அத்தியாயம் -15(2)

காலை உணவுக்கு பின் கோயில், நண்பர்கள் பார்க்க என செல்லும் ரமணி தாத்தா பதினோரு மணிக்கு மேல்தான் வீட்டிற்கு வருவார். தமிழ் தினசரிகள் எல்லாமே வீட்டுக்கு வரும்.

திண்ணையில் அமர்ந்து காலையில் முக்கிய செய்திகள் மட்டும் படித்தவர் ஒரு வரி விடாமல் படிக்க தொடங்கி விட்டார். பாட்டி அவரது அறையில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்.

உத்ரா கோவம் கொண்டு சென்றவள்தான், மீண்டும் சமையலறை பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை.

மதிய சாப்பாட்டுக்கு ஒரு மணிக்கு வந்தார் மலையரசன். அவரோடு பெரியவர்களும் சாப்பிட்டு ஓய்வெடுக்க சென்று விட்டனர். இரண்டு மணி போல வந்தான் ஆதவன். இனி மாலை ஆறு மணிக்கு சென்றால் போதும்.

மகனுக்கு பரிமாறிய துர்கா சமையலுக்கு உதவ வரவில்லை மருமகள் என குறை படிக்க ஆரம்பித்தார்.

“கடைய பார்த்துக்க போனா வீட்ல இருக்க நேரம் கூட ஒத்தாசை செய்ய மாட்டாளாமா உன் பொண்டாட்டி?” என கேட்டுக் கொண்டே தானும் சாப்பிட அமர்ந்தார்.

“உடம்பு முடியலையோ என்னவோ ம்மா” சமாதானம் செய்தான் ஆதவன்.

“எல்லாம் நல்லாத்தான் இருக்கா. முதல்ல சமையல் அவதான் செஞ்சிட்டு இருந்தா, அளவெல்லாம் மாத்தி மாத்தி செஞ்சான்னு சொல்லி கொடுக்கலாம் நினைச்சா வீம்பா பேசிட்டு ரூம் போனவதான், இன்னும் அங்கேயே என்ன செய்வாளோ?”

“அவ இன்னும் சாப்பிடலையா? நீ கூப்பிட வேண்டியதுதானே ம்மா?” அம்மாவின் குறையை ஒதுக்கி விட்டு விசாரித்தான்.

“உள்ள போனவ வெளியிலேயே வரலைங்கிறேன். மகாராணிக்கு நான் போய் கூப்பிட்டு சோறு போடணுமா” ஆத்திரமாக கேட்டுக் கொண்டே சாப்பிட்டதில் துர்காவுக்கு புரை ஏறியது.

இடது கையால் அம்மாவின் தலையில் தட்டி தண்ணீர் கொடுத்தவன் பாதி சாப்பாட்டிலேயே எழுந்து செல்ல, “டேய் சாப்பிட்ரா” என சத்தமிட்டார் துர்கா.

“வர்றேன்” என சொல்லிக் கொண்டே அறைக்கு சென்று விட்டான்.

தரையில் சுருண்டு கொண்டு படுத்திருந்தாள் உத்ரா.

“உத்ரா சாப்பிடலாம் வா” என அழைத்தான்.

“ஒண்ணும் வேணாம், அந்த சுதா கைல போய் சாப்பிடுங்க போங்க” என சீறினாள் உத்ரா.

“ஏய் எதுக்கு இப்போ அவ பேரை இழுக்குற? ஒழுங்கா எழுந்து வா”

“நான் வரலை” அழுகையோடு சொல்லி திரும்பி படுத்தாள்.

“தெரியாத விஷயத்தை சொல்லி கொடுத்தா கத்துக்கணும், அதை விட்டுட்டு பெரியவங்களோட மல்லுக்கு நிப்பியா? என்ன செய்யணும், எங்கம்மா வந்து உன் கால்ல விழணுமா? எழுந்திரிக்கிறியா இல்லையாடி இப்போ?” அதட்டல் போட்டான்.

எழாமல் நேராக படுத்தவள், “உங்கம்மா நடந்ததை முழுசா சொல்லலையா?” எனக் கேட்டு சரியாக விளக்கினாள்.

“சரி விடு, அவங்களுக்கும் சுதாவ ரொம்ப பிடிச்சிருந்தது. ஏதோ ஆதங்கத்துல பேசியிருப்பாங்க, பெருசு பண்ணாத, இப்போ வா”

கையில் ஏதாவது சிக்கினால் அவன் தலையை குறி பார்த்து அடித்து விடும் அளவு ஆத்திரம் எழ கண்களை மூடி அடக்கிக் கொண்டவள், “உங்களுக்கு உங்கம்மா எவ்வளவோ தேவலாம், போய்டுங்க இங்கேர்ந்து” என்றாள்.

“ரொம்ப பொறுமையா போனா என்னடி ரொம்ப பண்ற?” எனக் கேட்டவன் வேகமாக கையை சுத்தம் செய்து கொண்டு அவளை வலுக்கட்டாயமாக எழுப்பி நிறுத்தினான்.

அவள் சிவந்து போன முகமும் அழுத விழிகளுமாக நிற்க, “சாப்பிடு முதல்ல” என சொல்லி தர தரவென வெளியில் உணவு மேசைக்கு இழுத்து சென்றான்.

துர்காவும் சரியாக சாப்பிடாமல் கை கழுவி விட்டு என்னதான் நடக்கிறது என பார்க்க ஹாலில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார்.

உத்ராவை நாற்காலியில் அமர வைத்துக்கொண்டே, “எங்கம்மா என் சாப்பாடு?” தான் சாப்பிட்ட தட்டை காணாமல் கேட்டான்.

“நீ உன் பொண்டாட்டிய அழைச்சிட்டு வர்ற வரைக்கும் ஆறாம அப்படியே இருக்குமா? வேற போட்டுக்க” என்றார் துர்கா.

உத்ராவின் பக்கத்தில் அமர்ந்தவன் இரு தட்டுக்கள் வைத்து பரிமாறி, “சாப்பிடு” என்றான்.

வேண்டாம் என அழுத்தமாக அவள் அமர்ந்திருக்க, “எனக்கும் நல்ல பசி, நீ சாப்பிடாம நான் சாப்பிட மாட்டேன்” என்றான் ஆதவன்.

“எனக்காக யாரும் இங்க பட்டினி கிடக்க வேணாம்” என கோவமாக சொன்னாள்.

“நீ யாருக்காக பட்டினி கிடக்குற இப்போ?”

“என் விதியை நினைச்சு… என் முட்டாள் தனத்தை நினைச்சு…” என மூக்கு விடைக்க சொன்னவளின் கண்களில் இருந்த சூடான கண்ணீர் வடிந்தது.

அமைதியாக தன் தட்டில் இருந்த சாதத்தை பிசைந்தவன் உருண்டை பிடித்து அவள் வாய்க்கு கொண்டு செல்ல அவன் செய்கையை நம்ப முடியாமல் பார்த்தாள் உத்ரா.

“அம்மா தெரியாம சொல்லிட்டாங்க, ப்ளீஸ் சாப்பிடு” என ஆதவன் கேட்க இன்னும் அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. ஆனால் வாய் திறந்து சாப்பாட்டை வாங்கிக் கொண்டாள்.

இன்னும் இரண்டு முறை ஊட்டியவன் அந்த தட்டை அவள் முன்பு வைத்து விட்டு, “எனக்கும் பசிக்கும்” என்றான்.

உத்ரா அவளே சாப்பிட ஆரம்பிக்க இவன் கையை கழுவிக் கொண்டு வந்து இன்னொரு தட்டில் இருந்த சாப்பாட்டை உண்ண ஆரம்பித்தான்.

சுடிதார் துப்பட்டா கொண்டு முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு சாப்பிடுவதை தொடர்ந்தவள் அவனுக்கும் பார்த்து பரிமாற ‘அம்மா தெரியாம சொல்லிட்டாங்க’ என்ற மகனின் வார்த்தையில் உழன்று கொண்டிருந்த துர்கா கோவத்தை சுமந்து கொண்டு அறைக்கு சென்று விட்டார்.

இருவரும் அறைக்கு வந்த பின் ஆதவன் கட்டிலில் படுக்க உத்ரா தரையில் படுக்க போக, “பெட்லேயே படு” என்றான்.

அவள் தயக்கமும் ரோஷமுமாக நிற்க, “உங்க அண்ணாத்தே வாங்கி கொடுத்ததுதான். நான்தான் படுக்க தயங்கணும் நீ இல்ல. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தாதான் ஈவ்னிங் ஒழுங்கா பேஷண்ட்ஸ் பார்க்க முடியும், வா” என தண்மையாகவே சொன்னான்.

“நீங்க ஹாஸ்பிடல் போயிட்டு வந்து குளிக்க மாட்டீங்களா?” எனக் கேட்டுக் கொண்டே கட்டிலின் இன்னொரு பக்கம் படுத்தாள்.

“ஹாஸ்பிடல்ல ஸ்டெரைல் ட்ரெஸ் இருக்கு, அதைத்தான் போட்டுக்குவேன், நைட் குளிச்சிடுவேன். உனக்கு இன்ஃபெக்ஷன் ஆகிடாது கவலை படாத”

“எனக்காக சொல்லல”

“ஓகே எனக்காக சொன்னாலும் அதான் பதில்”

“எப்ப எழணும் நீங்க?”

“நாலு நாலரைக்கு தன்னால முழிச்சிக்குவேன். நீ நல்லா தூங்கு, நைட்டும் சரியா தூங்குறது இல்ல நீ” என்றான்.

‘இவனுக்கு என்னவாகி விட்டது?’ என்ற வியப்போடு கண்களை மூடிக் கொண்டாள் உத்ரா.

இன்று காலையில் அவன் மருத்துவமனை நுழையும் போதே திருமணமாகி சில நாட்களே ஆன பெண் தற்கொலை முயற்சி செய்து கேஷுவாலிடியில் அனுமதிக்க பட்டிருந்தாள். சிகிச்சை பலனின்றி இறந்தும் விட்டாள். அவளின் கணவன் தலையில் அடித்துக் கண்டு கதறினான். அந்த கதறலும் நடிப்பு போல தெரியவில்லை.

அந்த பெண்ணின் உறவினர்கள் அங்கேயே பையனையும் அவன் வீட்டினரையும் அடித்து சண்டையிட்டு கலவரமாகிப் போனது. போலீஸ் வந்துதான் நிலைமை கட்டுக்குள் வந்தது.

அந்த பெண்ணுக்கு என்ன பிரச்சனை என்பது பற்றி ஆதவனுக்கு சரி வர தெரியாது. ஆனால் இருபது வயது இளம் பெண். நிரந்தரமாக மூடி விட்ட இமைகளின் உள்ளே அடைப்பட்டிருக்கும் கண்கள் என்னென்ன கனவுகளை கண்டிருக்கும்?

அந்த பெண்ணின் மரணத்தால் காலையிலேயே அவனது மனம் கனக்க தொடங்கி விட்டது. அதை பற்றி நினைத்துக்கொண்டே உத்ரா பக்கம் திரும்பினான். மின் விசிறியின் காற்றில் முன்னுச்சி முடிகள் முகத்தில் புரள இரண்டு கைகளையும் தலைக்கு அடியில் கொடுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

உத்ராவுக்கு நல்ல பெரிய விழிகள். உற்று நோக்க கண்களை சுற்றி லேசாக கருமை படர தொடங்கியிருப்பது புலனாகியது. கண்கள் மூடியிருந்தாலும் நீளமான இமைகள் அவனுக்கு சொல்லாமல் சொல்லின, எமக்குள் பாதுகாப்பாக இருக்கும் விழிகளுக்கும் கனவுகள் உண்டென.