அன்று மிரித்தியின் பிறந்தநாள். முன்பெல்லாம் பிறந்தநாள் என்றால்.. முதலில் கோவிலுக்கு சென்றிடுவாள் தந்தையோடு. அதற்குள் இரண்டு இனிப்புகள் இருக்கும் வீட்டிற்குள்.. ஒன்று தன் அம்மா செய்தது இன்னொன்று தனம் அத்தை செய்து கொடுத்திருப்பார்.
அதென்னமோ எப்போதும் பிள்ளைகளுக்கு பக்கத்து வீட்டு உணவுதானே பிடிக்கும். அந்த வகையில், தனம் அத்தையின் அசோகா அல்வாதான் அவளின் விருப்பமான இனிப்பு. அதை பாதி அவளே காலி செய்திடுவாள். அதன்பிறகுதான், எதோ காலை உணவை உண்பாள். பக்கத்து வீடு அதுதான் தனம் அத்தையின் வீட்டிற்கு சென்று சாக்லெட் கொடுத்து வருவாள்.
அடுத்து தன் தோழிகளுக்கு என மட்டும் பைவ்ஸ்டார் வாங்கிக் கொண்டு பள்ளிக்கு செல்லுவாள். மாலையில் தந்தை, பிள்ளைக்கு என கேக் வாங்கி கட் செய்ய வைப்பார். எப்படியும் அவளின் காமாட்சி அத்தை வந்திடுவார்.. அக்கம் பக்கம் வீட்டார் என சின்ன விழவாக இருக்கும்.. அதுதான் ஐந்தாம் வகுப்புவரை அவளின் பிறந்தநாள் கொண்டாட்டம்.
இப்போதெல்லாம் இனிப்பு என்பதை கடையில் வாங்கி வைத்திடுவார் வாசு. காலையில் இருவருக்கும் வேலை சரியாக இருப்பதால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. எனவே, சாக்லெட் வாங்கிக் கொண்டு பள்ளிக்கு செல்லுவாள்.. இப்போதெல்லாம் அந்த பைவ்ஸ்டார் எண்ணிக்கை கூட குறைந்துவிட்டது.
இன்று, மிர்த்தி எழுந்ததும்.. தந்தை வாசு “பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கம்” என்றார் மலர்ந்த முகமாக பிள்ளையின் உச்சியில் கை வைத்து ஆசீர்வதித்து.
லேசாக முகம் மலந்தாள் பெண். வாசு “நீ போய் சீக்கிரம் தயாராகு.. நான் இங்க பார்த்துக்கிறேன்” என்றார்.
மிர்த்தியும் அப்படி கிளம்ப சென்றாள். குளித்து புதுஉடை அணிந்துக் கொண்டு விளகேற்றி.. அம்மாவின் படத்திற்கும் பூ வைத்து வணங்கி எழுந்தாள் பொறுமையாக. அதுவே அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.
தம்பி எழுந்து வந்து அக்காவின் உடையையே முறைத்துக் கொண்டிருந்தான். தந்தை வாங்கி வைத்திருந்த இனிப்புகளை எடுத்து உண்டான். அக்காவிற்கு வாழ்த்தவில்லை. குளித்து வந்ததும் ஜெகன் எனக்கும் “புது டிரஸ் வேண்டும்” என பிடிவாதம் செய்தான்.
வாசு சத்தம் போட்டு அவனை சீருடை அணியவைத்தார்.
மிர்த்திக்கா முன்னால் நடக்க.. ஜெகன் “அண்ணா..” என பக்கத்து வீட்டில் குரல் கொடுத்து விட்டு, நின்றான். யோகியும் சரியாக வெளியே வந்தான்.
யோகி “என்ன டா.. முகம் ஒருமாதிரி இருக்கு” என்றான்.
ஜெகன் “அக்கா மட்டும் புது டிரஸ். எனக்கு மட்டும் சீக்கிரமா பர்த்டே முடிஞ்சி போச்சி..” என சொல்ல சொல்ல.. யோகியின் முகம் ஒளிர்ந்தது. ஜெகனோ முடிக்காமல் எதோ பேசிக் கொண்டே இருந்தான். அதெல்லாம் காதில் விழவில்லை யோகிக்கு.
யோகியின் கண்கள் வண்ண உடையில் இருக்கும் அவளை கண்டுக் கொண்டது. தனது நடையில் வேகத்தை கூட்டி மிர்த்தியை நெருங்கினான். நடுவில் ஜெகன்.. இருவரும் பக்கவாட்டில் யோகி “ஹாப்பி பர்த்டே.. மிர்த்தி” என்றான் நட்பாக.
மிர்த்தியும் பக்கவாட்டில் திரும்பி புன்னகை முகமாக “தேங்க் யூ” என்றாள்.
யோகிக்கு பதிலே வரவில்லை.. எதோ புதிய பார்வையாக அவளின் கண்களையே பார்த்தான். மிர்த்தி திரும்பிக் கொள்ளவும்.. லேசாக குனிந்து பக்கவாட்டில் அவளை பார்த்தான், யோகி.
மிர்த்தி அனிச்சையாய்.. யோகியை பார்க்க.. எதையோ கண்டுக் கொண்டவனாக யோகி “ஹேய்.. கண்ணில் மை வைச்சிருக்கியா.. சூப்பர்..” என்றான் சின்ன குரலில்.
மிர்த்திக்கு சட்டென்ன அவளின் முகம் மலர்ந்தது.. லேசாக திரும்பி யோகியை பார்த்துவிட்டு வேகமெடுத்தாள். யோகிக்கு அந்த பார்வை என்ன சொல்லியதோ.. நடுவில் இருந்த ஜெகனை மறந்து.. அவளோடு வேகமெடுத்தான்.
அதற்குள் பஸ் வந்துவிட்டது. மற்ற பிள்ளைகள் ஏறி.. ஜெகனும் ஏறி.. மிர்த்தியும் ஏறிவிட.. யோகி தலையை கோதிக் கொண்டே அங்கேயே நின்றான். மிர்த்தி அவன் ஏறாதது உணர்ந்து.. திரும்பி பார்க்க.. உணர்வு வந்தவனாக ஏறிக் கொண்டான் யோக்கியன்.
மிர்த்தி, பஸ்ஸில் எல்லோருக்கும் சாக்லெட் கொடுக்க.. அது யோகிக்கும் சென்றது. ஜெகன் இப்போதும் கையில் அந்த சாக்லெட்டை அள்ளிக் கொண்டான்.
யோகிக்கு பள்ளி வரும்வரை.. கண்கள் அவளை தொடர்ந்தது. அதன்பிறகு, யோகிக்கு.. நேரமே கடக்க மறுத்தது. எப்போதடா.. மாலை நேரம் வரும் என காத்திருந்தான்.
மாலையில்.. எப்போதும் போல.. அவளின் பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்துக் கொண்டான். யோகி “இந்த டிரஸ்.. கலர் உனக்கு நல்லா இருக்கு..” என்றான் ரசனையாக.
மிர்த்திக்கு “அஹ.. தேங்க் யூ..” என்றாள்.
யோகி “பர்த்டேன்னு முன்னாடியே ஏன் சொல்லலை..” என்றான்.
மிர்த்தி பதில் சொல்லாமல் தன் கைக்குட்டையை பார்த்துக் கொண்டிருந்தாள். யோகி தன்னையே பார்ப்பதை உணர்ந்து “அஹ.. எதுக்கு சொல்லணும்” என்றாள் இதுவரை இருந்த தயக்கம் தாண்டி.. நிமிர்ந்து பார்த்து விசாரணையாக.
யோகி அமைதியாக புருவம் உயர்த்தினான்.. பதிலில்லை அவனிடம்.. ‘எதுக்கு சொல்லணும்..’ என்ற கேள்விக்கு. ஆனால், மனதுள் தோன்றுகிறது ‘நான் அவளோடுதானே இருக்கேன்.. எனக்கு தெரியாமல் எப்படி.. நான் ஸ்பெஷல்லா கிப்ட் செய்திருப்பேன்.. என்னிடம் அவள் சொல்லியிருக்கணும்..’ என தோன்றியது. யோகி “நாளைக்கு சொல்றேன் ஏன் சொல்லியிருக்கனும்ன்னு” என்றான்.
மிர்த்தி அவன் கண்களை நிமிர்ந்து.. அவன் உணரும்படி பார்த்தாள்.. யோகி அந்த பார்வையை வாங்கிக் கொண்டு.. நெற்றியில் லேசாக வேர்வை துளிர்க்க.. அவஸ்த்தையாக சிரித்தபடி “எ..ன்ன.. பார்க்கிற” என்றான்.
தெரியவில்லை இருவருக்கும்.. அவனின் அவஸ்த்தையான பார்வையில் பெண்ணவளின் அடிவயிற்றில் மெல்லிய பட்டாம்பூச்சி.. பெண்ணவளின் முகம் மினுமினுத்தது. அவனுக்கும் அப்படியே. அவளின் மினுமினுப்பு ஒரு குதுகலத்தை தந்தது. என்னவென புரிந்தும் புரியாத நிலை.. ஆனால், பிடித்திருந்தது இருவருக்கும். அடிக்கடி பார்த்துக் கொள்வதும்.. எதையோ சொல்லிக் கொள்ள முடியாமல் தவிப்பதும்.. தங்களின் கண்கள் இயல்பாய் அவன் எங்கே! அவள் எங்கே! என தேடுவதும்.. உடனிருக்கும் நேரங்கள் நீளாதா! என தோன்றுவதுமாக சில மாதங்கள் கடந்தது.
மிர்த்திக்கு, படிப்பில் கவனம் தடைபடவில்லை. யோகிக்கு, கால்கள் சரியாக தொடங்கியதும், எப்போதும் போல விளையாடுவதற்கு என வெளியே செல்ல தொடங்கினான். சற்று படிப்பிலும் ஓகே எனும் ரகமாக மாறத் தொடங்கினான். கொஞ்சம் பள்ளியில் விதிமீறல்கள் செய்வது என்பதெல்லாம் குறைந்தது.
இன்று, இரு அன்னைகளுக்கும் திவசம். காலையில் இரு வீட்டாரும் தங்களின் வழக்கப்படி திவசம் செய்வர். மதியம் சங்கத்தார் சார்பாக அந்த தெருவில் உள்ள எல்லோர் வீடுகளுக்கும்.. உணவு வழங்குவர், இரு வீட்டாரும் சேர்ந்து. எப்போதும் இந்தநாள்.. அந்த தெருவினருக்கு.. கடக்க முடியாத துக்கநாள். எல்லோரும் துக்கநாளாகவே கருதுவர். காலையிலிருந்து அக்கம் பக்கத்து வீட்டார் வந்தவண்ணம் இருப்பர். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இந்த இரு குடும்பத்திற்கும் வேலை வைக்காமல் வேலைகளை செய்வர்.
இந்த வருடமும் சீனிவாசன் குடும்பம் வந்துவிட்டது. மிர்த்தியின் அத்தை காமாட்சி குடும்பம் வந்திருந்தது. மிர்த்திக்கு, அம்மாவை பற்றி எல்லோரும் பேச பேச அழுகையை அடக்கவே முடியவில்லை. அமைதியாக அமர்ந்து கண்ணில் நீர் வடிய தன் அம்மாவின் புகைப்படமும்.. தனம் அத்தையின் புகைப்படமும் வைத்திருந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
உணவருந்தி பேசிக் கொண்டிருந்தனர் பெரியவர்கள். ஜெகனுக்கும் யோகிக்கும் பெரிதாக அமர்ந்து அழவோ.. வருந்தி பேசவோ வரவில்லை.. தோன்றவில்லை. ஜெகன் அக்காவின் அருகே அமர்ந்து அடிக்கடி “போதும் அழாத.. நாளைக்கு ஸ்கூல் இருக்கு” என சொல்லினான், அதற்குள் அவனை விளையாட யாரேனும் அழைத்தால் சென்றிடுவான்.
காமாட்சி அத்தையும் அவரின் வீட்டுக்காரரும் பொறுப்பாக எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டனர். காமாட்சிக்கு, அக்கம் பக்கம் எல்லோரையும் தெரியும். வேலையாட்கள் எல்லோரும் வந்து உண்டனரா.. என கவனித்துக் கொண்டனர். அடிக்கடி வந்து மருமகளையும் தம்பியையும் பார்த்துக் கொண்டார்.
யோகிக்கு, மிர்த்தியே சுற்றியே பார்வை இருந்தது. அன்னை இல்லாமல் அவள் எவ்வளவு அழுகிறாள் என அப்போதுதான் கவனித்தான். சற்று நேரம் தூரமாக இருந்து பார்த்தவன்.. ஜெகன் வரவும்.. அவனோடு அருகில் வந்து பக்கத்து சேரில் அமர்ந்தான். மிர்த்தி, கவனிக்கவில்லை.. யோகி “மிர்த்தி, எப்போவோ நடனத்துக்கு ஏன் இப்பவும் அழற.. விடு. சரியாகிடுச்சில்ல” என்றான்.
மிர்த்தி “என்ன சரியாகிடுச்சி” என்றாள்.
யோகி “எல்லாம்தான். கோவபடாத, எதுவும் மாறிட போறதில்லை. நாமதான் சரியாகிட்டோமே, இப்படி அழாத.. பார்க்க கஷ்ட்டமா இருக்கு” என்றான்.
மிர்த்தி “உனக்கு என்ன தெரியும், எனக்கு எதுவும் சரியாகலை, எனக்கும் அப்பாக்கும் தம்பிக்கும் எதுவும் சரியாகலை. பாரு அப்பாவை” என்றாள்.
யோகி “என்ன செய்ய முடியும் மிர்த்தி” என்றான்.
மிர்த்தி “என்னால அழ முடியும். அதை மட்டும்தானே யோகி செய்ய முடியும்.” என கைவிரித்து அழுதாள். நகத்தின் ஓரங்கள் கருத்து.. விரல்களின் ஓரங்கள் வெட்டு காயத்தோடு கருப்பாக இருந்தது பிள்ளைக்கு. யோகி வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அவளோ தொடர்ந்து “அம்மா மடியில் படுத்து தூங்க முடியலை.. கட்டி பிடிச்சி முத்தம் கொடுக்க முடியலை.. எனக்கு அம்மா தலைவாரி விடலை.. பாரேன் என் முகம் எப்படி இருக்குன்னு” என்றாள் சின்ன குரலில்.
யோகிக்கும் இப்போது அழுகை வரும் போல இருந்தது.. “எனக்கும்தான் இதெல்லாம் இல்லை, நானென்ன அழுகிறேனா.. அழுதால் மட்டும் திரும்ப வந்திட போறாங்களா.. போ.. கண்களை துடை..” என்றான் திடமான குரலில். தன்னுடைய துக்கங்களை அடக்கிக் கொண்டு.
மிரித்தி நிமிர்ந்து பார்த்தாள். ‘இவன்தானே அழாதேன்னு சொன்னான்.. இவனுக்கும் இதே பீலிங் இருக்குல்ல.. அப்புறம் எதுக்கு அதை கண்ட்ரோல் செய்துக்கணும்’ என தோன்ற ஏதும் பேசாமல் அமைதியாகினாள் பெண்.
மிர்த்தி கேவிக் கொண்டே அமைதியாக தொடங்கினாள். யோகி அவளையே பார்த்துக் கொண்டு தன் மாமாவிடம் சென்று அமர்ந்துக் கொண்டான்.
மதியம் மூன்று மணிக்கு மேல் ஆகவும்.. எல்லா வேலைகளும் முடிந்திருந்தது. கடைசியான இரு வீட்டாரின் குடும்பங்களும் உண்டால் சரி என இருந்தது. அப்படியே இருவீட்டு குடும்பமும் உண்டு.. வீடு வந்து சேர்ந்தனர். இப்போது யோகி, காமாட்சி அத்தையோடு பேசிக் கொண்டே மிர்த்தியின் வீட்டிற்கு வந்தான்.. காமாட்சி அவனை வீட்டின் உள்ளே அழைத்துக் கொண்டு வந்தார்.
மிர்த்தியும் அவளின் தந்தையும் வந்து சேர்ந்தனர், வாசு “வா பா, சாப்பிட்டியா” என்றார்.
யோகி “ம்.. மாமா” என்றான்.
வாசு “இப்போ என்ன படிக்கிற” என்றார்.
யோகி பதில் சொன்னான்.
வாசு “கால் இப்போ பரவாயில்லையா..” என்றார்.
யோகி பதில் சொன்னான்.
பின் பெரியவர்களிடம் விடைபெற்று கிளம்பியவன் மிர்த்தியிடமும் “பை மிர்த்தி” என விடைபெற்றுக் கொண்டே கிளம்பினான்.