மிர்த்தி, திரு திருவென விழித்தபடி “என்ன அண்ணி” என்றாள்.
வைஷ்ணவி அவளின் பார்வையின் அச்சத்தை உணர்ந்து “ஒண்ணுமில்ல வா” என கூட்டி சென்றாள்.
கோவிலை சுற்றி சென்று பெருமாளை பார்க்கவே அரைமணி நேரம் ஆனது.. அதுவரை மிர்த்திக்கு ‘என்ன கேட்க்கிறாங்க அண்ணி’ எனத்தான் ஓடிக் கொண்டே இருந்தது. மிரண்டு போனாள்.
அரங்கனை கண்ணிறைந்து கண்டு.. அப்படியே நின்றாள். மனதில் எந்த சஞ்சலமும் இல்லை.. நிர்மலமாக இருந்தது மனது, எந்த கோரிக்கையும் வைக்கவில்லை அந்த சின்ன மங்கை.. அமைதியாக கண்ணாற கண்டால் அரங்கனை.
வெளியே வந்த பிரகாரம் வளம் வந்து.. ஓரிடத்தில் அமர்ந்தனர் இருவரும்.மிர்த்திக்கு, உளுக்குள் கொஞ்சம் பயம் வந்தது.. வைஷ்ணவியும் “ஏன் மிர்த்தி, அமைதியா இருக்க” என்றாள், அவளின் இயல்பில்லாத முகம் பார்த்து.
மிர்த்தி “ஒண்ணுமில்ல அண்ணி, சொல்லுங்க” என்றாள், சின்ன பெண்ணுக்கு தடுமாறியது.
வைஷூ “இல்ல, யோகியை அண்ணான்னு எல்லாம் கூப்பிடதில்லை.. உன்னை விட ரெண்டு வயசு பெரியவன்..” என்றாள் ஆராய்ச்சியாக.
மிர்த்திக்கு ‘அப்பாடா..’ என தோன்றியது.. அவரின் குறுக்கு கேள்வி புரியவில்லை சின்னவளுக்கு. மிர்த்தி “இல்ல அண்ணி.. மூணு வருஷம் பெரியவங்க.. யோகியை lgkயில் சேர்த்து போகலை.. தனம் அத்தைக்கு உடம்பு முடியலைன்னு.. போகலை. திரும்பவும் சேர்த்தாங்க. ஆனால், அண்ணா எல்லாம் கூப்பிட மாட்டேன். எப்போதாவது.. பெரியவங்க இருந்தால்.. அப்படி சொல்லுவேன். யோகியும் அப்படி கூப்பிட சொல்லமாட்டான்.” என்றாள்.. வெள்ளந்தியாக.
வைஷூ “யோகி உனக்கு சொந்தமாடா..” என்றாள்.
மிர்த்திக்கு இந்த கேள்வியில் என்ன தோன்றியதோ.. “இல்ல அண்ணி.. ம்.. உங்களுக்கு தெரியாதில்லை எங்களை பற்றி. நாங்க சின்னதிலிருந்து இப்படிதான். தனம் அத்தை ரெங்கன் மாமா.. எல்லோரும் இப்படிதான்” என்றாள் அவளுக்கு வேறு எப்படி இதை விளக்குவது என புரியவில்லை.
வைஷூ “ஓ” என்றாள்.
மிர்த்திக்கு அந்த ஒரேழுத்து என்னமோ செய்தது. மேலும், எதோ இந்த அண்ணி.. புதிதாக கேட்க்கிறாங்க.. என பருவத்தில் ஒரு பையனோடு பேசுவது தவறு.. என தன் அத்தை சொல்லி சென்றது நினைவு வரவும்.. மிர்த்திக்காவிற்கு பயம் வந்தது. ஏதும் பேச தோன்றாதவளாக அமைதியானாள், இளையவள்.
வைஷூவிற்கும் ஓரளவு புரிந்தது.. இப்போது மிர்த்தியின் முகமும் வேடிக்கை பார்ப்பது போல திருப்பிக் கொள்ளவும்.. இதற்குமேல் கேட்க்க கூடாது என எண்ணி பேச்சை மாற்றினாள் “என்ன பண்ண இன்னிக்கு” என அன்றைய நாள் குறித்து விசாரிக்க தொடங்க பேச்சு இயல்புக்கு மாறியது.
யோகி, காத்திருந்தான் தன் கடை வாசலிலேயே எப்போதடா.. மிர்த்தி, கோவிலிலிருந்து வருவாள் என பார்த்துக் கொண்டு. ஆனால், என்னமோ அவ்வளவு சீக்கிரம் கண்ணில் கானோம் அவளை. எனவே, கிளம்பி நண்பர்களை பார்க்க சென்றுவிட்டான். இரவில் அழைக்க முடியவில்லை.. வந்ததும் உண்டு உறங்கிவிட்டான் யோகி.
ஆனால், மறுநாளில் யோகிக்கு என்னமோ புதிதாக தெரிந்தாள் மிர்த்தி. எப்போது அவளின் கண்கள் தன்னை தேடும்.. இன்று அப்படி இல்லை.. ஜெகனோடு மிர்த்தி வரவில்லை.. அவனுக்கு முன்பே சென்றுவிட்டிருந்தாள். யோகி, ஜெகனின் நண்பர்களோடு சென்றான்.. “எங்கடா உங்க அக்காவை காணோம்” என கேட்டான்.
ஜெகன் ஏதும் அறியாதவனாக “அக்கா, முன்னாடிதான் போறாங்க” என சொல்லிவிட்டு.. பேச தொடங்கினான்.
யோகி ஸ்டாப்பிங் அருகில் சென்று பார்க்க.. அங்கே நின்றிருந்தாள் மிரித்தி. மிர்த்தி திரும்பியும் பார்க்கவில்லை யோகியை. எதோ பரபரப்பில் இருப்பதாக தோன்றியது யோகிக்கு. யோகிக்கு முகமே வாடி போனது. ‘சரி அவதான் படிப்ஸ் ஆச்சே.. எதோ டெஸ்ட் இருக்கும்’ என எண்ணிக் கொண்டு மாலைக்காக காத்திருந்தான்.
மாலையில்.. பெரிய வகுப்பு அக்காவோடு சேர்ந்து அமர்ந்துக் கொண்டாள்.. தனியாக அமரவில்லை, மிர்த்தி.
அடுத்தடுத்த நாட்களில் மிர்த்தி, தன்னை தனியாகிக் கொள்ள முயன்றாள். யோகியோடு காலையில் சேர்ந்து நடக்கவில்லை. அவனுக்கு என இந்த நான்குநாட்களாக எந்த பொரியலும் எடுத்து வரவில்லை.
ஐந்தாம் நாள் யோகிக்கு, பொறுமையாக இருக்க முடியவில்லை.. நேரமாக பள்ளி கிளம்பி, முன்னால் நடந்தான் பஸ் ஸ்டாப்பிங்கிற்கு. 7:45 சென்றுவிட்டான்.
ஸ்கூல் பஸ் 8:05 வரும். அந்த தெருவில் உள்ள பிள்ளைகள்.. வந்து ஏறுவதற்காக ஐந்து நிமிடம் நிற்கும். ஆக மிர்த்தி.. யோகி வந்த பத்து நிமிடத்தில் வந்தவள் அதிர்ந்தாள் யோகியை பார்த்து.
மிர்த்தி சற்று தூரமாக நிற்க.. யோகி அருகில் வந்து நின்று “ஹாய்..மிர்த்தி” என்றான், புதிதாக பார்ப்பது போல.
மிர்த்தி தலையை நிமிர்த்தவும் முடியாமல்.. அவனின் பேச்சை தவிர்க்கவும் முடியாமல் சங்கடமாக சுற்றிலும் பார்வையை சுழற்றியவள் நிமிர்ந்து பார்த்தாள்.
மிர்த்திக்கும் உணர்வுகள் கட்டுக்குள் அடங்க மறுத்து.. கண்ணில் நீர் தளும்பி நின்றது.. அவனின் இரு வார்த்திகளில். அவளிற்கும் அவனை பார்க்காமல் வலிக்கத்தானே செய்தது. அதனால் தடுமாறினாள் பெண். ஆனால், அவனிடமிருந்து பார்வையை மாற்றி சட்டென பாதையை வெறிக்க தொடங்கியது அவளின் கண்கள் பயத்தில்.
யோகி அவளின் முகத்தையும் கண்களையும் பார்த்தவன்.. அதற்குமேல் எதையும் குடையாமல்.. “எங்க எனக்கு பொரியல்.. பாரு.. இளைச்சு போயிட்டேன்.. எங்க என் பங்கு” என்றான் தடுமாறியபடியே விளையாட்டும் உரிமையும் கலந்த குரலில்.
மிர்த்திக்கு சுவாசம் சற்று பிசகி நேரானது.. இன்னும் கண்கள் கலங்கிடுமோ தோன்ற.. என்ன செய்வது என தெரியாமல் இரண்டு நிமிடம் நின்றாள்.
யோகி நகரவில்லை. ஜெகன் அவனின் நண்பனும் வந்தான். மிர்த்திக்கு, யோகி அருகில் நிற்பது எதோ பயத்தை தர.. அமைதியாக தன்னுடைய பொரியல் டப்பாவினை எடுத்து கொடுத்தாள் யோகியிடம்.
யோகிக்கு, இது எப்போதும் வரும் தன்னுடைய டப்பா இல்லையே என எண்ணிக் கொண்டே வாங்கிக் கொண்டான்.. தன் பேகில் வைத்துக் கொண்டான்.
யோகிக்கு ஏதேதோ கேட்க்க தோன்றியது.. ஆனாலும் அவளின் கலங்கிய தோன்றம்.. அவளின் தடுமாறிய உடல்மொழியையும் கவனித்தவன் எதையும் கேட்க்காமல் இருந்தான். சற்று நகர்ந்தும் சென்றான். எல்லோரும் வந்து சேர்ந்தனர். பஸ் வந்தது எப்போதும் போல பயணம் தொடங்கியது.
மாலையிலும் மிர்த்தி யோகியோடு பேசவில்லை. மாலை வீடு வந்ததும், யோகிக்கு தலை வலிக்க தொடங்கியது. வீட்டிற்கு வந்தது முதல்.. சீருடை கூட மாற்றாமல், இங்கும் அங்கும் நடந்துக் கொண்டே இருந்தான். இறுதி தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில்.. நாட்கள் வேகமாக கடந்தது படிப்பதில். இப்போது, இந்த கவலை வேறு இருவருக்கும்.
மிர்த்திக்கு, இரவு உணவு இந்த பரிட்சை முடியும் வரை.. தந்தை ‘தான் வந்து பார்த்துக் கொள்வதாக’ கூறி இருந்தார். அதனால், உடைமாற்றி கொண்டு படிப்பதற்காக அமர்ந்தாள்.
ஜெகன் ஹோம் வொர்க் முடித்துவிட்டு.. விளையாட சென்றுவிட்டான்.
சரியாக யோகி அழைத்தான் போனில்.. மிர்த்திக்காவை. மிர்த்திக்காவிடம் அவனின் எண் இல்லை. எனவே யாரென தெரியாமல் போனை எடுத்து “ஹலோ” என்றாள் பெண்.
யோகி “ஹலோ மிர்த்தி, நான் யோகி” என்றான்.
மிர்த்திக்கா “சொல்லுங்க” என்றாள்.
யோகி “என்ன ஆச்சு.. ஏன் என்கிட்டே பேசறதில்ல” என்றான்.
மிர்த்திக்கு இப்போதெல்லாம் பொறுப்பு வந்திருக்கிறது என்றாலும் இன்னும் சின்ன பிள்ளைதானே.. யோகியின் கேள்வியில்.. “எதுக்கு பேசணும். நாம என்ன எப்போதும் பேசிட்டா இருந்தோம். ஆமாம் இதென்ன கேள்வி.. காலையிலும் அப்படிதான் வந்து நிக்குறீங்க இனி இப்படி வராதீங்க..” என்றாள்.
யோகி குழப்பத்தில் மனம் உடைந்து.. அவளிடம் பேசாமல்.. அவள் தன்னிடம் பேசாமல் இருப்பது எதையோ இழந்தது போல இருக்க.. அழைத்தான். ஆனால், மிர்த்தியோ அமைதியாக அதே சமயம் என்னை தொந்திரவு செய்கிறாய் என்ற குரலில் பேச.. யோகிக்கு படபடப்போடு கோவம் வந்தது. அழைப்பை துண்டித்துவிட்டான்.
மிர்த்திக்கு, தான் சொன்னது அவன் மனதை வாட்டியிருக்கும் என புரிகிறது. அப்படியே சற்று நேரம் அமர்ந்திருந்தாள், மிர்த்தி. படிக்கவே தோன்றவில்லை எழுந்து இரவு உணவு செய்வதற்காக கிட்சென் சென்றுவிட்டாள் பெண்.
யோகிக்கும் படிக்க முடியவில்லை எழுந்து வண்டி சாவி எடுத்தான். அவனின் தந்தை ரெங்கன் “டேய் ஒரு மாசத்தில் பரீட்சை.. இப்போது எங்க போற.. இனி படிப்பு, எக்ஸாம் முடிந்துதான் விளையாட்டு” என்றார்.
யோகி “எக்ஸாம் ன்னா என்ன செய்ய முடியும். எல்லாம் படிப்போம்.. அரைமணி நேரத்தில் வந்திடுவேன்” என நிற்காமல் சாவி எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
ரெங்கனின் அன்னை இப்போதெல்லாம் எழுந்து அமரும் அளவிற்குதான் திடமாக இருக்கிறார்.. இப்போது மகன் பேரனின் சத்தம் கேட்டு “ரெங்கா.. ஏதும் பேசாத டா” என்றார் சின்ன குரலில்.
ரெங்கன் சலித்துக் கொண்டே கடைக்கு சென்றார்.
மறுநாள் யோகி ஸ்டாப்பிங் செல்லும் போது, நேரமாக கிளம்பி.. மிர்த்தி வரும் நேரத்திற்கு வந்து சேர்ந்தான். இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. மிர்த்தி, மனது கேட்க்காமல் எப்போதும் போல.. சின்ன டப்பாவில் பொரியல் கொண்டு வந்து அவன் முன் நீட்டினாள்.
யோகி பேக் மாட்டிக் கொண்டு.. கையை கட்டிக் கொண்டான், அந்த டப்பாவை வாங்கவில்லை. மிர்த்தி கையை இன்னும் நீட்டிக் கொண்டே இருந்தாள். யோகியால் மறுக்க முடியவில்லை. வாங்கிக் கொண்டான்.
ஆனால், அவனுள் கோவம் கனன்றுக் கொண்டிருந்தது. பார்வைகள் இருவருக்குள்ளும் கோவமாக.. கேள்வியாக.. திமிராக.. என பல உணர்வுகளை பரிமாறிக் கொண்டது. யோகியின் விரல்கள் பேச முடியாமல் தலை கோதி கோதி.. சோர்ந்தது என்றால்.. மிர்த்திக்கு, அவனை பார்க்க கூடாது என தன் கண்களை திருப்பி திருப்பியே சோர்ந்து போனாள்.
அடுத்த வாரம் முழுவதும் இருவருக்கும் இந்த இடைவெளியில் மாற்றமில்லை. ஆனால், மனநிலையில் நிறைய மாற்றம். இருவருக்கும் யாரிடமும் பேச முடியவில்லை. யோசித்து யோசித்து தலை வலித்தது.. படிப்பதற்கு அமர்ந்தால்.. இருவரின் முகம்தான் மற்றொருவருக்கு எதிரில் வந்தது.
யோகிக்கு, அதற்குமேல் பொறுமையில்லாமல் போக.. திரும்பவும் போனில் அழைத்தான் மிர்த்திக்காவிற்கு.