வாசுதேவகிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்து கிளம்பியவன் வேகமாக தன் வீட்டை அடைய, வீட்டில் ராகவன் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தது.
திருமகள் நாச்சியார் சமையலறையில் இருக்க, பூனைப்போல் நடந்து அவள் பின்னால் சென்று நின்றான் வாசுதேவகிருஷ்ணன். திரு அவனை கவனிக்காதவள் போல் வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்க, “திரு..” என்றான் வாசுதேவன்.
சட்டென அடுப்பை அணைத்துவிட்டவள் தங்கள் அறைக்கு சென்று அமர்ந்துவிட, அவளின் பின்னே தானும் அறைக்குள் நுழைந்தான் வாசுதேவன். கட்டிலில் அமர்ந்திருந்தவள் அவன் முகம் பார்க்க மறுக்க, அவளை நெருங்கி அமர்ந்தவன் “திரு..” என்று அவள் தோளில் கைபோட, பட்டென திரு அவளை தள்ளி விடவும், அதே வேகத்தில் அவள் இதழ்களை பிடித்துக் கொண்டான் வாசுதேவன்.
அவனின் இந்த இதழணைப்பில் திரு திருதிருவென விழித்தாலும் மறுக்கவே இல்லை அவனை. இரு நிமிடங்களுக்குப் பின் வாசுதேவன் விலகி அமர்ந்து “நல்ல ஐடியா தான்..” என, அவனைப் புரியாமல் பார்த்தாள் மனைவி.
“எனக்கு சண்டை போடற மூட் இல்ல.. அதனாலதான் நீ பேச தொடங்கினதுமே உன்னை அடிச்சுட்டேன். பொண்டாட்டியை அடிச்சது தப்புதான்.. வேணும்ன்னா நீ திரும்ப அடிச்சுக்கோ..” என்றவன் அவளைப்போலவே இதழ்களை குவித்து காண்பிக்க,
“கிண்டல் பண்றிங்களா என்னை..” என்று வேட்டி மறைத்திருந்த அவன் தொடையில் திரு கிள்ளிவிட, “ஏய் திரு… வலிக்குது..” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டான் வாசுதேவன்.
“ஓஒ… அவசரம்.. அதுதான் அத்தையை மட்டும் எழுப்பி கூட கூட்டிட்டு போனிங்களா..”
“சும்மா வாதம் பண்ணாத திரு.. உன்னை கூப்பிட்டா வருவியா நீ.. அங்கே அவசரம். உயிர் போற அவசரம். அந்த நேரத்துல உன்னை எழுப்பி உன்கிட்ட சொல்லி அனுமதி வாங்கிட்டு அதுக்குபிறகு போவேனா.. புரிஞ்சிக்க மாட்டியா நீ..”
“நீ எப்படியும் போகாதன்னு சொல்வ. எதுக்கு உன் பேச்சை மீறணும். அதான் சொல்லாமலே போனேன்..” என்று தன் பக்கத்தை அவன் கூறி முடிக்க,
“இப்போ மட்டும் ஏன் வந்திங்க.. அங்கேயே இருக்க வேண்டியது தானே..”
“அவனுக்கு குழந்தை பிறந்துடுச்சு.. எனக்கு விவாகரத்து ஆகாம இருக்கணும் இல்ல.”
“அப்படியே பயந்தவர் தான்..”
“நெஜமாவே நான் என் பொண்டாட்டிக்கு பயந்தவன் தான்டி..” என்ற வாசுதேவனின் பேச்சில், திரு நக்கலாக பார்த்தாள் அவனை.
“சொன்னாங்க சொன்னாங்க,,” என்று குரலிலிலும் அவள் நக்கலை காண்பிக்க,
“அவன் அவன் பிள்ளையே பெத்துட்டான்டி.. நான் பர்ஸ்ட் நைட் பண்ணதோட சரி. ஒரு பால்கோவா கூட கொடுக்கல.. என்னைப் பார்த்தால் பாவமா இல்லையா உனக்கு..”
“நீங்க அதையெல்லாம் பேசவே கூடாது. ஒருநாள் தூக்கிப் போட்டதும் அதுதான் சாக்குன்னு பால்கோவாவை மறந்துட்டு இப்போ என்னை சொல்றிங்களா.. உங்களை பார்த்தாலே கடுப்பாகுது எனக்கு..”
“திருகுட்டிக்கு பால்கோவா வாங்கலன்னு தான் கோபமா..” என்று கேட்டுகொண்டே எழுந்தவன் அந்த அறையில் இருந்த மேஜையை நெருங்கி, அதன்மீது இருந்த கவரை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.
“குளிக்காம கோவிலுக்கு போகக்கூடாதே.. அதுதான் அண்ணாச்சி கடை பால்கோவா..” என்றவன் புருவம் உயர்த்த, கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு அதிகாரமாக அவன் கையிலிருந்த இனிப்பை வாங்கிக் கொண்டாள் திரு.
“தேங்க்ஸ்..” என்றபடியே ஒருவாய் எடுத்து உண்ண, வாசுதேவன் வேகமாக நெருங்கவும், தன் கையால் தடுத்தாள் அவனை.
“பால்கோவா எனக்கு மட்டும்தான் இருக்கு.. நீங்க செஞ்ச வேலைக்கு இன்னும் ஒரு மாசத்துக்கு நோ ஸ்வீட்..” என்றபடியே கட்டிலில் இருந்து அவள் எழுந்து கொள்ள, அவள் கைபிடித்து இழுத்தவன் கட்டிலில் கிடத்தினான் அவளை.
“மாமா..” என்று திரு அலற, அவளை கண்டுகொள்ளாமல் எழுந்து சென்றவன் அறையின் கதவை தாழிட்டு மீண்டும் அவளை நெருங்க,
“காலையில விடிஞ்சும் விடியாம என்ன வேலைப் பார்க்கிறிங்க நீங்க.. நைட் பார்த்துக்கலாம் மாமா.. ஒழுங்கா கதவைத் திறங்க..” என்றவள் கட்டிலில் இருந்து இறங்க முற்பட, அவளை மீண்டும் கட்டிலில் தள்ளிவிட்டான் வாசுதேவன்.
“மாமா..” என்று திரு அதட்ட,
“எனக்கு இப்போவே என் பால்கோவா வேணும்..” என்று நின்றவன் கட்டிலில் அவள் அருகில் விழ, திரு சுதாரிக்கும் முன்பே அருகிலிருந்த இனிப்பை எடுத்து அவள் வாய்க்குள் திணித்துவிட்டான்.
திரு மறுப்பாக தலையசைத்தவள் தன் கையால் வாயை மூட, வெகு சுலபமாக அவள் கையை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டவன் அடுத்த சில நிமிடங்களில் அவளையும் தனதாக்கிக் கொண்டான்.
வெகு நாட்களுக்கு பிறகான அழகான அந்த சங்கமம் இருவரையும் இனிமையாக உணரச் செய்ய, நீண்ட பல நிமிடங்களுக்குப் பின் அவன் விலகவும், “அநியாயம் பண்றிங்க மாமா..” என்று போர்வையால் தன்னை முழுதாக மூடிக் கொண்டாள் திருமகள்.
வாசுதேவன் சிரிப்புடன் மீண்டும் அவள் கன்னத்தில் முத்தமிட, “அச்சோ… போதும் போங்க.. ஓவர் கொஞ்சலா இருக்கு இன்னைக்கு..” என்றவள் அவன் மீதே தலைவைத்து படுத்துக் கொள்ள, அவன் கைகள் இயல்பாக அணைத்துக் கொண்டது அவளை.
இருவரும் களித்து களைத்திருக்க, சுகமான ஒரு அமைதி முழுதாக வியாபித்திருந்தது அவர்களை. அதைக் கெடுக்கவென்றே பூஜை வேளை கரடியாக மனோ அழைத்துவிட்டான் திருமகளுக்கு.
“இவர் ஏன் எனக்கு கூப்பிடறாரு..” என்று வாசுதேவனை திருமகள் கேட்க,
“அவன்கிட்ட கேளுடி..” என்று அவள் தலையைப் பிடித்து ஆட்டினான் வாசுதேவன்.
அவனை முறைப்புடன் பார்த்துக்கொண்டே திரு அழைப்பை ஏற்க, எதிர்முனையில் “என் மகனோட சித்தி இருக்காங்களா..” என்றான் மனோ..
திரு என்ன பதில் சொல்வதெனப் புரியாமல் அமைதியாக “உன் அக்காவுக்கு அம்மா கிடையாது நாச்சியார்.. ஒரு பெண்ணுக்கு பிரசவம் எத்தனை முக்கியம்ன்னு உனக்கு நான் சொல் வேண்டாம். அவ அம்மா அப்பாவோட இறப்புக்கு அவதான் காரணம்ன்னு ரொம்ப வேதனைபட்டுட்டா.. நீ கொடுக்கிற ஒரே ஒரு மன்னிப்பு அவளை இயல்பா இருக்க வைக்கும் திரு..”
“முடிஞ்சா எங்களை மன்னிச்சு எங்களுக்கு உறவுகளை கொடு. ரெண்டு பேருமே இந்த நிமிஷம் அனாதைகள் தான். ஒருவேளை நீ நினைச்சா எனக்கு ஒரு அண்ணனையும், அம்மா, அப்பாவையும் கொடுக்க முடியும். என்னை வச்சு என் மனைவிக்கும் இந்த உறவுகளெல்லாம் திரும்ப கிடைச்சிரும்..” என்று அவன் பேசிக்கொண்டே செல்ல, இங்கு திருவின் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.
வாசுதேவன் அதுவரை அமைதியாக வேடிக்கைப் பார்த்தவன் அவள் அழவும், அலைபேசியை தான் வாங்கிக் கொண்டான்.
“ஏன்டா என் பொண்டாட்டியை அழ வைக்கிற..” என்று மனோவை வேறு அதட்ட,
“அழறாளா அண்ணா..” என்றான் மனோ..
“அழல.. ஆனா கண்ணு மட்டும் லேசா வேர்க்குது என் பொண்டாட்டிக்கு..” என்று வாசுதேவன் சிரிக்க, அவன் பேச்சில் வழக்கம் போல் அவனை கிள்ளி வைத்தாள் திரு..
“ஸ்ஸ்ஸ்..” என்று அவன் அலற, மனோ புரிந்தவனாக “நீங்க பாருங்கண்ணா.. நான் அப்புறம் கூப்பிடறேன்..” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
“ஏன்டி என் மானத்தை வாங்குற..”என்று அலைபேசியை கட்டிலில் போட்டவன் அவள் கையைப் பிடித்து அழுத்த,
“நான் அழுதா நீங்க கிண்டல் பண்ணுவிங்களா..” என்று கோபம் கொண்டாள் திரு.
“என் பொண்டாட்டி அழுதான்னு வெளியே தெரிஞ்சா அவ கெத்து என்னாகுறது… அதான் கண்ணு வேர்க்குதுன்னு சொன்னேன்..” என்று மீண்டும் வாசுதேவன் வம்பிழுக்க,
“விளையாடாதிங்க மாமா.. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க..” என்று அவன்மீது சாய்ந்து கொண்டாள் திரு.