அம்முறை ஆவுடையம்மாள் வீட்டிலிருந்தும் அனைவரும் வந்திருந்தனர். அங்கும் தில்லை மற்றும் தாமரை வயதுடைய திருமணமான திருமணமாகாத பெண்கள் அங்கு வந்திருக்க , அவர்களுடனும் அவர்களது குழந்தைகளுடனும் இரு நாட்கள் சென்ற நிலையில் , தில்லையின் மகன் அன்று அத்தையுடனேயே இருந்துக் கொண்டான். தூக்கிச் செல்ல வந்தவளிடம்,
“இன்னைக்கு என் கூடவே இருக்கட்டும்… நாலஞ்சு நாள் லீவு தான்டி … நான் பார்த்துக்கிறேன்..” என்று விட்டாள் தாமரை. அதிகம் இப்படி நடப்பதுதான். ஆனால் மற்ற சமயங்களில் அமைதியாக சென்றுப் படுத்து விடும் தில்லைக்கு ,இன்று உடனே உறக்கம் வரவில்லை. அறைக்குள் வந்த ஆதவன் மகனைத் தேட… எழுந்து அமர்ந்தவள்,
“மாமா.. நான் ஒரு டிகிரி வாங்கிட்டேன்ல.. அது போதுமா… இல்ல இன்னொன்னு வாங்கனுமா..” எனக் கேட்டாள். அவனும் , “அது உன் விருப்பம்.மேல படிக்கணும்னா படி… ” என்றான். “ஆமா காலம் பூரா பள்ளி பாடம் தான் படிக்கணும்… பள்ளியறை பாடம் படிக்க கேட்டா… ” என முணுமுணுக்க.. ஆதவன் , ” என்ன.. என்ன சொல்ற…” எனவும் ,
“ம்… உங்க பையனுக்கு என் கூட , அத்தைக் கூடலாம் விளையாடிப் போரடிச்சுப் போச்சுப் போல… ராணி அக்கா ,லதாக்கா பசங்களோடலாம் விளையாடணும்னு ஆசைப்படுறாரு …அதனால ” என்றதும் ,
“ஓ…அப்ப பையன அடிக்கடி அவங்க வீட்டுக்கு அழைச்சுட்டுப் போகலாம்… அவங்களையும் நம்ம வீட்டுக்கு அடிக்கடி வரச் சொல்லலாம்…” என்றவளுக்கு சுறுசுறுவென மண்டைக்குள் கோபம் ஏற…
“மக்கு மாமா … நான் என்ன சொல்றேன்.. நீங்க என்ன சொல்றீங்க.. அங்க அங்க அவன் அவன் பொட்டப்புள்ள பெத்துக்குடுனு பாட்டுப் பாடிட்டு இருக்..கா…ன் ” என வார்த்தைகள் தந்தியடிக்க ஆரம்பித்து விட்டது தில்லைக்கு. பின்னே அருகில் நெருங்கி அமர்ந்திருந்த ஆதவன் அவள் தோள் சுற்றி கைப்போட்டுக் கொண்டால் எப்படி பேச முடியும்.
“பையனுக்கு தங்கச்சிப் பாப்பா வேணும் தான் … எனக்கு நீ வேணும் உன்னைய எடுத்துக்கலாமா… ம்.. ” என காதோடு முகத்தை வைத்து முகர்ந்துக் கொண்டே கேட்டால் … மறுக்க முடியுமா என்ன… “மாமா… ” என மென்மையாக அழைத்தவளின் கைகள் அவனது தோளைத் தொட… ஆதவனால் அதற்கு மேல் நெருக்கத்தை குறைக்க முடியவில்லை … தான் அடக்கி வைத்திருந்த மனைவி மீதான மோகமும் காதலும் மடை திறக்க ஆரம்பித்து விட்டது.
ஆதவனது மென்மையான அணுகுமுறையில் அவனது காதலை நன்கு உணர்ந்தாள் தில்லைநாயகி. இருவருக்கும் குழந்தை இருப்பதே மறந்து புதிதாக திருமணமான தம்பதியர்களாக தான் உணர்ந்தனர்.ஆதவன் முன்பைக் காட்டிலும் அதிக உற்சாகத்துடன் தொழிலிலும் ஆர்வம் காட்டினான். மனைவி, குழந்தை குடும்பம் என ஒரு நிறைவான வாழ்வை வாழ்வதாகத்தான் உணர்ந்தான் ஆதவன்.
தில்லையும் உணர்ந்தாள் தான் … ஆனால் ஒவ்வொரு மாதமும் நாள் தள்ளிப் போகாதா என ஏங்க துவங்கினாள். அது அவனோடான கூடலின் போதும் நினைவைக் கொடுக்க , அவன் ஆசையாக மனைவியை அணுகும் போதெல்லாம் , தான் குழந்தை குழந்தை என எண்ணி முழுமையாக அவனுக்கு ஈடு கொடுக்கவில்லையோ என்ற எண்ணம் கூட உண்டாகிற்று.
இப்படியாக தில்லையின் ஆழ்மனதில் நிறைய அழுத்தங்கள். வேலை வேலை என ஓடியவனுக்கு வெளியூர் மற்றும் சில சமயங்கள் வெளிநாடுகளும் போக வேண்டியிருக்க , மனைவியைப் பிரிவது அவ்வளவு கஷ்டமாக இருக்கும் … “உன்னையும் கூட கூட்டிட்டுப் போக ஆசை வருது திலோ … ” என்பவனின் காதலில் திளைத்துப் போயிருந்தாள் தில்லைநாயகி.
மாதமானால் நாள் தள்ளிப் போகிறதா என எதிர் பார்த்தவளுக்கு ஏமாற்றமே.., “என்னடா இது ஒரே நாள்ல பிள்ளை உண்டானேன்… இப்ப …” என நினைத்தவளுக்கு வருத்தம் இருந்தாலும் ஆதவனின் நினைவில் நாணமே மிஞ்சியது. யோசித்து மருத்துவரைப் பார்க்க முடிவுசெய்தவள், ஒரு நாள் மாலை குழந்தையையும் பாக்யத்தையும் அழைத்துக் கொண்டு மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்தாள்.
தனக்கான சந்தேகங்களை கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டவள் , பாக்யதிற்கும் சிகிச்சைக் கொடுக்க ஏற்பாடு செய்தாள். ஆம்… திருமணமாகி இத்தனை வருடங்களில் குழந்தை என்பது பாக்யத்தின் வயிற்றில் உதிக்கவே இல்லை. இப்படி தன்னை மட்டுமல்ல தன்னைச் சேர்ந்தவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவள் தான் தில்லைநாயகி.
கல்லூரி விட்டு வந்திருந்த தாமரை அவர்கள் மருத்துவமனை சென்றிருக்கிறார்கள் என்றதும் சிறிது பதற்றத்துடன் காத்திருந்தாள். வந்தவர்களிடமும் யாருக்கு என்ன என கேள்விகளாக அடுக்கியவள், “ஏன்டி நானும் மெடிக்கல் ஸ்டுடென்ட் தான்… இன்னும் ஆறேழு மாசத்துல நானும் டாக்டர்ங்குறத மறந்துட்டியா. இப்ப இன்டர்ன்ஷிப் தானடி பண்றேன். என்னடி பிரச்சினை… எங்கிட்டக் கூட சொல்லாம ஹாஸ்பிட்டல் போயிருக்க.. “
சாவகாசமாக அமர்ந்துக் கொண்ட தில்லை, “நீயும் டாக்டர் தான்.. ஆனா நீ அடிக்கடி சொல்ற மாதிரி நாத்தனாராவும் போயிட்டியே… இப்ப சொல்லு டவுட் கேக்கவா…” என்றதும் தாமரை முகத்தில் அப்படியொரு சிரிப்பு ,
“போடி…போடி… நான் டாக்டரே இல்ல…” என்ற தாமரை தில்லையின் பேச்சிலிருந்து தோழியைப் புரிந்துக் கொண்டவளுக்கு விஜயின் நியாபகம் வராமல் இல்லை. கூடவே அண்ணன் அண்ணி போல் தானும் வாழ வேண்டும் என்ற ஆசை அதிகமாகியது. மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று வந்த இரண்டு மாதத்தில் தில்லை ஆசைப்பட்டது போல் நாள் தள்ள..ஆதவனை இறுக்கமாக கட்டிக் கொண்டவள்,
“மாமா… மாமா.. பையனுக்கு கூட விளையாட தங்கச்சிப் பாப்பா வரப் போகுது..” என்றதும் மனைவியை இறுக்கமாக அணைத்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவன் ,
“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஆனா டெலிவரில நீ ரொம்ப கஷ்டப்படுவியே.. நீ அழுகிறதப் பார்த்தா எனக்கு உயிர் போற வலி எடுக்குது தெரியுமா” கணவனின் அன்பில் நெகிழ்ந்தவள் , அவனை மேலும் இறுக்கமாக கட்டிக் கொண்டு ,
“அதுதான் அந்த நேரத்துல ஒரு மருந்துக் கொடுத்து வலியக் குறைச்சுடுறீங்களே… அதைக் கொடுத்துடுங்க..” என்றவள் என்ன சொல்கிறாள் என்பது புரிய , “அதை அப்பதான் கொடுக்கனுமா… இப்பவே ஸ்டார்ட் பண்ணிற வேண்டியதுதான்…” என்றவன் அவள் முகம் நிமிர்த்த , அவர்களது மகன் , “அப்பா…” என ஓடி வந்து ஆதவன் கால்களைக் கட்டிக் கொள்ளவும் , புன்னகையுடன் மகனைத் தூக்கிக் கொண்டவன் ,
“வரப்போகிற பத்து மாசமும் தினமும் உனக்கு அந்த மருந்து தான்..” என்றவன், குழந்தையிடம் , “உங்களுக்கு தம்பி வேணுமா , தங்கச்சி வேணுமா…” என விளையாட்டாக கேட்க , தில்லையோ சிணுங்கிக் கொண்டே ,
” தங்கச்சி பாப்பாதான் பிறக்கும் ” என்றாள்.ஆதவனும் , “ஒருவேளை பையனா பிறந்துட்டா… ” என்றவனிடம் முகத்தை தீவிரமாக வைத்து , ” அடுத்த குழந்தை பெண்ணா பெத்துக்குவேன்…” என்ற மனைவியை மென்மையாக அணைத்துக் கொண்டவன் ,
“ஏன் இவ்வளவு எமோஷனல்… பெண் குழந்தைனா யாருக்கு தான் பிடிக்காது… உன்னைய மாதிரியே ஒரு தேவதையே பிறப்பா…” என்றதும்..
“என்னைய மாதிரி இல்ல அத்தைய மாதிரி ” என்றவனுக்கு மனைவி மீதான காதல் அதிகரித்தது.தில்லையின் மனதிலோ …” செல்வியோட ஆசைப்படி பெண்ணாவே பிறக்கணும் முத்தாரம்மா…” என கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.
இப்படி தில்லையின் எண்ணம் செயல் எல்லாம், செல்வி… செல்வி… தாமரைசெல்வியே ..
அதற்கேற்றாற் போல் தாமரையும் தோழியைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அழுதவள் , ” கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு டி… இந்த முறை அம்மாதான் வருவாங்க. போன முறை காயத்ரி அத்தைக்கு அசிஸ்டென்ட்டா இருந்தேன்… இந்த முறை நான் தான் உனக்கு பிரசவம் பார்ப்பேன்.. எங்கம்மாவ நான் தான் கையில் வாங்குவேன்.” என்றாள்.
இந்நிலையில் தேவகி மகள் மறுபடியும் தாயாகப் போகும் செய்திக் கேட்டு மிகவும் மகிழ்ந்தவர் ,
“பாப்பா.. அப்பாவுக்கும் சரி , அம்மாவுக்கும் சரி இப்பலாம் ரொம்ப முடியமாட்டிக்குது.. உனக்கு ரெண்டு பிள்ளையாகப் போகுது.. அப்படியே ராஜனுக்கும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிட்டா அவன் பிள்ளைகளையும் பார்த்து வளர்த்துருவோம்… மதினி இல்லாததால செல்விக்கு நீயும் நானும் தானே பிரசவம் பார்க்கணும்.. சித்திரைல அந்த புள்ளபடிப்பு முடியுதுனு கேள்விப்பட்டேன். அப்பவே பரிசம் போட்டுருவோம் , வைகாசில கல்யாணத்த வச்சுக்குவோம் பாப்பா…”
“என்னம்மா இவ்வளவு அவசரம் அண்ணன்கிட்ட கேட்டுட்டியா… செல்வி வேற மேல படிக்கணும்னு சொல்லிட்டு இருந்தா..” என்றதும் தேவகிக்கு சற்றுக் கோபம் வந்துவிட்டது.
“இதப் பாரு பாப்பா… எம்புட்டு படிக்கனும்னாலும் நம்ம வீட்டுக்கு வந்து படிக்கட்டும்… ஏன் நீ பச்சப்புள்ளைய வச்சுட்டே படிக்கலயா… இனியும் தள்ளிப் போட முடியாது.. எல்லாம் காலாகாலத்துல நடக்கணும் அதோட உங்கண்ணனுக்கு அந்த புள்ளைய ரொம்ப பிடிக்கும்.. இப்ப தாலிய கட்டுனாலும் கட்டுவான்.. செல்விக்கும் அப்படி தானே.. மதினி அந்த புள்ள முன்னாடி தானே இவங்க கல்யாணத்த நடத்தணும்னு பேசினாக… அப்ப தெரியாமையா இருக்கும் … அதோட நான் எப்ப என்ன சொன்னாலும் திலோ சொன்னா சரிதான்னு சொல்லும்.. ராஜனையும் வரும்போதெல்லாம் அத்தான் வாங்க, அத்தான் சாப்பிடுங்கனு எப்படி கவனிச்சுக்குது… அப்ப அவளுக்கும் எம்புள்ள மேல நாட்டம் இருக்குனு தானே அர்த்தம்…”
தில்லை தாமரையைக் குறித்து தேவகி பேசியதில் மிகவும் பெருமையாக உணர்ந்தாள்.தில்லை இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து , என்ன சமையல், என்ன உடைப் போட்டுக் கொள்ளலாம் , என்ன பொருட்கள் வாங்கலாம் என எதைக் கேட்டாலும் தில்லையை தான் கை காட்டுவாள். எனவே திருமண விவகாரத்திலும் தாமரை என்ன சொன்னாலும் செய்வாள் என மற்றவர்கள் மட்டுமல்ல தில்லையும் நம்ப ஆரம்பித்தாள்..
தேவகி எப்போதும் பெண்ணெடுத்து பெண் கொடுக்க வேண்டும் என்பதாக மீனாட்சி சொன்னதாக வீட்டில் பேசிக் கொள்வார் தில்லையும் அதற்கு சண்டைப் போடுவாள் தேவகியுடன், அப்படியானால் மீனாட்சி தேவா தாமரையையும் இணைத்து பேசுவது தாமரைக்கும் தெரிந்திருக்குமோ என்ற குழப்பம் வந்தது.
கூடுதலாக தேவகியும் , “பாப்பா சித்திரை திருவிழாவுக்கு பொழப்புக்காக நாடு விட்டு நாடு போன உன் மலேசிய சித்தப்பா , லண்டன் ல இருக்கிற உன் அத்தை குடும்பம் எல்லாம் வாறாக … அப்பவே காலையில பேரனுக்கு காது குத்திட்டு , சாயந்திரம் நம்ம உறமுறைய மட்டும் வச்சு பரிசம் போடுவோம்… உனக்கு ஊரக் கூட்டி பெரிசா கல்யாணம் பண்ணலங்கிற கவலை உங்கப்பாருக்கு இன்னும் இருக்கு.. அதை மவன் கல்யாணத்துல சரி செய்யப்பாக்குறாரு.. அப்புறம் பாப்பா..” என்றதும் தில்லை ,
” எல்லாம் முடிவு பண்ணிட்டு வந்து சொல்ற… இன்னும் என்னம்மா … ” என்றதும் , “போன பிரசவத்துக்கு நீ வீட்டுக்கே வரல … இந்த வாட்டி செல்வி நம்ம வீட்டு மருமகளாகிட்டா நீயும் வந்து இருப்பல்ல.. பிரசவம்ங்கிறது பொண்ணுங்களுக்கு ரெண்டாவது பொறப்பு… உன் முத பிரசவத்துக்கு பதறிட்டு ஓடி வந்தேன் பாப்பா.. உனக்கு உன் பிள்ளைனா… எனக்கு என் பிள்ளை முக்கியமில்லயா சாமி .. வீட்ல பெரியவங்கனு யாரும் இல்லாம எல்லாம் சின்னஞ் சிறுசுகளா இருந்தீங்க.செல்வி அங்க இருந்தா நீயும் கவலையில்லாம இருப்பல்ல..”
தேவகி சொன்ன அத்தனையும் சரியெனப்பட தில்லையும் தேவராஜன் தாமரையின் திருமணத்திற்கு தயாரானாள். இதோ தில்லைக்கு நான்காம் மாதம் நடக்கிறது. முதல் குழந்தை உண்டான போது கணவனிடம் எதிர்பார்த்த அன்பு, பாசம், காதல்.. என அத்தனையையும் இரண்டாம் குழந்தைக்கு அனுபவித்தாள்.
தாமரையோ முதல் குழந்தைக்கு எப்படி கவனித்துக் கொண்டாளோ… அதைப் போல் இப்போது மருத்துவர் படிப்பை முடிக்க இருப்பதால்.. இரண்டு மடங்கு அதிகமாகவே கவனித்துக் கொண்டாள். குழந்தையின் இதயத்துடிப்பை உணர வைத்து தாமரையும் மகிழ்ந்ததைப் பார்த்த தில்லை.. தோழிக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருந்தாள்.
இந்நிலையில் காதுகுத்து நிகழ்வுக்காக வந்த பத்திரிக்கையையும் அதில் இருந்த தாய் மாமன் தேவராஜனின் விதவிதமான புகைப்படங்களையும் பார்த்த தாமரைக்கு வாய் நிறையப் புன்னகை அரும்பியது. இதைக் கவனித்த தில்லை,
“என்னடி பத்திரிக்கையப் பார்த்து அப்படி சிரிக்கிற..” என்றதும் , “இல்ல தேவாத்தான் பெயர் சூட்டுறதுக்கே யானைல வந்தாங்களே.. அப்ப இப்ப இந்திரலோகத்து தேவராஜனை மாதிரி வெள்ளை யானைல வருவாங்களோனு யோசிச்சேன்.. அதான் சிரிப்பு வந்துருச்சு…” என மீண்டும் மனம் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
உண்மையில் அந்த சிரிப்பிற்கு பின்னாலும் விஜய் தான் இருந்தான். சித்திரை திருவிழாவை ஒட்டி விடுமுறை எடுத்து வருவதாக தொலைப்பேசியில் கூறியவன், ஆதவனிடமும் அவர்கள் திருமணத்திற்காக பேசுகிறேன் என்றிருந்தான். அது மனதில் உற்சாகத்தை கொடுத்திருக்கவே இந்தப் புன்னகை வந்தது.
ஆனால் தில்லையின் பார்வையில் தோழி தேவாவை நினைக்கிறாளோ என்று தான் இருந்தது. எனவே அவளும் ,” இருக்கலாம் இருக்கலாம்.. வெள்ளை பெயின்ட் அடிச்சுக்கூட யானைய எங்கண்ணன் கூட்டிட்டு வருவாங்க… ” என்ற வாறு தோழிகள் இருவருமே சிரித்துக் கொள்ள , சிரிப்பினூடே தில்லை தாமரையிடம்,
“ஆமா எங்கண்ணனப் பத்தின உன் அபிப்பிராயம் என்னடி…”ஹீரோவா, வில்லனா.. இல்ல இப்ப சிரிக்கிறியே அது போல ஜோக்கரா..” என்றதும் ,
“ஷ் … என்னடி இப்படி கேட்கிற , உன் மேல ,குட்டிபையன் மேல லாம் வச்சுருக்கிற பாசம் பார்த்து எனக்கு அவ்வளவு ஆச்சரியமா இருக்கும் … ரொம்ப நல்லவங்க அத்தான்…அதனால அவங்க ஹீரோ தான்…” என்ற தாமரையைப் பார்த்து தில்லையினிடத்தில் புன்னகை ,
“செல்வி … அம்மா சொல்றாங்க நீ பிஜி படிப்பியாம் .. ஆனால் இந்த வருஷமே கல்யாணமும் பண்ணிட்டு படிக்கட்டும்னு சொல்றாங்கடி … உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கில்ல… நானும் உன் அண்ணனும் உனக்கு விருப்பம் இல்லாத எதையும் செய்ய மாட்டோம்னு .. நிச்சியம் உன் பிஜி கனவ நான் நிறைவேத்துவேன்டி….” தாமரைக்கு அவளது” என் மேல நம்பிக்கை.. உன் விருப்பம்” போன்ற வார்த்தைகள் மட்டும் மனதில் ஆழமாக பதிய ,
“ஹேய் உன்னைய எனக்குத் தெரியாதாடி.. நீயும் அண்ணனும் எனக்கு இன்னொரு அப்பாவும் அம்மாவும் … இனி இப்படியெல்லாம் பேசாத..” என்ற தாமரைக்கு திருமணம் குறித்துப் பேசியதும் விஜய் வர இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமே என்றிருந்தது. அவனாக பெண் கேட்க வேண்டும் என்று தான் தோன்றியதே தவிர, தானாக யாரிடமும் செல்லும் தைரியமில்லை .ஏன் இதுவரையில் விஜயிடமே வாய் திறந்தோ , இல்லை எழுதியோக் கூட அவனை விரும்புகிறாள் எனச் சொன்னதில்லையே…
அதைச் சொல்லவும் நாள் வந்தது. அன்றோடு அனைவரின் வாழ்க்கையும் வேறானது.