக்கு நீ கொடுக்குற மரியாதை இது தானா? அம்மா அவளை திட்டுறதை நீ வேடிக்கை பாத்திருக்க. அப்படி தானே?”, என்று கேட்க தமயந்திக்கே குற்ற உணர்வாக இருந்தது.