அடுத்து வந்த நாட்கள் வேகமாக கடந்தது. மண்டபம் பார்ப்பது, கேட்டரிங்க்கு சொல்வது, பெண் மாப்பிள்ளைக்கு நகை எடுப்பது, மணமக்களுக்கு உடைகள் தைப்பது, பியூட்டி பார்லருக்கு செல்வது என்று நேரம் நல்லபடியாகவே கடந்தது.
தந்தைக்காக சந்தோஷமாக இருப்பது போல காட்டிக் கொண்டாள் வான்மதி. ஆனால் ஆதியோ நிஜமாகவே சந்தோஷமாக தான் இருந்தான். ஒரு வழியாக அனைவரும் எதிர்பார்த்த அவர்களின் திருமண நாளும் வந்தது.
ஆதித்ய கரிகாலன் வெட்ஸ் வான்மதி தேவி என்ற பெயர் பலகை அழகாக தங்க நிறத்தில் மின்னியது. அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர் வீட்டு திருமணம் என்பதால் அந்த மண்டபம் பிரம்மாண்டமாக அலங்கரிக்க பட்டிருந்தது. வாயிலில் திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்க இரண்டு நிஜ யானைகள் நிற்க வைக்கப் பட்டிருந்தன. யானை மீது தான் மாப்பிள்ளை அழைப்பும் பெண் அழைப்பும் நிகழ்ந்தது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.
மண்டபம் கலர் பேப்பர்களால் அலங்கரிக்கப் படாமல் வண்ண வண்ண ஒரிஜினல் மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. அனைவரும் மண்டப அலங்காரத்தை வியந்து தான் பார்த்தார்கள். அந்த அளவுக்கு ராயர் பணத்தை தண்ணீராக செலவழித்திருந்தார்.
கோவை மாவட்டத்தையே திரும்பி பார்க்க வைக்கும் எண்ணத்துடன் தான் எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார் காலிங்கராயர். அவரின் மூத்த மகன், அவரது அடுத்த வாரிசின் திருமணம் என்றால் சும்மாவா? அவர் அனைத்தையும் ஆட்களை வைத்து செய்திருந்தாலும் எல்லாவற்றையும் பொறுப்பாக பார்த்துக் கொண்டது இளஞ்செழியனும் நிரஞ்சனும் தான். ராயர் மகனிடமும் மருமகனிடமும் தான் பொறுப்பைக் கொடுத்திருந்தார்.
அவர்கள் இருவரும் ஆதித்யாவுக்கு எந்த வேலையும் வைக்க வில்லை. முழுக்க முழுக்க ரெஸ்ட் தான் அவனுக்கு. ஆனால் எல்லாமே அவனிடம் கேட்டு அவன் சரி என்று சொன்ன பிறகு தான் நிறைவேற்றப் பட்டது.
ஏற்கனவே ராஜ பரம்பரை என்பதால் அங்கே பிரம்மாண்டத்துக்கு துளி கூட பஞ்சமே இல்லை. வாசலிலே அனைவருக்கும் கேட்கும் வண்ணம் பிரஷ் ஜூஸ் கொடுக்கப் பட்டது. ஐஸ் கிரீம் கூட அவர்கள் விரும்பும் பிளேவர் தான். அந்த இடத்தில் குழந்தைகளின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது.
ஆதித்ய கரிகாலன் என்ற பெயரில் இருக்கும் கம்பீரத்தை முழுவதுமாக தாங்கிய படி மணமேடையில் அமர்ந்திருந்தான் ஆதி. பட்டுச் சட்டை பட்டு வேஷ்டி, முறுக்கிய மீசை, கழுத்தில் சற்று பெரிய செயின், கையில் பிரேஸ்லெட், மற்றொரு கையில் விலை உயர்ந்த கடிகாரம் என கம்பீரமாக அழகாக அமர்ந்திருந்தான்.
பெற்றவர்கள் கூட அவன் அழகில் நெகிழ்ந்து போய் தான் இருந்தார்கள். ராஜாதி ராஜனாக அவன் அமர்ந்திருக்க மணமகள் அறையில் குழப்பமாக அமர்ந்திருந்தாள் வான்மதி. அவளுக்கு அலங்காரம் முடிந்திருந்தது. ஆனாலும் அவளால் இந்த திருமணத்தை முழு மனதாக அங்கீகரிக்க முடிய வில்லை. ஆனால் அவளுக்கு நேர் மாறாக சந்தோசத்தின் உச்சியில் இருந்தார் பரமசிவம். இப்படி பட்ட உயர்ந்த இடத்தில் மகளை ஒப்படைக்க போகிறோம் என்ற திருப்தி அவரின் ஒவ்வொரு மூச்சுக் காற்றில் கூட தெரிந்தது.
“பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ”, என்று ஐயர் குரல் கேட்க மஞ்சரி, நந்தினி, அஞ்சனா மூவரும் சேர்ந்து தான் அவளை அழைத்துச் சென்றனர்.
இரண்டு லட்சத்துக்கும் அதிகமான அந்த சிவப்பு நிற பட்டில் மின்னிய தங்க சரிகைகள் அவள் முகத்தையும் டால் அடிக்க வைத்தது. வீடியோ கிராபர் மணமகளை அழைத்து வரும் போது போக்கஸ் லைட் போட அவளையே அனைவரின் கண்களும் மொய்த்தது. ஆதியும் அவளைத் திரும்பிப் பார்த்தான். பார்த்தவனுக்கு கண்களைத் திருப்ப கூட முடிய வில்லை.
ராயர் எப்படி ஒரு சாதாரண ஹெச்.எம் பொண்ணை எடுத்தார் என்று பேசிய ஆட்கள் கூட மணப்பெண்ணின் அழகைக் கண்டு வாயை மூடிக் கொண்டார்கள். ராஜாவுக்குரிய கம்பீரத்துடன் ஆதி இருந்தான் என்றால் அவனுக்கு ஏற்ற ராணி இவள் தான் என்பது போல வந்து மணமேடையில் நின்ற மதி அவையோருக்கு வணக்கம் சொல்லி அவன் அருகே சற்று இடைவெளி விட்டு அமர்ந்தாள்.
மகளை அந்த கோலத்தில் அதுவும் மாப்பிள்ளையின் அருகில் கண்டதும் பரமசிவம் கண்களில் மெல்லிய நீர்ப்படலம். அந்த அளவுக்கு ஆனந்தம் அவருக்கு. அனைவரும் மணமக்களை ரசித்துக் கொண்டிருக்க அவளை திரும்பிப் பார்த்த ஆதி சிறிது நேரம் மூச்சடைத்துப் போனான் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் அவள் இயந்திர தனமாக இருந்தது அவனை அதிகம் பாதித்தது. அவளை சிரிக்க வைத்தே ஆக வேண்டும் என்ற வெறியே அவனுக்கு வந்தது. “ஒண்ணும் இல்லாத விசயத்துக்கு இந்த அளவுக்கு பண்ணுறாளே? இவளை என்ன செய்ய?”, என்று எண்ணிய ஆதி யாரும் அறியாமல் மாலையை சரி செய்வது போல அவள் காதருகே குனிந்து “உங்க அப்பா, நெஞ்சு முழுக்க ஆசையோட, கண்ணுல அவ்வளவு கனவோட இந்த கல்யாணத்தை செஞ்சு வைக்கிறார்? ஆனா நீ கடனேன்னு பொம்மை மாதிரி நிக்குற? எந்த உயிர்ப்பும் உன் முகத்துல இல்லை. நீ ரொம்ப நேரம் இப்படியே இருந்தா அவர் அதை ஈஸியா கண்டு பிடிச்சிருவார். அவரை வேதனைப் படுத்தாதே. சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். அப்புறம் உன் விருப்பம்”, என்று சொல்ல தந்தையை நிமிர்ந்து பார்த்தவள் உடனே அவனையும் பார்த்தாள். அவனும் அவளைப் பார்க்க அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
தந்தைக்காக முகத்தில் சந்தோசத்தையும் பூரிப்பையும் கொண்டு வந்தாள். அதைக் கண்டவன் “உலக நடிப்பு டா சாமி”, என்று அவளை கிண்டல் அடித்தான்.
“உங்களை விட கம்மி தான்”, என்று அவனுக்கு பதிலடி கொடுக்கவும் அவள் மறக்க வில்லை.
அதற்கு பிறகு மணமக்கள் மேடையில் சந்தோசமாகவே நின்றிருந்தனர். அவன் எதிர் பார்த்த உயிர்ப்பு அவள் முகத்தில் வர அவனுக்கும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. ஐயர் மந்திரங்களை சொல்ல ஆரம்பித்து சடங்குகளையும் செய்ய ஆர்ம்பித்தார்.
அவனது பெற்றவர்களும் பரமசிவமும் மேடைக்கு வந்து சில சடங்குகள் செய்ய காலிங்கராயரை வெகு அருகில் கண்ட மதிக்கு கொஞ்சம் பயமாக தான் இருந்தது. இத்தனை நாளில் அவள் அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசி விட வில்லை. ஏனோ அவரைக் கண்டாலே படத்தில் வரும் வில்லன் கேரெக்டர் போல தெரிய அமைதியாகவே இருந்து கொண்டாள். அவர் அருகில் வந்தால் பயத்தில் அவள் லேசாக ஆதியின் பக்கம் ஒட்ட அவள் மனதை உணர்ந்தவனுக்கு உல்லாசமாகவே இருந்தது.
ராயரைக் கண்டு அப்படி பயந்தவள் தான் பின்னாளில் அவரை கேள்வி மேல் கேள்வி கேட்பாள் என்றும் அதற்கு அவர் அவளை ஒரு மூச்சு ஆழ வைப்பார் என்றும் யார் தான் அறிவார்? அவரை தெய்வமாக பார்க்கும் அந்த வீட்டில் உள்ள அனைவரும் அவள் ராயரை கேள்வி கேட்டால் அவளை எப்படி பார்ப்பார்களோ?
எல்லா சடங்குகளும் முடிந்தாலும் தாலி மட்டும் கட்டப் படாமல் இருந்தது. அப்போது முதலைமைச்சர் சரியாக அந்த நேரம் உள்ளே நுழைந்தார். மண்டபமே பரபரப்பாக தான் காட்சி அளித்தது. ராயர் அவரை மேடைக்கு வரவேற்றார். ஐயர் தாலியை எடுத்து முதலைமைச்சர் கையில் கொடுக்க மதி கல்யாணப் பெண் என்பதையும் மீறி அவரை வியந்து பார்த்தாள்.
அவள் சாதாரண பெண். சாதாரண ஒரு பள்ளி ஆசிரியை. இந்த அளவுக்கு எல்லாம் அவள் திருமணத்தை எதிர் பார்க்கவே இல்லை. முதலமைச்சர் தாலி எடுத்து ஆதி கையில் கொடுக்க அத்தனை பேரின் ஆசீர்வாதத்தோடு அந்த தாலியை வாங்கிய ஆதித்யா அவள் கழுத்தைச் சுற்றி கொண்டு சென்றான்.
அவள் தலை குனிந்து அவன் தாலியை ஏற்க தயாராக ஒரு நொடி கடவுளை வேண்டிய படி அவள் கழுத்தில் கட்டி முழு மனதாக அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டான்.
அவர்கள் தலையில் பூக்களும் மஞ்சள் கலந்த அரிசியும் அட்சதையாக தூவப் பட்டது. மணமேடையில் சடங்குகள் முடியும் முன்னேயே மணமக்களுக்கு தன்னுடைய பரிசைக் கொடுத்த முதலைமைச்சர் கிளம்பிச் செல்ல அவர்களை வழி அனுப்பச் சென்றார்கள் பெரியவர்கள்.
பின் அவர்கள் திரும்பி வந்ததும் மணமக்கள் ராயர் மற்றும் தமயந்தியிடம், தாத்தா பாட்டியிடம், மணிமேகலை சுந்தரேஸ்வரரிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். அவனது சொந்தம் முடிந்ததும் பரமசிவம் காலிலும் விழ அவர் பாதியிலே அவர்கள் இருவரையும் தூக்கி நிறுத்தி கண்களை துடைத்த படி வாழ்த்தினார்.
அவருடைய ஆனந்த கண்ணீரை பார்த்த மதிக்கும் கண்கள் கலங்கியது. அதை உணர்ந்தவன் அவள் கையை இறுக்கிப் பற்றிக் கொண்டான் ஆறுதலாக. அப்போது அவளுக்கும் அந்த ஆறுதல் தேவைப் பட்டது. “ரெண்டு பேரும் சந்தோஸமா இருங்க”, என்று சொன்னவர் மாப்பிள்ளைக்கு என செயின், மோதிரம், காப்பு என போட அதை வீடியோ உள்வாங்கிக் கொண்டது.
திருமணம் இனிதே நிறைவடைய ஒரு பக்கம் பந்தி ஆரம்பிக்க பட மறுபக்கம் மணமக்களை அதே ஊரில் இருந்த ஆதியின் குலதெய்வ கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே சாமி கும்பிட்டு விட்டு திரும்பி ஆதியின் வீட்டுக்கு வந்தார்கள்.