தன்னைத் தாக்க வந்தவர்களின் மீது எதிர்தாக்குதல் நடத்திய தேவா , அவனிடமிருந்து தப்ப முயன்றவனிடம் யார் அனுப்பியது எனக் கேட்டு அடிக்க..அவனோ சொக்கலிங்கத்தின் பெயரைச் சொன்னான். அவன் கையிலிருந்த தாமரையின் புகைப்படத்தைக் காட்டி … “இந்தப் பொண்ணையும் அது கூட இருக்கிறவனையும் போட்டுத் தள்ளச் சொன்னாங்க..” என்றதும் தேவா ஒரு நொடி அதிர்ந்து நின்று விட்டான்.
“என்ன அப்பாவா…” என நினைத்து வருந்தியவனது கரங்கள் சிறிது தளர்ந்த நொடியில் கீழே கிடந்த கட்டையால் தேவாவின் தலையில் அடித்து விட்டு ஓடி விட்டான். திடகாத்திரமான மனிதன் என்பதால் தலை வலித்தாலும் சிறிது சுதாரித்துக் கொண்டான். இரத்தம் வரவில்லை என்றாலும் அடிபட்ட இடம் வீங்கிக் கொண்டது.
அவனது வாகனத்தை அந்தப் பக்கமாக தான் நிறுத்தியிருந்தான்
சொக்கலிங்கத்தின் பெயரைக் கேட்டது வருத்தத்தைக் கொடுத்தது. வீட்டிற்குச் சென்று அவரிடம் சொல்லி தாமரையைத் தொந்திரவு செய்வதை நிறுத்த வேண்டும்… என எண்ணினாலும் தாமரைக்கும் விஜயிற்குமான காதல் எப்போது எப்படி… அப்படியானால் இருவரும் ஒரே பெண்ணை விரும்பி அவளைக் குறித்து தான் பேசியிருக்கிறோமா..
“ஐயோ செல்விக்கும் அடிபட்டதே எங்கே எந்த மருத்துமனையில் இருக்கிறாளோ.. ஆதவனுக்கு தகவல் தர வேண்டுமே … ஐந்து நிமிடமே என்றாலும் விஜயின் பதற்றத்தோடு கூடிய காதலையும் , செல்வி சொன்ன வார்த்தைகளும் அவர்களின் காதலை தனக்கு உணர்த்தியதே .. _ ஐயோ அப்பா…” என யோசித்தவன், தாமரையின் காதலை அறிந்தால் இருவரையும் … என நினைத்தவனுக்கு தலை வலித்து மயக்கம் வருவது போல் இருந்தது. அதைக் காட்டிலும் காதலி தனக்கு இல்லை என்ற துக்கம் இதயத்தையும் அழுத்த வண்டி கைகளில் தடுமாற எதிரில் வந்த லாரியில் மோதியிருந்தது.
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம்மறக்காதம்மா
இறந்தாலும் காதல்இறக்காதம்மா…
இரத்த வெள்ளத்தில் கிடந்தவனின் மனம் காதலியை நினைத்தவாறே புன்னகைக் கொண்டு மயக்கத்திற்குச் சென்றது. அந்தச் சமயம் தான் ஆதவன் அங்கு வந்திருந்தான். நசுங்கிய நிலையில் ஓரமாகக் கிடந்த வாகனத்தை அடையாளம் கண்டு பதறியே ஆதவன் தனது வண்டியிலிருந்து இறங்கி வந்துப் பார்க்க , தேவராஜன் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைக் கண்டு வேகமாக வந்து தூக்கியவன் , தனது வன்டியில் ஏற்றிக் கொண்டு தந்தையை சேர்த்திருக்கும் மருத்துவமனைக்குச் சென்றான்.
மதுரை திருவிழா கூட்ட நெரிசலில் வண்டி ஓட்டி வருவதற்குள் அதிக இரத்தம் போயிருந்தது. அவனை ஸ்டரக்சரில் வைத்து தள்ளிக் கொண்டுப் போகயில் கண் விழித்து ஆதவனை உணர்ந்த தேவராஜன் , “செல்வி… செல்வி… காப்பாத்து மச்சான்…” என்பதற்குள் அவனையும் அவசர பிரிவுக்கு அழைத்துச் செல்லும் போது தான் தேவகியும் , தில்லையும் தேவா என்பதையே உணர்ந்தார்கள்.
தேவகி “ஓ” என்ற கத்தலுடன் மயங்கி மகன் மீதே விழுந்தார் என்றால்.. தில்லை வெறித்துப் பார்த்த வண்ணம் நிற்க.. அவளது புருவம் நெறிபட்டு அவளது கால்களின் வழியே உதிரம் தரையை அடைந்ததைக் கண்ட செண்பாவும் பாக்யமும் அலறினார்கள்.
இடுப்பில் கை வைத்தவாறு விழப் போனவளை ஆதவன் தாங்கிப் பிடித்தவனுக்கும் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து அழுகை வந்து “டாக்டர் ” என மருத்துவமனையே எதிரொலிக்கும் வகையில் கத்தினான்.
இப்போது தில்லையும் அவசர சிகிச்சைப் பிரிவில் … சொக்கலிங்கம் மகனைப் பார்த்து அதிர்ந்த நிற்க … தேவா இறுதியாக , ” விட்டுருப்பா…” என்றவாறு கண்கள் மூடிக்கொண்டான். ஆதவனுக்கும் இடி மேல் இடியாக இந்த வார்த்தைகள்.. சொக்கலிங்கத்தை கண்கள் சிவக்கப் பார்த்தான்.
இடிந்து போய் அமர்ந்திருந்த சொக்கலிங்கத்தைக் காண வந்த ஒருவன் ,
“அந்த பொண்ணு தண்டவாளத்துல கிடந்துருக்கு, கூட இருந்தவனையும் அடிச்சுப் போட்டாச்சு .. ஆனா வண்டியில போறப்ப தானாவே லாரி ஏறிடுச்சு…” என்ற தகவலைத் தர … அவருக்கு சர்வமும் ஒடுங்கி விட்டது.
அங்கு தாமரையைத் தூக்கிச் சென்றவனும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வெளியே நிற்க… தலையில் அடிபட்டதால் தையல் போட்டு சிறிய அறுவை சிகிச்சையும் இருக்கும் என ஃபாரம் நிரப்பித் தரச் சொல்ல… திருமதி தாமரை செல்வி விஜயானந்த் என நிரப்பிக் கொடுத்தவன் , ஆதவனுக்கு தகவல் தர அவனது வீட்டிற்கு இரவில் அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தான்.
யாரும் வீட்டில் இல்லாததால் தோட்டத்துக் காவலாளி தான் வாசலுக்கு வெளியே கட்டில் போட்டு அமர்ந்திருந்தார். ஓயாது தொலைப்பேசி அழைக்கவும் , எடுத்துக் காதில் வைத்தவரிடம் விஜய் பேசுவதாகக் கூற… காவலாளி அருணாச்சலம் மருத்துவமனையில் இருப்பதால் அனைவரும் அங்கிருப்பதாக தெரிவித்தான். அவனிடம் மருத்துவமனையின் பெயரைச் சொல்லி ஆதவனை உடனே வருமாறு தெரிவிக்க வேண்டும் என்றுக் கூறி விட்டு வைத்து விட்டான்.
ஆதவன் நிலை மிகக் கொடூரமாக இருந்தது… தனக்கும் தந்தைக்கும் விசுவாசமானவர்களைக் கொண்டு தாமரையைத் தேடச் சொல்லியிருக்க… ம்ஹூம் இதுவரையிலும் ஒரு தகவலும் இல்லை. அவனால் உடனே வெளியே செல்ல முடியாத நிலையை தாங்கவே முடியவில்லை .. ஒரு புறம் தன் தந்தை , ஒரு புறம் மச்சான் , மற்றொரு புறம் தன் மனைவியும் இந்த ஐந்து மாதமாக தொட்டுப் பார்த்து பொக்கிஷமாக பாதுகாத்த குழந்தை , ஆம் அளவுக்கதிகமான அதிர்ச்சியில் உதிரப் போக்கு ஏற்பட்டு விட குழந்தை உலகத்தைக் காணாமலே இந்த உலகத்தை விட்டுச் சென்றிருக்க… தில்லையின் உயிரைக் காப்பாற்ற உடனே குழந்தையை வெளியே எடுக்கப்பட வேண்டிய நிலை.
இதில் தங்கையும் உயிரோடுதான் இருக்கிறாளா தெரியாது… தந்தையும் காப்பாற்று என்கிறார்… மைத்துனனும் காப்பாற்று என்கிறான். ஒன்றும் செய்ய இயலாதவனாக யாரைப் பார்க்க என்ற நிலையில் முப்பதை மட்டுமே நெருங்கும் அந்த ஆண்மகன் நின்றான். அவன் வயதிற்கு இது மிகப் பெரிய பாரம்… அதிலும் தில்லை விரும்பிய..ஆசை ஆசையாக காத்திருந்த பெண் குழந்தை கடவுளிடத்தில் சென்றிருந்தாள்.
தேவகி தலையிலடித்து உருண்டு பிரண்டு அழ ஆதவன் கையில் வாங்கிப் பார்த்துக் கொண்டே இருந்தான்.. மீனாட்சி தான் தெரிந்தார். இதோ விடிந்திருந்தது.. ஊரே மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண வைபவத்திற்கு தயாராகிக் கொண்டிருக்க … ஆதவன் வீட்டுக் காவலாளி வந்தவர் , விஜய் கொடுத்த தகவலைத் தெரிவிக்கவும் பரபரப்பானவன் உடனே அந்த மருத்துவமனைக்கு கிளம்பி விட்டான்.
இரவில் தாமரையை அறுவை சிகிச்சைக்கு அனுப்பிய போது அவளணிந்திருந்த அணிமணிகள் விஜயின் கையில் கொடுக்கப்பட்டது. அதில் அவன் அணிவித்த மோதிரமும் இருக்க , அதனைக் கையில் வைத்துக் காத்துக் கொண்டிருக்கையில் , அவள் அணிந்திருந்த குருதிப் படிந்த உடைகளோடு… முதன்முதலாக அவனை மயக்கிய கார் குழலும் குப்பைத்தொட்டிக்கு எடுத்துச் செல்லும் முன் அவனிடம் காண்பிக்கப்பட்டது.
மற்றதை எடுத்துப் போக விட்டவன் அந்த பின்னலிடப்பட்ட இரத்தம் படிந்து இருந்த அந்த ஜடையை கையில் வைத்துக் கொண்டவன் கண்ணில் நீர் தரதரவென வழிந்தது. அவளுக்காக வாங்கப்பட்ட மதுரை குண்டுமல்லியையும் அவனது பேன்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்தவன் கண்ணில் ஒற்றிக் கொண்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான்.
வானம் உள்ள காலம் மட்டும்
வாழும் இந்தக் காதல்
இதுதான் தேவன் ஏற்பாடு
இணைத்தான் பூவை காற்றோடு..
சுத்தம் செய்யும் அம்மாவும் அங்கிருந்த ஒரு சில நர்சுகளும் பார்த்துக் கொண்டுதானிருந்தனர். அப்போது எல்லாம் இப்போது போல் பண பரிவர்த்தனை செய்ய இயலாதே.. அவனது செக் புத்தகம் அறையில் வைக்கப்பட்டிருக்க மருத்துவமனைக்கு பணம் கொடுக்க அதை எடுக்கப் போனவன் அறையை காலி செய்து விட்டு , ஆதவன் வீட்டிற்கு தகவல் தந்துவிட்டு வந்து அமர்ந்து தான் இப்படி அழுதுக் கொண்டிருந்தான்.
அந்த அம்மா அந்த ஜடையை அவனிடமிருந்து வாங்கி, “சாமி … தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதா நினைச்சுக்க சாமி …மசுறு போனா வளர்ந்துரும் உசுரு போனா வருமா … நீ கிடைக்க உன் பொண்டாட்டி கொடுத்து வச்சுருக்கா… டாக்டருங்க உசுர காப்பத்திட்டாக… இன்னைக்கு மீனாட்சி திருக்கல்யாணம் ,ஆப்பரேசனுக்கு கழட்டுன தாலிய கோவில்ல போட்டுட்டு புதுத் தாலிய வாங்கிப் போடு சாமி …சுமங்கலி புள்ள… ” என ஆறுதல் கூறி விட்டு நகரும் போது தான் தாலி வாங்கியதும் நியாபகம் வர , அதனைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
காவலாளி சொன்ன உடனே கிளம்பி வந்த ஆதவனுக்கு அந்த மருத்துவமனையில் என்ன சொல்லி விசாரிப்பது என்றுக் கூடப் புரியவில்லை. மனதில் பயமும் குடிகொண்டது. நண்பனே பேசியிருக்கிறான் என்றால் அவன் நன்றாக இருக்கிறான் என்று தான் அர்த்தம் … அப்படியானால்… அவ்வளவு பெரிய மருத்துவமனையில் விஜயைத் தேடுவதும் சிரமம்.. எனவே வரவேற்பாளரிடம் ,
” இங்க தா..தாமரைசெல்வினு யாரும் அட்மிட் ஆனாங்களா..” எனப் பதற்றத்துடன் கேட்க… அந்தப் பெண்ணும் தனக்கு முன்னிருந்த பெரிய கம்யூட்டர் திரையில் அந்தப் பெயரைத் தேடி, வேறொரு தளத்தில் இருக்கும் ஐ சி யுவில் இருக்கிறார் என்றதும் பாதி கலக்கம் பாதி நிம்மதி என அங்கு ஒடினான்.
விஜய் அப்போதுதான் அந்த தாலியை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க , வேகமாக அருகில் வந்து நின்றான் ஆதவன். அவனை நிமிர்ந்துப் பார்த்து எழுந்த விஜய்க்கும் சரி ஆதவனுக்கும் சரி ஒருவருக்கொருவர் ஆறுதல் தேடிய மனது என்பதால் இருவருமே அணைத்துக் கொண்டு கண்ணீர் விட ஆரம்பித்தனர்.
யாருக்கு என்னப் பேசுவதென்றே தெரியவில்லை. “பாப்பா… பாப்பா…” என்ற ஆதவனின் கைப்பிடித்து அழைத்துச் சென்ற விஜய் , தலையில் பெரிய கட்டோடும் கை கால்களில் சில கட்டுக்களோடும் கண்மூடி இருந்தவளைக் கண்டு ஆதவனுக்கு இதயம் மேலும் நொறுங்கியது.
“ஆதவா.. தாமரையோட இந்த நிலமைக்கு யார், என்னக் காரணம் தெரியாது.. ஆனா இப்ப சொல்லப்போற சில உண்மைகளுக்கு என் கிட்ட சாட்சிகள் கிடையாது.. ஆனா அதுதான் உண்மை… ” என்றவன் முதன் முறையாக ஆதவன் வீட்டிற்கு வந்த போது அவன் தங்கை மீது காதல் கொண்டு தினமும் கல்லூரி வரைச் சென்று தான் காதல் வளர்த்த கதையைச் சொன்னவன், இத்தனை வருடங்கள் கழித்து அவளை சந்திக்க வந்ததையும் , இம்முறை ஆதவனிடம் பெண் கேட்டு திருமணம் செய்துக்கொள்ள விரும்பியதையும் கூறியவன் , அதற்காக தான் தயாராக வந்ததையும் தெரிவித்தான்.
ஆதவன் நம்ப முடியாமல் திகைத்து நின்றுக் கொண்டிருந்தான்.. ஆனாலும் நம்பாமலும் இருக்க முடியவில்லை.. இறுதியில் ஆதவன் கையைப் பற்றிக் கொண்ட விஜய்,
“தாமரை சொல்லாம நீ நம்ப போறது இல்ல தான் … ஆனா எங்க காதலுக்கு அந்தக் கடவுள் மட்டுமே சாட்சி… இனி அவள ஒரு நொடிக் கூட பிரிஞ்சு இருக்க முடியாது ஆதவ் .. நேற்று என்னவெல்லாம் ஆனதுத் தெரியுமா.”என்ற விஜய் இரயில் நிலையத்தில் நடந்ததை தெரிவித்து … தாலியை எடுத்துக் காட்டியவன் ,
” இதை இப்ப உன் சம்மதத்தோட தாமரை கழுத்துலப் போட்டு, இந்த ஊரை விட்டு என்னோடவே அழைச்சுட்டுப் போறேன்.. என்னால என் தாமரைய இனி தனியா விட முடியாதுப்ளீஸ் ஆதவ்… ” என்ற நண்பனின் கண்களிலும் வார்த்தைகளிலும் உண்மை மட்டுமே தெரிந்தது.
“என் தங்கையை நான் காக்க தவறிவிட்டேனா…”மனம் வருந்தினாலும், அ இன்றைய நிலையில் தாமரையையும் பாதுகாக்க வேண்டும் .. எனவே ,
“ஆனந்த் .. நான் உன்னைய நம்பாம இருப்பேனாடா… உன்னையப் போல ஒருத்தன் என் தங்கைக்கு கணவனாகிறது அந்தக் கடவுளோட முடிவு .. நீ தாலிக் கட்டு விஜய்…” என்றான். ஊரே மீனாட்சி திருமணத்தை கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்க, சுயநினைவின்றி படுத்திருந்தவள் கழுத்தில் தாலியை அணிவித்தான் விஜய்.
காலங்கள் நேரங்கள்..பாலம் அமைக்க
கையோடு கையென்று சேர்ந்திருக்க
இன்றே தான் ஒன்றானோம்
நாதமோடு பாடல் இன்று…
அந்த மதுரை மீனாட்சியின் திருமணத்திற்கு அவளது சகோதரனால் வர இயலவில்லை. இங்கு தாமரையின் திருமணத்திற்கு அவள் சகோதரன் மட்டுமே சாட்சியானான்.
மருத்துவர்கள் அவளைப் பார்க்க வரவும் , நண்பர்கள் இருவரும் அவரிடம் விவரம் கேட்டுக் கொண்டவர்கள் வெளியே வந்தனர். இன்று மாலைக்குள் மயக்கம் தெளிந்து விடுவாள்… முழுவதுமாக குணமாக ஒரு மாதமாவது ஆகும்.அதுவரை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று விட்டார்.
தேவா, விவரம் எதுவும் கூறவில்லையா… அவன் எப்படி இருக்கிறான் என கேட்கவும் அவர்கள் நிலையை அறிய துடித்த ஆதவன் , விஜயிடம் ,தன் தந்தைக்கு இருக்கும் அரசியல் எதிரி தான் தன் தங்கையின் இந்த நிலைக்கு காரணம் என தெரிவித்தவன் ,
“ஆனந்தா.. நீ இப்ப என் நண்பன் மட்டுமல்ல… என் தங்கச்சி கணவர் கூட… இப்ப அவளப் பாதுகாக்கிற பொறுப்ப உன்கிட்ட கொடுத்துட்டு கிளம்பறேன்… இப்ப உயிரோட இங்க இருக்கிறான்னு தெரிஞ்சாலே திரும்ப அவ உயிருக்கு ஆபத்து வரலாம்…அதனால பாப்பாவ இங்கேயிருந்து எப்படியாவது அழைச்சிட்டுப் போயிருடா… இப்ப அப்பா ஹாஸ்பிட்டல்ல… தேவாவும் ஹாஸ்பிட்டல்ல… நான் அவங்கள பார்க்கணும்… நானே உன்னையப் பார்க்க வாறேன். சொல்ல முடியாது பாப்பாவ தேட ஆள் விட்டதால என்னையும் டார்கெட் பண்ணலாம் … இன்னைக்கு போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணினா அதுவும் பிரச்சினையோனு இருக்கு … அங்கே நான் பார்த்துக்கிறேன்.. நானே உனக்கு ஃபோன் பண்றேன்… இங்கேயிருந்து பாப்பாவ அழைச்சிட்டுப் போக ஏற்பாடு பண்ணு. நானே கிளம்பும்போது வந்துடுவேன். நீ பாப்பாவ பார்த்துக்குவன்ற நம்பிக்கைல நான் கிளம்பறேன்” என்றவன் தங்கையை ஒரு முறைப் பார்த்து விட்டு , விஜயையும் கட்டியணைத்து விட்டு கிளம்பி விட்டான்.
தாயாக , தந்தையாக , சகோதரனாக தன் தங்கைக்காக போராடிக் கொண்டிருந்தான் ஆதவன்.