அலை 29

             ஆதவனுக்கு ஒன்றும் ஓடவில்லை தந்தையைப் பார்ப்பதா , தங்கையைப் பார்ப்பதா…. கூடவே வீட்டில் கலவரமாகிக் கொண்டு இருக்க, மனைவியும் குழந்தையும் தனியாக விட்டு வந்தோமே என்று இருக்க , அவனது மருத்துவரும் அத்தையுமான காயத்ரி அவனிடம், “ஆதவா அண்ணன மதுரைக்கு அழைச்சுட்டுப் போப்பா… ஹார்ட் அட்டாக் தான் … அங்க தான் பார்க்க முடியும்.” என்று விட , மருத்துவமனை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டிருக்கவுமே தில்லையும் தேவகியும் வந்திருந்தனர்.

சுவாசக் கருவிகளுடன் படுத்திருந்தவர் ,மெல்ல கண் திறந்து , ” இப்படி பண்ணிட்டானே அந்த செல்லப்பாண்டி… என் பொண்ணு என் பொண்ணு… நாம பாதுகாத்தாலும் அவன் திரும்ப விட மாட்டான்.. பாப்பா உயிரக் காப்பாத்துப் பா ” என மூச்சு வாங்கியவர் அருகில் தேவகியும் தில்லையும் வரும் போது,

“போனவ போனவளாவே இருக்கட்டும் தேட வேண்டாம்… ” என மகனின் கைப்பிடித்துக் கொண்டார். அவர் அப்படிச் சொன்னது , மகளை மகன் காப்பாற்றினாலும் இங்கு வந்தால் அவள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற காரணத்தால்.. ஆனால் தேவகியும் தில்லையும் எடுத்துக் கொண்ட விதம் வேறு. பிரமைப்பிடித்து நின்றவர்களையும் பின்னால் மற்றொரு வண்டியில் வரச் சொன்னவன் , தந்தையோடு ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்டான்.

“யாரும் என்ன பேசினாலும் அது உண்மையாகிடுமா… பாப்பாவுக்கு ஒன்னும் ஆகாதுப்பா…” என்றவனுக்கு உள்ளுக்குள் பயம் இருந்துக் கொண்டு இருந்தது. அந்த செல்லப்பாண்டி வேறு யாருமல்ல தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டதாக சொல்லப்பட்ட இளைஞனின் தந்தை தான். 

தன் மகனை இழந்து தவிப்பது போல் அதற்கு காரணமானவர்களின் குடும்பமும் தவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த ஊரின் பெரிய மனிதர்கள் குடும்பத்தில் ஏதோ ஒரு துக்க நிகழ்வு அந்த வாரத்தில் நடத்திக் கொண்டே இருந்தார். ஆனால் எல்லாம் இயற்கையாக நடப்பது போல் இருக்க… ஒரு கட்டத்தில்  செல்ல பாண்டியன் அருணாச்சலத்திடம் ,

“என்ன வருங்கால எம்எல்ஏ… செல்வம் மவன் குட்டைல குளிக்கப் போனவன் மூழ்கிட்டானா… ச்ச்… அடுத்து உன் வீடு தான் ” என மிரட்டியிருக்க , இவர்கள் காது குத்து நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து செல்லப்பாண்டியன் ஆதரவு ஆட்களைத் தான் காண சென்றிருந்தனர். அப்போது அங்கு வந்த தொலைப்பேசியில் ,

” எப்படி என் பிள்ளைய கொன்னு தற்கொலைனு தப்பிக்கப் பார்க்கறீங்களோ … அது போல உன் வீட்டுப் பொண்ணும் தண்டவாளத்துல அடையாளமே தெரியாம கிடப்பா… ஆனா பேச்சு எப்படித் தெரியுமா , ‘காதலனுடன் போன பெண் தற்கொலை … இல்லையா … அருணாச்சலம் மக ஓடிப்போய்ட்டா எப்படி … ரெண்டுல ஏதோ ஒரு பேச்சு இருந்து ..உன் ஊரே உன் குடும்பத்த காரி துப்ப வேண்டாம்… இன்னும் கொஞ்ச நேரத்துல உன் பொண்ண தூக்கிருவேன்ல… போடாய்ங்… “இன்னும் என்னென்னவோ காது கூசும் வார்த்தைகளைப்பேசி வைக்கவும் தான் வீட்டிற்கு வந்தார்கள்.

சொன்னது போல் தாமரையும் காணாமல் போயிருக்க… செல்வப் பாண்டியன் அங்கு நிறுத்தியிருந்த ஆட்களைக் கொண்டு அங்கு கலவரத்தையும் உண்டாக்கி இதோ ஆளுக்கொரு புறம் அல்லல் பட்டுக் கொண்டிருந்தனர். 

தில்லை எதுவும் பேசாமல் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருக்க, ஆதவன் அருகில் வந்தவன் , “பாப்பாவுக்கு ஒன்னும் ஆகாது… ” என அவள் கரம் பிடிக்க,

“ஏன் மாமா போனா…” என்ற கேள்வியைக் கேட்டு வைத்தாள். ஆதவனுக்கு அவள் கேள்வி அதிர்ச்சி அளித்தது.” தங்கை தானாக சென்றதாக மனைவியுமா நம்புகிறாள் என்ற அதிர்ச்சி தான். அதற்குள் மருத்துவர் அழைக்கவும் சென்று விட்டான். அருணாச்சலத்திற்கான சிகிச்சைகள் சென்றுக் கொண்டிருக்க , மருத்துவமனையில் மணி, பழனிச்சாமி, என அவர்களையும் அவர்களது மனைவிமார்களையும் துணைக்கு வைத்து விட்டு ஆதவன் தாமரையைத் தேடி பதற்றத்துடன் சென்றான்.

புலம்பிக் கொண்டிருந்த தேவகியிடமும் , வெறித்துக் கொண்டிருந்த தில்லையிடமும் செல்லப்பாண்டியன் விவகாரத்தை உடனே சொல்லவும் முடியாது. சொன்னாலும் புரிந்துக் கொள்ளக் கூடிய நிலையில் அவர்களும் இல்லை.

மருமகன் முன் அவனது தங்கையை சத்தமாக குறை சொல்லவில்லை என்றாலும் .. தில்லைக் காதில் விழுவது போல் தாமரையை திட்டி திட்டி அழுதுக் கொண்டிருந்தார் தேவகி .

தாமரையிடம் ஒரு அம்மா பேசிக் கொண்டே கைப் பிடித்து அழைத்துச் சென்ற நேரம் விஜய் அங்கு வந்து விட்டான். உள்ளேப் போகும் போது பட்டுச்சேலையின் மீது வெள்ளை கோட் அணிந்திருந்தவளது தலையில் வாடிய மல்லிகைப் பூச்சரம் நீண்ட ஜடைப்பின்னலில் தொங்கியது கண்டு பூ விற்றுக் கொண்டிருந்த ஒருவரிடம், விஜய் மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டு திரும்ப தாமரை கூட்டத்தில் கலந்திருந்தாள். வேகமாக அவள் சென்ற திசையில் அவளைத் தேடிக் கொண்டே அவனும் வந்துக் கொண்டிருந்தான்.

இதற்கிடையில் நுழையவே முடியாத கூட்ட நெரிசல் மிகுந்த மதுரை இரயில் நிலையத்தை தேவாவிற்குத் தெரிந்த வேறுபாதையில் வண்டியை செலுத்தி அதனை தண்டவாளம் அருகில் இருந்த செடிகளோரம் விட்டு வந்த தேவா , நடந்து தாமரையின் முகாம் நடந்த இடத்திற்கு வந்தான். வந்து நின்றவனை அப்போதுதான் மறைவுக்காக திரையிடப்பட்ட பகுதியிலிருந்து வெளியே  வந்த விஜயலெட்சுமி ,தேவராஜனைக் கண்டுப் புன்னகைத்தவள் ,

” வாங்க நீங்க திலோ மைனியோட அண்ணன் தானே.. ” என்றவளுக்கு ‘ஆம்’ என்பது போல தலையசைத்து தாமரையை கண்களால் தேடியவனிடம்,

“இப்ப தான் ஒரு எமர்ஜென்ஸினு ஸ்டேஷனுக்குள்ள போனா..” என்றதும் உன்ளேப் போகப் போனவனிடம் , “ஒரு நிமிஷம்..” என்றதும் நின்று திரும்பியவனிடம் ,

“என்னடா இந்தப் பொண்ணு இப்படிப் பேசுதுனு நினைச்சுராதீங்க… ” என்றவள் , “அது… உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு .. உங்கள அதிகம் பார்த்தது இல்ல.. ஆனா தாமரை உங்களைப் பத்திப் பேசுறத வச்சு எனக்கு உங்க மேல நல்ல அபிப்பிராயம் உண்டு…” என்றதும் , தாமரையின் மனதை அறிய விரும்பி ..

” என்ன… என்ன சொல்லுவாங்க..” என தேவா கேட்டதும் … “உங்கள அவ அப்பா , அண்ணன் ஸ்தானத்துல வச்சுப் பார்க்கிறா…” என்ற விஜயலட்சுமி அவனது குணநலன்களாக தாமரைக் கூறியவற்றைக் கூறி … சிறிது நாணத்துடன்,

” உங்களைப் போல ஒருத்தர நான் மிஸ் பண்ண விரும்பல.. எங்க அப்பாவும் ஊருல ஜவுளிக்கடை , பாத்திரக் கடைலாம் வச்சுருக்காங்க.. உங்களுக்கு கல்யாணத்துக்கு பொண்ணு தேடுறப்ப என்னையும் கன்ஸிடர் பண்ணுங்க… ” என்பதாகக் கூற தேவாவால் எதையும் யோசிக்க முடியவில்லை.

“என்னைய அவ அப்பா… அண்ணா ஸ்தானத்துல வைக்கப் போய் தான் நிச்சியம் பண்ணப்போறது பிடிக்காம வந்துட்டாளோ… ” என எண்ணிக் கொண்டு இருக்கும் போது தாமரையின் பின்னால் சென்ற செவிலியர்கள் திரும்பி வந்தவர்கள் விஜயலெட்சுமியிடம் ,

“தாமரை மேடத்த அந்த லேடி கையப் பிடிச்சு வேகமா அழைச்சுட்டுப் போச்சு …. எங்க போனாங்கனே தெரியல “என்றதும் தேவராஜான் இரயில் நிலையத்திற்குள் தாமரையைத் தேடிக் கொண்டே வேகமாகப் போனான்.

தாமரை கையை விடுங்கள் வருகிறேன் என்றதைக் காதிலேயே வாங்காத  பெண்மணியோ , பிளாட்ஃபாரம் முடிந்து, வெறும் கூட்ஸ் வண்டிகள் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்த .. இருள் சூழ்ந்த இடம் வரை அழைத்துச் செல்லவும் பயந்தவளை , அங்கே விட்டு விட்டு அந்தப் பெண்மணி தண்டவாளத்தை தாண்டி வேறுபுறம் சென்று விட்டாள். 

நடப்பது என்ன என்பதைப் புரியாமல் பிரமைப் பிடித்தவள் போல் நின்றவளை தேடி வந்த விஜயும் ,தேவாவும் வெவ்வேறு திசையிலிருந்துப் பார்த்து அவள் அருகில் வருவதற்குள் , தாமரையின் பின்னந்தலையில் மரக்கட்டைக் கொண்டு அடிக்கப்பட்டது. நடப்பதை உணர்வதற்குள் அடித்தவன் தாமரையை தண்டவாளத்தில் இழுத்து விட்டுச் சென்றான்.

ஆம்… அதே தாடி மீசைக்காரனே.. அவள் போட்டுவிட்ட கைகட்டோடு தான் அவளை தள்ளி விட்டிருந்தான். விஜய் , தேவா என இருவரும் ஒரே நேரத்தில் பிளாட்ஃபாரத்தில் இருந்து குதித்து தாமரையை நோக்கி ஓட முதலில் தேவா தான் அருகில் சென்றான் , விஜயும் அருகில் வந்தவன் தேவா தொட்டுத் தூக்குவதற்குள் ,தாமரையை தாண்டவாளத்தில் இருந்து ‘தாமரை’ என்ற அலறலோடு தூக்கிக் கொண்டு நின்றான்.

தூரத்தில் அந்த வழியாக இரயில் வருவது தெரிய, அவர்கள் இருவரையும் தண்டவாளத்தை விட்டுத்தள்ளும் போது தேவாவும் கூடவே விழுந்தான். விஜய் மீண்டும்  அரை மயக்கத்தில் இருந்தவளை தூக்க முற்பட , தாமரை மெல்ல கைகளைத் தூக்கி விஜயின் கன்னம் பிடித்து அவனைப் பார்த்து புன்னகைத்தவாறு , “உங்க மடியிலயே என் உயிர் போகட்டும்..” என்றவாறு கண்களை மூடிவிட்டாள்.

ஜென்மம் பல ஜென்மம்

உனை தேடி வந்தேன்

இன்று உனை கண்டு

நான் சேர வந்தேன்…

காதலி தன்னிடம் வாய் திறந்துப் பேச மாட்டாளா.. அவள் தன்னை விரும்புவதை அவளது வாய்மொழியால் கேட்டு அறிந்து ஆனந்தம் கொள்ள மாட்டோமா என ஏங்கியவனுக்கு… தனது ஒட்டுமொத்தக் காதலையும் இந்த வார்த்தைகளைக் கொண்டு அவனிடம் முதன் முதலில் பேசுவாள் என எதிர் பார்க்கவே இல்லை. ராணுவத்தில் பணிபுரிந்தவனுக்கு தன் மனதிற்கினியவளை இப்படி பார்க்க முடியவில்லை.. கண்ணீரோடு கைகளில் மீண்டும் ஏந்த … அந்த பகுதிக்கு சிலர் வருவது தெரிந்தது.

மேலும் விஜயின் மீதான தாமரையின் காதலை சற்றும் எதிர்பார்க்காத தேவா,  எழுந்து சுதாரிப்பதற்குள் யாரோ இருவர் தேவாவையும் விறகு மட்டையால் அடிக்க … நிலைக்குலைந்தாலும் அடிக்க வந்த இருவரையும் பிடித்துக் கொண்டான். , விஜயைப் பார்த்து, “நீ செல்விய தூக்கிட்டுப் போயிரு… நான் இவுனுகளப் பார்த்துக்கிறேன்… போயிரு விஜய் ” எனக் கத்தினான்.

தேவா தற்காத்துக் கொண்டதைப் பார்த்த விஜயும் காதலியைக் கையில் ஏந்திக் கொண்டு புதர்களிடையே கிடைத்த பாதையில்.. சாலையை அடைந்து அங்கு நின்றிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறிக் கொண்டான்.

ஆட்டோ ஓட்டுநரிடம், ” கீழே விழுந்துட்டாங்க உடனே ஹாஸ்பிட்டல் போங்க… ” என்றவனுக்கு , வழியே இல்லாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த போது தான் கவனித்தான் அவன் மடியில், கைகளில், ஏன் அவள் அணிந்தித்த மருத்துவ வெள்ளை அங்கி முழுவதும் இரத்தம் … அதனை அவிழ்த்து ,

” தாமரை… தாமரை.. ” என அவள் முகம் தட்டி, தலையில் இரத்தம் வந்த இடத்தில் கோட் கொண்டு அழுத்திப் பிடித்துக் கொண்டவன்., போகும் வழியில் தெரிந்த தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட தனியார் மருத்துவ முகாமில் முதலுதவிக் கொடுத்து அவர்களது மருத்துவமனைக்கே ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டாள்.

சற்றுத் தள்ளி தான் அரசாங்கத்தின் மூலம் நடத்தப்பட்ட முகாமும் … அவளது வகுப்புத் தோழர்களும் அங்கிருந்தனர். அதனால் தாமரையைக் குறித்து யாரும் அறியாமலேயேப் போயினர்.

மற்றொரு புறம் ஆதவன் தாமரையைத் தேடி வர , விஜயலெட்சுமி தேவா வந்ததையும் கூற.. தேவா சென்ற வழியில் ஆதவனும் இரயில் நிலையம் முழுவதும் நெரிசலில் தேடிக் கொண்டிருந்தவன். அங்கு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது திருப்திதான்.. ஆனால் தாமரையையும் காணவில்லை, அவளைத் தேடி வந்த தேவாவையும் காண இயலவில்லை என்றதும் மனது அடித்துக் கொண்டது.

ஆதவனும் போக்குவரத்து நெரிசல் என்பதால் தேவராஜன் முன்பு வந்த அதே பாதையில் தான் வண்டியை நிறுத்திவிட்டு வந்திருந்தான். இப்போது மீண்டும் வண்டியை எடுத்துக் கொண்டு செல்லும் போது ஐந்து நிமிடங்களுக்கு முன் அங்குவிபத்து நடந்ததால்போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. காத்துக்  கொண்டிருந்தவன் கண்ணில் பட்ட வாகனம் அவனது இதயத்தை வேகமாக துடிக்க வைத்தது. படபடக்கும் இதயத்தோடு இறங்கி அங்கு சென்றான்.

நான்கு ஜீவன்கள் வெவ்வேறு பாதை செல்லுமோ…

தீங்கு யாருமே செய்யாத போதும் துன்பமோ …