அவள் கோபத்தை ரசித்தவன் “எங்க அப்பாவுக்காக ஒரு உயிரையே கொல்லுவேன். ஒரு மனசைக் கொல்லமாட்டேனா டீச்சர்?”, என்றான்.

            “அப்ப உங்க காதல்?”

     “அதான் நான் காதலிக்கலைன்னு சொல்றேன்ல? இது பொய்யான மெஸ்ஸேஜ்”

     “நான் நம்ப மாட்டேன். எப்படி உங்களால உயிரா நேசிச்ச பொண்ணுக்கு துரோகம் பண்ண முடியுது?”, என்று கேட்க லேசாக எரிச்சல் வந்தது அவனுக்கு. ஒரு தப்பான மெஸ்ஸேஜ் வந்தா இவ இப்படியே நம்பிருவாளா என்று கடுப்பாக எண்ணினான்.

     அவன் அவளை முறைத்துப் பார்க்க “சரி நீங்க இவ்வளவு தூரம் சொல்றதுனால நான் நம்புறேன். ஆனா நீங்க ஒண்ணு செய்யணும்?”, என்றாள்.

     “என்ன?”

     “நீங்க எந்த பொண்ணையும் விரும்பலைன்னு உங்க அப்பா மேல சத்தியம் பண்ணனும்”, என்று கேட்க “மதி”, என்று கத்தினான். அவன் அவளை மனதில் காதலியாக மனைவியாக பதித்து வைத்திருக்க எப்படி சத்தியம் பண்ணுவானாம்?

     “எப்பா என்ன கோபம் வருது? அப்படின்னா உங்க மனசுல காதல் இருக்கு. உங்க அப்பா மேல உங்களால பொய் சத்தியம் பண்ண முடியலை பாத்தீங்களா?”

     “லூசு மாதிரி பேசிட்டு இருக்காத. எனக்கும் பொறுமை கொஞ்சம் தான். நம்ம கல்யாணம் நடக்கணும். நடக்கும். நான் நடத்திக் காட்டுவேன்”, என்று அவன் திமிராக சொல்ல அவன் திமிரில் அவளுக்கு கோபம் வந்தது.

     இது கோபத்தைக் காட்டும் நேரம் அல்ல. திருமணத்தை நிறுத்த வேண்டிய நேரம் என்று எண்ணியவள் “பிளீஸ் என்னை புரிஞ்சிக்கோங்க. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்”, என்று கெஞ்சினாள்.

     அவள் கெஞ்சலை நாடகம் என்று புரிந்தவன் “ம்ம் அப்புறம்?”, என்று கேட்டான்.

     “என்ன அப்புறம்? நான் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன்? இந்த கல்யாணம் நடக்க கூடாது. வேற யாரையோ லவ் பண்ணுற ஆளை கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையை கெடுக்க நான் தயாரா இல்லை”.

            “அதே மாதிரி நானும் கதை சொல்லலை. என் மனசுல எந்த காதலும் இல்லை. அப்படி என் வாழ்க்கைல காதல் இருக்குன்னு நீ நம்பினா…”

            “நம்பினா…”

            “நீயே இந்தக் கல்யாணத்தை நிறுத்திரு. இந்தா இது என்னோட அப்பா நம்பர், உங்க அப்பா நம்பர் உன் கிட்டயே இருக்கும். ரெண்டு பேர் கிட்டயும் பேசி நீயே இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிரு”

            “நானா?”, என்று அவள் திகைப்பாக கேட்க “ஆமா நீ தான் நிறுத்தணும். நீ தானே கல்யாணத்தை நிப்பாட்டணும்னு சொன்ன? எங்க அப்பாவும் உங்க அப்பாவும் காரணம் கேட்டா என் காதல் கதையை வேணும்னா அவங்க கிட்ட சொல்லிரு”, என்றான்.

            “எங்க அப்பா கிட்ட என்னால மறுத்து பேச முடியாது. அவர் எனக்காகவே வாழ்ந்துட்டு இருக்கார். நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா வருத்தப் படுவார்”

            “ஓஹோ? அப்படின்னா எங்க அப்பா கிட்ட சொல்லிரு. அவர் தெரியாத நம்பர்ல இருந்து கால் வந்தா எடுக்க மாட்டார். அதனால நான் கால் பண்ணித் தரேன். நீயே பேசிரு”

            “ஐயையோ, வேண்டாம் வேண்டாம்”, என்று அலற “ஏன்?”, என்று கேட்டான்.

            “எனக்கு அவரை நியூஸ்ல பாத்தாலே பயமா இருக்கும். படத்துல வர அரசியல்வாதி ரவுடி மாதிரி இருக்கார்”, என்று சொல்ல அவளைக் கண்டு அவனுக்கு சிரிப்பாக வந்தது.

            “இங்க பாரு, நான் எல்லாம் சொல்லிட்டேன். முடிவு உன் கையில. உனக்கு என்ன வேணும்னாலும் செஞ்சிக்கோ. முடியலையா என் பொண்டாட்டியா மாறிரு”, என்று சொல்ல ஆவென்று வாயைப் பிளந்தாள். அந்த உதடுகளை கடிக்கும் ஆசை வர அதை அடக்கிக் கொண்டான்.

     தான் பேச வந்ததும் சரி என்று சொல்லி திருமணத்தை நிறுத்தி விடுவான் என்று அவள் எதிர் பார்க்க அவனது நிதானத்தையும்  கடுமையான பேச்சையும் அவள் எதிர் பார்க்க வில்லை.

            “இவன் நாம நினைச்ச அளவு இல்லை”, என்று எண்ணியவள் “அப்படின்னா என் வாழ்க்கைக்கு என்ன வழி?”, என்று கேட்டாள்.

            “என்ன டி இது? உனக்கு பிள்ளையைக் கொடுத்து ஏமாத்தின மாதிரி கேட்க? ஏன் உன் வாழ்க்கைக்கு என்ன?”

            “உங்க மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கா. அங்க நான் எப்படி குடியேற முடியும்? லவ் இல்லாம எல்லாம் என்னால வாழ முடியாது”

            “ஐயோ நான் என் மனசுல யாரும் இல்லைன்னு சொல்லிட்டேன். இப்ப இந்த நிமிஷம் என் மனசுல நீ தான் இருக்க போதுமா?”, என்று அவன் கேட்க “என்னது நானா? விட்டா நீங்க லவ் பண்ணுற பொண்ணே நான் தான்னு சொல்லுவீங்க போல?”, என்று எரிச்சலுடன் கேட்டாள்.

     என்ன சொன்னாலும் இவள் நம்பப் போவதில்லை என்று உணர்ந்தவன் “இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம். கல்யாணத்துக்கு ரெடியா இரு. இல்லைனா எங்க அப்பா கிட்ட பேசு. இப்ப நீ போகலாம்“, என்று இறுக்கத்துடன் சொல்ல அவனையே பாவமாக பார்த்தாள்.

     என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன் என்று இருப்பவளை என்ன செய்ய என்று எண்ணி வேதனை கொண்டவன் அவளிடம் இருந்து முகத்தை திருப்ப அதற்கு பின் வேறு எதுவும் பேசாமல் எழுந்து சென்று விட்டாள்.

     “இன்னொரு பொண்ணை மனசுல வச்சிக்கிட்டு என் கூட எப்படி வாழுவான்?”, என்ற கவலையில் அவள் பள்ளிக்குச் செல்ல        “யார் என்ன சொன்னாலும் நம்பிருவாளா? நான் இவளை தான் விரும்புறேன்னு சொன்னாலும் நம்புவாளா?”, என்று எரிச்சலுடன் எண்ணினான்.

            அன்று இரவு உணவை அப்பாவும் மகளும் உண்டு கொண்டிருந்தார்கள். அவள் அமைதியாக இருக்க “என்ன மதி மா அமைதியா இருக்க?”, என்று கேட்டார் பரமசிவம்.

            “அப்பா, எனக்கு இப்பவே கல்யாணம் வேண்டாம் பா. கொஞ்ச நாள் கழிச்சு பண்ணிக்கட்டா”, என்று கேட்க “எல்லாம் பேசி முடிச்ச பிறகு இப்படிச் சொன்னா என்ன மா அர்த்தம்?”, என்று கேட்டவரின் குரலில் சூடு ஏறியிருந்தது.

     “இன்னும் நிச்சயம் முடியலையே பா?”

     “அவங்க ரொம்ப பெரிய இடம் பாப்பா. அப்படி எல்லாம் மாத்தி மாத்தி பேசி அவங்களை அசிங்கப் படுத்த முடியாது. இந்த கல்யாணம் நடந்தே ஆகணும். விரும்பி கேட்டுருக்காங்க. அதுக்காக உன் வாழ்க்கை முக்கியம் இல்லைன்னு அர்த்தம் இல்லை. அங்க போனா உன்னை நல்லா வச்சிக்குவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு டா. அப்பா சொன்னா கேப்ப தானே?”

            “நம்மளுக்கு அவ்வளவு பெரிய குடும்பம் தேவையா பா? வேண்டாமே?”, என்று சொன்னவளுக்கு ஏனோ ஆதி வேறு ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் என்று சொல்ல மனதில்லை. அவளே அந்த உண்மையை விரும்ப வில்லையோ என்னவோ?

     “அப்படின்னா இந்த அப்பா பேச்சுக்கு மரியாதை இல்லை அப்படி தானே மதி? சரி மா உன் விருப்பம். நான் ராயர் ஐயா கிட்ட பேசுறேன். நேர்ல போய் அவர் காலுல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு வரேன். அப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கும்”, என்று அவர் சொல்ல அதிர்ந்து போனாள்.

     “அப்பா கால்ல விழுந்து மன்னிப்பு கேக்குற அளவுக்கு ஒண்ணும் நடக்கலையே?”

     “ஒண்ணும் நடக்கலையா? உன்னை அவங்க வீட்டுப் பொண்ணா நினைச்சு அவ்வளவு சந்தோஷமா பேசிட்டு போனவங்களோட நம்பிக்கையை கொன்னா மன்னிப்பு கேக்கணும் தானே மதி? நான் போய் சொல்லிட்டு வரேன்”, என்று சொன்னவர் தளர்ந்து போய் அமர “அப்பா என்ன ஆச்சு?”, என்று பதறினாள்.

     “ஒண்ணும் இல்லை மா. கொஞ்சம் படபடப்பா வருது. ரொம்ப எதிர்பார்ப்பு வச்சிருந்தேனா? அது நடக்கலைன்னதும் ஒரு மாதிரி இருக்கு. நீ உன் வேலையைப் பாரு”

     “அப்பா பிளீஸ், நான் எதுவும் சொல்லலை போதுமா? இந்த கல்யாணம் நடக்கட்டும். எனக்கு முழு சம்மதம். நான் இனி வேண்டாம்னு சொல்ல மாட்டேன். நீங்க மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பாருங்க. சாரி நான் சொன்னதுக்கு”

     “நிஜமாவா மா?”

     “ஆமா பா, எனக்கு சம்மதம் தான்”, என்று சொல்வதை தவிர அவளுக்கு வேறு வழி இருக்க வில்லை.

     அப்படியே நாட்கள் கடந்தது. ஆதி ஒரு எதிர்பார்ப்புடன் நாட்களைக் கடத்த மதியோ இதை நிறுத்தவே முடியாதா என்று எண்ணிக் கொண்டே நாட்களைக் கடத்தினாள். அது வரை இருவரும் ஒருவரிடம் மற்றவர் பேச வில்லை. நேரில் பார்க்கவும் இல்லை.

     அவனுக்கும் மதி வேறு யாரையோ விரும்புகிறாள் என்று மெஸ்ஸேஜ் வந்தது தான். ஆனால் அதை பெரிது படுத்த வில்லை. ஆனால் அது யாருடைய நம்பர் என்று விசாரிக்க மட்டும் சொல்லி இருந்தான். ஒரு வழியாக நிச்சயதார்த்த தினமும் வந்தது. நிச்சயதார்த்த விழாவை மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார் பரமசிவம். இத்தனை நாள் அவர் உழைத்த உழைப்பெல்லாம் இந்த நாளுக்காக தானே?

     எம். எல். ஏ வீட்டார்கள் வருவதால் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ஏற்பாடு செய்திருந்தார். பெண் பார்க்கவே மூன்று கார்களில் வந்தவர்கள் நிச்சயம் செய்ய இரண்டு பேருந்தில் வந்தார்கள். “நல்ல வேளை விழாவை மண்டபத்தில் வைத்தேன்”, என்று எண்ணிக் கொண்டார் பரமசிவம்.

            பெண் பார்க்க வரும் போது அப்பாவும் மகளும் இருந்தார்கள். இப்போதோ பெண் வீட்டுப் பக்கமும் நிறைய பேர் இருந்தனர். பரமசிவம் மற்றும் மதியின் நண்பர்கள், உடன் வேலை செய்தவர்கள், அக்கம் பக்கத்தினர், மதியுடன் ஒன்றாக படித்தவர்கள், பரமசிவத்தின் மாணவர்கள் என அனைவரும் வந்திருந்ததால் ஓரளவு கூட்டமாகவே இருந்தது.